ந்த பூமியில்தான் மனிதனும் வாழ்கிறான், அவனோடு கூடவே கோடிக்கணக்கான உயிர்களும் வாழ்கின்றன.  மனிதர்களின் அன்றாடப் பொழுதுகளை வெறுமையான பொழுதுகளாக்கி விடாமல் காப்பது பறவைகளும், விலங்குகளும், மீன்கள் போன்ற நீர் வாழ் உயிரினங்களும் இன்னும் இது போன்ற எண்ணற்ற உயிரினங்களும் தான்.

இன்னும் நமக்கு அருகே நம்மை அண்டி வாழும் நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவராசிகளை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் ?, எவ்வாறு அரவணைக்கிறோம்? அவற்றின் பசி தீர்க்க நாம் என்ன செய்கிறோம்….? 

பூமியில் நம்மோடு வாழ விதிக்கப்பட்ட அவற்றிற்கான வாழும் உரிமைகளை நாம் எவ்வாறு அல்லது எந்த அளவில் அனுமதித்து வருகிறோம்?

மேலும், இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு நம்மிடம் மழுப்பலான பதில்கள் மட்டுமே ஆயிரம் இருக்கும்.

நம்மை விடக் குறைந்த அறிவுள்ள அந்த ஜீவராசிகளுக்கான இருப்பும், வாழ்வும், அதன் பசியும், அன்பும், ஏக்கமும்  கவனிப்பாரன்றி இங்கேயுள்ள நகரமயமான சூழல் அவைகளுக்கு வாழத் தகுதியற்ற இடமாகவே இருந்து வருவதை நமது தெருக்களின் வழியாகவே பார்த்து விடலாம்.   

 மனிதர்களே ஒருவருக்கொருவர் அன்பு செய்யத் தயங்கும் இன்றைய வாழ்வின் சூழல்களுக்கிடையே நம்மை அண்டி வாழும் நாய், பூனை போன்ற எளிய உயிர்கள் வாழ அதன் குறைந்த தேவையான அன்றாட உணவுகளுக்கும்,அதன் வசிப்பிடங்களுக்கும், மேலும் அதன் உயிர் பாதுகாப்புக்கும் ஏதேனும் உத்தரவாதம் உண்டா? 

இத்தனை உணர்வுகளும், கேள்விகளுமாகத் தரணி ராசேந்திரனின் இந்த புனைவை வாசித்துக் கொண்டிருக்கும்போதே என்னைக் கடந்து கொண்டிருந்தன என்றால் அதன் எதார்த்த நடையும் அவரது அனுபவங்களும் தான்.

  தெருவில் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் அல்லது ஏதோ ஒரு மறைவான இடத்திலிருந்து கொண்டு மியாவ் என்று கத்தும் பூனையையும் அதன் குட்டிகளையும் எடுத்து அன்போடும் அக்கறையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் கவனிக்கும் பாலாவின் அம்மாவிடமிருந்து…..

   “ கடைசியா நா காப்பாத்துவன்னு என்னோட காலுக்கு பின்னாடிதா வந்து நின்னான். ரொம்ப நம்பியிருப்பான்.”

“கொண்டு போயிட்டாங்களா? சாப்புட்டுருப்பானா? ”

பாலாவின் அம்மா போன்றோர் எத்தனை பேர் இங்கு? 

 புனைவின் மொழியை இங்குப் பேசிக் கடந்து விட முடியாது. நாவலின் எந்த ஒரு பகுதியையும் நான் இங்கு எடுத்துச் சொல்லக் கூடாது. அதுதான் நியாயமும் கூட.  

பெரும்பான்மையான இலக்கியங்கள் பேசும் மொழியைக் கைவிட்டு தனது சொந்த அனுபவங்களின் வழியில் ஒரு புனைவாகச் சித்தரிக்கப்படும் இந்த நாவல் முழு புனைவாக இல்லாமல், சமூகத்தின் எதார்த்த நிகழ்வுகளை மையமாகக்கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன.   

 இந்த புனைவை வாசிக்கும் ஒரு வாசகன் தனது மன உணர்வுகளைக் கதையின் வழியாகவே கண்டுணரக் கூடிய வாய்ப்பை அறியலாம். 

  தரணி ராசேந்திரனின் “நானும் என் பூனைக் குட்டிகளும்” என்ற இந்த புதினம் அரிதினும் அரிதான ஒன்று.


நூலாசிரியர் குறித்து

2012-ல் பொறியியல் பட்டம் பெற்ற தரணி ராசேந்திரன் திரைத் துறையில் ஆர்வம் கொண்டு அதில் பயணிக்கத் தொடங்கினார். தன்னாட்சி முயற்சியாக ஞானச்செருக்கு என்ற முதல் முழு நீளப்படத்தை உருவாக்கினார். 2019 தொடங்கி நாற்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக ஞானச்செருக்கு அங்கீகரிக்கப்பட்டது. 'நானும் என் பூனைக்குட்டிகளும்' இவரின் முதல் புதினம். சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தில் சிறந்த நாவலாகத் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

நூல் தகவல்:

நூல் :    நானும் என் பூனைக்குட்டிகளும்

ஆசிரியர் : தரணி ராசேந்திரன்

வகை :   நாவல்

வெளியீடு :  எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

வெளியான ஆண்டு :   ஜூன் 2021

பக்கங்கள் :  

விலை : ₹  150

Buy on Amazon : 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *