பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *