அபுனைவுநூல் விமர்சனம்

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை

மனிதன் தனது ஆதி பூர்வத்தை அறிந்து கொள்வதில் அளவிடாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் வாழ்வின் நம்பிக்கையை அதிகரிக்கக்  கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே  வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும்.

விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  அவர்களின் இந்நூல் அவரது நேரடி கள ஆய்வு பயணத்தின் விளைவு. தீராத வேட்கையில்  வரலாற்றுத் தடயங்களைத் தேடிச் சென்றுள்ளார். இந்த பயணம் சங்கராபரணி ஆற்றங்கரையில் துவங்கி கெடிலம் பம்பை ஆறுகளை ஊடறுத்து தென்பெண்ணை ஆறு வரை நீள்கிறது.

நூலின் முன்னுரையில் நமது முன்னோடி ஊர்சுற்றிகளான

  • நரசிம்மலூ நாயுடு
    (ஆரிய திவ்ய தேச சரிதம்),
  • த.சுப்ரமணிய பிள்ளை
    (சிவஸ்தல மஞ்சரி),
  • டி.பி. தாஸ்ராவ்
    (இந்திய ஸ்தல யாத்திரை மான்மியம்),
  • பயண இலக்கியங்களின் தந்தை ஏ.கே.செட்டியார்
    (தமிழ்நாடு பயணக் கட்டுரை),
  • சாமிநாத சர்மா
    (எனது பர்மா நடைவழிப் பயணம்),

என நிறைய ஆளுமைகளைக் குறிப்புகளுடன் நினைவு கூர்கிறார்.

இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர் தேடிச் சென்ற இடங்களின் அரிய பொக்கிஷங்களை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். கூடவே துறைசார் நிபுணர்களின் ஆய்வுக் குறிப்புகளையும், தொல்லியல் தரவுகளையும் பொருத்தமாகத் தருகிறார்.

அதே சமயம், அந்த இடங்கள் எந்த லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன என்பதையும்  கேட்பாரற்று நிர்கதியாய்  காலத்தின் மாயத்தில் கரைந்து மறைந்து போகும் அபாயத்தையும்  எச்சரிக்கை செய்கிறார்.

அந்த பகுதி மக்களுக்கு அந்த ஊர்களின் வரலாற்றுத் தடயத்தினை இனம் காட்டுவதுடன் அந்த நினைவுச் சின்னங்கள் மீதான வியப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்.

இந்நூலில் குறிப்பிட்ட அனைத்தும் மதிப்புமிக்கது. உங்கள் ஆர்வத்தைத் தூண்ட ஒரு சில பகுதிகளைப் பற்றி மட்டும் சுருக்கமாகப் பேசுவோம்.

பிள்ளையார் பட்டி விநாயகரின் முதன்மைக்குப் போட்டியான கருத்தாகத் தமிழகத்தில் உள்ள பிள்ளையார் சிற்பங்களிலே முதன்மையானது “ஆலாகி ராமப் பிள்ளையார் ” எனச் சான்றுடன் கூறுகிறார்.

கடையெழு வள்ளல்களில் எட்டாவது வள்ளல் ஒய்மா நல்லியக்கோடன் மாவிலங்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது எனக்கு புதிய தகவல்.

புதுவை கடற்கரையும்  அங்குள்ள மகாத்மா காந்தி சிலையும் யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் அங்கிருக்கும் தூண்கள்  பிரெஞ்சு ஆட்சியின் ஆளுநர் டியூப்ளேவால் கொண்டு வரப்பட்டதாம் … எங்கிருந்து தெரியுமா..?
செஞ்சி வேங்கட ரமணர் கோவில். (கல்யாணம்பூண்டி கல்தூண்கள் )

“ஷுட்டிங் ஓடை “என்று அழைக்கப்படும் பொம்மையர் பாளையம் (வானூர் வட்டம் ) ஒடையில் 2003. ல் ஒரு அகழாய்வு.., அதில் ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆண்டுகள் ( 0.187 மில்லியன் ஆண்டுகள்) பழமையான ஒரு குழந்தையின் மண்டை ஓடு கண்டெடுக்கப்படுகிறது.

இது 1,50, 000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் மனிதன் முதன் முதலாக வாழ்ந்த இடங்களில் ஒன்றாகப் புதுச்சேரியை அடையாளப்படுத்தி  உள்ளது

உண்மையில் இச்செய்தி நிறையப் பேருக்குத் தெரியாது. இந்நூலைப் படிக்கும் வரை எனக்கும் தான்.

தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்புநிலமான (கழு வெளி) மரக்காணத்தை(சோபட்டிணம் /எயிற்பட்டிணம் ) பற்றிய வரலாறும் சூழல் அக்கறையும் கலந்த பயணக் கட்டுரை நிறையச் செய்திகளையும் சிந்தனைகளையும் தருகிறது.

வரலாற்றுத் தடயங்கள் மிகுந்த அகழாய்வுக்கு உரிய நிலப்பகுதி நத்தம் (முதுமக்கள் தாழி நிறைந்த பகுதி) எப்படித் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது என்கிற சமூக சீற்றமும் முன்னெடுப்பும் வியப்புக்குரியது.

வழுதாவூர் கோட்டைமேடு என்கிற வரலாற்றுச் சிறப்பிடம்  புதுச்சேரியுடன் மிகுந்த தொடர்புடையது.
ஆனந்தராகப் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் வானம் வசப்படும்,  மானுடம் வெல்லும் போன்ற புதினங்களின் கதைக் களத்திலும் கூட வழுதாவூர் கோட்டைமேடு காட்சிகள் நிறைய இடங்களில் வருகிறது. ஆனால் அவ்விடங்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாதது வருத்தமும் அதிர்ச்சியையும் தருகிறது.

எஸ்.மேட்டுப்பாளையத்தில் முதுமக்கள் தாழிகளையும் பானை ஓடுகளையும் சேகரிக்கும் போது ஒரு சடலம் ஒன்று அருகிலேயே எரியூட்டப்படுகிறது. இதை அருமையான மொழி நடையில் சிறுகதை போல் விவரித்ததுள்ளது சுவாரஸ்யம்.

திருபுவனை சன்னியாசி குப்பம் சாராயக்கடை அருகில் கேட்பாரற்ற நிலையில் மிகப் பிரமாண்டமான புராதன கல் நந்தி ஒன்று உள்ளது. இது தஞ்சை பெருவுடையார் கோவில் எதிரே வைப்பதற்காக இராஜராஜ சோழனால் கொண்டு போகும் போது வழியிலேயே தடைப்பட்டது பற்றி நிறையத் தகவல்களையும் தருகிறார். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் இது பற்றி “கவிழ்ந்த காணிக்கை” என்ற நாவல் எழுதியதையும் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழக வரலாற்று ஆவணங்கள் என்பது 4 -ல் 3 பகுதி கோவிலை ஒட்டியது தான். கோவில் இல்லாமல் தமிழ்ப் பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள முடியாது.பெரும்பாலும் ஒவ்வொரு ஊரின் வரலாறும் கோவிலிலிருந்தே தான்  துவங்குகிறது.

கோவிலைச் சார்ந்து தான் மக்களின் வாழ்வியல் இருந்தது. மக்களின் வரலாற்று பதிவுகளாகக் கோவில்கள் இயங்கி வந்தன என்பதற்கு தொல்லியல் அகழாய்வுகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், இலக்கியங்கள் எனச் சான்றுகள் வரிசை கட்டுகின்றன.

விழுப்புரம் (ம) அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் நிறைய வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்தது என்பதை நூலாசிரியர் தனது கள ஆய்வு பயணத்தின் வழியே நிரூபித்துள்ளார்.

ஏதோ சுற்றினோம் ,எழுதினோம், குறை சொன்னோம் என்றில்லாமல் பத்திரிகை செய்தி வாயிலாக ஆவணப்படுத்துவது, தமிழக சட்டப்பேரவையில் கேள்வி கேட்க வைப்பது, மாவட்ட ஆட்சியர்களை உசுப்பி விடுவது, புகார் தருவது, கோரிக்கை விடுத்து அதைப் பின் தொடர்வது, சட்ட முன்னெடுப்பு  போன்ற தொடர் செயல்கள் மூலம் பூனைக்கு அசையும் மணியைக் கட்டியுள்ளார்.

மணியோசை  சில இடங்களில் சிலரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது மட்டுமின்றி அதில் கணிசமான வெற்றியும் அடைந்துள்ளார். விழுப்புரம் கோ.செங்குட்டுவன் அவர்களுக்கு மனம்  நிறைந்த வாழ்த்துக்கள்.

இந்த அசாத்தியமான பயணத்தின் மூலம் பல அரிய விஷயங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதற்காக  எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்நூல் ஊர்சுற்றிகளுக்கு ஒரு வழிகாட்டி. எழுத்தாளர்களுக்குத் தகவல் களஞ்சியம், ஆய்வாளர்களுக்கு ஒரு தேர்ந்த கையேடு, வாசகர்களுக்கு தங்கள் சேகரிப்பில் தவறவிடாத முக்கிய புத்தகம்.

இன்று புத்தகத்தின் விலை ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் என்பது தான் சராசரி விலை நிர்ணயம். பெரும் பதிப்பகங்கள் அதை விடக் கூடுதலாகக் கூட விலை வைக்கின்றன. ஆனால் இந்நூல் அதையெல்லாம் புறந்தள்ளி நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தரமான தாளில் அருமையான நேர்த்தியோடு தகுந்த இணைப்பு படங்களோடு குறைந்த விலையில் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

– மஞ்சுநாத்


நூல் : சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை

ஆசிரியர்: கோ.செங்குட்டுவன்

பதிப்பகம்:  பி.எஸ்.பப்ளிகேஷன்ஸ்

முதற்பதிப்பு : டிசம்பர் 2020

பக்கங்கள்: 223

நூல் பெற: 9944622046


எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *