திபெத் பல காலமாகவே சீனாவின் அத்துமீறலுக்கு ஆளாகி வந்திருக்கிறது. முன்னுரையில் தென்சின் குறிப்பிட்டிருப்பதைப் போல திபெத்திய அடையாளங்கள், கலாச்சாரத்தை அழித்து சீனஅடையாளத்தைத் திணிக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. இன்றும் கூட திபெத், சுதந்திரநாடாக இல்லாமல் சீனாவின் சுதந்திரப் பகுதியாகவே இருந்து வருகிறது. 1970க்குப் பிறகே திபெத்தில் நவீன இலக்கியம் வேறூன்ற ஆரம்பித்திருக்கிறது. அதை மனதில் வைத்தே நாம் இந்தத் தொகுப்பை அணுக வேண்டும்.
வேட்டையாடியின் நிலவு கதையைப் படிப்பவர்கள், அசோகமித்திரனின் பிரயாணம் கதையை இணையத்தில் தேடிப் படித்துப் பாருங்கள். அசோகமித்திரன் எழுத்தாளர்களின் எழுத்தாளர், இருந்த போதும் சுய அனுபவம் என்பது கதைகளில் கலக்கும் பொழுது அதன் வீச்சு வேறாகத்தான் இருக்கிறது.
அன்பளிப்பு கதையும் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. வாசகஇடைவெளியைக் கொடுத்து எழுதப்பட்ட கதை. ஒருவகையில் பார்த்தால் ஆணுக்கொரு வரையறையும் பெண்ணுக்கு ஒன்றும் எல்லா சமூகங்களிலுமே விதிக்கப்பட்டதாகிறது. இன்னொரு வகையில் அப்பாவிக் கணவன் மேல் பரிதாபம் எழுகின்றது. சொல்லப்பட்ட முறையிலும் சிறந்த கதை இது.
ஐந்தாவது நபர் Gothic story. யார் அதிகம் மிரள்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் பேய் தெரியும். அறிவியல் பூர்வமாக அதை Hallucination effect என்றும் சொல்லலாம். ஆனால் முன்கதைச் சுருக்கம் தெரியாதவன் அருகே மூக்குடைந்த பேய் வந்து படுத்தால் என்ன காரணம் சொல்வது.
தொகுப்பாசிரியர் எழுதிய டோல்மா, தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று.
பள்ளிப்பருவத்தில் நாம் கொள்ளும் உறவுகள் காலப்போக்கில் எப்படி மாறுகின்றன என்பதோடு அல்லாமல் தகவல் தொழில்நுட்பம் எப்படி முறையில்லா உறவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதும் கதையில் கலக்கிறது. டோல்மா சந்திப்போமா என்று இவன் கேட்கும் பொழுது பதில் சொல்லாததிலும், பின் அவள் கூப்பிடும்போது இவன் விலகுவதிலும் ஒரு நுட்பமிருக்கிறது. டோல்மா வித்தியாசமானவள்.
இருபத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு. தொகுப்பின் பல கதைகளில் இந்தியத் தேசத்துடனான நெருக்கமும், சீன வெறுப்பும் வெளிப்படையாகத் தெரிகின்றன. அமெரிக்கா சென்றாலும் திபெத்தின் மலைப்பகுதியைத் தங்களுடனே எடுத்துச் செல்லும் மக்கள். திபெத்திய புத்தமதம் இவர்களது கலாச்சாரத்தை, வாழ்க்கை முறைகளைத் தீர்மானிக்கிறது. சீனாவின் அதிகார பலத்தால் புலம் பெயர்ந்தவர்கள் திபெத்தின் மீதான காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சில கதைகள் தவிர்த்து மற்றவை சாதாரணமான கதைகள். ஆனால் திபெத்தின் வாழ்வை, கலாச்சாரத்தை, நம்பிக்கைகளை, வலிகளை தமிழில் முதன்முறையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்தத் தொகுப்பு வழங்கி இருக்கிறது. ஆங்கிலத்தில் கூட திபெத்திய இலக்கியம் எங்கும் பேசப்பட்டதாக என் நினைவில் இல்லை.
கயலின் மொழிபெயர்ப்பு நன்றாக மெருகேறியிருக்கிறது. அங்கங்கே சில வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் போடலாமோ என்ற சிந்தனை வந்து போனது. எப்படியாயினும் சரளமான மொழிபெயர்ப்பு, தடங்கலின்றி தமிழில் படிக்க ஏதுவாக. அதிகம் பேசப்படாத திபெத்திய இலக்கியத்திற்கு வெளிச்சம் பாய்ச்சிய எதிர் வெளியீடு, கயல் இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.
Review Source & Courtesy :
– சரவணன் மாணிக்கவாசகம்
Website : https://saravananmanickavasagam.in/
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஹார்வர்டில் ஆங்கில இலக்கியமும், கொலம்பியாவில் Fine artsம் கற்றவர். திபெத்தியரான இவர் நவீன திபெத்திய இலக்கியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்தத் தொகுப்பு.
நூல் : பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும் (சமகாலத் திபெத்தியக் கதைகள்)
வகை : மொழிபெயர்ப்பு - சிறுகதைகள்
ஆசிரியர் : தென்சின் டிகி
தமிழில் : கயல்
வெளியீடு : எதிர் வெளியீடு
ஆண்டு: 2022
பக்கங்கள் : -
விலை: ₹ 450
பிரதிக்கு : +91 99425 11302
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர்