மாதொருபாகன் என்பது நாவல். அப்படியே வாழ்வியலை காட்சிகளாக தந்திருக்கும் நாவல். இந்த நாவலில் நடைமுறையில் இருக்கும் இடக்கர் சொற்கள் அதிகம் இருப்பதாகவும், அதை விரும்பாதவர்கள் இந்த நாவலை படிக்க வேண்டாம் என்ற நியாயமான வேண்டுகோளை சொல்லிய நேர்மை எனக்கு மிகவும் பிடித்து போனது.

ஒரு வரி கதையை தோராயமாக நூற்றி எழுபத்தி ஐந்து பக்கத்திற்கு நகர்த்திச் சென்று இருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களே தவழ்ந்தாலும் கதையின் ஓட்டம் ரசிக்க வைக்கிறது. தவிக்க வைக்கிறது. எழுத்து ஆளுமை நம்மை கட்டி போட்டு கரைய வைக்கிறது. ஆனால் எந்த ஒரு பக்கத்தையும் அத்தனை எளிதில் விட்டு விட்டு செல்ல முடியாது.

தொண்டுப்பட்டி என்ற கிராமத்தில் நாயகன் காளி, நாயகி பொன்னா, நாயகனின் அம்மா சீராயி, மச்சான் முத்து மற்றும் சித்தப்பா நல்லையன் இந்த கதாபாத்திரங்களை சுற்றியே நாவல் நகர்கிறது.

காளிக்கும் பொன்னாவிற்கும் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.  குழந்தை இல்லை என்ற குறையை தவிர வேறு எந்த குறையும் இல்லாமல் இருக்கிறார்கள். அம்மா சீராயி எப்படியாவது தன் மகனுக்கு பிள்ளை பிறக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை. சீராயியோடு  சேர்ந்து சம்மந்தி வல்லாயியும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அப்படி முடிவுக்கு வரும் பொழுது பெரு நோம்பி என்ற விழாவிற்கு பொன்னாவை அனுப்பினால் நம் சந்ததி வளரும் என்று சதி திட்டத்தில் பொன்னாவும் சிக்குகிறாள். அதை காளியும், பொன்னாவும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்துச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.

மண்ணின் நாயகன். மண்வாசனையை மட்டுமே நுகர்ந்திட உழைத்திடும் நாயகன் காளி. எங்கு சென்றாலும் ஒரு மரத்தை நட்டு, அது எத்தனை வருடத்தில் பூத்து, காய்க்கும் பலன் தரும் என்று சொல்லிடும் வித்தகன். பூவரசு மரத்தை மாமனார் வீட்டில் நட்டு, 12 வருடத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அந்த மரத்தடியில் அவன் படுத்து வானத்தை பார்க்கும் போது படிக்கும் நமக்கே அந்த காற்றை உணரும் விதமாக எழுத்தும் குளிர்ச்சி தருகிறது.  மாடுகளுக்கும், ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் நேரத்திற்கு தண்ணி காட்டி இயற்கையோடு இயற்கையாக வாழ்பவன். மனைவியை அணு அணுவாய் ரசிப்பவன். தோட்டம் தொரவுக்கு பஞ்சமில்லை. ஒரே ஒரு குறை இன்னும் ஒரு பிள்ளை  இல்லை என்பதே. ஒரு முறை கூட இப்படி ஒரு துக்கம் இருப்பதை வெளிப்படுத்த தெரியாதவன். எங்கு சென்றாலும் தொண்டுப்பட்டியில் கால் மிதித்தால் தான் மனசு ஒரு நிலையில் இருக்கும் காளிக்கு.

பொன்னா காதலுக்கு காதலும், வீம்புக்கு வீம்பும், மனசாட்சிக்கு மனசாட்சியாக உழைப்புக்கு உழைப்பும் என நெஞ்சில் பச்சை குத்திடும் கதாபாத்திரம். திருவிழாக்களில் குட்டி குழந்தைகளை  கண்டு அவள் நெகிழும் இடங்களில் அன்னையாக தவிக்கும் ஒரு பெண்ணின் உணர்வை அற்புதமாக சித்தரித்து இருக்கும். அவளை “வறடி” என்று கூறும் இடங்களில் வெடித்து பேசுவதும், அதற்காக அழுது புரள்வதும் பொன்னாவின் போன்ற பெண்களின் மனத்தை பிரதிபலித்து இருக்கிறார் ஆசிரியர். தன் இயலாமையை, கருப்பை பாரம் சுமக்க முடியாமல் கடவுளே இப்படி வைத்து இருக்கிறாயே என்று கலங்கும் இடத்தில் நம் கண்களும் கலங்கி தான் போகிறது. தன் கணவனின் அன்பில் மூழ்கி முத்தெடுப்பதும், அவன் பேச்சை மீறாத நிற்கும் இடங்களில் இருவருக்கும் இருக்கும் அன்னியோன்னியம் ரசிப்பு.

நல்லையன்; திருமணமாகாத சித்தப்பா. சொத்துக்காக அவரை விரட்டி அடிப்பதும், பிறகு சொத்து கிடைத்த பிறகு அவரை அதே உறவினர்கள் எப்படியும் இவனுக்கு பிறகு சொத்து நமக்கு தான் என்று நினைத்து சமைச்சு போடுவதும் அதை அவர்  கொள்ளாத ஞானமும் அழகு. “பிள்ளை இல்லாட்டி என்னடா “நல்ல சந்தோசமா வாழ்ந்து அனுபவிச்சுட்டு ஏழை பாலைகளுக்கோ, அனாதைகளுக்கு எழுதி வைத்து விட்டு போய் சேர்வோம்” என்று சொல்லும் இடங்களில் ஒரு தகப்பனாய் காளியை தட்டி கொடுக்கும் இடங்கள் இது போன்ற தகப்பனை தேடுகிறது கண்கள்.

நண்பன் மற்றும் மச்சினன் முத்து. அவன் சொன்னால் மீறாத காளி. அவன் மீது நம்பிக்கையில் அவன் அழைத்து செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்வான். முத்து ரகசிய இடங்களை கண்டு பிடித்து வைத்திருக்க, காளியை அழைத்து சென்று அசத்துவதும் வாடிக்கை. பொன்னாவை பெரு நோம்பிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் காளியை திசை திருப்ப வேண்டும் என்று முத்துவை வைத்து நடத்தும் நாடகத்தில் காளி சிக்கி கொள்ள கதை விறுவிறுப்பு அடைகிறது. குடித்து விட்டு இன்னொருத்தன் மூலமாக என் மனைவிக்கு குழந்தை வேண்டும் என்று வெடித்து சிதறும் இடத்தில் கனக்கிறது. தத்து கூட எடுத்து கொள்கிறேன் என்று பண்ணையாளிடம் கேட்கும் இடங்கள் மனசு தவிக்கிறது.

சீராயி மகனின் சம்மதத்தோடு மருமகளை அனுப்ப நினைக்கும் போது மகனிடம் தயங்கி தயங்கி பேசும் போதும், வாரிசு முக்கியம் என்று உணர்த்தும் இடங்களிலும், இப்படியே இருந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது என்று சொல்லும் இடங்களிலும் இப்படி ஒரு தாயின் தவிப்பும், தன் மகன் சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்ற எண்ணமும் படிப்பவர்களை கலங்க வைக்கிறது.

ஒரு சமூகம் யாரிடம் எது இல்லையோ அதையே குத்தி குத்தி காட்டி அவர்கள் வாழ்வியலையும் நிலைகுலைய செய்கிறது என்ற உண்மையை அப்பட்டமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். நம்முடைய வாழ்வு நாம் வாழ்ந்து மடிவோம். எதற்காக சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கேள்வியையும் கேட்க வைத்திருக்கிறது இந்த நாவல். மாதொருபாகன் தொடர்ச்சியாக அர்த்தநாரி என்ற நாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். படியுங்கள். படித்து இயற்கை சூழலோடு சஞ்சரித்து மகிழுங்கள்.

சிவமணி 

நூல் தகவல்:

நூல் : மாதொருபாகன்

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: பெருமாள்முருகன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   முதற்பதிப்பு 2010 | திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 2011

பக்கங்கள் : 192

விலை :  ₹190

Kindle Edition :  

English Translation