பெயர் மற்றும் அட்டைப்படத்திற்காகவே வாசிக்க விரும்பிய புத்தகம் .

புத்தகம் கையில் கிடைப்பதற்கு முன்பாகவே கதை குறித்த சில அனுமானங்களை வைத்திருந்தேன். கடவுள் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை தரக்கூடிய ஒரு சொல். பல்வேறு உணர்வுகள் பொதிந்த ஒரு சொல். அப்போ அந்த நாற்காலி எப்படி இருக்கும். ஒருவேளை இந்த உலகு தான் கடவுளின் நாற்காலியாக இருக்கும். இயற்கை தான் அது அப்படி இப்படினு  போகுமோன்னு ஒரு எண்ணம் . பிறகு ஒரு முகநூல் பதிவில் பறவைகளை தேடிய ஒரு இளைஞனின் பயணம் என்பதை பார்த்ததும் சரி பறவைகள் குறித்தான ஒரு நாவலாக இருக்கும் என்ற எண்ணத்தில் வாசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அதையெல்லாம் சுக்குநூறாக்கி இந்த உலகில் நிகழும் மிகப்பெரிய அரசியலை எழுதி இருக்கிறார்.

தமிழகத்தின் பரதேசிப்பட்டி என்னும் கிராமத்தில் பறவைகளின் மீது தீரா காதலுள்ள ஒரு சிறுவனின் பின்னணியிலிருந்து  ஆரம்பிக்கிறது கதை. இதை கதை என்று சொல்ல மனம்வரவில்லை . நிகழ்வு என்றே குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் எழுதப்பட்டுள்ள விஷயம் ஒவ்வொன்றும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். அந்த கிராமத்திலிருந்து ஆமூர் பால்கன் என்னும் பறைவையை தேடி 3000 கி.மீ . பைக்கில் பயணம் செய்து நாகலாந்தின் பங்கிட்டி கிராமத்தை அடைகிறான். அங்கு பறவைகள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதை அறிந்து அதனை தடுக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறான் கேசவன் என்கிற கதை நாயகன். இது தான் முழு நாவலாக இருக்குமோ என நினைத்தால் உலக அரங்கில் நடத்தப்படும் ஒரு போராட்டத்தை இரண்டு பக்கங்களில் முடித்து விடுகிறார். வெறும் கதையாக அதை முடிக்கவில்லை . அங்கு வாழும் பழங்குடிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைத்தே அடுத்தடுத்த நிகழ்வுகளை விவரிக்கிறார் . நாகா மக்களின் “ஜூ “ விவசாய முறை மறுக்கப்படுவதின் அரசியல் பின்னணி, அதிகார வர்க்கத்தினரின் சதி , அதனால் சவாலாக மாறும் பழங்குடிகளின் வாழ்வாதாரம் என்று விரியும் அந்த எழுத்தில் முன் அனுமானங்கள் எல்லாமே தகர்க்கப்பட்டுவிட்டன.

மேலும், இந்த உலகிற்கான உணவு சங்கிலி ஒரே நூலில் பின்னப்பட்டது எங்கு அறுபட்டாலும் இன்னொரு முனையில் தொய்வு தெரியும் . உணவு சங்கிலியில் பறவைகளின் முக்கியத்துவத்தை வெகு நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்.

பின்னர் அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவின் கிகுயூ மலைநோக்கி பயணத்தை தொடர்கிறார். அங்கும் ஆதி பழங்குடிகளின் வாழ்க்கை , அந்த அழகியல் அழிக்கப்பட்ட பின்னணி , அதனை பின்பற்றி நடக்கும் இன குழுக்களுக்குள்ளான போர் , இன அழிப்பு என நிகழ்வுகளை விவரிக்கிறார் . Super -x என்னும் நிறுவன வெப்சைட்டை ஹேக் செய்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டு பழங்குடிகளை காப்பாற்ற போராடும் களம் தான் இந்த நாவல் .

“அதிகார வர்கத்தை பொறுத்தவரை, இவ்வுலகில் காலியாக இருக்கும் ஒரே நாற்காலி, அது கடவுளின் நாற்காலி தான் . அதை அடையப்போவது யார் என்பது தான் உலக அதிகாரப்போட்டியின் மையப்புள்ளி . கடவுளின் நாற்காலியை கைப்பற்ற அதிகார வர்க்கத்தினர் ஏந்தி நிற்கும் ஆயுதம் தான் தொழிநுட்பம்  “ என்று 50 பக்கத்திற்குள்ளாகவே உண்மையை உடைத்துவிடுகிறார்.

இதன் பின்னணியை படித்தால் தான் நன்றாக இருக்கும். ஒரு அனுபவமாக இதை பகிரும் போது நாவலின் தன்மையை உணர முடியாமல் போகக்கூடும் .

மிக விரைவாக படித்து முடித்த ஒரு நாவல் . எல்லா கற்பனைகளையும் தாண்டி read inbetween lines என்பதாகவோ அல்லது ஒரு தாளின் முதல் பக்க செய்திக்கும் நான்காவது பக்க செய்திக்கும் உள்ள தொடர்பை விவரிப்பதாகவோ  தான் நாவல் இருக்கிறது . இச்சமூகத்தில் நிகழும் ஒரு ஒரு நிகழ்வையும் எப்படி ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்கவேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக படுகிறது . பூர்வகுடிகளை அவர்களின் வாழ்விடங்களை விட்டு அகற்றுவது ஆகட்டும் , ஆபிரிக்க மக்கள் பஞ்சத்தினால் அல்லலுறும் நெஞ்சை விட்டு நீங்காத வலைதள பதிவு சம்பவங்களாக இருக்கட்டும் , பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்படுகிறது என்ற செய்தியாகட்டும் ஆசிரியர் அவருடைய மொழி நடையில் பெரிய வர்ணனைகள் இன்றி எளிமையாகவே சொல்லி இருக்கிறார் .

ஜெய்பீம் படம் பார்த்து எப்படி வரிந்துகட்டி நமது எண்ணங்களை பகிர்ந்தோமோ அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு நாவல் என்றே சொல்லலாம் .

ஒரு சின்ன நெருடல் : பின்னட்டையில் இதனை ஒரு fantasy நாவல் என குறிப்பிட்டுள்ளது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது . எப்படி ஒரு இன அழிப்பு குறித்த ஒரு விஷயத்தை fantasy என்று குறிப்பிட முடிகிறது என தெரியவில்லை.

சமூக பிரக்ஞை உள்ள ஒருவரால் தன இதனை எழுத முடியும். இதில் சொல்லப்படும் எந்த சம்பவமும் மறுப்பதற்கில்லை. வெறும் செய்தியாக இதை சொல்லி இருந்தால் மனதில் நிற்க வாய்ப்பிருந்திருக்காது. ஆனால் cryosleep , KAYA -15, நெடுந்துயிலி மலர்கள் இதையெல்லாம் வைத்து ஒட்டு மொத்தமும் fantasy என குறிப்பிட்டுவிட முடியும் என தோன்றவில்லை . நூலாசிரியரின் பயண அனுபவங்களும் சேகரிக்கப்பட்ட தகவல்களையும் கொண்டே உலக அரசியலை எழுதியிருக்க முடியும் என்று நம்புகிறேன்.

எது எப்படியோ ஒட்டுமொத்த உலக அழகியலுக்கான, சூழலியல் சமநிலை, இன குழுக்களின் பாதுகாப்பு, இன்னுமும் கண்டுபிடிக்க இயலாத உலகின் மர்மங்கள் போன்ற அனைத்தை பற்றியும் அறியும் ஒரு ஆர்வத்தை தூண்டி இருக்கிறது என்றே சொல்லலாம் . இதனை ஒட்டிய பயண கட்டுரைகளையோ , வாழ்வியல் நூல்களையோ தேட வைக்கிறது . உண்மையில் நாம் படைத்த கடவுளர்களின் நாற்காலி காலியாக இருப்பதே நல்லது.

பேரன்பும் வாழ்த்துக்களும் திரு . கார்த்தி


நூல் தகவல்:

நூல் :  கடவுளின் நாற்காலி

வகை :  நாவல்

ஆசிரியர் : அதியமான் கார்த்திக்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு:  2021

பக்கங்கள் : 200

விலை:  ₹  220