ரு எழுத்தாளன் மீதான பிணைப்பு என்பது அவனது வெளிச்சத்தில் இருந்து உருவாகும் நமது நிழலின் மீதான வசீகரத்தின் தேடல்.

கான்ஸ்டண்டினோபிள் என்ற புராதன ரோமப் பேரரசாக விளங்கிய துருக்கியின் பண்பாட்டுக் கலாச்சார பொருளாதார தலைநகரம் இஸ்தான்புல் . இது ரோம, பைசண்டைன், ஓட்டோமான் என மூன்று பேரரசுகளைக் கொண்ட காலனியாதிக்கத்திற்கு உட்படாத பிரதேசமாகத் திகழ்கிறது.

வரலாற்றுப் பெருமைகள் பல கொண்ட இந்நகரம் பாஸ்ஃபரஸ் கடல் நீரிணைப்பின் கரை அருகே மலைகள் சூழ்ந்த ஒரு கம்பீர நிலப்பகுதி. ஆசியப் பகுதிகளையும் ஐரோப்பியப் பகுதிகளையும் கடல் மூலம் பிரிக்கும் தங்கக்கொம்பு (Golden Horn) இயற்கை துறைமுகத்தையும் கொண்ட இப்பகுதி கருங்கடலையும் மர்மராக் கடலையும் இணைக்கும் கப்பல் போக்குவரத்து மிகுந்த நீரிணைப்பு சாலையைப் பார்த்தபடி அமைந்துள்ளது.

ஒரு வாழ்ந்து கெட்ட நகரத்தில் வாழ்ந்து கெட்ட செழிப்பின் சுவட்டிலிருந்து ஆசையும் இழப்பும் அழுத்தமும் தன்னிரக்கமும் நடுநிசியில் தூரத்தில் கூவும் குயிலின் துயரம் கலந்த இனிமையின் தேடல் கொண்ட ஒரு எழுத்தாளன் தன் கடந்து வந்த பதிவுகளை நகரத்தின் சரிவான வீதிகளிலும் சிதிலமாகி விழக் காத்திருக்கும் மர வீடுகளின் மௌனத்திலும் மீட்டெடுக்கிறான்.

2006-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலக எழுத்தாளரான ஓரான் பாமுக் என்கிற மனிதன் 1952 ஜூன் 7-ல் பிறக்கிறார். இலையில் உறைந்த பனித்துளி உருகுதல் மூலம் தனது ஞாபகத்திற்கு திரும்புவது போல் அவரது துவக்கக் கால வாழ்க்கை நகரத்தோடு பதிந்த நினைவுகளின் வரலாறாக உதிர்கிறது. இந்த புத்தகம் அவர் விதியை மாற்றி எழுதிய நகரத்தின் மாற்ற முடியாத விதியின் படிமங்களை மீட்டெடுக்கிறது.

எல்லோரையும் போல் பகற்கனவோடு துவங்கும் இளமைப்பருவத்தில் பெற்றோர்களின் இடைவிடாத சண்டைகள் மாய தீண்டல் சுவைப்புக்கு தடையேற்படுத்துகின்றன.

எனக்கும் இருளான மழைக்காலம் பிடிக்கும் .ஏனெனில் இருண்மை மனித மனதிற்கு நெருக்கமானது. இளம்பிராயத்தில் நான் காத்திருப்பதைப் போல ஒரானும் ஒரு பேரழிவிற்கான மிக இனிமையானதொரு முன் குரலைப்போலக் கவியும் மாயத்தன்மை கொண்ட பனிப்பொழிவுக்காகக் காத்திருக்கிறார்.

அவரது காலத்திலும் ,அதற்கு முந்தைய காலத்திலும் வாழ்ந்த ஓவியர்களையும், அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றியும் அவதனிக்கிறார். “மெல்லிங் “பற்றி அதிகம் சிலாகிக்கிறார்.

“வெள்ளைக் கோட்டை ” நாவலின் துருக்கியப் பதிப்பின் மேலட்டையில் அவர் ரசித்த ஓவியத்தைப் பதிப்பித்துள்ளார்.

தனது நகரத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களையும், கூடுமானவரை பிரதிமைப்படுத்திய அயல் எழுத்தாளர்களின் தடங்களையும் ஆராய்கிறார். இஸ்தான்புல் பற்றி எழுதப்பட்ட நாவல்களிலேயே மிகவும் மகத்தானது அகமதி ஹம்தி தன்பினாரின் நிச்சலனத்தை (Peace) பரிந்துரைக்கிறார்.

தன் அபிமான நட்சத்திரங்களின் வாழ்க்கை குறிப்புகளையும் அவர்களின் படங்களையும் வைத்துக்கொண்டு அவர்களுக்கும் தனக்குமிடையே உள்ள ஒற்றுமைகளையும் எதேச்சையான சந்திப்புகளையும் கற்பனை செய்து பேசுகிற ஆத்மார்த்த ரசிகனைப் போல் நடந்து கொள்கிறார்.

யாஹியா கெமால், ரிஸாத் எக்ரெம் கோச்சு, அப்துல்லாஹ் ஷினாஸி ஹிஸார் ஆகியோர்களை பற்றி நகரத்தோடு அவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றிப் பேசுகிறார்.

அவரது பாட்டி பற்றியும், ஆரம்பப்புள்ளி பற்றிப் பேசும் சிறுபிள்ளைத்தனங்களுக்கிடையே கான்ஸ்டான்டிநோப்பிள் துருக்கி மயமானது பற்றியும் பின்பு அது அயல் மோகத்தால் பீடிக்கப்பட்ட நீட்சியின் உறுதித் தன்மையைப் பற்றியும் சோதித்து அறிகிறார்.

பாஸ்ஃபரஸ் அவரது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்துள்ளது. அதில் சில சமயம் நமது முகத்தைத் தேடிட முனைகிறோம். சில்லிட்ட குளிர்கால இரவுகளில் போர்வைக்குள் நடுங்கியபடி இருட்டில் ஜொலிக்கும் பாஸ்ஃபரஸை வெறித்துக் கொண்டே செய்யுளை மனனம் செய்த போதும், எதிர்கரையில் பற்றியெரியும் வீட்டின் ஆரஞ்சு தழலைப் பிரதிபலிக்கும் பாஸ்ஃபரஸ் மேற்பரப்பைப் பார்த்துக் கொண்டே தனது முதல் காதலியை முத்தமிட்ட போதும் நாம் அங்கு நிழலைப் போல் பதுங்கியிருக்கிறோம்.

சிறு வயதில் சகோதரர்களுக்கிடையே அடி பிடி சண்டைகள் ரணகளப்படும். இதில் பெரும்பாலும் அண்ணன்மார்கள் தான் ஜெயிப்பார்கள். இதில் சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஒரான் விதிப்படி தன் அண்ணனிடம் அடி வாங்கி அழும் தம்பியாகவே உள்ளார். தோற்ற பொழுதும் தன் அண்ணனை உசுப்பி அடியைப் பெற்றுக் கொள்வது அவரது இரண்டாம் உலகத்தின் துடிப்பையும் உயிர்ப்பையும் மாற்றி ஒரு மகிழ்ச்சியான புதிய வாழ்க்கைக்கு நம்பிக்கை தந்ததாகக் கூறுகிறார்.

பிள்ளை பருவம் முடிவடையும் போது உலகத்தின் மையமாகக் கருதியிருந்த தன் வாழிடத்தின் நோய்மையை உணர்ந்துகொள்கிறார்.

“உலகம் என்பது நான் நினைத்திருந்ததை விட பெரும் குழப்பமான அணுக முடியாத வேதனையளிக்கும் படி எல்லையற்று விரிந்திருக்கும் இடமாக அப்போது தான் கண்டு கொண்டேன்.”

இதிலிருந்து நம்மை கண்டுக் கொள்ள நூலகங்கள் உதவுகின்றன.

ஓரானின் பதின்பருவ காதல் ரசனையோடு அவரது ஓவிய ரசனையையும் தூரிகையில் இருந்து கசியும் வண்ணம் போல் வருகிறது.

கருப்பு ரோஜாவோடு சேர்ந்து சுற்றிய நகரின் உருளைக் கற்கள் பாவிய வீதிகள், வேகத்தோடு முத்தமிட்டுக் கொண்ட புராதன அருங்காட்சியகக் கூடங்கள் என அவரது முதல் காதல் கரை புரள்கிறது.

பாஸ்ஃபரஸின் மறுகரையில் பழமையான அற்புத மரமாளிகை (யாலிகள்) கொழுந்து விட்டெரியும் தழலின் பிரதிபலிப்பு அந்தக் காதலை விழுங்கிக் கொள்கிறது.

அவர் கூறுகிறார்.

” ஒவ்வொரு முறை காதலில் விழும்போதும் திரும்பத்திரும்ப கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்னவென்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை”

ஆம், பெரும்பான்மையானவர்களின் முதல் காதல் தோல்வியே இவரையும் தழுவிக் கொள்கிறது.

தன் காதலி கருப்பு ரோஜாவை இழந்த பிறகு குழந்தைத்தனமாகத் தொடங்கிய ஓவியம் வரைதல் மர்மமான முறையில் வடியும் போதை ரசாயன ஊற்றாகிறது.

” என் நகரத்தை தெருத்தெருவாக மூலைமுடுக்கெல்லாம் விடாமல் அலசி ஆராய்ந்து அலைந்து கொண்டிருக்கையில் எனக்குள் இருந்த கருந்துயரத்தையும் அங்கெல்லாம் ஊற்றினேன்” என்கிறார்.

நகரத்தின் ஆன்மாவை எழுத்தாளன் கண்டு கொள்ளும் விதம் விசித்திரமானது. “எனது நகரத்தின் சாரம்சத்தைப் பற்றி எதைச் சொன்னாலும் அது எங்களின் சொந்த வாழ்வு குறித்தும் எங்களுக்கே உரித்தான மனநிலை குறித்தும் பேசுபவையாகிவிடுகிறது. எங்களைத்தவிர நகரத்திற்கு மையம் என்று வேறொன்றுமில்லை”.

இஸ்தான்புல்லின் அழிபாடுகளில் நகரின் புராதனத்தைத் தேடும் அயல் எழுத்தாளர்களின் எழுத்துகள் உயிர்ப்பற்றவையாகப் புறந்தள்ளும் ஓரான் தன் நகரின் உயிர் தரிசனத்தை தன் அகநிழலில் மண்டி கிடக்கும் இருண்மையோடு நெருக்கமாக ஒப்பிட்டு அணுகுகிறார். அவருக்கு அது உருகி வழியும் மெழுகுதிரியிலிருந்து கசியும் வெளிச்சம் அதில் நகரின் துயரம் ( ஹூசுன்) தான் விஸ்வரூப தரிசனமாய் நீள்கிறது.

ஒரு நகரம் சொல்ல முடியாத சோகத்தை, தாங்க முடியாத வலிகளை, அளவிட முடியாத இழப்புகளைத் தனிமனிதனுக்குள்ளும் குடும்பத்திற்குள்ளும் , வெறுமை நிறைந்த வீதி வெளி எங்கும் மறைத்து வைத்துள்ளது . ஒரு பெரும் வெளிச்ச கீற்றுக்கு பின்னால் இவை தான் உள்ளது.

எந்த மனநிலையில் இந்நூல் ஆழமாக மொழியாக்கப்பட்டதோ அதே வாசிப்புத் தன்மையை இந்நூல் முழுமையாகப் பிரதிபலிக்கிறது. ஆம் இதை ஜி. குப்புசாமியைத் தவிர யாரால் சிறப்பாகச் செய்ய முடியும். மொழிபெயர்ப்பு என்பது உணர்வுகளை மாற்றும் அறுவைசிகிச்சை அதில் நிபுணத்துவம் கொண்ட ஜி.குப்புசாமி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.


மஞ்சுநாத்

 

நூல் தகவல்:
நூல் : இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள்
பிரிவு : அபுனைவு -மொழிபெயர்ப்பு
ஆசிரியர் : ஓரான் பாமுக்
தமிழில்: ஜி.குப்புசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு :  2014
பக்கங்கள் : 424
விலை : ₹ 475
அமெசானில் நூலைப் பெற

1 thought on “இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள் – ஓரான் பாமுக்

  1. அருமையான விமர்சனம்.. வாழ்த்துக்கள் தோழர்..

Comments are closed.