ந்த பூமிப் பந்தின் மேல் எப்போதும் கவிதை மலர்கள் பூத்துக் கிடக்க வேண்டும் .மொழியின் எல்லாவிதமான சாத்தியங்களையும் கவிதை கொண்டிருக்க வேண்டும்.என எந்தக் கவிஞன் வரத்தை வாங்கினான் எனத் தெரியவில்லை. காலம் தோறும் கவிதைகள் பூத்துக் குலுங்கும் காடாகவே இந்த பூமி இருந்து வருகிறது. கவிஞர்களோ நம் தமிழ் நிலத்திற்கு அப்பாலும் இருந்து கொண்டு குடைக் காளான்களையும் பூக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இது நமது மொழியின் செழுமைக்கு வளம் சேர்ப்பதாகவும், அதன்பொருட்டு  நமக்கு கவிதை குறித்த புரிதல்களை மேலும்மேலும் விரிவாக்கி கொண்டே போவதாகவும் இருக்கிறது.. இன்றைய மொழியின் விரிவில் கவிதைகான புதிய சித்திரங்களையும், புதிய சாத்தியப்பாடுகளையும், மொழியின் புதிய வெளிப்பாடுகளையும் ,அதன் புதிய பரிமாணங்களையும் கண்டறிவதும் இன்றைய நவீன வாசிப்புத் தளத்தில் ஒவ்வொரு வாசகனுக்கும் இது தேவையாகி இருப்பதையும் அறிய முடிகிறது.

    புதிய காற்றை சுவாசிப்பது போல் கவிதைகளும் இருக்க வேண்டும் என எண்ணுபவன் கவிதையை எல்லா இடங்களிலும் கண்டு கொள்வான். கவிதை எல்லா இடங்களிலும் இருக்கிறது. மொழி இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எனவேதான்  காலத்துக்கேற்ற  வகையில் இயங்கி அவன் கைப் பற்றி அவன் கனவுகளைக் கவிதையாக்கிக் கொள்கிறது. .

 அவன் தோள் பற்றி அழைத்துச் செல்லும் அவனின் புதிய விசைப் பலகைகள் அவனுக்கு முன்னே சென்று வழிகாட்டியவர்கள்தான். 

  புதிய குரலாய் எனக்கு அறிமுகமான யாழிசை மணிவண்ணன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.  முகநூல் வழியாக எனக்கு அறிமுகமானவர். 

தேவதைகள் தூவும் மழை, கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு, பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம் என்று அவரின் முந்தைய’ தொகுப்புகளை நான் வாசித்து அறிந்திருக்கவில்லை எனினும் “குடைக் காளான்கள் துளிர்க்கும் வீடு” என்று அவர்  எனக்கு அனுப்பி வைத்த தொகுப்பு நம்பிக்கையோடு வாசிக்கத் தூண்டுகிறது.

     பாதங்களை வெளியே நீட்டியபடி

     தொட்டிலுக்குள் உறங்குகிறது குழந்தை 

     வரிசையாய்ப் பத்து குடைக்காளான்கள்  –   பக் 7

   

 என்ற வரியில் அவரின் புதிய தரிசனம் தொடங்குகிறது.  உடனேயே அடுத்த கவிதை இன்னும் ஆழமாய் என்னை உள்ளிழுத்துக் கொள்கிறது. 

  தவழும் குழந்தைகள் 

  நடக்க ஆரம்பித்ததும் 

  வீடுகளுக்கு கால்கள் முளைத்துவிடுகின்றன.  – பக் 9

 

 இதுபோல் குழந்தைகளை மையப்படுத்திய கவிதைகள் தொகுப்பில் ஆங்காங்கே உள்ளன. தெறிப்பு மிக்க கவிதைகள் தொகுப்பில் நிறையவே உள்ளன. ஒரு எளிய வாசகனுக்கும் புரிந்துவிடும் அவரது தெறிப்புகள்….. நிலா, பௌர்ணமி, தர்பூசணி …மேலும் ஒரு வியாபாரி இவையெல்லாம் நாம் அன்றாடம்  பார்க்கும் விஷயங்கள்தான். நாம் சாதாரணமாக கடந்து செல்லும் விஷயங்களைத்தான்  கவிஞன் தனக்குள் கவிதை மொழியாக மடைமாற்றிக் கொள்கிறான்.

வானத்து பௌர்ணமி

ஒரு தங்க நிறத்து தர்பூசணி

தினசரி ஒரு கீற்றாக

வெட்டி விற்கிறான்

யாரோ ஒரு வியாபாரி.  – பக் 23

 

இது போல் இன்னொரு கவிதை..மிகவும் எளிமையானது போல்தான் இருக்கிறது. ஆனால் அது கவிதையாகும் தருணத்திற்காய் காத்திருந்ததுபோல் இந்த கவிஞனிடம் சிக்கி விட்டது.

தாமரை இலையில்

ஒரு துளியைக் கொண்டு

கோலி விளையாடுகிறது காற்று  – பக் 18

 

 மனதை சிடுக்கு எடுக்கும் கவிதைகளுக்கும் பஞ்சமில்லை.

எத்தனை கடல்களை

உள்ளடக்கியது என்று தெரியவில்லை.

ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கிறது மனம்.-  -26

 

அகலமான கைகளைப்போல் இருக்கும்

பப்பாளியின் விரிந்த இலைகள்

ஏதோ சத்தியம் கேட்பதாய் 

கைகளை ஏந்தியபடி நிற்கின்றன

அடித்துச் சொல்லத்தான் யாருக்கும் மனமில்லை  – பக் 26

 அகத்திலிருந்து புறத்தே சென்று கல்லில் கடவுளை காண்பதுபோல் ஒரு தோற்றம்…. இங்கு சொற்களை  கவிதையாக்க முயலவில்லை. கவிதைக்கான பின்புலம் அவருள் கண்ட புதிய தரிசனங்களின் வழியேதான் சொற்கள் விடுபடுகின்றன.

  

  எதை இட்டு நிரப்புவது

  என்று தெரியாமல் 

 எல்லோரிடமும் இருக்கிறது

 ஒரு வெற்றிடம் – பக் 68

 கவிதையின் வெற்றிடத்தை கவிஞன்தான் நிரப்ப வேண்டும்.  அவனின்றி அசையாது கவிதை சூழ் உலகு.என்று எனக்குள் சொல்லத் தோன்றுகிறது.

 

 எத்தனைமுறை வேண்டுமானாலும்

 அழித்து அழித்து எழுதிப்பாருங்கள்

 ரயிலைப் போல் ஒரு நல்ல கவிதையை

 ஒருபோதும் எழுதமுடியாது  –   பக்   71

 

   ஒரு கவிஞனுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைமையை மீட்டெடுக்கும் இதுபோன்று தருணங்கள் வாய்ப்பது என்பது அரிது.

பாத்திரக்கடையின் நடுவில்

சிலம்பம் ஆடுகிறார்

ட்ரம்ஸ் சிவமணி  -பக் 82

இந்த இடத்திலெல்லாம் சென்று நாமும்தான் கொஞ்சம் எட்டிப்பார்த்து வரலாமா? என்று தோன்றுகிறது.

கவிதைக்கான திறவுகோலை அவன் கண் இமைப்பதற்குள்

கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கவிதையும் கண்ணாமூச்சி காட்டி ஓடி ஒளிந்துகொள்ளும்தானே….

 

   தட்டான்களைப் பார்க்க நேர்ந்தால் 

   வயலின் இசைக்கு பிறந்தவை என்கிறது

   என் உள்ளுணர்வு

 

 இனி தட்டான்களைப்  பார்க்க நேர்ந்தால் இந்த கவிதையும் இசைந்து என் காதுக்குள் ஒலிக்கும்.போல் இருக்கிறது.

 விடியலில் மலர்ந்து

அந்தியில் கவிழும் செம்பருத்தி

ஒரு குளிர்ந்த சூரியன் – பக் 45   

  கவிதை குறித்து நாம் பேசுவதெல்லாம் இன்னும் இவரின் எழுதப்படாத கவிதைகளையும் எழுத வேண்டிய கவிதைகளைப் பற்றியும்தான் என்று எனக்கு தோன்றுகிறது.

  கவிதைக்கான எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இருக்கும் போதுதான்  இதுபோன்ற கவிதைகளை ஒரு கவிஞன் எழூத முடியும்.

 “ சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

  கலைச்செல்வங்கள்யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் “என்ற பாரதியின் வரிகளை இங்கு  நினைவுபடுத்திக் கொண்டால் நாம் காணும் பொருளெல்லாம் நமக்கு கவிதையின் பொருளேயாகும் என்று சொல்வதற்கும் இங்கு இடமுண்டுதானே.

  சிங்கப்பூரில் தற்போது வசித்துவரும் யாழிசை மணிவண்ணன் அவர்களின் இந்த தொகுப்பை BE4   BOOKS  அழகிய முறையில் வடிவமைத்து வெளியிட்டிருகிறது. 

 

“ உருண்டைகளைத் தட்டையாக்கும்

  பரோட்டா மாஸ்டர்களை

எங்கிருந்தோ நுண்ணோக்கியில் 

கவனிக்கிறார் கலிலீயோ”

 

 என்ற இவரது கவிதையைப் போலவே காலம் என்ற நுண்ணோக்கி வழியாக இவர் போன்ற  கவிஞர்களும் கவனிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

 அந்த நம்பிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் யாழிசை மணிவண்ணன் அவர்கள். அவருக்கு என் அன்பான வாழ்த்துகள்.


 

 

நூலாசிரியர் குறித்து

யாழிசை மணிவண்ணன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பிள்ளை வயல் கிராமத்தைச் சார்ந்தவர். இளங்கலை வணிகவியல் பட்டதாரி, கவிதைகள் கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். தற்சமயம் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.

இவரின் பிற கவிதைத் தொகுப்புகள் :
தேவதைகள் தூவும் மழை
கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு
பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்.

மின்னஞ்சல் : [email protected]

நூல் தகவல்:

நூல் :   குடைகாளான்கள் துளிர்க்கும் வீடு

வகை :   கவிதைகள்

வெளியீடு :  பீ ஃபார் புக்ஸ் (Be4Books) 

வெளியான ஆண்டு :   ஆகஸ்ட் 2022

பக்கங்கள் :  92

விலை : ₹  115

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *