ரலாறு என்பது மறுக்க முடியாததும், மறுக்க கூடியதும் இரண்டற கலந்தது தான்.தேவதாசி முறை ஒழிப்புக்காக பாடுபட்டவர்கள் என்று வரலாற்றுப் பாடத்தில் நமக்கு பயிற்றுவிக்கப்பட்டது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை பற்றி மட்டுமே.

ஆனால் தேவதாசி குலத்தில் பிறந்து, காலவசத்தால் அந்த குலத்தொழிலில் ஈடுபடாமல் தன்னை தற்காத்துக் கொண்டு, தேவதாசி முறை ஒழிப்பை சட்டமாக்க வீதிவீதியாக நாடகங்கள், மேடைப்பேச்சுக்கள், போராட்டங்கள் என தான் முதலில் களத்தில் இறங்கி,அந்த சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற போராடியவர் ராமாமிர்தம் அம்மையார்.

திருமண உதவித்தொகை இவரின் பெயரால் வழங்கப்படுகிறது என்பது மட்டும் தான் நாம் இவரை பற்றி அறிந்திருக்கும் ஒரு விஷயம். இதே தகவல் தான் நூல் ஆசிரியருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் ஆசிரியர் ஜீவசுந்தரியின் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டிற்கு முன், ஒரு கூட்டத்தில் பேசும்போது , “தேவதாசி முறை ஒழிப்பிற்காய் போராடிய அம்மையாரின் வீட்டின் முன் நிற்கிறேன்” என்று குறிப்பிட்ட பின்பு தான் அவரை தேடி பயணம் செய்து தொகுத்திருக்கிறார்.

போர்களினால் உருவான பரத்தையர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால் சங்ககாலத்தில் ‘வரை அரை மகளிர் என்று திருக்குறளிலும், மருதத்திணை மகளிர், உருத்திர கணிகையர், கணிகையர், காமக்கிழத்தி, வரைவின் மகளிர், காதல் பரத்தை, இல் பரத்தை, சேரிபரத்தையர்,தேவரடியார், பொது மகளிர் என்று அகத்திணைகளிலும் புறத்திணைகளிலும் குறிப்பிடப்பட்டு, இன்று ஆதி தொழில் செய்பவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள்.

நிலப்பிரபுத்துவம், ஆண் வழி சமூகம், ஆணாதிக்கம் என்ற பெயர்கள் இந்த பெண்ணடிமைத்தனத்திற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், இந்த குலத்தின் வழி வந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே வழிவழியாக ‘பொட்டுக்கட்டுதல்’ என்ற முறையில் ஆண்டவன் அடிமையாக பொதுப்பெயரிட்டு, கடைசியில் ஆண் அடிமையாக வஞ்சிக்கப்பட்டவர்கள் இக்குலத்தினர்.

அந்த குலத்தில் பிறந்த பெண்களுக்கு மட்டும் இந்த இழிப்பிறப்பு அமையவில்லை, அந்த குடும்பத்தில் வந்த ஆண்களுக்கு எந்த உரிமையும் மறுக்கப்பட்டு, இசையை படித்தவர்கள் மட்டுமே தேவதாசிகள் ஆடும் நடனத்தில் பாடவோ, இசைக்கருவிகளை மீட்டி சம்பாதிக்கவோ வழிவகை உண்டு, அப்படி திறமையில்லாதவர்கள் தன் குடும்ப பெண்களின் தயவில் மட்டுமே காலத்தை செலுத்த வேண்டும். என்ன ஒன்று, அவர்களின் வாரிசுகள் இந்த பொட்டுக்கட்டுதலுக்கு உரிமைப்பட்டவர்கள் இல்லை.

அதனால் அவர்கள் வழிவந்த பெண்களும், தாசி குலத்து பெண்களிடம் மட்டுமே வேலை செய்ய முடியும். அப்படி ஒதுக்கப்பட்டவர் தான் இராமாமிர்தம் அம்மையாரின் தந்தை. தன் சகோதரிகளிடம் தன் மகளை தத்து கொடுத்து, அந்த குலத்தொழிலில் தள்ள விருப்பப்படாமல்,தன் குடும்பத்தை பாதியிலேயே விட்டு விட்டு சென்னை சென்று தன் அடையாளத்தை மறைத்து, வேறு வேலை தேடுகிறார்.

பின் இவரின் தாயும், ஒரு தாசியிடம் இராமாமிர்தம் அம்மையாரை பத்து ரூபாய்க்கு விற்று விட்டு தன் கணவரை தேடி சென்று விடுகிறார். அதன்பின் கணிகையாக உருவெடுக்க தயார்ப்படுத்த, இசை, இயல் தமிழை பழக்கப்படுத்தியிருக்கின்றார் வளர்த்தவர்.

ஆனால் இந்த குல ஆணின் வாரிசு இவர் என்பதால், தேவதாசியாக பொட்டுக்கட்ட மறுக்கப்பட்டிருக்கிறார். அதன்பின் தன் இசை ஆசிரியரை மணந்து, தன் குலத்திலிருந்து பெண்கள் பாதுகாப்பாக வெளியேறி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போராடியிருக்கிறார். அதற்கு முதல் எதிர்ப்பு தன் இனத்தவரிடமிருந்து தான் வந்திருக்கிறது. அதன்பின் செல்வம் மிகுந்த ஆண்கள், இவருக்கு பல இன்னல்களை தந்திருக்கின்றனர். இவரின் தலைமுடியை அறுத்தெரிந்து, விஷம் வைத்து கொல்ல கூட துணிந்திருக்கின்றனர்.

இன்று கூட அரசியலில் பெண்களின் பங்கு என்பது சொற்பத்திலும் சொற்பம் தான். ஆனால் தாசிகுலம் என்று கேவலமாக ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து, தனித்த தைரியத்துடன் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு விதேசி பொருட்களை ஒழிக்க, கதராடையை அனைத்து மக்களும் பயன்படுத்த வேண்டும் என, கதராடைகளை தலையில் சுமந்து ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கியவர்.இவரைப் பார்த்து அரசியலில் பெண்கள் பலர் தங்களை இணைத்து கொண்டனர்.

இன்றும் ஒரு ஆண் நண்பனை பெண்கள் தம் வீட்டில் சந்தித்து பேச தயக்கங்கள், தடைகள் இருக்க அன்றே தன் அரசியல் குரு, அரசியல் நண்பர்களாக உள்ளவர்களை தம் தோழர்களாக வீட்டில் சந்தித்து போராட்ட வ்யூகங்களை, வழிமுறைகளை வகுத்திருக்கின்றார்.அதில் ஒருவர் தந்தை பெரியார்.

சுயமரியாதை திருமணத்தை பெரியார் நடைமுறைப்படுத்தும் முன்,முதல் சுயமரியாதை திருமணமாக தன் திருமணத்தை நடத்தியவர்.

பல ஆணாதிக்க மூட நம்பிக்கைகளை தன் குலப்பெண்களுக்கு மட்டுமில்லாது,மற்ற பெண்களுக்கு புரிய வைத்தவர்.

சுதந்திரம் என்பது சுயமரியாதை சம்பந்தப்பட்டது. அது பெண்களுக்கு மறுக்கப்படும் போது எங்கோ ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அந்த ஒளியாக இராமாமிர்தம் அம்மையார் இருந்திருக்கிறார்.

இன்று அரசு நடைமுறைப்படுத்திய தாயார் பெயரை முன்னெழுத்தாக(இனிஷியல்) போடலாம் என்பதை, அன்றே தன் வளர்ப்புத் தாயாரான ஆச்சிக்கணுவின் பெயரை தன் முன்னெழுத்தாக சேர்த்தவர்.

இவரின் போராட்டம் பற்றி கேள்விப்பட்டு காந்திஜி,இவருக்கு கடிதம் எழுதி, வடநாட்டிலும் இந்த தேவதாசி ஒழிப்பு முறையை பற்றி பேசியிருக்கிறார்.

தன் குலத்தினருக்கு ‘இசை வேளாளர்’ என்ற மதிப்பினை பெற்று தந்தவர்.

பதியிலார் என்று ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த தாசிகளை அழைத்தவர்களுக்கு, ஆணின் துணையில்லாமல் தற்சார்புடைய பெண்கள் அவர்கள் என்ற மதிப்பை உருவாக்கியவர்.

தேசவிடுதலையை காட்டிலும் பெண் விடுதலை முக்கியமானது என்ற தன் குருவின் (சுயம்பு பிள்ளை) எண்ணத்தை செயல்படுத்தியவர்.

திராவிட இயக்கத்தில் பெரியாருக்காக தன்னை இணைத்துக் கொண்டு பல சமூக அடிமைத்தனங்களுக்கு எதிராக போராடியவர்.

1929 முதல் போராட ஆரம்பித்து 1947 ல் இந்த தேவதாசிகள் ஒழிப்பு சட்டத்தை முழுமையாக நிறைவேறும் வரை போராடியவர்.

பி.கு. இன்று பரவலாக சலங்கை பூஜை என்று நடத்தப்படும் சடங்கின் பின்னணியை பற்றி இதில் படித்து தெரிந்து, அதிர்ச்சியும் கொள்ளலாம்.

சுயச்சார்பில் நிற்கும் எத்தனையோ பெண்களின் முன்னுதாரணமாக, களப்போராளியாக தன் உரிமையை மீட்க போராடியவராக, சுதந்திரத்தை அனுபவிக்கும் இன்றைய இளம்பெண்ணிற்கு வழிகாட்டியவராக இருந்த மூவலூர் அம்மையாரின் வாழ்வியல் வரலாற்றை நிச்சயம் பெண்கள் படிக்க வேண்டும்.

இந்த நூலை படிக்க வேண்டும் என்பதற்கு மற்றுமொரு காரணம் எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி அவர்கள். தன்னால் முடிந்த அளவு வரலாற்றை பிழைத்திருத்த எந்த பின்புலமும் இல்லாமல், தேடி அலைந்து அம்மையாரின் வாழ்வியல் சரிதையை தொகுத்திருக்கிறார். புத்தகம் வெளிவந்ததும், இவரையும் மறைமுகமாக இசை வேளாளர் மரபினரா, அதனால் இதை தொகுத்திருக்கிறீர்களா என் கேட்டிருக்கிறது இந்த சமூகம். ஆனால் அதையெல்லாம் தாண்டி தானும் ஒரு பெண், தான் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க முன்னோடியாக இருந்தவரை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று உறுதியை நிறைவேற்றியவர் என்பதால் இவருக்காகவும் இந்த புத்தகத்தை படிக்க பரிந்துரைக்கிறேன்‌.


கவி.M

 

நூல் தகவல்:
நூல் : மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும்
வகை : கட்டுரைகள் | வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்: பா.ஜீவசுந்தரி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
வெளியான ஆண்டு : முதல் பதிப்பு : 2007  (மாற்று வெளியீடு)

மறு பிரசுரம் : 2016

பக்கங்கள் :  –
விலை : 150

நூலிலிருந்து :

அம்மையார் குழந்தையாக இருந்தபோது தாசியிடம் விற்கப்பட்டது, வறுமையினால் பெற்றோர் இவரைக் கைவிட்டது, இதனால் இவர் சந்தித்த வறுமை, வன்முறை, அம்மையாரின் அபரிமிதமான சங்கீத மற்றும் சமஸ்கிருதப் புலமை, புராணங்கள், இந்து மதம் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவு. பிற்காலத்தில் இவை அனைத்தும் அவர் இந்து மதத்தை எதிர்க்க உதவியமை, அம்மையாரின் கணவர் சுயம்புப்பிள்ளை குறித்த சில வரலாற்றுத் தகவல்கள் என இந்நூலின் மூலம் நமக்களிக்கப்பட்டுள்ள விவரங்கள் இதுவரை எங்குமே கிடைக்கப் பெறாதவை. அதே போன்று, இராமாமிர்தம் அம்மையார் எப்பொழுது, எதற்காக காங்கிரஸில் சேர்ந்தார்? பின்னர் எதனால் காங்கிரஸை விட்டு விலகினார் என்ற விவரங்கள் இதுவரை நாம் அறியாதவை. அவற்றை அம்மையாரின் கையெழுத்துப் பிரதியான எனது வாழ்க்கைச் சரித்திரத்திலிருந்து பெறப்பட்டு ஒரு வரலாற்று விமர்சன நோக்கில் ஜீவசுந்தரி நமக்களித்துள்ளார். அம்மையார் மூவலூரில் கூட்டிய முதல் இசை வேளாளர் மாநாடு பற்றியும், அம்மையாரின் காங்கிரஸ் இயக்கச் செயல்பாடு குறித்தும் சுவையான தகவல்கள் இந்நூலில் விரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

– முனைவர் ச.ஆனந்தி