நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

தாக் ஸூல்ஸ்தாத்தின் “உடைந்த குடை” ஒரு பார்வை


னது கல்லூரி நாட்களில் சில இலக்கிய விரிவுரைகளுக்கு என்னை ஒப்புக் கொடுத்துக் கேட்கும் போது எனக்குள் ஒரு மாணவனாய் நிறையக் கேள்விகள் எழுவதுண்டு அது பாடம் சார்ந்து அல்ல, பாடம் நடத்துபவரின் அறிவுலகத்தைப் பற்றியது.

ஒரு ஆசிரியரால் அரைத்த மாவை திரும்பத்திரும்ப   சலிப்பில்லாமல் அரைப்பதும், பொய்யான பூரிப்பு முகமூடியை அணிந்து கொண்டு வித்தைக்காட்ட முடிவதும் எப்படி..?

ஆம்..,

விரியுரைகள் அனைத்தும் வித்தைகள் தான் . மனம் அதற்கேற்றதாய் குரங்காய் மாறிடும் போதும் எதிர் விளைவு அவர் ஆழ் அகத்தில் கிளர்ந்திடுமா.. புறத்தில் அது எவ்வகையான தாக்கத்தைப் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்..?

எனது பல ஆண்டு கேள்விகளுக்கு இந்த நார்வேஜிய  எழுத்தாளர் தாக் ஸுல்ஸ்தாத் [Dag Solstad] தனது Shyness and Dignity (Genance og verdighet) (Sverre Lyngstad-English) உடைந்த குடை (தமிழில்) மூலம் பதிலளித்துள்ளார்.

நார்வேயின் தலைநகர் ஆஸ்லே நகரத்தின் அழகான வீதி ஒன்றில் நான்கு அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசியான எலியாஸ் ருக்லா தனது வீட்டிற்கருகில் இருக்கும் பார்கபோர்க்  மேல்நிலைப் பள்ளியின் நார்வேஜிய மொழித் துறையில் மூத்த ஆசிரியர்.

தனது 18 வயது  இளம் மாணவர்களுக்கு ஹென்ரிக் இப்சன் எழுதிய மிகப் பிரபலமடைந்த நாடகமான Vildanden பதிப்பு நூலிலிருந்து ” காட்டு வாத்து” (The Wild Duck)  என்கிற பாடத்தைத் தனது ஆழ்மனப் போராட்டத்துடனும் தத்துவ சிலாகிப்புடனும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அவரது ஒரே நம்பிக்கை அணுகல் அந்த  பாடம்  மாணவர்களின் முதல் அறிமுகமென்கிற ஆர்வப்பிடி மட்டுமே. அவருடைய எளிய பொழிப்புரை அவரை மட்டுமே கிளர்ச்சியடையச் செய்கிறது, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப வாந்தியெடுப்பது போன்ற உணர்வை அவர் கட்டுப்படுத்தினாலும் மாணவர்களின் சலிப்பைப் பொருட்படுத்தாமல் நாடகத்தின் தீவிர படைப்புத் தன்மையில் தன்னை பொருத்திக் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.

அலட்சியத்தின் எல்லை அவர் கட்டுப்பாட்டை  இழக்கச் செய்கிறது. அந்த திங்கள் பாட வேளையை முடித்து வெளியேறும் போது  அவரது குடைக் கூட திறந்து கொள்ள மறுக்கிறது.வெறுப்பின் உச்சம் குடையைத் தரையில் அடித்து அது கிழிந்து போகுமளவு சாத்துகிறார். கம்பிகள் உரசி அவர் கையில்  குருதி சிந்துகிறது.

எந்தவொரு வெடித்தலும் ஒரே ஒரு அலட்சியத்தால் திறந்து கொள்வதில்லை. மழையைப் போன்ற ஆயிரம் கூர்முனைகள் அந்நிகழ்வு சிருஷ்டியின்  உளியாக உள்ளன.

ஆழமான வெட்டுக்காயம் , மனவோட்டத்தை போல்  கசிந்து கொண்டிருக்கும் குருதி, கலைந்த மனநிலையுடன் அந்த பிற்பகல் வேளையில்  அவருடைய தளர்ந்த குழப்ப நடை  வீட்டை நோக்கிச் செல்லவில்லை.

ஒரு பெரு வெடிப்பிற்கு பின்னான அமைதி காலவோட்டத்தை எண்ணவோட்டத்தால் பின்னோக்கி ஸ்பரிசிக்கிறது.

எல்லோருக்கும் தங்களின் பிடித்த நண்பருடனான இளமைக் காலம் இனிமையானது. ருக்லாவிற்கும் தனது நண்பன் ஜோஹன் கார்லெவியூஸன் என்ற ஆளுமையான நண்பன்  மீதான ( 1966ல் தொடங்கும் நட்பு )  துவக்கத்தை ரசிக்கிறான். நண்பன் ஒரு பேரழகியைத் தனதாக்கிக் கொண்டு சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையின் சலிப்பிற்குப் பிறகு தனது குடும்பத்தை அவனது ஆளுமையாகக் கருதிய அவனைச் சுற்றியிருந்தவர்களைக் கவர்ந்து மார்க்சியத்தையும் தத்துவ சித்தாந்தத்தையும் முற்றும்  துறந்து முதலாளித்துவ கதகதப்பைத் தழுவ எந்தவொரு முன்னறிவிப்புமில்லாமல்   நியூயார்க் சென்று விடுகிறான்.

இப்போது அந்த மென்மையான ஆசிரியர் எலியாஸ் ருக்லாவிற்கு அந்த அழகி ஏவா லிண்டே  கிடைக்கிறாள். கூடவே நண்பனின் பெண் குழந்தையான காமிலாவின் வளர்ப்புத் தந்தை பொறுப்பு.

“எதைச் சொல்கிறோம் என்பது, எப்படிச் சொல்லுவது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம்.”

இதைச் சொன்னவர் யார் தெரியுமா…?

நமது ஆகச்சிறந்த  தமிழ்ச் சிறுகதைகளை உலகத் தரத்தில் வெளிப்படுத்திய, அகவுலகத்தின் வெளிச்சத்திற்கு உருவம் கொடுத்த   எழுத்தாளர் மௌனி. இப்புத்தக வாசிப்பின் முடிவில் எனக்கு அவர்தான் தோன்றினார்.

என்னவொரு ஆச்சரியம் இதன் மொழிபெயர்ப்பாளர்  ஜி.குப்புசாமி தனது பின்னுரையில்   “..மெளனி மறுபிறவியெடுத்து நார்வேயில் பிறந்திருக்கிறார் என்று தோன்றியது.” என்கிறார்.

வாசகர்கள் எல்லாம் ஒரே இனம் தான் போலும். இந்த நார்வேஜிய மௌனியின் 154 பக்கங்களை மொழிபெயர்த்து முடிக்க அவருக்கு 662 நாட்கள் பிடித்தது. மௌனியின் கதைகள் ஒரே வீச்சாக வாசித்து விட முடியாது… ஒரு சிறு இடைவெளியும் தேவை. அந்த நிசப்த பொழுதுகள் வாசகன் மனதில் செய்யும் மாயாஜாலங்கள் அலாதியானது.

வாசிப்பே அப்படியென்றால் மொழிபெயர்ப்புக்குச் சொல்லவும் வேண்டுமா..? ஜி.குப்புசாமி தீவிர வாசகனாய் இருந்து மொழிபெயர்ப்பவர்.

தாக் ஸீல்ஸ்தாத் (1941) நார்வே நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர். வசீகரமான மொழி நடையில் நாவல்கள் , நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள் என முப்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளில் பால் ஆரம்பத்திலிருந்த மனச்சாய்வைக் காலப்போக்கில் மெதுவாக மாற்றிக் கொண்டுள்ளார். காலந்தோறும் மாறும் அரசியல் கொள்கைகளைக் கொண்டதாக அவர் எழுத்துலகம் பரிணமிக்கிறது.

இவரது  நாவலின் உச்சமாகக் கருதப்படுவது உடைந்த குடை (Shyness and Dignity ) உயர்வான விருதான Nordic councils Literature Prize ஐ மூன்று முறை பெற்ற ஒரே எழுத்தாளரான ஸுல்ஸ்தாத் என் மனம் கவர்ந்த உலக எழுத்தாளர்களில் ஒருவரான ஹாருகி முரகாமியின் பரிந்துரை.

“இவர் எழுதுவது தான் தீவிரம் இலக்கியம் “ எனக் கொண்டாடும் முரகாமி  இவரது நாவல்களை ஜப்பான் மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார்.

இந்த உடைந்த குடையைத் தமிழ் வாசக உலகிற்கு அளித்த மொழிபெயர்ப்பாளர்  ஜி. குப்புசாமி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

ஒருவரைப் பேச்சு வழி  காதினூடே உள் வாங்கப் பொறுமை வேண்டும். மன பிம்பத்தை உருவாக்கும் சர்ரியலிச எழுத்தை  தரிசிக்க  மகாபொறுமை திறன் கொண்ட வாசகனாகவிருந்தால் பேருவுவகை சாத்தியம்.

“சராசரி மனிதன் ஒருவனிடமிருந்து போலி பிரமைகளை நீங்கள் பிடுங்கி விடும் போது அவனது மகிழ்ச்சியும் கூடவே பிடுங்கி எடுத்து விடுகிறீர்கள்.” .தாக் ஸீல்ஸ்தாத்
  • மஞ்சுநாத்
நூல் தகவல்:
நூல் :

உடைந்த குடை

பிரிவு : நாவல் | மொழிபெயர்ப்பு
ஆசிரியர்: தாக் ஸூல்ஸ்தாத்
ஆங்கிலத்தில்:

Sverre Lyngstad

தமிழில் ஜி.குப்புசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2018
பக்கங்கள் : 125
விலை : 140
 Buy on Amazon
English Version 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *