முன்னுரை:

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனில் உள்ள பெர்லினை தாய்நாடாக கொண்டு மூன்று தலை முறைகளாக அங்கு வசித்துவந்த, முதல் உலகப் போரில் பங்குபெற்ற டேவிட் மோசஸின் மகன் ஆரன் மோசஸ் என்ற யூத விஞ்ஞானி தன் குடும்பத்துடன் நாஜி படையினரிடமிருந்து தப்பித்து நெதர்லாந்தில் உள்ள  ஆம்ஸ்டர்டாம் என்ற நகருக்கு வந்து குடியேறுகிறார்.

அங்கு சில வருடங்கள் கழித்து ஜெர்மன் படையின் ஆக்கிரமிப்பு பின் தொடர்ந்ததால் 1943 ஜனவரியில் ஒரு நள்ளிரவில் தன் மனைவி ஹெலன் மோசஸ், பதினைந்து வயது மகள் ரெபெக்கா, பதினொரு வயது ஹயானா மற்றும் இரண்டு வயது மகன் ஐசக்குடன் தப்பித்து செல்லும் போது ஹெலன், ரெபெக்கா, ஐசக் மூவரும் நாஜி போலீசாரால் கைப்பற்றப்பட்டு ஜீப்பில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதால், தன் மகள் ஹயானாவுடன் இந்தியாவில் உள்ள  பெங்களூர் சாமராஜப்பேட்டை வந்து சேர்கிறார். அதன் பிறகு அவரும் அவர் மகள் ஹயானாவும் மீண்டும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கிறார்களா என்பதே இந்த நாவலின் பின்னணி.

நேமிசந்த்ரா:

நாவலாசிரியர் நேமிசந்த்ரா பெங்களூரில் என்ஜினீயராக பணியாற்றியவர். சாகித்திய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை கன்னடத்தில் எழுதியவர். 1995இல் இந்த நாவலைத் தொடங்கி, ஜெர்மன், அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் என பல நாடுகளுக்கு பயணங்கள்  மேற்கொண்டு வரலாற்று ஆவணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களையும் தன் புனைவையும் இணைத்து எட்டு வருட தொடர் உழைப்பில் இந்த நாவலை அளித்துள்ளார். 

மொழிபெயர்ப்பு:

இந்த நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர் மைசூரை சேர்ந்த கே. நல்லதம்பி அவர்கள். இவர், கன்னடத்தில் இருந்து தமிழிலும் தமிழில் இருந்து கன்னடத்திலும் பல கவிதைகள், சிறுகதைகள் மற்றும்   கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு செய்வதற்கு அதன் இரண்டு மொழிகளிலும் தேர்ந்த புலமை பெற்றவராக இருக்க வேண்டும். மூல நூலில் உள்ள உணர்வுபூர்வமான, ஆழமான அர்த்தத்தை உள்வாங்கி அதன் தன்மை குறையாமல் மொழிபெயர்ப்பது என்பது ஒரு சிறந்த கலை. அதனை இந்நூலில் சிறப்புற செய்திருக்கிறார்.

 கதைக்களம்:

பெங்களூர்:

கதையின் ஆரம்பம் பெங்களூர் சாமராஜப்பேட்டையில் விவேக்கின் இல்லத்தில் தொடங்குகிறது. தன் அப்பாவுடன் 11 வயதில் இந்தியா வந்தடைந்த ஹயானா வந்து சேரும் இடம். அவளுக்கு விவேக்கின் ஐந்து சகோதரிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் அறிமுகம் ஏற்படுகிறது.  13 ஆவது வயதில் அப்பாவின் இறப்பை சந்திக்கும் ஹயானாவை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்று ஹயானா என்ற பெயரை அனிதா என்று மாற்றி அவளிடம் அன்பை பொழிகிறார் விவேக்கின் அம்மா. விவேக்கை திருமணம் முடித்து அந்த குடும்பத்தின் நிரந்தர உறுப்பினராக ஆகிறாள் அனிதா. பிராமணர்களுக்கு மத்தியில் வசிப்பதால், மாமிச உணவை துறந்து தங்கள் பெயர்களில் ஜாதி தெரியாதபடி பார்த்துக்கொள்ளும் நிலை விவேக்கின் குடும்பத்திற்கு ஏற்படுகிறது.

ஹிந்துஸ்தான் ஏர் க்ராஃப்ட்ஸ் லிமிடெட். விமான தொழிற்சாலை அமைத்ததின் பின்னணி. ஹார்லோ  பி. சி, 5ஏ முதல் பயிற்சி விமானம் தயாரான தகவல், ஹயானா அங்கு சுற்றி திரிந்த இடங்களான கப்பன் பார்க், மல்லேஷ்வரம், ஜும்மா மசூதி, மிதிக் சொசைட்டி, அலசூர் லேக்வியூ, அங்கு காணும் சிலைகள், ஹிக்கின் பாதம்ஸ், ப்ளாசா சினிமா, நூலகங்கள் என பெங்களூரின் அனைத்து இடங்களையும் நம் கண்முன் காண முடிகிறது. அதில் மிக முக்கியமான இடம் கோரிப்பாளயம் மின் மயானம். இந்து, முஸ்லிம் மற்றும் யூதர்களின் சமாதிகளை ஒன்றிணைக்கும் மத நல்லிணக்கத்திற்கான ஒரு சின்னம். அனிதாவின் அத்தியாயத்தில் அநேக வருடங்களை கழித்த இடம். 

ஜெர்மனி:

ஹயானாவின் மழலைக்கால நினைவுகளை சுமந்த இடம். ஐரோப்பாவில் உள்ள நாடு. அறுபது லட்சம் யூதர்களையும் கணக்கில்லாத கம்யூனிஸ்ட்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் ஹிட்லர் என்னும் அரக்கன் கொடூரமாக கொன்று குவித்த இடம். அவை அனைத்தும் நன்கு யோசித்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள். தங்கள் ஆர்ய இனத்தின் பெருமையை நிரூபிக்கும் உற்சாகம் கொண்ட நாஜி விஞ்ஞானிகள் பரிசோதனைக்கு பலியாடுகளாக யூதர்களை பயன்படுத்திய இடம்.. 1930களில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் லீ மேட்னர் குழுவில் இளம் விஞ்ஞானியாக பணியாற்றிய அவளது தந்தை குறித்த தகவல்கள், யுரேனியம், பிரோடோ ஆக்டினியம், டிரான்ஸ் யூரேனியம்  கண்டுபிடிப்பு போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

1938இல் யூதர்களுக்கு ஏற்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கொடுமைகளை விளக்கும் தகவல்கள். அங்கிருந்து அவர்கள் தப்பித்து ஆம்ஸ்டர்டாம் சென்ற நாள், ஹிட்லருக்கு எதிராக 1943 இல் ஜெர்மனில் நடந்த ஒரே ஒரு பொதுப் போராட்டம் பெண்களுடையதாக இருந்தது.  அதில் அவர்கள் வெற்றி பெற்ற விவரம், ஹயானா குடும்பம் நெதர்லாந்திற்கு ரயில் எறி, டச் நிலத்திற்கு வந்தடைந்த  அதே ஆண்டு டைம் பத்திரிகை ஹிட்லரை “மேன் ஆஃப் தி இயர்” என்று அறிவித்தது போன்ற ஹயானாவின் நினைவுகளில் தெரிந்த காட்சிகள் நம் கண் முன்னும் தொடர்ந்தன.

ஆம்ஸ்டர்டாம்:

பெர்லினில் இருந்து தப்பித்து வந்த பிறகு ஆம்ஸ்டர்டாமில் பீதி இல்லாத வாழ்க்கை தொடர்கிறது . மே 10, 1940 ஜெர்மானியப்படை நெதர்லாந்திற்குள் நுழைந்தது. அப்போது ஹயானாவிற்கு பதினொரு வயது. இரவோடு இரவாக “யூதர்களுக்கு இடமில்லை” என்ற பெயர் பலகைகள் எழுந்து நின்றன. இரவு எட்டு மணிக்குமேல் வெளியில் செல்ல கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், 1943 புத்தாண்டிற்கு பிறகு ஒரு இரவில் ஹயானா குடும்பம் மீண்டும் வெளியேறவேண்டிய தருணம். போலீஸ் பிடியில் அம்மா, அக்கா ரெபெக்கா மற்றும் தம்பி ஐசக் மூவரும் சிக்கிக்கொள்கின்றனர். அந்த தருணத்திலும் தன் கணவரை காட்டிக்கொடுக்காத ஹயானாவின் அம்மா. மூவரும் ஜீப்பில் ஏற்றப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முடியாத நிலையில் ஹயானாவின் அப்பா ஹயானாவுடன் இந்தியா வந்து இறங்குகிறார்.

ஐம்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் 1998 ஏப்ரலில் ஹயானா எழுபதின் அருகாமையில் அனிதாவாக அதே மண்ணில் தன் கணவன் விவேக்குடன் வந்து இறங்குகிறாள். அவள் வாழ்க்கையின் பெரிய அத்தியாயம் இந்த நிலத்தில் நடந்தது. பிரின்சேனக்ராட்  கால்வாய்க்கு எதிரில் தன் வீட்டை கண்டு பிடித்து கதவை தட்டியதில் திறந்த முப்பது வயது பெண்ணிற்கு எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை.

அங்கிருந்து டகாவ் வந்தனர். டகாவ் – 1200 வருட பழமை வாய்ந்த பவேரியாவின் சிறிய நகரம். அக்கிருந்த ஜெர்மனியின் முதலாவது நாஜி முகாமிற்கு வந்தனர். 32000  மக்கள் இம்சை, பசிக் கொடுமையால் மடிந்த மண். அதில் இரஷியர்கள், போலந்துக்காரர்கள், ருமேனியர்கள், ஹங்கேரிகள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், கிரேக்கர்கள், சில பிரிட்டிஷர்கள், சீனர்கள் அடக்கம்.

முகாம் ஏட்டில் தன் அம்மா ஹெலன் மோசஸ், அக்கா ரெபெக்கா மோசஸ் பெயர்களை தேடுகிராள். கிடைக்கவில்லை. அங்கிருந்த ஒவ்வொரு இடமாக பார்த்து விஷவாயு அறை இதுவரை உபயோகிக்கப் படவில்லை என்ற வாசகத்தை பார்த்து நிம்மதி பெருமூச்சடைகிறாள். நினைவு சின்னத்தின் அருகில் இருந்த ஒரு பெண், “நாஜி முகாம்களைப் பற்றி அதிக விவரம் தெரிய வேண்டுமென்றால் ஜெர்மனியில் தேடாதீர்கள். அமெரிக்காவில் – வாஷிங்டன் ஹொலோகாஸ்ட் மியூசியத்தில்  தேடுங்கள்.” என்று கூறுகிறார்.

 அமெரிக்கா:

அடுத்த தேடலுக்காக 2001இல் உஷா உதவியுடன் ஸ்பான்சர்ஷிப் கடிதம் பெற்று அமெரிக்கா புறப்படுகின்றனர் அனிதாவும் விவேக்கும். வாலன் பர்க் – ஸ்வீடன் நாட்டின் பணக்கார குடும்பத்தின் இளைஞன் ஹங்கேரி நாட்டில் நாஜிப்பிடியில் இருந்த லட்சோப லட்ச மக்களை தனி ஒருவனாக காப்பாற்றியவன். அதன் பிறகு ரகசியமாக மாயமான அவன் என்ன ஆனான் என்று இப்போது வரை தெரியவில்லை என்பதை விவேக் நினைவு கூறுகிறான்.

வாஷிங்டன் ஹொலோகாஸ்ட் மியூசியத்தில்  ஒவ்வொரு தளமாக பார்த்த ஹயானா அங்கு குவிக்கப்பட்ட செருப்பு குவியல்களில் தன் அக்கா ரெபெக்காவின் ஷூவை காண்கிறாள். முகாமில் இருந்து தப்பித்த வயதான பெண் மூலம் இஸ்ரேலில் – ஜெருசலேமில் – யாத்வஷேம் என்ற நினைவு சின்னம் இருக்கிறது. நாஜி முகாம்களின் விவரம் முகாமில் இறந்தவர்களின் விவரங்கள் எல்லாம் அங்கே கணினியில் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இப்போது அங்கே இஸ்ரேல் – பாலஸ்தீன கலவரம் நடக்கிறது என்று பல தகவல்களை பெற்றவர்களாக தேடலின் அடுத்த இலக்கை இஸ்ரேல் என நிர்ணயிக்கின்றனர்.

 இஸ்ரேல்:

அரேபிய நாடுகளுக்கு இடையில் அமைந்த நான்காயிரம் ஆண்டுகளின் வரலாற்றை சுமந்து நிற்கும் யூதர்களின் தீவு. 1948இல் பாலஸ்தீன மண்ணில் சுற்றி இருந்த அரேபியர்களின் தீவிர எதிர்ப்போடு நிறுவப்பட்ட இடம். ஒவ்வொரு யூதர்களின் கதவிலும் பொருத்தப்பட்ட மெஸூஜா – முக்கோணங்கள் இணைந்த யூதர்களின் சின்னம்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருந்த இடம். இப்போது 85% யூதர்கள் இருக்கிறார்கள். இஸ்ரேல் என்றால் “வெற்றி கொண்ட அரசன்” என்று பொருள். அன்பையும் கருணையையும் போதித்த ஏசுவின் நிலம், பைகம்பரின் பாதம் பதிந்த புண்ணிய பூமி, அரசன் சாலமன் கட்டிய புண்ணிய தேவாலயம் உள்ள நிலம்.

ஹீப்ரூ மொழியில் பாலஸ்தீனம் என்றால் “பாலஸ்தீனர்களின் பெருமை” என்று பொருள். எகிப்தியர்கள், அஸ்ஸீரியா, பாபிலோனியர், பாரசீகர்கள், ரோமர்கள், பைசனடைனர்கள், உமாயர்கள், குரூசேடர்கள், ஒத்தமான் துருக்கர்கள் என எல்லோருடைய கைகளுக்கும் வசமாகி சிதைந்து இப்போது யூதர்களின் நாடாக இருக்கும் இடம்.

யாத் வஷேம் – நாஜிப்பிடியில் மரணமடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம். அங்கு நினைவு சின்னம் இருக்கிறது. நாஜி முகாம்களின் விவரம் முகாமில் இறந்தவர்களின் விவரங்கள் எல்லாம் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இடம்.

அங்கிருந்த கணிப்பொறியில் தன் அம்மா “ஹெலன் மோசஸ்” – டகாவ் நாஜி கேம்பில் – 1943இல் மரணமடைந்தாள் என்ற விவரம் கிடைக்கிறது. குழந்தைகள் அறையில் ஹயானாவின் தம்பி ஐசக்கின் புகைப்படம், தம்பியும் அதே முகாமில் இறந்த தகவலை உறுதி செய்கிறது. அங்கு வந்த இளைஞன் மூலம் அவன் சகோதரியை சந்தித்து தன் அக்கா ரெபெக்காவை தேடி கண்டு பிடிக்கிறாள். ஹயானாவும் அவள் அக்கா ரெபெக்காவும் சந்தித்த தருணம் நம் அனைவரையும் சிலிர்க்க வைத்த தருணம்.

 ஜெருசலேம்:

இந்த நிலத்தை முஸ்லிம்கள், யூதர்களிடம் இருந்து விடுவித்து கிறிஸ்தவ சமயத்தை நிலைநாட்ட ரத்த ஆறு ஓடியது. அதே நிலத்தில் இருந்து முஸ்லிம்களை விரட்டி யூதர்கள் கொடியை ஏற்றினார்கள்.

கி. மு. 950இல் சாலமன் அரசன் அழகான தேவாலயத்தை காட்டினான். 360 வருடங்களுக்கு மேல் இருந்த அந்த ஆலயத்தை 560 களில் பாபிலோனியர்கள் அழித்தார்கள்.

யூதர்களை சிறைப் பிடித்து பாபிலோனியாவிற்கு இழுத்து சென்றார்கள். அதன் பிறகு பெர்ஷியர்கள், யூதர்களை தங்கள் நிலத்திற்கு திரும்ப அனுமதி அளித்தார்கள். திரும்பிய யூதர்கள் மீண்டும் தேவாலயத்தை காட்டினார்கள். 450 வருடகாலம் பெருமையுடன் திகழ்ந்தது. ஆனால் கி. மு. 63இல் ரோமானியர்கள் அதை நாசமாக்கிய பின் மீதமிருப்பது இந்த ஒரு சுவர் மட்டும் தான். “அழுகை சுவர்”. பைகம்பர் பிறந்தது கி. பி. 570இல். இஸ்லாம் மதம் தொடங்கியது ஏழாம் நூற்றாண்டில். யூதர்கள் எல்லாம் சிதறிப் போய் பல நூற்றாண்டுகள் ஆனது.

இது பைகம்பர் சொர்க்கம் சேர்ந்த இடமாக முஸ்லிம்களுக்கு புனிதமானது. பைகம்பர் சொர்க்கம் சென்று திரும்பினார் என்ற நம்பிக்கை. இங்கே மசூதி எழும்பி நின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு யூதர்கள் தமது தாய் நாட்டிற்கு திரும்பினார்கள்.

அதே மண்ணில் உள்ள “புனித செபெல்கர் சர்ச்”, சிலுவையில் இருந்து இறக்கிய ஏசுவின் தேகம் படுக்கவைக்கப்பட்ட இடம். அன்னை மேரி மகனின் சவத்திற்கு முன் கண்ணீர் சிந்திய இடம். ரோமன் கத்தோலிக்கர்கள், கிரேக்க பழமைவாதிகள், அர்மேனியர்கள், எகிப்து கிறிஸ்துவர்கள், சிரியன் ஆர்தடாக்ஸ் என ஐந்து இனங்களுக்கு இடையில் பகிரப்பட்டு  சிதறிக் கிடக்கும் இடம்

மூன்று மதங்களின் புனித நிலத்தில் குருதியின் கறை எதற்கு. ஒரே தந்தைக்கு பிறந்து ஒரே மண்ணில் படுத்துறங்கும் நமக்குள் ஏன் இத்தனை பிரிவுகள். பல நூற்றாண்டுகளின் பகையை துடைக்க முடியுமா. புகையையும் வெறுப்பையும் விட்டுவிட முடியுமா என பல கேள்விகளுடனும் வரலாற்று தரவுகளுடனும் நாவல் விரிகிறது.


கதாப்பாத்திரங்கள்:

விவேக்கின் அம்மா:

ஹயானாவின் தந்தை இறந்த பின் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து “இனி இந்த பிள்ளை இங்கேயே இருக்கட்டும்” என்று கூறியதில் அவளது மனிதாபிமானம் வெளிப்படுகிறது. குகை கங்காதரேஸ்வரா கோயிலில், இனி நீ ஹயானா இல்லை “அனிது” எங்கள் வீட்டு பிள்ளை என்று கூறிய தருணம் விவேக்கின் அம்மா அனைத்து கடவுள்களின் மொத்த உருவமாக காட்சி அளித்தாள். ஹயானா அனிதாவானாள். ராமன், எஞ்சேரப்பா, குன்னைய்யா , கரியப்பா, திம்மப்பா, கிருஷ்ணன், ஷண்முக சாமி, சத்யநாராயணன், மஞ்சுநயதார், திம்மண்ணா படங்களுக்கு இடையில் அனிதாவின் கடவுளையும் கொண்டு வந்து வைக்குமாறு கூறிய அம்மா, மனதறிந்து மூன்றெழுத்து படிக்காத அம்மா படித்தவர்களின் தோள்களுக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறாள்.  இந்த நாவலின் முதல் நாயகியாக நம் கண்களுக்கு தெரிகிறாள்.

 அனிதா / ஹயானா:

திருமணம், பிள்ளைகள், மகனின் படிப்பு என வாழ்க்கையின் எல்லா கட்டங்களையும் கடந்து எழுபது வயதில் இருக்கும் அனிதாவின் கண்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட வருத்தத்தை போக்கவில்லை.  நூற்றாண்டு வேதனைகளை சுமந்தவள். சாவையும் பிரிவையும் வரலாற்றின் விடுகதைகளையும் தனலைப் போல முந்தானையில் கட்டிக்கொண்டவள். 1945இல் விவேக்கை திருமணம் செய்த பிறகு அனிதா முறைப்படி விவேக் வீட்டுப் பெண்ணாகிறாள். தான் நம்பாத கடவுளுக்கு கை கூப்புகிறாள். ஆசை ஆர்வம் நம்பிக்கைகளை விடவும் இந்த நிலத்திலிருந்து வேறுபடாமல் கலந்து வாழ்வது அவளை காப்பாற்றிக்கொள்ளும் உத்தேசமாக இருந்தது.  தன் மகன் விசு அவளது நிரந்தர சோகத்தின் இருளுக்கு வெளிச்சம் என்றும் ஹிட்லரின் கடைசி தீர்வுகளுக்கு சவால் என்றும் பெருமிதம் கொண்டவள்.  “நான் நானாகவும் வாழ்ந்திருக்க முடியும்”  என்று பல ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்தவள். வாழ்வில் அவளுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உறவுகளும் அன்பும் கிடைத்தும் தன் கடந்த கால நினைவுகளில் நிகழ்கால மகிழ்வை தொலைத்தவள்.

 விவேக்:

அனிதாவின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அன்பின் அரவணைப்பில் காக்க விரும்பியவன். “அனிதாவின் கதையை கேட்கும் தைரியம் ஒருநாளும் எனக்கு வந்ததில்லை.” என்று கூறும்போது, அனிதாவை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்கக் கூடாது என்ற அவனது எண்ணம் அவள் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாக, அவளது உணர்வுகளை புரிந்துகொண்ட கணவனாக உயர்த்தி காட்டுகிறது. “நானிருப்பேன் உன்னுடன்” என்று மட்டும் சொல்லி தொலைவில் நின்ற அன்பு. “நீ அழைக்கும் போது வருவேன்” என்று காத்திருந்த அன்பு. 

ரெபெக்கா:

ஜெர்மன் போலீசாரால் ஜீப்பில் ஏற்றப்பட்ட ஹயானாவின் அம்மா, அக்கா, தம்பியின் நிலையை ரெபெக்கா ஹயானாவிற்கு விளக்குகிறாள். பசியின் கொடுமையில் அவளது தம்பி ஐசக் துவண்டது, பல நாள் பயணத்திற்கு பிறகு டகாவ் முகாம் சென்று இறங்கியது, கண் முன்னே அம்மாவும் தம்பியும் புகையில் மரணம் அடைந்தது, பச்சைக் குத்தப்பட்ட எண்களுடன் பெயரை தொலைத்து வாழ்ந்தது என்று விவரிக்க ஆரம்பிக்கிறாள். உலகம் கண்டறியாத, கேட்டிராத, ஊகிக்கமுடியாத கொடுமையான அத்தியாயத்தை நாஜிகள் எழுதியதை பகிர்கிறாள்.

வாழ்க்கையை, அடையாளத்தை, பெயரை கிழித்துப் போட்டு அம்மணமாக நிற்கவைக்கப்படுகிறாள். “உயிர் ஒன்றே போதும் என்ற உண்மையின் முன் நின்றேன். அப்பொழுது இழப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் பயமும் இல்லை.” என கூறும் போது அந்த உண்மை நமக்கும் புரிகிறது. முகாமில் கேஸ் சாம்பர் உபயோகித்தது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள், ஒரு ரொட்டி தூண்டிற்காக வாங்கிய வேலைகள், அவள் நட்பு மரியாவின் மரணம், மலேரியா தடுப்பூசிக்கான பரிசோதனை எலிகளாக மக்களை உபயோகித்தது, கமாண்டருக்கு தன்னை இரை ஆக்கியது, அந்த நரகத்திலும் அவளுக்கு கிடைத்த நட்பு, காதல், பாசம் என அவளது ஒவ்வொரு நினைவுகளும் மனதை ஏதோ செய்துவிடுகிறது.

அங்கு மனிதாபிமானம் குறைந்து உயிர் வாழ்வது மட்டுமே தாரக மந்திரமாக வாழ்ந்தவள். 1945 இல் அவள் நண்பன் ஃப்ரெட் உதவியுடன் ரயிலில் இருந்து தப்பித்து அமெரிக்கப் படையால் காப்பாற்றப்படுகிறாள். நூறு ஆயிரம் சாவிற்கு பின் உயிர் பெற்ற ஜீவன். இஸ்ரேல் பிறந்தபிறகு 1949இல் அங்கு வந்து சேர்கிறாள். இழக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்த பின் இனி இழக்கும் பயமே இல்லாத வெறுமையிலும் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்தும் தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்ந்து காட்டிய ரெபெக்கா ஒவ்வொரு பெண்ணிற்கும் முன்மாதிரியாக திகழும் இந்த நாவலின் இரண்டாவது நாயகி.

ஹிட்லர்:

தான் விரும்பியது எதையும் சாதிக்க முடியாத சிறுவன் அடோல்ஃப். கலைப் பள்ளியில் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. பள்ளியில் தேரவில்லை, திருமணம் ஆகாதவர்களுக்கு பிறந்த பையன். தன் ஏழ்மை மற்றும் தோல்வியின் யதார்த்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள கற்பனை உலகில் தொலைந்து போன போக்கிரிப் பையன். சகிப்பின்மை, கோபம், வெறுப்புகளை குறிக்கோளாக வைத்துக்கொண்டு வளர்ந்தான். ஆனால் ஹிட்லரைப் போன்ற மனிதன் வரலாற்றின் வெற்றிடத்தில் தன்னந்தனியாக தோன்றுவதில்லை.

1919 இல் மியூனிச்சில் ஹிட்லர் “ஜெர்மன் தொழிலாளர் கட்சி”யில் சேர்ந்தான். மறுவருடம் அதை “நாஜிக் கட்சி” என்று பெயர் மாற்றினார்கள். போருக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிதைவின் நாட்களில் கட்சியின் தலைவனானான். மானிட இனத்திலேயே ஆரியர்கள் சிறந்தவர்கள் என்று நம்பினான். அவன் பார்வையில்  நாஜிசத்தின் பெரும் எதிரிகளாக யூதர்களும் மார்க்சியவாதிகளும் தெரிந்தார்கள். யூதர்கள் சாத்தானின் மறு பிறப்பு என்று எண்ணினான்.

1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தான். மக்கள் நம்பிக்கையுடன் அவன் பக்கம் திரும்பினார்கள். ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் முதல் முதலாக நாஜி முகாமை டகாவில் நிறுவினான். ஆகஸ்ட் 1934, ஜெர்மனியின் தலைவரான பால் லான் ஹிண்டன் பர்க் இறந்தவுடன் ஹிட்லர் தலைவனானான். சேனையின் தலைவனாகவும் பதவி ஏற்றான். பட்டாளம், சிவில் சர்வீஸ், அரசாங்க நிறுவனங்கள், மருத்துவம் என அனைத்து துறைகளில் இருந்தும் யூதர்களை நீக்கினான்.

1935இல் ஆரியர்கள் அல்லாதவர்களுக்கு எதிரான ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டம் யூதர்களின் நாகரீக, சமுதாய, உத்யோக உரிமைகளை முடக்குவதற்காக உருவாக்கப் பட்டது. ஒரு ஹிட்லர் அல்ல ஒரு நாடே ஒரு சமுதாயமே கொள்ளையிலும் வெறுப்பிலும் இலாபமடைவதிலும் பங்கேற்றிருந்தது.

‘யூதர்கள் சாத்தான்களின் வடிவம். இரத்தத்தை குடிப்பவர்கள். ஏசுவை சிலுவையில் ஏற்றியவர்கள். பூமியின் எல்லா பாவங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பு’ என்ற நாஜிப் பிரச்சாரத்தை ஜெர்மன் மக்களின் மனதில் விதைத்தவன். அவன் பார்வையில் யூதர் பிரெச்சனைக்கு இருந்த “இறுதி முடிவு” ஒன்றே. அது,  ஒவ்வொரு யூதனையும் கொன்றுவிடுவது.

இந்தப் பக்கம் ஆதரவு தர அருகாமையில் முசோலினி இருந்தான். பற்றி எரிந்தது முழு ஐரோப்பா. நின்று பார்த்தது உலகம். ஹிட்லர் திடீரென்று பாவக் கிணற்றில் இருந்து வரவில்லை. நானூறு ஆண்டுகளாக மடாதிபதிகள் நடத்திய யூத வெறுப்பின் உச்சமே ஹிட்லர். இறுதியில் தன் உயிரை தன் கையாலேயே அழித்தான்.

மறைமுக கதாப்பாத்திரமாக இருந்தாலும் மறைக்க முடியாத மறக்க முடியாத கதாப்பாத்திரம்.

மதங்கள்:

மதங்கள் குறித்தும் யூதர்கள் குறித்தும் நாவல் நமக்களிக்கும் புரிதல்:

யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மூல புருஷன் ஆபிரகாம். 1500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியாவின்  ஹாரன் என்ற ஊரில் ஆபிரகாம் இருந்தார். இந்த உலகிற்கெல்லாம் ஒருவரே கர்த்தா என்று புரிந்துக் கொண்டவர். கர்த்தா ஆபிரகாமிடம் “நான் காட்டும் நாட்டிற்கு போய்விடு. உனக்கு சக்தியை உருவாக்கி அருள் பாலிக்கிறேன்” என்றார். ஆபிரகாம் தனது 75 ஆவது வயதில் தன் மனைவி சாராவுடன் காளான் நாட்டிற்கு புறப்பட்டார். காளான் இதுதான் இப்போது இஸ்ரேல் இருக்கும் இடம். முன்பு பிலிஸ்டைன் இருந்த இடம்.

ஆபிரகாமின் 86 ஆவது வயதில் இரண்டாவது மனைவி ஹியாகராவிற்கு இஸ்மாயில் என்ற மகன் பிறக்கிறான். அதன் பிறகு பலவருடங்கள் கழித்து சாராவிற்கு யாக்கோபு பிறக்கிறான். இஸ்மாயில் மிகவும் கெட்டவனாக வளர்கிறான். இஸ்மாயில் வம்சாவளிகள் அரேபியர்கள். இஸ்மாயிலின் அடுத்து வரும் தலைமுறையில் முகமது நபிகள் பிறக்கிறார். தயையையும் கருணையையும் போதனை செய்து இஸ்லாம் மதத்தை தொடங்கியவர்.

யாக்கோபின் பெயரை கடவுள் “இஸ்ரேல்” என்ற மாற்றினார். யாக்கோபிற்கு பன்னிரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். பன்னிரண்டு பேரும் இஸ்ரேலின் பன்னிரண்டு பழங்குடிகளை நிறுவினார்கள். அவர்களில் ஒருவன் யூதாக். அந்த பழங்குடியில் இருந்து வந்தவர்கள் யூதர்கள். குரானின் மூன்றில் ஒரு பங்கு யூதர்கள், மோசஸ், ஆபிரகாம் கதைகளை தான் சொல்கிறது. இவை அனைத்தும் ஒரே கதை. புனித டோராவின் கதை. பைபிளின் கதையும் அது தான். புனித குரானின் கதையும் அதுவே. மோசஸ் அங்கே மூஸா, டேவிட் அங்கே தாவூத், சாலமன் சுலைமான், ஐசக் இஷாக், ஜாகோப் அங்கே யாகூப்.

யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒருவனே தந்தை. யூதர்கள் முஸ்லிம்களின் பழைய இரத்த உறவு. யூதர்களின் கடவுளின் தூதன் மோசஸ். எந்த மதமும் பாமர மக்களின் கொலையை ஆதரிப்பதில்லை. எல்லா மதங்களின் அடிப்படையும் அன்பு, கருணை, தயை, மன்னிப்பு தான். எல்லா மதங்களின் காலங்களிலும் போர்கள் இருந்தன. தாக்குதல்கள் இருந்தன. என் மதமே புனிதமானது என்ற விபரீத எண்ணங்கள் இருந்தன.

யூதர்கள்:

அவர்களின் புனித நூல் டோரா எனும் பழைய ஏற்பாடு. யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் பொதுவானது. அவர்களின் கடவுளின் மொழி எபிரேய மொழி. மோசஸ் அவர்களின் கடவுளின் தூதன், இஸ்ரேலிய மக்களை காப்பாற்ற வந்தவர். அவர்களை அழைத்து சென்ற இடம் இஸ்ரேல். பத்துக் கட்டளைகளை கடைப்பிடிப்பவர்கள்.

தலையில் கீபா அணிபவர்கள். கடவுளின் பெயரை உச்சரிப்பதில்லை. “த நேம்” என்ற பொருளை தரும் “ஹஷேம்” என்பதை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.  உருவ வழிபாட்டிற்கு தடை.  சனிக்கிழமைகளில் “ஸபாத்” எனப்படும் முழு விடுப்பு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது. சமையல் செய்யக்கூடாது. சனிக்கிழமை முழுவதும் பிரார்த்தனை செய்துக் கொண்டு பூஜையில் கழிக்க வேண்டும்.

இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டி வெள்ளை துணியால் சுற்றுவார்கள். சமாதியை கிழக்கு மேற்காக தொண்டி, சமாதியில் இருந்து எழுந்தவுடன் மேற்கே ஜெருசேலம் நோக்கி முகம் பார்க்க வேண்டும் என்பதற்காக தலையை கிழக்கு பக்கமாக வைப்பார்கள். ஒருவாரத்திற்கு நாளுக்கு மூண்டு முறை டோரா ஓதுவார்கள்.

“என்னை தவிர வேறு யாரையும் வனங்கக் கூடாது, என் பிரதி ரூபத்தை, உருவத்தை வடிக்கக்கூடாது” என்பது இவர்களின் கடவுளின் கட்டளைகளில் ஒன்று. யூதர்களின் புது வருடம் “ரோஷ் ஹஷானா” . “ரோஷ் ஹஷானா” வில் இருந்து “யாம் கலிப்டர்” வரை பத்து நாட்களுக்கு விழா கொண்டாடுவார்கள். இவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம்.

 

கேள்விகள்:

நாவலில் வரும் விடைதெரியாத பல கேள்விகள்:

  • ஹி நோஸ் பெஸ்ட். உண்மையா, அவருக்கு தெரியுமா தெரிந்திருந்தும் இந்த வலி எதற்கு ஆண்டவா ?
  • பிணங்களின் குவியலின் மீது மரணத்தைக் கொண்டாடி எந்த சாம்ராஜ்ஜியத்தை கட்ட முடியும். ?
  • நம் கடவுள் இப்போதும் நம் மீதுக் கோபித்துக் கொண்டிருக்கிறாரா, பிறகு ஏன் நம்மை இவ்வளவு துன்பப்படுத்துகிறான் ?
  • காலம் எப்போது நன்றாக இருந்தது ?
  • நெஞ்சின் போராட்டங்களுக்கு முடிவு எங்கே இருக்கிறது ?
  • வாழ்க்கையின் மீது எப்போது நம்பிக்கை பிறக்கும் ?
  • போரில் யாருக்காவது வெற்றி கிடைக்குமா ?
  • “ஹிட்லர் உண்மையிலேயே இறந்தானா இல்லை, இங்கே எங்கேயோ யாருடைய மூலையிலோ இதயத்திலோ இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறானா, நேரம் பார்த்து குதித்து வெளியேவர ?
  • மற்றொரு ஹிட்லர் பிறப்பானா இந்த நிலத்தில் ?
  • உயிருக்கே அபாயமாக இருக்கும் போது பொய்யான தன்மானத்திற்கு இடமேது ?
  • பிறந்து வளர்ந்து வாழ்ந்த நிலத்தின் நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி எடுத்து செல்ல முடியுமா ?
  • நாஜி பிடியில் இருந்த யூதர்களை காப்பாற்ற எந்த தேவ தூதனும் வரவில்லையா ?
  • பெண் எப்போதும் தேகமானாளா தாகமானாளா ஆண் விளையாட்டிற்கு மோகமானாளா ?
  • பகிர்ந்து கொண்டு வாழ முடியும். பறித்துக் கொண்டு வாழ முடியுமா ?

முடிவுரை:

எல்லா கதைகளுக்கும் முடிவு என்று ஒன்று இருப்பதில்லை.

நம் சகிப்புத்தன்மை இன்மையில் ஹிட்லர் இருக்கிறான். நம் அகங்காரத்தில் ஹிட்லர் இருக்கிறான். நம் வரட்டு கௌரவத்தில் ஹிட்லர் இருக்கிறான். வன்முறையில் ஈடுபடும் ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு இடத்திம் ஹிட்லர் பிறக்கிறான்.

ஹயானாவின் குறிக்கோள்களான “தனக்கு கொடுத்த சமுதாயத்திற்கு எதையாவது திருப்பி கொடுக்க வேண்டும்.  எதுவும் செய்யாமல் இருப்பதை விட சிறியதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும். சமுதாயத்தில் நடக்கக் கூடாதது ஏதாவது நடந்தால் அதற்கு நமது சிறிய எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டும்.” என்பனவற்றை ஒவ்வொருவரும் உணர்ந்தால் இந்த உலகில் அகிம்சை மேலோங்கும்.

இது போன்ற ஒரு உண்மைக்கதை மறுபடியும் நடக்கக் கூடாது. நெவர் அகெய்ன்.


நூல் தகவல்:

நூல் :   யாத் வஷேம்

ஆசிரியர் : நேமிசந்த்ரா

தமிழில்,: கே.நல்லதம்பி

வகை :   மொழிபெயர்ப்பு நாவல்

வெளியீடு :  எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு :   நவம்பர் 2020

பக்கங்கள் : 

விலை : ₹  399

Buy On Amazon : 

2 thoughts on “யாத் வஷேம் – விமர்சனம்

  • நாவலை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படித்து எனது விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளேன். தற்போது தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் விமர்சனத்தையும் படித்து முடித்தபோது சோகமும், கோபமும்
    கொப்பளித்து வாட்டியது.
    நூலாசிரியர் நேமிசந்த்ராவின் புனைவின் ஆழம் மற்றும் அற்புதத்தையும்,
    மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பி
    அவர்களின் வீரிய வரிகளும் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்த விமர்சனத்தின் வரிகளிலும், வலிகளிலும் பெறமுடிந்தது.
    இவ்வளவு சிறப்பான, வலுவான, தெளிவான, உணர்ச்சிப் பெட்டகமான ஒரு விமர்சனம் எழுத, நாயகி ஹயானா போல இவரும் “யாத்வஷேம்” புனைவுக்குள் பலமுறை உள்ளார்ந்த உணர்வுடன் பயணித்திருப்பார் என்று நம்புகிறேன். அற்புதமான இந்த பாணியில் மேலும் பல விமர்சனங்கள் தொடர மனமார்ந்த
    வாழ்த்துகள்! நாவலை மீண்டும் வாசிக்கும் ஆர்வமும் கிளர்ந்துள்ளது!

    Reply
    • நன்றி தோழர்

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *