மனிதன் தனது இருப்பை சுமையாகக் கருதத் துவங்கும் தருணத்திலிருந்து அவனது வீழ்ச்சி ஆரம்பமாகிறது. எதனால் ஒருவன் சுய இருப்பை சுமையாகக் கருதுகிறான்…? இதற்கு பொதுவான வரையறை எக்காலத்திலும் எவராலும் நிறுவ இயலாது.
சிந்திப்பது மகிழ்ச்சிக்கான திறவுகோலாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் சரியான திறவுகோலைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறார்கள். சிலர் அதன் பயன்படுத்தும் நுட்பத்தை அறியாமல் இருக்கிறார்கள். பொருந்தாத அல்லது பயன்படுத்தும் நுட்பம் அறியாத திறவுகோலைக் காலம் முழுதும் கழுத்தில் வெறும் பகட்டுக்காக அணிந்து திரிவது பெருஞ்சுமை. நிறைய சிந்தனை வாதிகள் வெளியே சிரித்துக்கொண்டும் உள்ளே துன்பத்திலும் வாழ்கிறார்கள். இந்த பொருத்தமற்ற சுவையின் மீது விருப்பத்துடன் அவர்கள் அடிமைப்பட்டுள்ளது வேடிக்கையான வீழ்ச்சி.
அடிமைகள் தாங்கள் நேசிக்கப்படுவதை விரும்புகிறார்கள். மனிதனுக்கு எப்படி தூய்மையான காற்று தேவைப்படுகிறதோ அப்படியே சில அடிமைகளும் தேவைப்படுகின்றனர். யாரையும் அடக்கியாளாமலும் அடங்கிப் போகாமலும் மனிதனால் வாழவே முடியாதா…? முடியாது என்கிறார் இந்நாவலின் ஒரே கதாபாத்திரமாக ஒற்றை குரலாக வரும் “ழான் பத்தீஸ்த் கிலெமான்ஸ்”.
கிலெமான்ஸ் ஒரு லட்சிய வழக்குரைஞராக இருந்து பின்பு தண்டனை வழங்கும் நீதிபதியானவர். அடிப்படையில் அவர் ஒரு “சதுய்சி” (மறுமையினை நம்பாமல் நிகழ்கால வாழ்க்கையினை மகிழ்ச்சியாக அனுபவிப்பவர்). ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் மதுவிடுதியில் தனக்கு எதிரே இருக்கும் மனிதனிடம் அல்லது நம்மிடம் அல்லது தனக்கு தானே நடந்தேறும் நீண்ட உரையாடலாகவே இந்நாவல் செல்கிறது. ஒற்றைக் குரல்… ஒற்றை கதாபாத்திரம்… இம்முறை சில வாசகர்களுக்குச் சலிப்பைத் தரலாம், பொறுமையின் விளிம்பிற்கும் நகர்த்தலாம். அப்படியானவர்கள் தனிமையின் மீதான விரும்பின்மை கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவசரம் அவர்கள் பின் நிற்கிறது.
கிலெமான்ஸ் விவரிக்கும் நுண்ணிய அனுபவக் கருத்துகள் அடிப்படையில் ஒட்டுமொத்த மனிதப் பண்புகளில் படிமமாகவே நிறுவப்படுகிறது. ஒரு சில சமயம் ஏதோவொரு உரை கீற்று வாசிப்பவனின் சாயலோடு பொருந்திப் போகிறது.
எப்பொழுதெல்லாம் நமது மேன்மை நிலையை உயர்த்திக் கொள்வதற்கான கவர்ச்சியான வெளிக்கட்டமைப்பை நிறுவுவதில் முனைகிறோமோ அப்பொழுதெல்லாம் நமது அப்பழுக்கில்லாத சுயத்தினை சிதைத்துக் கொள்கிறோம். ஒருவகையில் மேன்மை நிலை அபிப்ராயத்தின் கயமைத்தனத்தில் உயிர் வாழ்கிறது.
வாசிக்கப்படாத நூல்கள், நேசிக்கப்படாத நண்பர்கள், சுற்றிப் பார்க்காத இடங்கள், சுகிக்கப்படாத பெண்கள் என இம்மனிதனின் ஏக்கத்தைப் போல் எதார்த்தத்தை மறந்தவர்கள் ஏராளம். மனித மனமானது நாயகன் பிம்பத்திலோ தாதா பிம்பத்திலோ தன்னை பெரிதாகப் பொருத்திக்கொள்வதற்கு விழைவதன் காரணமாகவே அவன் இலக்கியத்தில் நுழைகிறான் அல்லது திரைப்படங்களில் தேடுகிறான் அல்லது ஏதோவொரு அரசியல் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். இலக்கியத்தைப் பொறுத்தவரைப் புரிதலும் கிடைத்துப் பிழைத்து விடுவதற்கான கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும் திசைகளுக்கான குறிப்புகளும் கிடைக்கிறது.
அதிகம் சிந்திப்பவர்கள் தாறுமாறான உடலுறவில் ஈடுபடுவார்கள் என்பதின் அர்த்தம் கிலெமான்ஸ் தனக்கான சுய பிரமாணத்தின் நிழலை எவ்வாறு புரிந்து வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. பெரிய அறிவாளியாக இருப்பவர் பக்கத்தில் இருப்பவரை விட ஒரு பாட்டில் அதிகமாகக் குடிக்க முடியுமானால் பெருமைப்பட்டுக் கொள்கிறார் . பெண்கள் விஷயத்தில் உணர்வுகளை நிராகரித்து உடலை ஆராதிக்கும் இந்த மனிதனுக்கு “காமக்களியாட்டத்தில் பரவசம் என்று எதுவுமில்லை அது ஒரு நெடுந்துயில்” என்கிற தெளிவு பிறப்பதும் வியப்பாகவே இருக்கிறது.
நடுநிசி இரவில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் பெண்ணை காப்பாற்றுவதற்குத் தடையாக நடுங்க வைக்கும் குளிரும் சில்லிட்ட நதி நீரும் காரணமாக இருக்கிறது என்பது அவரது மனம் கூறும் சமாதானம். இருப்பினும் இந்த தயக்கம் குரூரமான மனிதனின் இருண்ட பகுதி. சட்ட விதிகள் மூலம் வெல்ல முடியாத வழக்குரைஞரின் வாதம் தோல்வியைத் தழுவும் போது அது கடவுளை இறைஞ்சும் சப்பைக்கட்டுக்கு ஒப்பாகிறது.
மாறுபட்ட நடை மற்றும் வடிவமைப்பைக் கொண்ட இந்த பிரெஞ்சு நாவலின் கடினத் தன்மையைத் தனது திறன் வாய்ந்த தமிழ் மொழியாக்கத்தின் மூலம் ஒரே மூச்சில் வாசிப்பதற்கு ஏற்றவாறு எளிதாகவும் அதேசமயம் பிசிரில்லாத வகையிலும் மொழிபெயர்த்துள்ளார் சு.ஆ .வெங்கட சுப்புராய நாயகர். இவரது பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழி மீதான புலமை மொழிபெயர்ப்புகளின் மீது இயல்பாகக் கவிழும் அன்னியத்தை அகற்றி விடுகிறது. அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.
வைகறையின் துவக்கம் வீழ்ச்சிக்கானதாக அமையட்டும். ஆம், கொடுங்கனவுகளின் வீழ்ச்சி வைகறையில் துவங்குகிறது. உங்களோடு மட்டுமாவது பாசாங்கு இல்லாது பேசுங்கள். இந்நாவல் வழியே அல்பெர் கமுய் (ஆல்பர்ட் காம்யூ) இதைச் செய்துள்ளார்.
நூல் : வீழ்ச்சி
வகை : நாவல், மொழிபெயர்ப்பு
ஆசிரியர் : ஆல்பெர் காம்யு
தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2021
ISBN: 9789391093648
பக்கங்கள் : 120
விலை: ₹ 140
கிண்டில் பதிப்பு :
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.