இலை உதிர்வதைப் போல 26 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

கதைகள் பலவும் சொல்லி வைத்தாற்போல் 6 பக்கங்களுக்கு மிகாதவை (எதாவது தமிழ் வாத்தியார் நினைவு வந்திருக்கக் கூடும் ). கதைகள் சிறியதாக இருந்தாலும் கனமான உணர்வுகளைத் தாங்கியவை.

ஒற்றைப்பனை முதல் பசி வரை 26 கதைகளுமே உறவு என்னும் அடி நூலைக் கொண்டு நெய்யப்பட்டவை. வேறு வேறு மாதிரியாகக் கதைகளைப் பின்னி இருந்தாலும் அந்தக்காலத்தில் உறவுகளுக்குள் இருந்த நெருக்கமும் , காலப்போக்கில் காணாமல் போன வலியும் , வயதான ஆச்சிகளின் ஏக்கமும் , சொந்த ஊரின் பிரியங்களும் , இயந்திர வாழ்வின் மறுக்கமுடியாத இயக்கங்களும் , அந்தகால அப்பாக்களும், பெண் பிள்ளை பெற்றவர்களின் பாடு என மாறி மாறி மெருகேற்றி இருக்கிறார்.

ஒவ்வொரு கதை முடிந்த பின்னும் நமது கடந்த காலத்திற்குள் ஓடி தாத்தா அம்மாச்சி வீட்டிற்கெல்லாம் சென்றுவர வேண்டி இருந்தது. சொல்லக்கூடத் தெரியாத அளவிற்கு மறந்து போயிருந்த ஊர் திருவிழாக்கள், விளையாட்டுகள், சொந்தங்கள் என்று ஒரு பெரிய வலம் வரவேண்டி இருந்தது. பல கதைகளை வாசித்து முடித்தபிறகு ஒரு கனமான உணர்வே இருந்தது. நிறையத் தொலைத்து விட்டோம். மீட்டெடுக்க முடியுமா என்ற கேள்விகளை உள்ளடக்கியவை.

அதெல்லாம் ஒரு காலம் என்பதையும், இது இந்த காலம் என்பதையும் உறவு, உணர்வு என்னும் கொக்கி கொண்டு இறுக்கி இருக்கிறார்.

என்னை மிகவும் ஆழமாக யோசிக்கவைத்தது அப்பாவின் கடிதம். தபால்காரர் வருகைக்காகக் காத்திருப்பதைப் போல வேறு யாருக்காகவும் அவ்வளவு ஆர்வமாகக் காத்திருக்க முடியாது . கடிதம் எழுதுவதும் பதிலுக்குத் தவிப்பைக் காத்திருப்பதும் ஒரு அருவமான உணர்வு. கடிதங்களைச் சுமந்துவரும் தபால்காரரிடம் கடவுளின் சாயல் கலந்தே இருக்கும்.

நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைப் பிரக்ஞையோடு கவனித்திருந்தால் அன்றி இப்படி கதைகள் சொல்ல முடியாது. புத்தகம் முழுக்க மனதிற்கு நெருக்கமான உணர்வுகள். பல கதைகளில் முடிவு உங்கள் கையில் என்பதைப்போல மெல்லிய நூலில் கனமான கல்லைக் கட்டி தொங்கவிட்டதைப்போல முடித்திருக்கிறார்.

மிக எளிமையான, தெளிவான சொல்லாடல். நிச்சயம் படிக்கும் ஒவ்வொருவருக்குமே ஒரு நெகிழ்வு, உறவுகள் மீதான ஒரு நெருக்கம் அல்லது இழந்தது குறித்த ஒரு ஏக்கம் என்று எதாவது ஒரு உணர்வைக் கிளறிவிடாமல் இருக்காது.


நூல் தகவல்:

நூல் :  இலை உதிர்வதைப் போல

வகை :  சிறுகதைகள்

ஆசிரியர் : இரா.நாறும்பூநாதன்

வெளியீடு :  நூல் வனம்

வெளியான ஆண்டு:  2016

பக்கங்கள் : 192

விலை:  ₹  150