மனிதராகப் பிறப்பெடுத்துவிட்ட காரணத்தினால் அந்த மனிதக் கூட்டத்தில் வாழப் பழக ஒருவர் கொள்ளக் கூடிய ஒரு முக்கிய அளவுகோல், இரண்டு பிரசித்தி பெற்ற மேற்கோள்களுக்கு இடையேயான முடிவிலியின் தற்கால அனுபவச் சிறகசைப்பில் அவிழ்வதாக இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. ‘0’ மற்றும் ‘1’ இடையே இருப்பவை முடிவிலி எண்கள் என்பது மாதிரி ஒரு உண்மை, ஒரு தர்க்கம், ஒரு புரிதல்.

அந்த மேற்கோள்கள்:

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – கணியன் பூங்குன்றனார்

‘மனிதன் மகத்தான சல்லிப் பயல்’ – ஜி.நாகராஜன்

இந்த மேற்கோள்களுள் எது ‘0’ எது ‘1’ என்பது நிதர்சனம் என்றாலும், எது ‘0’ எது ‘1’ என்பது இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு தனி மனிதரின் விருப்பத் தேர்வாகிப் போவது கூட ஒரு அபத்தம் தான். அப்படியான ஒரு காலகட்டம் இது.

நெகிழனின் பூஜ்ய விலாசம், என் வாசிப்பு அனுபவப் பார்வையில்,  இந்த மனித வாழ்வின் ‘0’ பக்கம் சாய்ந்து அதை அளக்க / விளக்க முயற்சிப்பதாகத் தோன்றுகிறது. இந்த ‘அளக்க / விளக்க முயற்சிப்பது’ என்பது உணர்வுபூர்வமான மனோநிலையில் நிகழ்வதாக இருந்தாலும், அது நிகழ்கிறது என்பது தான் இதன் முக்கியத்துவம்.

இத்தொகுப்பின் முதல் கவிதையிலேயே, புத்தக முன்னுரையைக் கவிதை வடிவில் தந்தது போல இருக்கும் இந்தக் கவிதை, இதன் கருப் பொருளுக்கும் பாடுபொருட்களுக்கும் முதல் சாட்சியாக இருக்கிறது.

என்றோ பறந்துவிட்டது

அவளுக்குள்ளிருந்த கிளி

ஒரு துண்டு கொய்யாக் கனியென

ஜன்னல் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது

மேகம்.

0 மற்றும் 1 இடையிலான முடிவிலிச் சாத்தியங்கள் எப்படிக் கவிதையின் அனுபவச் சாத்தியங்களை அதிகப்படுத்துகின்றன என்பதை இந்த வரிகள் உணர்த்த முற்படுவதாகவே படுகிறது.

அடுத்த கவிதையான ‘மழைக்கால ஈசல்கள்’ விரித்துக் காட்டும் ஒரு அதிர்ச்சி மதிப்புச் சித்திரம் நம்மைச் சட்டெனப் பற்றி இழுத்து இந்த கவிதைத் தொகுதிக்குள் கூட்டிப் போய் விடுகிறது. அடுத்த கவிதையான ‘வெள்ளைப் பூசணி’ காட்டும் அதிர்ச்சிச் சித்திரம் காட்டும் புதுமை நம்மை அப்படியே அள்ளிக் கொள்கிறது.

மேலும் இந்த ‘வெள்ளைப் பூசணி’ கவிதை, எனக்கு ஆத்மாநாமின் ‘பூஜை’ கவிதையில் வரும் திருஷ்டிப் பூசணியை நினைவுபடுத்தியது – இதை literary evocation with referential disintegrity – எனலாம்.

‘சிரிக்கும் கத்தி’ கவிதை தன் தலைப்பிலேயே ‘தீட்டப்பட்ட ஒற்றை இதழின் பகடிப் புன்னகையால்’ நம்மைக் கீறி உண்டியல் போட்டுத் தன் சுவையின் ஆழத்தை மனதில் மிதக்கவிடுகிறது. திருட வந்தவன் தனக்கு பயந்த எலியைக் காதலிக்கும் ஒரு குறுங்கதையாகவும் இது விரிகிறது.

இந்தக் கவிதைத் தொகுப்பின் பல கவிதைகளுள் இருக்கும் அந்த ஆதி-அதி-சொரூபம் புரிய வர, தலைப்பிடப்படாத இந்த அடுத்த ஒரு கவிதையை முழுவதுமாக இங்கே தருகிறேன்:

வாசலில் கட்டிப்போட்டிருக்கும் மகிழ்ச்சியைப் பார்க்கும்

எதிர்வீட்டுக்காரன்

தன் தளர்வான மீசையை வலுக்கட்டாயமாக முறுக்கி

அப்படி முறைக்கிறான்

பதிலுக்கிது

அவனுக்குத் தன் பொச்சைக் காட்டி

வாலாட்டி வெறுப்பேற்றுகிறது

காய்ப்புக் காய்ச்சிய

அவனுடைய முரட்டுக் கையில் குத்து வாங்க

எனக்கேது தெம்பு

அவிழ்த்து உள்ளே இழுத்து வரலாமென்று

அருகே செல்லும்போது

பாம்பாகச் சீறுகிறதன் கயிறு.

இதில் உள்ள 0 மற்றும் 1, அவற்றின் இடையே உருக்கொள்ளும் அந்த முடிவிலியின் பகைமை மற்றும் தோழமை ஆகியவற்றை இந்தக் கவிதையின் சிறிய காட்சி காட்டும் பெரிய விந்தை ஆகியவை குறித்துத் தனியே எழுதலாம்.

எளிதில் சித்திரவதை செய்ய முடிகிற

கொல்ல முடிகிற ஜந்து

எல்லாவற்றுக்கும் மேலாக

நம்மை வீர புருஷர்களாக்கும் பிரத்யேகப் பிராணி.

என முடியும் அடுத்த கவிதை மிக நேரிடையாக எலி பற்றியது என்றாலும், அது மருத்துவச் சோதனைகூடம் குறித்தும் பேசுகிறது என்றாலும், அந்த ‘எளிதில் சித்திரவதை செய்ய முடிகிற … ஜந்து’ ஒரு மனிதராகவும் காணக் கிடப்பது தான் இக்கவிதையின் வெற்றி எனச் சொல்லலாம்.

‘தீக்குச்சிகளின் குடும்பம்’ காட்டும் வன்முறை எவரையும் தம் நிலை இழக்கச் செய்யக் கூடியது. ‘எலிப் பற்கள்’ கவிதையின் ‘தொந்தரவு’ ஒரு கொடுமையை விளக்குப் பிடித்துக் காட்டுகிறது.

‘களவு’ கவிதையின் மாயப் பேரதிர்ச்சி எதார்த்தம் – // ஒரேயொரு வெட்டுக்கிளி / ஒரு நெல் மூட்டையைத் தூக்கிக் கொண்டு / தாவித் தாவிப் பறந்து சென்றதைப் பார்த்ததாக / நாங்கள் சொன்னால் / யார் நம்புவார்கள் // – அந்த வெட்டுக்கிளி உண்மையில் ஒரு மனிதராகவும் இருக்கலாம்.

இந்தத் தொகுப்பின் பல கவிதைகள் நாய்களின் நன்றி குறித்ததாக இருப்பது, ஒரு சக உயிரியிடம் கிடைக்காததை உப உயிரிடம் தேடும் பாங்கை வெளிப்படுத்துவதாக இருக்கிறது உ.தா. ‘நற்பெயர்’ கவிதை – // … மிட்டுவின் அகராதியில் / நற்பெயர் என்பது / ஞாயிற்றுக் கிழமையின் ஒரு நல்லி எலும்பு //

‘ஊற்று’ கவிதையை வாசிக்கையில் நமக்கு தியாக உள்ளம் கொண்ட நம் சகமனிதர்கள் நினவிற்கு வரவேண்டும் – நல்லதொரு கண்ணோட்டம் (POV – Point of View Poem). ‘கிறுக்குக் கோழி’, ‘முட்டாக் கரடி பொம்மை’ போன்ற கவிதைகள் எல்லாம் ஒரு வெற்றுச் சித்திரத்தின் ஒற்றைப் பார்வை தரிசனம் என்னவெல்லாம் ஞானம் தரும் எனச் சொல்கின்றன. ‘மலிவான சவப்பெட்டி’ எனத் துவங்கும் கவிதை ‘வெளிச்சம் அவன் உடலாக மாறியது’ என முடியும் போது நடுவில் இருக்கும் வரிகளை ஒரு வாசகர் தேடிப் படிப்பார்.

‘உதயம்’ கவிதை எண்ணிக்கைக்குச் சேர்த்தது போல.

‘வடிவமைப்பு’ கவிதையின் பேசுபொருள் இன்றைக்கு ‘ரஷ்ஷிய – உக்ரெய்ன்’ போர் குறித்தது என அதை வாசிக்கும் ஒருவர் புரிந்து கொள்வார் என்றால் அதுவே இந்த வாழ்வின் முடிவிலி அவலம் குறித்த சாஸ்வதம்.

‘உண்’ கவிதையை வாசித்த பின், சந்தர்ப்பத்தால் வாழ்வின் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு சக மனிதனின் உணவுப் பழக்கத்தின் பற்றாக்குறை பற்றி நாம் யோசிக்காமல் இருக்கவே முடியாது. ‘நாமீன்’ – நல்ல கவிதை.  இசைத்துப் பாட வேண்டிய பதத்தில் இருக்கும் ஆனால் பாடக் கஷ்டமான ‘நெறி தவறாத கால்கள்’ கவிதையின் இசையை என்ன செய்வதெனப் புரியாமல் நாம் திகைக்கும் போது, அது சொற்களின் தீபகற்பத்தில் அர்த்தங்களின் கடலை கபளீகரம் செய்கிறது.

//நுங்குத் தொட்டியைப் போல கைக்கடக்கமான தலை / கண்களையே நோண்டினாலும் / நுங்கைப் போலச் சும்மா இருப்பாய் என்றது ஒரு குரல் // எனத் துவங்கும் ‘பேரவதி’ குரல் காட்டும் dystopian உலகம், அது நிஜம் தான் எனச் சொல்லும் நிகழ்காலச் செய்திகளை வாசிக்கும் போது மிக disturbing ஆக இருக்கிறது தான்.

இத்தொகுப்பின் தலைப்புக் கவிதையான ‘பூஜ்ய விலாசம்’ இத்தொகுப்பு குறித்த மிகச் சரியன ஒரு பார்வையை நான் முன்வைத்து விட்டேன் என்றே எனக்குச் சொல்கிறது. ‘பச்சை வாழை’ கவிதை தரும் அதிர்ச்சி என்னடா இது ஒரு சந்தோஷ தருணம் கூட வாய்க்காத மனித வாழ்வை ஒருவர் எப்படித் தான் அணுகுவார் பாவம் என எண்ண வைக்கிறது.

‘பாழ்கணம்’ ஒரு சாதாரணக் கவிதை. எண்ணிகைக்கு குற்றமில்லாமல் இருந்து விட்டுப் போகட்டுமே அதுவும் தான், 0 மற்றும் 1 ஆகியவற்றுக்கு இடையே இதுவும் ஒரு சாத்தியம் தான் என்பதால். அது அசாத்தியமான ஒரு கவிதையாக இல்லாவிட்டால் தான் அப்படி என்ன இந்தத் தொகுப்பிற்குக் குறை வந்துவிடப் போகிறது.

‘நானொரு கொக்கின் நண்பன்’ கவிதை சொல்லும் ‘கவிதை நியாயம்’ ஒரு பறவைக் காதலனாக எனக்கும் பிடித்திருக்கிறது. மனிதர்களைக் காதலிப்பது தான் அவ்வளவு கடினம் போல. மற்ற எல்லா உயிர்களும் தம் இயல்பில் இருக்கின்றன போலும். அவைகளுக்கு எல்லாத் தலைமுறையிலும் புதிது புதிதாகப் பிரச்சனைகள் உருவாவதில்லை போலும்.

‘மழை பார்த்தல்’ கவிதை, நான் இதே தலைப்பில் பத்து வருடங்களுக்கு முன் எழுதிய என் கவிதையின் அதே அடி நாதத்துடன் ஆனால் வேறு ஒரு சித்திர மீட்டலில் இயங்குகிறது. தொடர்ந்து வரும் தலைப்பிடப்படாத கவிதைகள் சில சுமாராகவே இருக்கின்றன. ஆனால் ‘அட்சய பாத்திரமொன்று ஊர் மேலே பறக்கிறது’ எனத் துவங்கும் கவிதை ஒரு குன்றுமணி.

‘கால் நூற்றாண்டு நண்பர்கள்’, ‘வாய்த்தது’ எனச் சில சாதாரணக் கவிதைகள் பக்கங்களை நிரப்புகின்றன. இதே போன்ற ஒரு கருப்பொருளைக் கவிதையாக்க முடியாமல் அந்த துர்கணத்தையும் கடக்க முடியாமல் நானும் தவிக்கிறேன் என்பதால் எனக்கு ‘மறை கணம்’ கவிதை பிடித்திருக்கிறது.

‘கனவுகளை விழுங்கிய நிலம்’ – கவிதை இத்துடன் எந்த நேரடிச் சம்மந்தமுமில்லாத ‘இன்னும்’ என்ற ஆத்மாநாம் கவிதையை ஏன் நினைவுபடுத்தியது என யோசித்துப் பார்த்தால், 0 மற்றும் 1 இடையில் உள்ள முடிவிலித் தத்துவம் தான் ஒரு காரணமாகத் தோன்றுகிறது. ஆத்மாநாம் கவிதை மிகவும் inclusiveஆகவும், இக்கவிதை அதன் எதிர்பதத்தின் complimentary-ஆகவும் இருப்பதாகத் தோன்றுகிறது.

‘அமாவாசையின் கண்கள்’ கவிதை ஒரு evocative அற்புதம். என்னுடைய ‘சிறிது இருள்’ கவிதைத் தொடரை இது நினைவுபடுத்துகிறது என்பது இத்தொகுப்பை முன்வைத்து எனக்குள் நிகழும் சிறிய Social identity theory.

‘மீட்பர்’ கவிதை ஒரு உரையடலின் உன்னதத்தைக் கவிதைப்படுத்திப் பார்க்கிறது. Conversational counselling இப்படித் தான் இருக்க வேண்டும் போல. ‘சுருதி’ கவிதை ஒரு சிறுகதையின் உரமும் கனமும் கணமும் கொண்டது. குயிலின் ஸ்ருதி குறித்த அந்த அடுத்த தலைப்பிடப்படாத கவிதை ஒரு வெற்றுக் கூற்றாக நின்றுவிடுகிறது.

‘கடைசி காலத்தின் அப்பா’ கவிதை நம்முள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது ஒரு வாசக துர்ரதிர்ஷ்டம் எனக் கொண்டு அதைக் கடந்து விடுவோம். ‘என் மூக்குக் கண்ணாடியைக் கூப்பிட்டுப் பார்த்தேன்’ என்ற தலைப்பிடப்படாத கவிதையின் அங்கதம் காட்டும் சித்திரமும் நம்மை எவ்விதமும் ஈர்க்கவில்லை.

‘உறைநிலையில் களிக்கும் உன்னத மனதை’ எனத் தொடங்கும் தலைப்பிடப்படாத கவிதை வாழ்வின் பொய் நம்பிக்கைகள் குறித்த ஒரு அங்கத அருமை. ‘அவுட்’ – ஒரு சாதாரணப் புலம்பல் – இது கவிதை கூட இல்லை. அடுத்து வரும் தலைப்பிடப்படாத கவிதையும் எந்தப் புத்துருவாக்கத்தையும் நமக்கு அளிக்கவில்லை. பழகிப் போன ஒரு வெற்றுச் சித்திரத்தை மீண்டும் ஏன் இது காட்டுகிறது என்பது புரியவில்லை.

‘பத்து நாட்களுக்குப் பின் பசியாறும் காளை’ என்ற தலைப்பின் கீழ் இருக்கும் இரு கவிதைகள் காமத்தின் அகோரத்தைக் காட்ட முயல்கின்றன, ஆனால் ஈர்க்கவில்லை. அடுத்து வரும் தலைப்பிடப்படாத இரண்டு கவிதைகளும் தூக்கமின்மை குறித்து நமக்கு இணக்கமான மொழியில் பேசுகின்றன என்றாலும் அவற்றில் கவிதைத் தருணங்கள் தென்படவில்லை என்பது குறையே.

‘அம்மாவின் சிறகுகள்’ கவிதை, சுதந்திரத்தையும் சிறைபிடிப்பின் கையறு நிலையையும் மிக அபாரமான சொற்சித்திர நேர்த்தியுடன் சொல்கிறது. அடுத்து வரும் தலைப்பிடப்படாத கவிதைகள் நமக்குள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் ‘உருண்டு திரண்டிருந்த / வாழ்வின் பிருஷ்டம் …’ எனத் தொடங்கும் கவிதை அதிர வைக்கும் எதிர்-அழகியல் கொண்டது. அடுத்து வரும் தலைப்பிடப்படாத கவிதைகளும், ‘ரிமோட் பறவை’ என்ற கவிதையும் மீண்டும் ‘வெறுமனே சில சொற்கள்’ என்பது போலக் கிடக்கின்றன.

‘உழுத நிலத்தின் நடுவேயமர்ந்து / தட்டான்களை வெறிக்கிறது நாய்’ என ஒரு அருமையான ஹைக்கூ சந்தர்ப்பத்தை முன்வைத்துத் தொடங்கும் தலைப்பிடப்படாத கவிதை நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது. ‘எளிய உயிரி’ கவிதை ஒரு அசாதாரணத்தைக் காட்ட முனைந்து ஆனால் அதில் உயிரில்லாததால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தத் தவறுகிறது.

‘துக்கம் ஒரு சொங்கி’ என்ற வரி கொண்ட தலைப்பிடப்படாத கவிதை ஒரு தத்துவ அழகியலுடன் அமைந்திருக்கிறது. தொகுப்பின் கடைசிக் கவிதையான ‘பொருந்தாவதாரம்’, 0-வில் ஆரம்பித்து 1-இல் முடிவது, நன்றாகவே இருக்கிறது.

மொழியின் புத்துருவாக்கம் (language innovation) மற்றும் அசாதாரணத்தன்மை (unusualness) மூலம் இந்தத் தொகுப்பின் பல கவிதைகள் நிகழ்த்தும் மாயம் தான் இவற்றின் தனிக்கூறு (speciality) எனலாம். மேலும் இந்தக் கவிதைகளின் பின்நவீனத்துவப் பகடிப் போக்கு, இவற்றை உயர்த்திக் காட்டும் தளம், சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளிலேயே வேறொன்றாகத் தம்மை அடையாளம் காட்டுகின்றன எனலாம். நெகிழன் தொடர்ந்து கவிதைகள் எழுத வேண்டும் என்பதே தொகுப்பை வாசிக்கும் ஒருவரின் எதிர்பார்பாக இருக்க முடியும். இத்தொகுப்பை வாங்கி வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.


நூல் தகவல்:

நூல் : பூஜ்ய விலாசம்

வகை :    கவிதைகள்

ஆசிரியர் : நெகிழன்

வெளியீடு :  மணல்வீடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  டிசம்பர்-  2020

பக்கங்கள் :  63

விலை : ₹  80

நூல் பெறத் தொடர்பு கொள்ள:

தொலைபேசி – 9894605371

மின்னஞ்சல் [email protected]

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *