யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக  இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொரு வடிவமே காசிரங்கா காண்டா மிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற வன ஆவண நிபுணரான ஹாரி மார்ஷல் இவரைப் பற்றி டாக்டர் கே என்ற பெயரில் பி.பி.சி.க்காக ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். ஒரு சமகால வரலாற்று மனிதர் இவர்.

நூலின் அட்டை பின்குறிப்பில் இவர் பற்றிய மேற்குறிப்பிட்ட ஒரு சித்திரம் காணக்கிடைக்கிறது. 

  நான் முதன் முதலில் கதை சொல்லி பவா. செல்லத்துரை அவர்களின் you tube நிகழ்ச்சி வழியாகவே இந்த கதையை அறிந்து கொள்ள முடிந்தது. கதையா அது? …. மெய் சிலிர்க்க வைக்கும்படியான கதை மொழி பவாவினுடயது. 

 இந்த உலகில் வாழும் உயிரினங்களிலேயே நாம் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் வடிவமான யானையை நாம் கோவில்களிலே பார்த்து ரசித்து வருகிறோம். நாம் என்பது மனிதர்கள்தான். ஆனால் யானைகளை நாம் பார்க்கும்போது நமது கட்டுப்பாட்டில்  வாழக்கூடிய ஒரு ஜீவராசியா யானை என்று நமக்குத் தோன்ற வேண்டும். இந்த கதையை படித்தால் யானை என்பது …..டாக்டர் கேயின் வார்த்தையில் தருகிறேன்.

     “உண்மையில் மனுஷன்தான் வீக்கான மிருகம்.மத்த மிருகங்கள்லாம் நோயையும் வலியையும்  பொறுத்துக்கறதில இருக்கற கம்பீரத்தைப் பாத்தா கண்ணுல தண்ணி வந்துடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது, துடிக்காது. கண் மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்க மருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடுல படைச்சிருக்கார்.”

 இந்த நூலில் காட்டில வாழும் மிருகமான யானைகளுக்கு அவர் பார்க்கும் வைத்தியம்; நாம் அதை வாசிக்கும் போதே அதிர வைக்கிறது. சேற்றில் புதைந்த யானையை அதன் உடல் கிழித்து அழுகி கிடக்கும் சதைகளை வெட்டும்போது வெளிவரும் புழுக்களை எந்தவித அறுவறுப்பும் இன்றி அந்த கடமையை முழுமையாக அவர் செய்து முடிக்கும்போது நம் கண்ணுக்கு தெரியாமல் எங்கோ ஒரு காட்டுப்பகுதியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட அவரின் முன்னுதாரனமற்ற அவரது செயலை வாசிப்பின் வழியே அறிந்து கொள்ள முடிகிறது. இதைவிட யானைகள் அவரை புரிந்து கொள்ளும் விதம் அசாதாரணமானது. 

 மனிதர்களால் யானைகள் பாதிக்கப்படும்போது அவர் கொதிப்படைகிறார். ஒரு சமயம் முதுமலையில் ஒரு யானைக்கு கால் வீங்கி இருப்பதாக தகவல் வந்ததும் அந்த இடத்துக்கு விரைகிறார்.” டாக்டர் கே மெதுவாக கீழே இறங்கி ஓடையை கடந்து சேற்றுப்பரப்பில் இறங்குகிறார். ஒரு யானை தலையை குலுக்கியபடி டாக்டரை நோக்கி வருகிறது. யானை தலையை குலுக்கினால் அது எச்சரிக்கிறது என்று அர்த்தம்.டாக்டர் கே அசையாமல் சில நிமிடங்கள் நிற்கிறார்.யானையும் அசையாமல் நிற்கிறது .யானையை நோக்கி மேலும் சில அடிகள் முன்னே நகர்கிறார். இப்போது அந்த யானை நெருங்கி வருகிறது. பிறகு சீராக அதை நோக்கி சென்று அதன் முன் நிற்கிறார். அது பேசாமல் நின்றது. நெடுநேரம் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

பல மணி நேரம் கடந்து யானை பின்வாங்கியது. பிறகு காயம்பட்ட யானையை நோக்கி அவர் விரைகிறார். அதன்பிறகு அதை எப்படி கையாள்கிறார் என்பதை வாசகர்கள் இந்த நூலை வாசித்து புரிந்து கொள்ளவேண்டும். 

  டாக்டர் கேயை புரிந்து கொண்ட யானைகள் அவரை அனுமதிக்கின்றன. அவர் காட்டை புரிந்து கொண்டவர்.  நாமும் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவராக மாற முடிந்தால் மட்டுமே சாத்தியம். வனம் என்பது நாம் அறிய முடியாத பிரம்மாண்டங்களை உள்ளடக்கியது. அதன் ஒரு துளியேனும் அறிய, யானை டாக்டர் வழியாக வாசிப்பவருக்கு நமது என்ற சுயமும் அற்பமும் தொலைந்து போவதை உணர முடிந்தால் அதுவே இந்த படைப்பை உருவாக்கியவருக்கு வெற்றி.

நூல் தகவல்:

நூல் :    யானை டாக்டர்

ஆசிரியர் :  ஜெயமோகன்

வகை :  ; சிறுகதை

வெளியீடு : தன்னறம்

வெளியான ஆண்டு :   ஜனவரி 2020

பக்கங்கள் :   –

விலை : ₹  50

கிண்டில் பதிப்பு :