நூல் விமர்சனம்புனைவு

சுளுந்தீ- நாவல் விமர்சனம் – 2


கால சக்கரத்தை நாம் சுழற்றும் போது இருட்டு மட்டுமே அதில் அதிகம் புலனாகிறது. போதுமான வெளிச்சம் நமக்குக் கிடைப்பதில்லை. மன்னர்களின் பெருமைகளை வெற்றிகளை செயல்களை மட்டுமே பேசுவது வரலாறு என்று நாம் பழகி வந்துள்ளோம்.

மன்னர்கள் தேசத்தின் நிர்வாகி மட்டுமே அந்த நிர்வாகத்தின் கீழ் பல சமூக இனக்குழுக்கள் அடுக்குகளாக உள்ளன. இவை தான் தேசத்தின் வரலாற்றைத் தாங்கி பிடிக்கும் அஸ்திவாரங்கள். இதன் வலிமை தான் வரலாற்றை யுகங்கள் தோறும் பேச வைக்கிறது. சமூகத்தின் அடிநிலை மக்களை பற்றிய வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்படும் போது தான் ஒரு தேசத்தின் உண்மையான வரலாறு புலனாகும். இதனை பெரும் முயற்சியில் மட்டுமே அகழ்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கான பெரிய வெளிச்ச கீற்றைத்தான் “சுளுந்தீ ” கசிய விட்டுள்ளது.

அகழ்வின் துவக்கத்தில் மினுமினுப்பாக எரியும் சுளுந்தீ அகழ்வின் ஆழமும் இருளும் நீளும் போது கங்கு கனன்று பெரும் தீப்பந்தமாய் படப் படத்து எரிகிறது. அதன் வெளிச்சத்தில் அனைத்தும் புலனாகிறது. அதைக் காண ஒருவனுக்குத் தேவையானது தெளிவான பார்வை புலன் மட்டுமே.

மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கரிடம் (1662 – 1682) தளபதியாக இருந்த அப்பய நாயக்கரின் மகன் கதிரியப்ப நாயக்கர் தான் இந்நாவலின் மையக் கதைக்களமான கன்னிவாடியை (கொடைக்கானல், பழனி, வேடசந்தூர் பகுதிகள்) நிர்வாகிக்கும் அரண்மனையார்.

இந்த அரண்மனையின் நாவிதனாகவும் மேதைமை கொண்ட பண்டுவனாகவும் (மருத்துவர்) பன்றிமலையில் யோகத்திலும் சித்த மருத்துவத்திலும் கரை கண்ட சித்தரின் சிஷ்யனுமான நாவிதர் இராமனின் மூலம் நாவிதர் குலத்தின் அறிந்திடாத அரிய செய்திகள் முன்வைக்கப்படுகிறது.

மூன்று பாகங்களாக விரித்து எழுதியிருக்க வேண்டிய நாவல். ஒரு புத்தகத்திலே நெருக்கமாகப் புனையப்பட்டுள்ளதால் இதன் செறிவையும் கனத்தையும் முதல் வாசிப்பிலேயே அறிமுக வாசகர்கள் தாங்கிக் கொள்வது கடினம். அவ்வளவு புதிய தகவல்களும் நுணுக்கமான மருத்துவ குறிப்புகளும் பத்திக்குப்பத்தி விரவிக் கிடக்கிறது.

இந்நாவலுக்கான சாரத்தையும் ஆதாரப்பூர்வமான தடயங்களையும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்டிருக்கும் இரா.முத்துநாகு சிறப்பு வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை பல லட்ச பிரதிகளை விற்று இருக்க வேண்டிய நாவல். .. ஆனால் தமிழ் எழுத்துலகம் எப்பொழுதும் எழுத்தாளனின் அந்திமகாலத்திலோ அல்லது இறந்த போன பின்போ தான் எழுத்தாளனையும் அவன் படைப்புகளையும் கொண்டாடுகிறது. இது தமிழ் எழுத்துலகின் சாபக்கேடு.

இருக்கும் போது உயர்த்தி பிடியுங்கள். அதில் தான் உயிரோட்டமும் ஆண்மையும் அன்பும் நிறைந்திருக்கும். செத்த பின்பு பிண்டம் வைத்தல் என்பது உயிரோடு வாழ்பவனின் மனத்திருப்திக்காக மட்டுமே.

இலக்கியத்தில் என்ன அரசியல் வேண்டிக்கிடக்கிறது. கடைசியில் நல்ல இலக்கியம் மட்டும் தான் எஞ்சி நிற்கும். பெரும் எழுத்தாளர்கள் புதிய நல்ல படைப்புகளைப் பற்றியும் வாசகர் மத்தியில் மனமுவந்து பேச வேண்டும்.

தற்காலத்தில்..,சித்த மருத்துவம் எழுந்து நிற்கும் போதெல்லாம் இடிக்கிறது. அது ஏன் என்று இந்த நாவலை படித்தப் பின்பு தான் புரிந்து கொண்டேன்.

நிறையச் சித்த மருத்துவ குறிப்புகள் வளர்ந்த மனிதர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்கு பலவகடம் கால்நடைகளுக்கு மாட்டுவாகடம் அனைத்து ஜீவன்களுக்கும் சேர்த்துத் தான்.

மருத்துவச் சிகிச்சை முறைகளும் அதற்கான மருந்து செய் முறைகளையும் பன்றி மலை சித்தரிடம் பணிந்து கற்கும் நாவிதர் இராமன் அனைவருக்கும் அதன் பலனை சேர்ப்பிக்கிறான்.

புகழ் எப்போதும் பகை வளர்க்கும். அதற்கு இரையாகிப் போகிறான் மகாப்பண்டுவன் இராமன். அவன் மகனுக்கு நாவிதர் தொழில் வேண்டாம் ஒரு போர் வீரனாகத்தான் அவன் உருவாக வேண்டும் என்பது அவன் கனவாகவும் இருந்தது. அதற்கான பயிற்சி முறைகளில் மகனைப் பட்டை தீட்டுகிறான். நாவிதன் ஒரு படை வீரனா…? என்ற கேள்வி. இந்த நெருக்கடி அரசு , சமூகம், எதிரிகள் என அனைத்து பக்கத்திலும் நெருக்கடித் தருகிறது. சூழ்ச்சிகள் அவனை அரவணைக்கிறது. அதை எப்படி முறியடித்து தன் இருப்பை உறுதிப்படுத்துகிறான் என்பது புத்தகம் முழுவதும் படித்தறிய வேண்டிய சுவாரஸ்யம்…!

ஒவ்வொரு சொலவடைக்கும் ஒரு கதை நீள்கிறது… ஒவ்வொரு பதத்திற்கும் அதன் அர்த்தம் தெரிய விளக்கமான, சுவையான கதை பாய்கிறது.

ஆனந்த வருடப் பஞ்சம் மக்களை வாட்டுகிறது. இடுக்கண் வரும் போது தான் அரசு நிர்வாகத்தின் கையாளகத்தனமும் அதை மறைக்க எடுக்கப்படும் அடக்கு முறைகள் அதிகார கரங்களின் நீட்சியின் விளைவாகும். மக்கள் பிழைக்கப் பிச்சையெடுக்கிறார்கள், கோரைக்கிழங்கு, மூங்கிலரிசி, .புளியங்கொட்டை, பசி மூலத் தீர்த்தம் என புது உணவுகளைத் தேடிக் கொள்கின்றனர். பஞ்சம் வருடக்கணக்கில் வாட்டிய பின் கிணறு விஞ்ஞானத்தைக் காட்டித் தருகிறது.

குல விலக்கு தண்டனை சட்டத்தின் கொடூர முகம் காட்டப்படுகிறது. இதனால் புரட்சி குழுக்கள் தோன்றுகிறது. குல விலக்கானவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பண்டாரப் படை செஞ்சி சுல்தானின் வலிமையை அதிகப்படுத்துகிறது.

சித்த மருத்துவத்தில் செந்தூரம் பற்பம் செய்யப் பயன்படும் மூலச் சரக்குகள் சில வெடி மருந்துக்கும் உதவுகின்றன. இதனால் சித்த மருத்துவர்களை (பண்டுவர்கள் ) சந்தேகித்துக் கொல்கிறது அரசு. மருந்திற்கான மூலப் பொருட்கள் வாங்க அரசு முத்திரை கட்டாயமாக்கப்படுகிறது. போகிறப்போக்கில் அரசு அதிகாரிகளுக்கு வேண்டாத குடியானவர்களும் கொல்லப்படுகின்றனர்.

சவரக்கத்தியைச் சவரத்திற்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்ற சத்தியத்தை அரசு மதிப்பதில்லை. தேவையேற்படும் போது நாவிதர்களைச் சூழ்ச்சியான கொலைத் தொழில் செய்யவும் பயன்படுத்திக் கொள்கிறது. “அரசாட்சியை அழித்த வரலாறும் அம்பட்டையன் சவரக்கத்திக்கு உண்டு” என்பது சற்று கிலியைத் தருகிறது.

ஆல்வரசு போன்ற கிறித்துவ பாதிரிமார்கள் மத பிரசங்கம் மூலம் ஆறுதல் வார்த்தைகள் கூறி மக்களை ஆற்றுப்படுத்துவது மெதுவாக மதத்தில் விழ வைக்கும் துவக்கப் புள்ளி. அதே சமயம் அரசு நிர்வாகத்திற்கு அறிவுரைகளையும் மக்கள் ஆதங்கம் கொட்டி நிவாரணம் தேடுமிடமான சைவ ஆதீன மடங்களுக்கு மதுரை மன்னர் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார். குலகுருக்களின் மேன்மை சிறுக்கப்படுகிறது.

அரண்மனை கமுக்கம் என்பது அரசாங்க ரகசியம். வெளியிடுவது இராஜ துரோகம் .கதை முழுவதும் நிறையக் கமுக்கங்கள் மறைந்துள்ளன.

” குடியானவர்களின் எளிய நெருப்பு ஆயுதமான சேராங்கொட்டையை சனங்க பிடுங்கக் கூடாது. சுளுந்து கட்டைகள் வைத்திருப்பது குற்றம் ” எனப் பல நெருக்கடிகள்.

ஒரு மனிதன் பிணமான பின்பு செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களை ஒன்று விடாமல் பல விளக்கங்கள் மூலம் ஒரு அத்தியாயம் முழுக்க எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அதில் நாவிதர் உட்பட இன மக்களின் பங்களிப்பும் தெளிவாகிறது.

நாவிதர் மற்றும் பண்டுவக் குலத்தின் இன வரலாறாக மட்டுமே இதைப் பார்க்க முடியாது. ஏகாளி, வாடன், தீக்கொளுத்திகள், மலைக் குடிகள்.., என இன்னும் பல எளிய அடித்தட்டு மக்களின் ஒருங்கிணைந்த வரலாற்று ஆவணமாகக் கொள்ள வேண்டும்.

பண்டுவன் இராமனுக்குப் பின் அவன் மகன் செங்குளத்து மாடன் பற்றிய வரலாறு நீள்கிறது. இராமன் வாழும் அத்தியாயங்களில் அவன் குணத்தைப் போன்றே மென்மையாக நகர்கிறது கதை. மாடன் வந்த பிறகு அவன் ஓட்டிப் போகும் குதிரையின் பாய்ச்சல் போல் புயல் வேகமெடுத்து நகர்கிறது.

கன்னி வாடி மட்டுமல்லாது சுற்றியுள்ள பல பகுதிகள் மற்றும் மனிதர்களைப் பற்றியும் குறிப்பாகப் பன்றிமலை பற்றிய தரவுகள், கதைகள் , அங்கு வசித்த சித்தர் எனப் புத்தகம் படித்து முடித்த பின்பும் பல நாள் கண் முன் நிழலாடுகிறது.

சுளுந்தீயின் வெளிச்சம் நினைவுகளின் பின் தொடர்ச்சியாக நிற்கிறது. இதுவே இப்புதினத்தின் வெற்றி. ஆசிரியர் இரா. முத்து நாகு எழுதிய இப்படைப்பு தமிழ் எழுத்துலகின் புதிய மைல்கல். அவர் நிறைய எழுத வேண்டும்.

வாழ்த்துகள். !


– மஞ்சுநாத்

நூல் தகவல்:
நூல் : சுளுந்தீ
வகை : நாவல்
ஆசிரியர்: இரா.முத்துநாகு
வெளியீடு: ஆதி பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
பக்கங்கள் :  472
விலை : 450
Buy on Amazon :

இந்நாவலின் மற்றொரு விமர்சனம் :

சுளுந்தீ – நாவல் விமர்சனம் -1

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *