ங்கல வாத்தியங்களை வடிவமைக்கும் கலைஞர்களுக்கும் தெய்வீக இசை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் மகாவித்வான்களுக்கும் என்று துவங்குகிறது இப் புத்தகம். நன்றி பட்டியல் நீளமாக இருந்தாலும் நன்றி சொல்லக் கூடியவர்களுக்கான மரியாதையைத் தந்திருப்பது போற்றத் தகுந்தது. புகைப்படம் தந்த அனைவருக்கும், எழுத்தாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று சொல்லி நம்மை உள்ளே அழைத்துச் செல்கின்றார்.

நுழைவாயில், ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம், துக்கடா என்று கட்டுரைகளைப் பிரித்து வழங்கி இருக்கின்றார்கள்.

பதிப்பாசிரியர் சிவக்குமார் தந்திருக்கின்ற ‘காற்றென நம்மோடு கலந்தே இருக்கும் காருகுறிச்சியார்’ எனும் கட்டுரை பல்வேறு இசை வல்லுநர்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. 40 பவுன் எடையுள்ள தங்க நாதசுரத்தை வானமாமலை ஜீயரிடம் பரிசாகப் பெற்ற பல்லவிச் சுரங்கம் என்று போற்றப்பட்டவர் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை. உடைந்த நாகசுரத்திலும் வெடித்திருக்கும் சீவாளியைக் கொண்டும் தேன்மாதிரி பொழிந்தவர் கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை போன்று பல்வேறு இசை ஜாம்பவான்களைத் தேடி அவர் பற்றிய அரிய தொகுப்புகளை தமது முதல் கட்டுரையில் கொண்டு வந்து காருகுறிச்சியாரை நமக்கு அறிமுகம் செய்து அவருடைய மனைவியர் குழந்தை பெருமக்கள் மற்றும் அவர் வாழ்ந்த வீடு இவற்றை கண்முன்னே காட்டி அவருக்கு நன்றி சொல்லிச் சமர்ப்பிக்க நம்மை அழைத்துச் செல்கிறார்.

ஆலாபனையின் துவக்கம்
கி.ராஜநாராயணனுடைய கட்டுரை. அந்தக் கட்டுரையில் அவர்களுக்குள்ள நட்பு மட்டுமல்ல அவர் விரும்பி கேட்கும் இசையும் அவர்களுக்குள் இருந்த மரியாதையும் நமக்குத் தெரிகிறது. காருகுறிச்சி ஒரு தடவை அந்த ஊரின் உடைய தலைவர் பதவிக்குப் போட்டிப் போடும் சூழலுக்குத் தள்ளப்படும் போது அது வேண்டாம் என்று எழுதிய கடிதத்தை நினைவு கூர்ந்து தங்களுடைய வேலை அதுவல்ல என்று சொன்னதை, மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட அவருடைய அந்தப் பண்பினை வியந்து எழுதியிருக்கின்றார்.

உடன்பிறவா சகோதரர் காருக்குறிச்சி அவர்கள் என்று ஏ.கே.சி நடராஜன் எழுதிய கட்டுரை சிறப்பு வாய்ந்தது. என் எஸ் கே காருகுறிச்சியிடம் அவர் நல்லா வாசிப்பானா? என்று கேட்கிறார். பக்கத்திலிருந்த மதுரம் அம்மா ஏன் உங்க பிள்ளை தான் நல்ல வாசிப்பானா? என் பிள்ளை வாசிக்கப்பட்டாரா? என்று சொன்னார்கள் என்று ஏகேசி நடராஜன் பெருமையோடக சொல்லி அண்ணன் காருகுறிச்சி அப்பா பிள்ளை நான் அம்மா பிள்ளை என்று பெருமிதம் கொள்கிறார். இதுபோன்ற அரிய தகவல்களை இன்றைய தலைமுறையினர் தெரியத் தந்திருப்பதற்கு கரம் குலுக்கிக் கொண்டே இருக்கலாம்.

கொத்தமங்கலம் சுப்புவினுடைய பையன் விஸ்வநாதன் அவர்கள் தில்லானா மோகனாம்பாள் கதையை ஜெமினி ஸ்தாபனமோ, அல்லது தானோ திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று காருகுறிச்சியார் ஆசைப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார்.

காருகுறிச்சி அருணாசலம் அண்ணன் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையால் ஏற்பட்டது தான் ‘பழனி தேவஸ்தான நாதஸ்வர இசைக் கல்லூரி’. அந்தக் கல்லூரி தொடங்கப்படுவதற்கு முழு முயற்சி மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி இருந்தவர்கள் காருகுறிச்சியாரும் அவரது மருமகன் மௌனக் குருசாமியுமே என்று சொல்லி, அங்கு வந்து அங்கு வாசிக்கின்ற மாணாக்கர்களுக்கு வாசிக்கும் முறையினை பயிற்றுவித்ததையும் நினைவு கூறுகிறார்.

உற்சவ மூர்த்தியை ஏற்றி இருந்த யானையைத் தற்செயலாக பார்த்தேன். அதன் இரு காதுகளும் கொஞ்சம் கூட அசைக்காமல் ஒரே நிலையில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் ராகம் வாசித்து கீழ் ஸ்தாயிக்கு வரும்போது யானை தனது காதுகளை அசைத்தன. இதே போல மூன்று நான்கு தடவைகள் நடந்தது. நான் பார்த்து ரசித்தேன். ஸ்ரீ கிருஷ்ணப் பகவான் புல்லாங்குழல் வாசிக்கும் பொழுது பசுக்களெல்லாம் இசையை ரசித்தது போல் காரருகுறிச்சியாரின் நாதஸ்வர இசையை யானையும் ரசித்ததை என் கண்ணால் பார்த்தேன் என்று திருவிழா ஆர். ஜெய்சங்கர் கூறியிருப்பது அந்த இசையினுடைய மேன்மையை நம்முள் புகுத்தி விடுகிறது.

‘சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி’ என்ற பாடலைத் தனது துணைவியார் பத்மாவிடம் பாடக் கேட்டு அதனை அவர் மறுநாள் கச்சேரியில் பாடியதை ஒரு பதிவு சொல்கிறது.

‘தி கிரேட் இன்ஸ்ட்ருமென்டல் ஆஃப் இந்தியா ( The geeat instrumentalist of India)” என்று இந்தியாவின் பெரிய இசை வித்வான்கள் பற்றிய வரிசையில் இடம்பெற்றதில் காருக்குறிச்சி யாரும் ஒருவர் என்பது மிக முக்கியமான பதிவு.

நாகசுர இசை தான் கர்நாடக இசைக்கு ஆதாரமாக இசைக்கருவி என்று சான்று தருகின்றார் தீப.நடராஜன்.

சீர்காழி சிவசிதம்பரம் தன் அப்பா கோவிந்தராஜன் மேல் காருகுறிச்சியார் கொண்ட அன்பினையும் அவர்களுக்குள்ள நட்பினையும் பதிவு செய்திருக்கின்றார்.

தற்போதைய காலகட்டத்தில்தான் ஆண் குரல் ஒரு பக்கமும், பெண் குரல் வேறொரு இடத்திலிருந்தும் இருந்து பதிவு செய்து பின் இசைக்கோர்ப்பு செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கின்ற இசையமைப்பாளர்களுக்கு
எஸ்.ஜானகி சொல்கின்ற இந்த செய்தி புதுச் செய்தியாகவே தோன்றும். சிங்காரவேலனே என்னும் பாட்டை நானும் காருகுறிச்சி அருணாசலமும் தனித்தனியேதான் பாடினோம் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் முதலில் நாதஸ்வரம் வாசிக்கச் சொல்லி ரெக்கார்டு செய்து கொண்டு விட்டு பின்பு வேறொரு நாள் அவர் வாசித்ததைக் கேட்டுக் கொண்டே அந்த சுருதிக்கும் நயத்திற்கும் குறைவின்றி நான் பாடினேன் என்று சொல்லி இருப்பது எவ்வாறு அவரை பாடத் தூண்டியிருக்கும் என்பதனை நம்மால் உணர இயலுகிறது.

இரவல் எனும் பகுதி எழுத்தாளர்களை, அவர்கள் கொண்டாடிய காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய பதிவுகளைத் தருகிறது. நாஞ்சில் நாடன், பாரதி மணி, சுகுமாரன் யுவன் சந்திரசேகர், நரன், கௌரி சங்கர்,
எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களுடைய அனுபவப் பகிர்வுகள் இந்த கட்டுரைத் தொகுப்பிற்குப் பெருமிதம் சேர்க்கின்றன.


திருநெல்வேலியிலிருந்து வீரவநல்லூர் போகும் பாதையில் காருகுறிச்சி குறுக்கிடும். போகும் போதும் திரும்பும் போதும் காருகுறிச்சியைக் கடக்கும் போது அவர் வாசித்த பழைய கீர்த்தனைகள் மனதில் மிதந்து வரும் என்று நாஞ்சில் நாடன் நினைவினை மீட்டியிருக்கின்றார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த பாரதி மணி அங்குள்ள கிராமங்களான தேரூர், பத்மநாப புரம், பூதப்பாண்டி, மண்டைக்காடு ராஜாக்க மங்கலம், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், கன்னியாகுமரி கோயில்களில் நடக்கும் திருவிழாக் கச்சேரிகளில் காருகுறிச்சி இல்லாத கச்சேரி இல்லை என்று பகிர்கிறார். அதனூடே கொசுறுச் செய்தியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகச் சொற்பொழிவைச் சிலாகித்து எழுதி இருக்கின்றார் அந்த மாமனிதரை அரசியலுக்காக ஒரு சிறு வட்டத்துக்குள் அடைத்து சந்திக்குச்சந்தி உருவ ஒற்றுமையேயில்லாத சிலைகளுக்குள் அவரை சிறைப்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்தால் மனதை என்னவோ செய்கிறது என்று வருந்தியிருப்பதை நம்மாலும் உணர முடிகிறது.

“உன் கண்ணில் நீ வழிந்தால்” இந்த வரியில் ஒலித்த தாபம் என்னை விம்மச் செய்தது. கண்கள் கலங்கிக் கசிந்தன என்று தன் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்து இருக்கின்றார் சுகுமாரன்.

காருகுறிச்சி அருணாசலத்தை அப்பா அருணா ‘ ஜ ‘லம் என்று உச்சரிப்பார் ஆனால் காருகுறிச்சி அருணாசலமும் அப்பாவும் எனக்குள் இணையும் புள்ளி அது என்பதில் சந்தேகம் இல்லை என்று தன் தந்தையின் வழியாக உணர்ந்ததை யுவன் சந்திரசேகர பதிவு செய்திருப்பது நெகழ்வினை தருகிறது. அவர் வாழ்ந்த ஊருக்குள் நுழையும் இடத்தில் அருணாசலத்தின் பொம்மை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். அதைச் சிலை என்று குறிப்பிட மனமே வரவில்லை என்று வருந்திப் பதிவு செய்திருப்பதை நம்மாலும் உணர இயலுகிறது. உண்மையில் அந்த ஊரினை கடந்து செல்லும் பொழுது மேல் கொட்டகை இன்றி வெறும் ஒரு திண்ணையில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுடைய பொம்மை போன்ற ஒரு சிலை அமைப்பைக் கண்டு வேதனை கொள்ளும் மனம் நம்முடையதுமாக இருக்கும். தகுந்த முயற்சி செய்து குறைந்தபட்சம் மார்பளவு அல்லது ஆள் உயரச் செயலை அவருக்கு அந்த ஊரில் வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இசையைப் பொருத்தவரை கடைசி வரைக்கும் ஒரு மாணவனாகவே பாவித்துக் கொண்டவர் காரக்குறிச்சியார். சங்கீதமும் இசைஞானமும் அவருக்குள் வளர்ந்தது. ஆனால், ஒரு நாளும் அந்த மனிதருக்குள் அகங்காரம் வளர்ந்ததில்லை என்று கௌரி சங்கர் பதிவு செய்திருக்கின்றார்.

காருகுறிச்சியார் நாதஸ்வரம் இப்போது யாரிடம் இருக்கிறது? என்ற கேள்விக்கணை கொண்டு துவக்கி இருக்கின்ற
எஸ். ராமகிருஷ்ணனின் வருத்தத்தினை நம்மாலும் உணர இயலுகிறது. மேலைநாட்டு இசைக்கலைஞர்களுடைய இசைச் சாதனங்கள் தனியாக பாதுகாக்கப்பட்டிருக்கும் போது இவர் போன்றவர்களுடைய அந்த நாதஸ்வரம் எங்கே பாதுகாக்கப்பட்டிருக்கிறது? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று கேள்வி கேட்பது நம்மை வருத்தம் கொள்ளச் செய்கிறது என்பதில் துளியும் ஐயமில்லை. கோவில்பட்டியில் கச்சேரி செய்து கொண்டிருக்கும் போது, புத்தி சுவாதீனம் இல்லாத ஒருவர் தன்னுடைய இசையில் மயங்கி கூட்டத்தின் நடுவே வந்து தன் முன்னே நின்று வளைந்து போயிருந்த 50 காசு நாணயத்தைத் தந்ததை , அதுவே தனக்குக் கிடைத்த பெரிய சன்மானம் என்று காருகுறிச்சி சொன்னதைப் பதிவு செய்து அவருக்குப் பெருமை சேர்த்து இருக்கின்றார் எஸ்.ராமகிருஷ்ணன்.

அறிஞர் அண்ணா தன்னுடைய மகள் கச்சேரிக்குச் சன்மானம் எதுவும் வாங்கவில்லை என்ற கட்டுரையும், கல்கியின் அஞ்சலியும், ஆனந்த விகடன் அஞ்சலி செலுத்தியதும் இந்தக் கட்டுரையில் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றது.

கு.அழகிரிசாமி அவர் மேல் கொண்ட நட்பையும் எத்தனை வருடங்கள் கடந்த போதும் தன்னை அவர் எங்குக் கண்டாலும் அணைத்துக் கொண்ட விதமும் உபசரித்த முறையையும் சொல்லி பெருமிதம் கொள்கிறார். தி.ஜா.ர ஒரு கச்சேரியில் இங்கிலீஷ் நோட் ஒன்றை கொடுத்து வாசிக்கும்படி சொன்னார்களாம். அதன்படி அன்று அன்று வாசித்து இங்கிலீஷ் நோட் ஈடு இணையற்றது அவருடைய குருநாதர் கூட இவ்வளவு விஸ்தாரமாக நோட்டு வாசித்தது இல்லை என்று சொன்னதை கு.அழகிரிசாமி பதிவு செய்திருப்பது கட்டுரைக்கு பெருமை.

”நெனந்து வெதகுதிரா’ என்று லலிதாரம் எழுதிய கட்டுரை இந்த தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை. நம்மை நெகிழச் செய்து காருக்குறிச்சியின் அன்புக்குச் சான்றாக விளங்கக் கூடிய ஒரு கட்டுரை. மணியாச்சி ரயில் நிலைய மடையில் போளி விற்கின்ற வேம்புவிற்காக மணியாச்சி ரயில் நிலைய பிள்ளையார் கோவிலில் செய்த கச்சேரி. அந்த அன்பினை இந்த கட்டுரை நமக்கு இயம்புகிறது. காசு வாங்காமல் போளி வாங்குவதில்லை என்று சொன்ன அவரிடம் எ தனக்கு ஒரு கச்சேரி செய்த தாருங்கள் என்று உரிமையுடன் கேட்க தூண்டியதைச் சொன்னதும், என்ன செய்து விட்டால் போச்சு! என்று அவர் வந்து செய்ததை அதற்காக அவர் பட்ட பாட்டினை அந்தக் கட்டுரை சொல்கிறது. தன்னால் அந்த அளவுக்குப் பணம் சேகரிக்க முடியவில்லை என்பதனை கண்ட தன் மனைவி தன்னுடைய தாலிச் சங்கிலியைக் கழற்றி அடமானம் வைத்து அந்த பணத்தை அவருக்குக் கொடுத்து அந்தக் கச்சேரி அரங்கேற உதவினார்கள். இதைத் தெரிந்து கொண்ட காருகுறிச்சியார் அங்கிருந்து கிளம்பி ரயில் நிலையம் போகும் பொழுது திருச்செந்தூர் பிரசாதம் என்று அந்த ஒரு பிரசாதப் பையனைத் தந்து அதனுள் அந்த சங்கிலியை வைத்திருந்தார்கள். அதை நான் கண்ட போது கண்களில் நீர் சொரிந்தன என்று பதிவு செய்திருப்பது நம்மையுமே நெகழச் செய்து விடுகிறது.

‘தாமரைப் பூத்த தடாகம்’ சிறுகதை மூலம் அ. முத்துலிங்கம் அவரை நினைவு கொண்டு வந்திருக்கின்றார். இன்றைய எழுத்தாளர் நரன் அந்த மாட்டு வண்டியின் குறைகளைச் சரி செய்தவருக்காக அங்கே அமர்ந்து பாடிய கச்சேரியினை நெகிழ்ந்து பதிவு செய்திருப்பதை நம்மால் உணர இயலுகிறது. வாசிக்க சிவன் கோயிலோ, பெருமாள் கோவிலோதான் இருக்கணும்ன்னு அவசியம் இல்லை. எல்லாமே சாமி தான். அதனால இந்த மசூதியில் நான் வாசித்தேன் என்றும், அதுவும் உங்களுக்காக வாசிச்சேன் என்று அந்த மாட்டுவண்டிக்காரருக்காகச் செய்த அந்த நன்றிக்கடன் இன்னும் இன்னும் நம்மை காருக்குறிச்சியாரை மனதில் உயர்த்திக் கொண்டே செல்கிறது.

துக்கடா பக்கங்கள் அனைத்தும் நிறைய சம்பவங்களின் கோர்வையாக இருக்கின்றது. நடிகர் பாலையாவின் மகள் அம்புஜம் தங்கவேலு கட்டுரை மிக முக்கியமானது.

அத்தனை பெண் குழந்தைகளையும் பூஜையறையில் காருக்குறிச்சி கூட்டி அவர்களுக்குத் தம் கையால் திருநீறு பூசி “சாமகான பிரியே சர்வலோக நாயகியே. ” எனும் பாடலை எழுதிக் கொடுத்து பின்பு பாடுவதற்குப் பயிற்சியும் கொடுத்தார்கள். அதுதான் காருக்குறிச்சியார் வாரிசுகளுக்கு முதலும் கடைசியாக குருவாக கற்றுக் கொடுத்த பாடல் என்ற செய்தியுடன் நிறைவுக்கு வருகிறது இந்த கட்டுரைத் தொகுப்பு.

எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாமல் நாகசுரத்தில் கோலோச்சிய ஒருவரை இந்தக் கட்டுரைத் தொகுப்பின் மூலம் நமக்குக் கொண்டு தந்திருக்கின்றார். உண்மையில் இந்த கட்டுரைத் தொகுப்பு அரிய கருவூலமே. இன்றைய இளம் தலைமுறைக்கு இதுபோன்ற மகாவித்துவான்களை நாம் கடத்திக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மேற்கத்திய இசைகளினுடைய சூழலுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்ற நம் சமூகத்தை எந்தவிதப் பகட்டும் இன்றி வாழ்ந்த காருகுறிச்சி அருணாசலம் போன்ற வித்துவான்களைத் தேடிக்கண்டறிந்து அறிமுகம் செய்துவிக்க வேண்டும். இதனைத் தொகுத்துத் தந்த என்.ஏ.எஸ் சிவகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி.

காருக்குறிச்சி அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை ஒட்டி இந்த கட்டுரைத் தொகுப்பு வெளி வந்திருக்கின்றது.. அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இந்த கட்டுரைத் தொகுப்பு இருக்கிறது என்பதில் சிறிது கூட மாற்றுக் கருத்து இல்லை. அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களைத் தாங்கி வந்திருக்கும் இத்தொகுப்பு இன்னும் இன்னும் அந்த மாபெரும் கலைஞனைப் போற்றிட வேண்டும் என்று தூண்டுகிறது.

இந்தக் கட்டுரை வாசித்து நிறைவு செய்கின்ற போது எனக்கு என் தந்தையாரின் நினைவு வருகிறது. அவரே எனக்கு காருகுறிச்சி அருணாசலத்தையும் ஏகேசி நடராஜனையும், வலையப்பட்டி தவிலையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இரவு நேரத்தில் என் அம்மா தாத்தா தனி அறையில் அமர்ந்து டேப் ரெக்கார்டரில் கேட்டு மகிழ்ந்த இசையினைக் கண்டு, அவரது மருமகனான என் தந்தையும் கேட்டதையும் அதை எனக்குக் கடத்தித் தந்ததையும் நான் அந்த இசைதனைக் கேட்டு மகிழ்ந்த அந்த சிறார் பருவத்தையும் மீட்டுத் தந்தது. நான் பிறப்பதற்கு முன்பே காலமாகிவிட்ட காருகுறிச்சி அருணாசலம் தன்னுடைய இசை மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்த தொகுப்பில் வந்த சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலை, இந்த தொகுப்பு வாசித்து முடித்தவுடனே இணையத்தில் தேடிக் கேட்டு மகிழ்ந்து அவரை என் மனதிற்குள் கொண்டு வந்து நான் அஞ்சலி செலுத்திக் கொண்டேன். இதுவே ஓர் இசை மேதைக்கு நாம் செய்யக்கூடிய அஞ்சலியாகும். போற்றுதலுக்குரிய அவரை நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.


 

 

 

நூல் தகவல்:

நூல் :  நின்றொளிரும் மின்னல் 

ஆசிரியர் : காருகுறிச்சி ப.அருணாசலம்

தொகுப்பு பதிப்பும் : என்.ஏ.எஸ். சிவகுமார்

வகை :    வாழ்க்கை வரலாறு

வெளியீடு :  அட்ரசம் பதிப்பகம்

வெளியான ஆண்டு :    2022

பக்கங்கள் :  216

விலை : ₹  300

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *