கரிச்சான் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த கு.ப.ரா வின் மீதான ஈடுபாட்டால் தனது எழுத்துலகப் பெயரை “கரிச்சான் குஞ்சு ” என மாற்றிக் கொண்டார். தஞ்சை  நன்னிலத்திற்கு அருகேயுள்ள சேதனீபுரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் ஆர்.நாராயணசாமி. இவர் எழுதிய ஒரே நாவல் “பசித்த மானிடம் “(1978).

ஏன்..? இந்த ஒரு நாவலோடு நிறுத்திவிட்டார் என்று தெரியவில்லை..! ஆனால், இவர் 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், இரு நாடகத் தொகுதிகளையும், இரு குறுநாவல்களையும், சில கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

பசித்த மானிடம் கதையை சாதாரணமாக ஆரம்பித்து அசாதாரணமான நிலைக்கு  நகர்த்தியுள்ளார். வறண்ட ஆற்றுக்கு திறந்துவிடப்பட்ட  அணை  நீர் போல் மெல்ல மெல்ல உருண்டு வரும் இவரது எழுத்து நடை மிக மெதுவாக வாசகன் மீது குளிர்ச்சியாய் போர்த்துக் கொள்கிறது.

சில மனிதர்களின் வாழ்வு ஞானோதயத்துடன் அற்புதமாய் ஆசிர்வதிக்கப்பட்ட தன்மையில் இயங்குகிறது, ஆனால் சிலருக்கோ வாழ்வின் முடிவில் தான் ஞானம் மலர்கிறது. இதற்குள் அவர்களது ஓட்டு மொத்த வாழ்வுமே மூலதனமாய் செலவழிக்கப்பட்டு விடுகிறது.

பல மனிதர்களின் இந்த மூலதனம் நட்டத்தில் முடிந்து விரக்தியின் வெறுமையை மிச்சமாக்கித் தருகிறது. ஞானியின் வெறுமைக்கும் அஞ்ஞானியின் வெறுமைக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. கணேசனின் வாழ்வு ஆசிர்வதிப்பாய் துவங்கினாலும்  தலைகால் புரியாத ஆர்பாட்டத்தில் அது சின்னாபின்னமாகிறது. அவனது இறுதி போராட்டத்தின் வெறுமை அவனை ஞானியாக பிரதிபலித்து ஒரு காவல்துறை பணியாளரை அவனுக்கு சீடனாய் தருவிக்கிறது.

நமது யோக கலாச்சாரத்தில் சீடனைப் பற்றி தான் நாம் அதிகம் பேசுகிறோம். குருவைப் பற்றிய நமது வியாக்கினங்கள் அபிப்ராயங்கள் எல்லாமே நமது தேடவின் தடைக்கற்கள்.

தேடல் சீடனின் உள் உந்துதல். இதற்கு குரு ஒரு தூண்டுதல் மட்டுமே . அவர் யாராகவும் எப்படி பட்டவராகவும் இருக்கலாம். இங்கும் அப்படித்தான் நிகழ்கிறது. வாழ்வின் வெற்று வெறுமையானது முழுமையின் வெறுமையை நோக்கி கணேசனை ஈர்க்கிறது.  சீடனாக வந்தவர்  குருவாகிறார்.

வாழ்வின் மறு துருவத்தை கிட்டாவின் வழியே காட்சிப்படுத்துகிறார். கிட்டா சமூகம் தீர்மானித்திருக்கும் பொருளாதார உச்சத்தினை பெறுகிறான். உறவுகளை தனக்காக தனதாக்கி கொள்கிறான். இறுதியில் அவனுக்கும் வெறுமை கிட்டுகிறது. ஆனால் அதற்கு பெயர் விரக்தி.

சுதந்திரத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலத்திலிருந்து கும்பகோணம், தஞ்சை,ருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கதை பயணமாகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு பாலுறவுவைப் பற்றியும் அம்மனிதர்கள் மீதான உளவியல் பார்வையையும் முன்னெடுக்கும் முதல் நூலாகும்.

தொழுநோயாளி மீது அன்றைய சமூத்திற்கு இருந்த பார்வையும் நோயாளியின் மனப்போராட்டங்களை பற்றியும் இந்நூல் பதிவு செய்கிறது.

மனிதன் தனது வெறுமையை  எதைக்கொண்டு நிரப்புவது என்றறியாமலே வாழ்வை கடத்துகிறான். பாலியல் வேட்கை, பணம், அதிகாரம் போன்றவற்றின் மூலம் தன்னை நிரப்பிக் கொள்ள முயலுகிறான்.., இறுதியில் அவன் பசித்த மானுடனாகவே மாண்டுப்போகிறான்.

– மஞ்சுநாத்

நூல் தகவல்:

நூல் : பசித்த மானுடம்

பிரிவு:  நாவல்

ஆசிரியர்: கரிச்சான் குஞ்சு

வெளியீடு :  மீனாட்சி புத்தக நிலையம் (முதல் பதிப்பு) , காலச்சுவடு பதிப்பகம் (மறுபதிப்பு)

வெளியான ஆண்டு : முதல் பதிப்பு  1978  | மறுபதிப்பு 2005

விலை: ₹ 325

Kindle Edition: