ன் தாய் தந்தையருக்குச் சமர்ப்பணம் என்று தன்னுடைய இந்த முதல் புத்தகத்தினை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர் தங்கம் வள்ளிநாயகம்.

மனித எண்ணங்கள் என்றென்றைக்கும் பொய்த்துப் போகாத மெய்யாகும். தன் வாழ்க்கைத் தடத்தில் பார்த்த பெண்களையும் ஆண்களையும் அச்சு அசலாக நம்முடைய கண்முன் கொண்டு வந்து ரத்தமும் சதையுமாக உலவவிடுகிறார் என்று தமிழச்சி தங்க பாண்டியன் அணிந்துரை தந்திருக்கின்றார்கள்.

பல பண்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை, கட்டுரைகளையே வாசித்து வாசித்து சற்றே சலிப்படைந்த மனதுக்கு ஒரு குடும்பத்து மனுஷியின் எந்தப் பூச்சுமற்ற அனுபவப் பகிர்வுகள் புத்துணர்ச்சி தந்தன என்பது முற்றிலும் உண்மை என சு.தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.

ஆசிரியர் பணி செய்து, பணி நிறைவு பெற்ற பின்பு ஓய்வு நேரத்தினை சிறந்த பொழுதுபோக்காக அமைத்துக் கொள்ளத் துவங்கப்பட்ட முகநூலே தமது எழுத்திற்கான அஸ்திவாரம் என்றும் அதில் எழுத எழுத அதனை ரசித்துப் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களும் இதனை நிறைவு செய்ய தனக்கு உதவி செய்தார்கள் என்றும் தன்னுரை தந்திருக்கின்றார் தங்கம் வள்ளிநாயகம்.


மொத்தம் 33 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. அனைத்து கட்டுரைகளுமே நாம் வாழ்ந்த வாழ்வினை நம்முடன் பேசுகிறது. நம்மை, நம் சிறு பிராயத்திற்கு அழைத்துச் சென்று ஆச்சியோடு, தாத்தாவோடு, அத்தை மாமாவோடு குதூகலித்திருந்த நாட்களை நமக்கு மீட்டுத் தருகிறது. நாம் மறந்து போன நிறையப் பழக்க வழக்கங்களை இந்த கட்டுரை மூலம் தங்கம் வள்ளி நாயகம் அக்கா நமக்கு மீட்டுத் தந்திருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய பழமொழியாகட்டும், உவமைகளாகட்டும், வட்டாரச் சொற்களாகட்டும் அனைத்துமே நம்முடைய சிறு பிராய அந்த வாசனையினை நம்முள் பரவச் செய்கிறது. நெல்லை வட்டாரச்சொல் இயல்பாகவே வந்து நம்மை அவரோடு இணைந்து பயணிக்க வைக்கிறது. நிறைவாக ஒன்றிரண்டு கட்டுரைகளில் மட்டும் கொங்கு தமிழ் அவரையும் அறியாமல் உட்புகுந்து வந்து விடுகிறது.

ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதாவது ஓர் செய்தி பழமொழி தாங்கி இருக்கும். அதில் நாம் புழங்கும் வட்டார சொல் இருக்கும். இவையன்றி இந்த முப்பத்து மூன்று கட்டுரைகளுமே இல்லை. ஆக, இந்தக் கட்டுரைகள் அனைத்தும் வட்டார சொல்லில் நாம் வாழ்ந்த வாழ்வியலைப் பேசுகின்ற நூலாக மிளிர்கிறது.

தாயக்கட்டை ஆச்சியை அறிமுகம் செய்கின்ற பொழுது என் தாத்தா எனக்குச் சொன்ன சகுனியினுடைய கதை நினைவுக்கு வந்தது. அந்த நினைவு வந்து கொண்டிருக்கும் பொழுதே அடுத்த பத்தியில் அக்கா அந்த ஆச்சிக்கு ‘சகுனி ஆச்சி’ என்று பட்டமே சூட்டி விடுகின்றார்கள். நம் கைகளுக்குக் காய் வர ‘தவசு’ இருக்கவேண்டுமென்று சங்கரன்கோவில் தபசு காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார்.

கோட்டி என்று நெல்லை வட்டார மொழியில் அழைக்கப்படும் நபரைப் பற்றிய ‘மனித உணர்வின் எல்லை’ எனும் கட்டுரையில் நாம் அவருடைய நிலைமைக்குப் பரிதாபப்படுவதை விட, அவரைப் பராமரித்த அந்த அண்ணனுடைய பாசத்தை நமக்கு உணர வைக்கிறது.

‘திண்ணை வீடும், பாம்படம் அணிந்த ஆச்சியும்’ கட்டுரையில் “திண்ணை ஒரு மனிதனுக்கு நிகரான உணர்வுடன் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒன்றாகும்”, என்ற கருத்தினை பதிவு செய்திருப்பார். இது உண்மையே. என்று நாம் திண்ணையை எடுத்தோமோ அன்று முதலே நமக்குண்டான சக தோழமை, சகோதர, மனிதநேய உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்திருக்கின்றோம் என்பதனை இந்த கட்டுரை நமக்குப் பாடம் சொல்கிறது. இணையத்தில் கிடைத்த ஒரு நிழற்படம் இங்கே என் நினைவுக்கு வருகிறது. ஒரு கடை வாசலில் யாரும் அமர்ந்து விடக்கூடாதென்று கூரான இரும்புக் குச்சிகளை நட்டு படிக்கட்டுகளின் மேல் வைத்துச் சென்றிருப்பதைப் படம் பிடித்துப் பதிவு செய்திருந்தார்கள். இவர்களைப் போன்றவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்தால் நிச்சயம் வருந்தி மனம் மாறக்கூடும்.

அந்த மடிசார் மாமி தன்னுடைய தன்னம்பிக்கையால் உயர்ந்து நிற்பதை ஒரு கட்டுரை பேசுகிறது. அருகிலிருந்த அத்தனை பேரையும் அத்தை மாமா என்று உறவு முறை அழைத்துப் பேசியதை மற்றொரு கட்டுரை பேசுகிறது. மனிதர்கள் புழங்கிய வீடு திருமணமாக மண்டபமாக மாறியதன் வருத்தத்தை இன்னொரு கட்டுரை பிரதிபலிக்கிறது.

ஆறுதல் பரிசாகக் கிடைத்த அந்த சந்திரிகா சோப்பின் வாசம் நம் நெஞ்சு முழுவதும் நிறைந்து இன்னும் நாசிகளில் அந்த வாசனையின் நுகர்ச்சியினைத் தக்க வைக்கிறது.

பெரிய வீடும் பெரிய மனசும்’ எனும் கட்டுரையில் அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற காரில் ஒவ்வொருவரும் தன்னுடைய பிரதி பிம்பம் பார்த்துப் பார்த்து மகிழ்வதை கட்டுரைப்படுத்தியிருக்கும் பாங்கு இப்படி எல்லாம் நாம் செய்த அந்த நிகழ்வினை மீட்டெடுத்துக் காண்பிக்கிறது. கூடை வகையினை நெல்லிக்காய் கூடை, சிவன் கண், சாதா கூடை என்று அவர்கள் அறிமுகம் செய்வதில் நாம் பள்ளிக்கு நோட்டுப் புத்தகங்கள் கொண்டு சென்ற வண்ணக் கூடைகளை நினைவிற்குக் கொண்டு வந்து நம்மை அவற்றோடு பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது.

நெய் உருக்குவதில் இருக்கின்ற நுட்பத்தினை நமக்குச் சொல்வதில் அந்த முருங்கை இலையினுடைய வாசம் நம்மோடு நிலைத்திருக்கும் என்கிறார். நெய் உருக்குகையில் போடும் முருங்கை இலையினுடைய வாசம் என்னை இன்று இருக்க விடவில்லை. நேற்று நாங்கள் நெய்யை உருக்கிய போது அதிகமாக முருங்கை இலையைப் போட்டு அதனை எவ்வித பிக்கல் பிடுங்கல் இல்லாமல் தனியாகச் சாப்பிட்டு அசை போட்டுக் கொண்டேன்.

தன் அம்மா பின்னுவது போல் இரட்டைச்சடை அமையவில்லை என்ற போதும் அத்தை மனசு நோகக் கூடாது என்பதற்காகப் பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அந்த மனசு தற்போதிருப்பவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.

‘அந்த ஏழு நாட்கள்’ எனும் கட்டுரையில் சைக்கிள் ஓட்டுபவருடைய நிகழ்வினை காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஒரு ஆச்சி வந்து அதைப் பார்க்கும் போது, “யார் பெத்த பிள்ளையோ? இப்படி மழையிலும் வெயிலிலும் நனைந்து காயுது. எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றிற்குத்தானே?” என்று வருத்தப்படுவதைப் பதிவு செய்வதோடு தன் வாயின் மீது கையை மடக்கி வைத்து ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று பதிவு செய்திருப்பதில் நம் கண் முன்னே அந்த ஆச்சியை காண்பித்திருப்பார்கள்.

‘ஒரு கத்துக்குட்டியின் சமையல்’ என்ற கட்டுரை அப்பாவின் அன்பிற்குச் சான்றாக அவர் வடித்த ஆனந்தக் கண்ணீரினை நமக்கும் சற்று கடத்திப் போயிருப்பார் அக்கா.

தங்கள் ஊர் ஆம்பல் ஊருணியில் குளித்த பங்கினை எழுதி முடித்து நிறைவு செய்திருப்பதில் அந்த ஊருணி தற்போது காய்ந்த நிலையில் பொலிவை இழந்து பாலைவனமாகக் காட்சியளிப்பதைக் காண இயலவில்லை என்று வருந்தி நமக்கும் அந்த வருத்தத்தைக் கடத்தி விடுகிறார். அந்த வருத்தம் நம்மைச் சிந்திக்க வைத்து இதுபோன்றதொரு ஊருணிகளை இனியாவது காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தூண்டுகிறது. ஆசிரியை அல்லவா. தன்னுடைய எழுத்து மூலம் விழிப்புணர்வைத் தூண்ட வைத்ததில் அவருக்கு நிகர் அவரே.

‘நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்’ எனும் கட்டுரையில் தன் தாய் தந்தை செய்த நன்றிக்கடன் தம்மை ஒரு இக்கட்டான சூழலில் காத்து உதவியது என்பதனை எழுதி இதுபோன்ற ஒரு மனிதர்களும் நம்முடனேயே இருக்கின்றனர். அவர்களின் நட்பு மேலானது என்கிறார். உதவிய அவர்களுடைய விலாசத்தைக் கேட்டாயா என்று அப்பா கேட்ட போதே பதற்றத்தில் மறந்து விட்டது நினைவிற்கு வந்ததென்று சொல்லும் பொழுது நாமும் வருந்த வேண்டி இருக்கிறது. பெற்றோரால் அவர்களுக்கு நன்றி சொல்ல இயலவில்லையே என்ற வருத்தம் அவர்களோடு இணைந்து நமக்கும் வந்து விடுகிறது.

‘பேருந்து பயண அனுபவங்கள்’ எனும் கட்டுரை ஓட்டுநரே தமக்குப் பின்பு இருக்கின்ற சீட்டினை அவர்களுக்கென ரிசர்வு செய்து வைத்திருப்பதில் இதுபோன்ற நண்பர்கள் சூழ் உலகிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவூட்டுகிறது. தினந்தோறும் நான் போகின்ற என்னுடைய பேருந்து பயணம் அவர் வரவில்லையே என்று கேட்கும் அளவிற்கு இருப்பதையும் சிலரின் பெயர் கூட தெரியாத இதுபோன்ற நடத்துநர்களையும் நினைவூட்டியது. அத்தனை நல்ல மனிதர்கள் ஓட்டுநரும் நடத்துநரும். குறைந்தபட்சம் இனியாவது நாம் இறங்கும் போது அவர்களுக்கு நன்றி சொல்லி நம் அன்பைப் பரிமாறிக் கொள்வோம்.

‘கிளி ஜோசியம் பார்க்கலியோ’ எனும் கட்டுரையில் எழுதப்பட்ட அந்த சக தோழியினுடைய மனப்பாங்கினை சிலாகித்து எழுதியிருப்பது அவர்கள் மேல் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தித் தருகின்றது.

‘ரம்ஜான் மாதம்’ எனும் கட்டுரையில் வகுப்பிலிருக்கும் குறும்புக்கார மாணவனோடு சிறைக்கைதி காட்சிகளைப் பதிவு செய்து சூழ்நிலையால் பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே வேலைக்குப் போகும் அண்ணனைக் காண்பித்து அவனது பண்பினை நிகழ்வு மூலம் சொன்ன போது அவன் மதத்தினைக் கடந்து இராமனாக மிளிர்ந்தான்.

நிறைவாக தம்முடைய ஊரில் நடக்கின்ற ‘சூரன் போர்’ எனும் கந்த சஷ்டி விழா நிகழ்வினைக் காட்சிப்படுத்தியிருப்பது பிரமிக்க வைக்கிறது. அந்தக் காட்சியினை இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யவில்லை என்ற வருத்தத்தைப் பதிவு செய்தபோது இனியாவது இதுபோன்று அரிதாக நடைபெறுகின்ற நிகழ்வுகளை கண்முன்னே காட்ட தற்போதைய ஊடகங்கள் முன்வர வேண்டுமென்ற வேண்டுகோளுக்கு வித்திடுகிறது.

இப்படி ஒவ்வொரு கட்டுரையும் நம்மை அவற்றின் ஊடே பயணிக்க வைத்து, நெகிழ வைத்து, சிரிக்க வைத்து, கொஞ்ச வைத்து, நம்முடைய நிலையினை உணர வைத்து நம்மை நம்முடைய சிறுபிராய காலத்திற்கே அழைத்துச் செல்கிறது என்பதில் ஆனந்தம் கொள்ள இயலுகிறது.

ஒரு படகு தன் திசையில் பயணிக்க அதில் நாம் அமர்ந்து இது போன்ற செய்திகளை சுவைப்பட மீட்டெடுத்துக் கூடவை பயணிப்பதைப் போன்ற ஒரு மனநிறைவைத் தருகிறது இந்த கட்டுரைத் தொகுப்பு.


நூல் தகவல்:

நூல் : கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி

வகை : கட்டுரைகள்

ஆசிரியர் : திருமதி தங்கம் வள்ளிநாயகம்

வெளியீடு :  கோதை பதிப்பகம்

வெளியான ஆண்டு:  டிசம்பர் 2021

பக்கங்கள் :  210

விலை:  ₹  210

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *