அபுனைவுநூல் விமர்சனம்

எப்பவுமே ராஜா


திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்டி மனநலம் பயின்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மனநலத் துறை பேராசிரியராக பணியாற்றுபவர் டாக்டர். ஜி.இராமானுஜம் அவர்கள். ஏற்கனவே சுத்த அபத்தம், நோயர் விருப்பம், நலம் தரும் நான்கெழுத்து, இசைபட வாழ்தல் போன்ற நூல்களை வெளியிட்டு எழுத்துலகில் இவர் நன்கு அறியப்பட்டவர். முறைப்படி இசை பயின்று புல்லாங்குழல் வாசிப்பவர். அதனால் இசை தொடர்பாக இவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் வருவதென்பது இயல்பே.

தமிழிசையின் உடைய மரபு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது. அகத்தியம் தொல்காப்பியம் போன்ற நூல்களில் இசை இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்று முன்னுரை தந்து நம்மை கை பிடித்து இளையராஜாவோடு பயணிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் ராமானுஜம்.

ஒரு கலைஞனை அவன் வாழும் காலத்திலே கொண்டாடவேண்டும். அந்த அளவில் இசைஞானியை நாம் கொண்டாடத்தான் செய்கிறோம். ஆனால், அந்தக் கலைஞன் செய்த செயல்களின் பின்னணியும், நுட்பங்களும் தெரிந்து கொண்டாடினால் அது அந்தக் கலைஞனுக்கு மனநிறைவைத் தரும் என்பது நிதர்சனம்.

தாம் எழுதிய கட்டுரைகளின் வழியாக இளையராஜாவை நம்மோடு உரையாட வைத்திருக்கின்றார். மொத்தம் 20 தலைப்புகள் கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது. ஒவ்வொன்றுமே பாடல் வரிகளையேத் தலைப்பாக கொண்டிருக்கின்றது. இசை பற்றி நமக்கு அதிகமாக தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லையென்ற போதும் இசைக்கருவிகளின் ஒலிகளையும், இசைக் குறியீடுகளையும் பற்றி நாம் கேள்வியுற்றிருப்போம். அதன் வித்தகரே இளையராஜா என்று முதல் கட்டுரையிலேயே நமக்கு அறிமுகம் செய்து நம்மை அவரோடு பயணிக்க அழைத்துச் செல்கின்றார்.

ரீதிகௌனை என்ற ஒரு ராகம் அதுவரை கர்நாடக இசையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ராகம் அதனை அழகாக கவிக்குயில் படத்தில் பயன்படுத்தி அதனை பாலமுரளி கிருஷ்ணாவை அழைத்து பாட வைத்திருப்பதுவும் அப்பாடல் நாம் சொக்கி போன “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடலேயென்று நமக்கு நினைவூட்டுகிறார். இதனைத் தொடர்ந்தே பின்னாளில் வந்த ஏ ஆர் ரகுமான் “அழகான ராட்சசியே’ என்றும் ஜேம்ஸ் வசந்தன் “கண்கள் இரண்டால்” என்றும் அவருடைய புதல்வர் யுவன்சங்கர் ராஜா “தீண்டத் தீண்ட”என்றும் அதே ராகத்தினைப் பயன்படுத்தி இருப்பதாக உபரித் தகவல்களைத் தருகிறார்.

“அந்திமழை பொழிகிறது” பாடல் குறித்த அவரது அறிமுகம் நம்மை அந்த இசையினை உள்வாங்கி அதனோடு நம்மை பயணிக்க வைக்கிறது. தொம் தொம்மென்று மிருதங்கத்திலிருந்து துவங்குவதாக அவர் ஆரம்பித்து அந்த ராகத்தினை.அறிமுகம் செய்வதில் இளையராஜாவின் உடைய ஞானத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஜானி படப் பாடலான “காற்றில் எந்தன் கீதம்” என்ற பாடலை எழுதிய கங்கை அமரன் வரிகளையும் அதனிடையிடையே இசைக்கப்படும் கிடார் வயலின் ரொம்ப போன்ற கருவிகளையும் அது ரஜினி ஓடும் பரபரப்பை கூட்டுவதற்கு எத்தனை உறுதுணையாக இருந்தன என்பதனையும் கட்டுரைப்படுத்தி யிருப்பது சிறப்பு.

கனகாங்கி என்றொரு ராகம். அதனை இதற்கு முன்பும் பின்பும் திரையிசையில் யாரும் கையாளவில்லை என்று சொல்லி சிந்து பைரவி படத்தின் ” மோகம் என்னும் தீயில் ” என்ற பாடலை நமக்கு அறிமுகம் செய்கின்றார். “மோகத்தை கொன்று விடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு” என்ற பாரதியின் வரிகளைப் போன்று “மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து சாகும் ” என்று வைரமுத்து எழுதிய வரிகள்., அந்தக் காட்சி அமைப்பு,தொம் தொம் என்று ஆரம்பித்து எப்படி உச்சம் தொடும் ஜேசுதாஸின் குரல் என்றும் நமக்குக் காட்சிமைப்படுத்தியதில் அந்தப் பாடலை மீண்டும் கேட்க தூண்டுகின்றார் ராமனுஜம்.

கல்யாண ராகத்தில் ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை) நதியில் ஆடும் (காதல்ஓவியம்) அம்மா என்றழைக்காத (மன்னன்) போன்ற பாடல்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன என்று பட்டியலிடுகின்றார். பல்வேறு ராகங்களில் எத்தனை புலமை கொண்டிருந்தார் என்பதனைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பாடலையும். அறிமுகம் செய்து அதனோடு தொடர்புடைய பாடல்களையும் நமக்கு அறிமுகம் செய்து இளையராஜாவை இன்னும் இன்னும் ரசிக்கச் செய்திருக்கிறார்.

ஒரு காட்சியமைப்பு எத்தனை உயிர்ப்பானது என்பதனை அவர் திசை நமக்கு உணர்த்திவிடும். அவர் பாடல் இசைப்பதில் மட்டுமே சிறந்தவர் இல்லை. பின்னணி இசைக் கோர்ப்பு செய்வதிலும் அத்தனைத் திறமையானவர். இதனை இளையராஜா ரசிகர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்திருப்போம்.

ஒவ்வொரு படத்தினுடைய பின்னணி இசைக்கும் அவர் அத்தனை மெனக்கட்டு இருப்பது நமக்கு நன்கு தெரியும். முன்பெல்லாம் தியேட்டரில் ஒரு காட்சிக்கிடையில் மறுகாட்சிக்கான டிக்கெட் கொடுத்து காத்திருக்க வைத்திருப்பர். அப்பொழுது கேட்கும் பின்னணி இசையைக் கொண்டு நாம் இந்தக் காட்சி வருகிறது என்பதனை கூறிவிடுவோம். நம்மை ரசிக்க வைப்பதோடு கிரகித்து உணர்வத்தருவதுதான் பின்னணி இசைக்கான வெற்றி. இந்த இடத்தில் தளபதி படத்தினுடைய ஒரு காட்சியினை நான் உங்களுக்கு சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ரஜினிகாந்தும் ஸ்ரீவித்யாவும் சந்திக்கும் இடங்களிலெல்லாம் கூட்ஸ் ரயிலினுடைய இசையை பின்னணியில் இசைத்திருப்பார். இது ஒரு உதாரணமே. இதே போன்று நிறைய நிறைய படங்களில் பின்னணி இசைதான் அந்தப் படத்தினுடைய உயிர்நாடியாக திகழும். அதனை இளையராஜா செவ்வனேவே செய்து இருப்பார்.

இசை என்பது ஒரு போதை. சாதனையும் அப்படியே . குறிப்பிட்ட சாதனை செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அந்த அந்த சாதனையை முறியடிக்க அந்த மனம் ஏங்கும் என்று தன்னுடைய மனநிலை படிப்பின் வழியாக ஆராய்ந்து சான்றுடன் உணர்த்தியிருக்கிறார் இராமானுஜம்.

இளையராஜாவினுடைய வெற்றிக்கான அந்த வேட்கையை அவர் நமக்கு பாடல்களின் வழியே தந்திருக்கின்றார். ஒவ்வொரு பாடலுக்கான மெனக்கெடல் என்பது அவருக்கு அத்தனை நேரம் எடுக்காது. வெறும் அரை மணி நேரத்திலேயே அந்தப் படத்தினுடைய அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து விடுவார் என்பதே நாம் பத்திரிக்கை வழியாகக் கேட்டறிந்த செய்தி.

சின்னத்தம்பி படத்தின் பாடலுக்கு கூட அரைமணிநேரத்தில் இசையமைத்துக் கொடுத்தார் என்பது நாம் அப்போது படித்த செய்தி. உண்மையிலேயே இளையராஜா ஒரு இசைதேவனே.

இயக்குனர் அவர் இசைக்கூடத்தில் நுழைந்து ஒரு பாடல் அமையக் கூடிய சூழலை சொன்னவுடன் அவர் மனக்கண் முன் ஓடும் அந்த காட்சிகளை இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். அப்போதே பின்னணியில் இருந்து கொண்டு ஒவ்வொரு இசை வல்லுனர்களும் தங்களுக்கான இசைக்குறிப்புகளை எடுத்து எழுதிக் கொள்வார்களாம். பின்பு, நேரடியாகவே பாடல் கம்போசிங்கிற்கு சென்றுவிடுவதாக இளையராஜாவோடு நன்கு பழகிய அவரது நண்பர்கள் நிறைய தடவை சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

இவை அனைத்தும் உண்மை என்று இந்த கட்டுரைத் தொகுப்பு நமக்கு சொல்கிறது. நாசர் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய அவதாரத்தில் “தென்றல் வந்து தீண்டும் போது” பாடல் பற்றிய யூடியூப்பினை நாம் கண்டிருப்போம். இதுபோன்று செய்திகள் அனைத்துமே உண்மையென்று கட்டுரைபடுத்தியிருக்கிறார் டாக்டர் இராமானுஜம்.

சில பேர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதென்பது பேறு என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். அப்படி நாம் இளையராஜா வாழும் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம் என்று சொல்வதில் பேறு கொள்வோம். அதுவும் அவரது தீவிர ரசிகர்களான நம்மைப் போன்றோர் என்றுமே அவரை விட்டுக் கொடுக்க மாட்டோம். எப்பவுமே ராஜா தான். அதுவும் ஒரு ராஜா தான். அவர் இளையராஜா ஒருவரேதான்.

பாடல்களைக் கூறும் போதே அதக் காண யூடியூப் லிங்க்ஐயும் நமக்கு கீழே தந்திருப்பது சிறப்பு. ஆங்காங்கே கையாண்டிருக்கும் இசை மேதைகள் கூற்று, மேற்கோள் கட்டுரைக்கு வலுவினையும் வசீகரத்தையும் தருகிறது.


நூல் தகவல்:

நூல் : எப்ப்வுமே ராஜா (இளையராஜாவின் பாடல்களில் ஒரு இசைப்பயணம்)

வகை : கட்டுரை

ஆசிரியர் : டாக்டர் ஜி. ராமானுஜம்

வெளியீடு : உயிர்மை

வெளியான ஆண்டு:  2021

பக்கங்கள் :  86

விலை:  ₹  100

 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *