இணைய இதழ்கள்

அப்பு சிவாவின் “ பாத்துமா கோடாரி” – சிறுகதை ஒரு பார்வை


சொன்னதைச் செய்வான், தந்ததைத் தின்பான்,எங்கிருந்து வந்தான், எவர் மூலம் வந்தான்,எப்படி வந்தான், எப்ப வந்தான்னு அவனைப் பத்தி எதுவும் தெரியாது. அப்படியொருத்தனை நம்ம ஊருலயுமே நிச்சயம் இருப்பான்.நாம எல்லாருமே நிச்சயமா அப்படி ஒரு ஆள சந்திச்சுருப்போம்.

அப்படிப்பட்ட ஒருத்தன் தான் பாத்துமா. இந்தக் கதையின் ஆத்மா. ஊர்ப் புளியமரத்தடி பிள்ளையார் கோயில் தான் அவன் வாசம்.

ஒரு தட்டுச் சோத்துக்கு.தன் கோடாரி கொண்டு அம்பாரமாக மரங்களை வெட்டிக் குவிக்கிறவனாக.., ஒரு யானையின் வேலையைத் தருகிற உழைக்கும் வர்க்கம்.

உழைத்த உழைப்புக்கு சோத்தை மட்டுமே வாங்கிக்கத் தெரிஞ்ச.. சோத்தை மட்டுமே வாங்கிக் கொள்கிற “கிறுக்குப் பய”.

எண்ணங்களில் செய்கைகளில் நச்சுக் கலக்காத இயல்புடைய எளியவர்கள், அத்தனை எதிர்மறை குணங்களும் கொண்ட பார்வைகளுக்கு எப்போதும் “கிறுக்குகள்” தானே.

அப்படிச் சொல்லி இவனைக் கை காட்டி தான் ஊர்க் குழந்தைகளுக்கு பயங்காட்டிச் சோறூட்டுவார்கள்.

அப்படி அவனைப் பார்த்துப் பயந்து, ஒடுங்கி இப்போது வளர்ந்து நிற்கிற ஒரு இளைஞனின் பார்வையில் இருந்து தான்..இந்தக் கதை நகர்கிறது.

சாதாரணமாக.., புளியமரத்தடி பிள்ளையாராக இருந்த வரைக்கும் அந்தப் பிள்ளையாருக்கு ஒரே துணையும் காவலும் இந்த பாத்துமா தான்.

அதே பிள்ளையாருக்கு நாலு பக்க சுவரும் மேலே ஒரு கூரையும் போட்டு கும்பாபிசேகம் செய்து ஒரு பூசாரியைப் போட்டவுடனே, அதே பாத்துமா “தீட்டு” என்று சொல்லி பூசாரியால் கோயிலை விட்டு வெளியேற்றப்படுவதும்.., அதைத் தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு காதல் வந்து பாத்துமாவை அடித்துத் துவைத்துத் துவம்சம் செய்து வேடிக்கை செய்துவிட்டுப் போவதும் தான் கதையின் போக்கு.

எளிய மனிதர்களுக்கு எப்போதும் இருக்கவே இருக்கிறார்கள் மரத்தடிப் பிள்ளையாரும் மகமாயியும். ஒத்தைச் சூடக்கட்டி போதும். அதுவுமே கேட்கப் போவதில்லை தானே இந்த எளிய சாமிகள்.

இல்லாதப்பட்டவர்களின் கண்ணீருக்கும் வேண்டுதலுக்கும் மரங்கள் தோறும் காத்துக் கிடக்கும் இவர்கள் தான் ., மடப்பள்ளிகளுக்குள் உடல் சுத்தம் பார்க்கும் ” தீட்டு” சேவிப்பவர்களால் கதவடைக்கப் படுகிறார்கள். சமகாலக் கோயில்களில் நாம் காணுகிற நிதர்சனம்.. இங்கே வலிக்கிறது.

மனுசன் ஒரு சல்லிப்பயன்னுஜி. நாகராஜன் சொல்லியிருப்பார். அப்படியான மனுச மனங்களின் சகிக்க முடியாத விகாரமும் அதன் போக்கும்.. இதற்கெல்லாம் எதிர்வினையாற்ற தெரியாத எளிய மனிதர்களை எப்படியெல்லாம் காவு வாங்குகிறது என்பதைத் தன் இலகுவான மொழி நடையில் கையாண்ட விதத்தில்.. சமூகத்தின் சில நச்சுப் பிடித்த பக்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இக்கதையின் ஆசிரியர். வாழ்த்துகள். !

 


இச்சிறுகதையை கலகம் இணையதளத்தில் வாசிக்க இணைப்புச் சுட்டி –>அப்பு சிவாவின் “ பாத்துமா கோடாரி”  

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *