‘யோக்கியர்கள் கவனத்திற்கு’ என்ற தலைப்பை ஒருவர் தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் துணிச்சல் தேவைப்படும். தன் கருத்துகளை அவர் இந்த ‘யோக்கியம்’ என்ற உணர்நிலையின் கீழேதான் பேச முடியும். அதைவிட்டுவிட்டு அங்குமிங்கும் நகர முடியாது. இது நண்பர் டைட்டஸ் மோகன் தனக்குத்தானே விதித்துக்கொண்ட நிபந்தனையாக இருக்கிறது. ஒரு சாட்சி நீதிமன்றத்தில் ‘தான் சொல்வதெல்லாம் உண்மை’ என்று பிரம்மாணம் எடுத்துக்கொள்வதற்கும் இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கும் வேறுபாடு கிடையாது. ஆகவே மோகன் என்னதான் பேசுகிறாரென்று நானும் ஆவலாக எதிர்பார்த்தேன். அவ்வாறு எதிர்பார்த்த வகையில் அவர் சரியாகச் செயல்பட்டுள்ளார். எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கூடிய மேகம் மழை பொழிந்தால்தானே நாம் மகிச்சியடைவோம்; அத்தகைய உணர்வு.
ஒருவர் எப்போது எழுதத் தொடங்குகிறார்?
– சமூக உணர்வுகள் மேலிடும்போது!
சமூக உணர்வுகள் எப்போது மேலிடும்?
– சமூகம் எப்போது சரியில்லையென்று தோன்றுகிறதோ அப்போது!
சமூக உணர்வு மேலிட வேண்டிய அவசியம் என்ன?
– தன் நாடும் தன் சகோதர சகோதரிகளும் சிறந்த வாழ்க்கையை அல்லாடாமல் பெற்றிட வேண்டும் என்கிற ஆசையை நiடமுறையில் காண விரும்பும்போது!
மேலே கூறப்பட்ட கேள்விகளையும் பதில்களையும் நான் நண்பர் டைட்டஸ் மோகனுக்காக உருவாக்கிக்கொண்டு அவருடைய பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
தான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளுக்கும் சரியான ஆதாரங்களை வைத்துக்கொண்டு பேசுகிறார். இது முதல் கூடுதலான அம்சம் எதுவும் தனிமனிதப் புலம்பலாக இல்லை. இருப்பதைப் பார்த்து மனம் சோர்வடையவுமில்லை. மற்றொன்று இவற்றைப் பேசுவதற்கான அறவுணர்வு. எல்லாமே மக்களையும் நாட்டு மக்களையும் பலவீனப்படுத்துகிற அரசியல் விளையாட்டுகள் என்று கண்டுணர்ந்தபின் பேச என்ன தயக்கம்? அந்த அறவுணர்வு அவரை வழிநடத்துகிறது. நம்முடைய உணர்வுகளைஇ நம்பிக்கைகளைப் பயன்படுத்தியவர்களாகச் சிலர் ஆன்மிக விளையாட்டுகளை ஆடுகிறார்கள். அவற்றையும் அவர் பேசாமலில்லை.
ஜக்கி வாசுதேவனின் ஆன்மிகம் அதன் உச்சத்தைத் தொடுவதற்குப் பல நூறுநூறு ஏக்கர் விளைநிலங்கள் பாழ்பட வேண்டியதாச்சு. பலப்பல விவசாயிகள் தம் நிலங்களைப் பறிகொடுத்துக் கதியற்றவர்களாகத் திணறுகிறார்கள். தனிமனிதன் ஒருவனின் ஆன்மிகச் செழுமைக்காகப் பல்லோரின் வாழ்வு பாலையாகிவிட்டது. நாடும் நாமும் இத்தகையோரின் ஆன்மிகத்திற்காகக் கொடுக்கும் விலை குரூரமானது. இந்த ஆன்மிகம் யாருக்குத் தேவைப்படுகிறது? வாழ்வில் நைந்து உழன்றுபோனவர்களுக்காகவா? அப்படியும் இல்லை. பிறரின் உழைப்பைச் சுரண்டிவாழும் சமூகப் புல்லுருவிகளுக்கானது ஜக்கி வாசுதேவனின் ஆன்மிகம். நண்பர் மோகனும் ஓர் ஆன்மிகவாதிதான். ஆனாலும் ஆன்மிகமானது சுரண்டல் கருவியாகையில் அவரால் உடன் இசைந்து செல்ல முடியவில்லை. இந்த மனச்சாட்சிதான் சமூக மேம்பாட்டுக்கான குரல். இத்தகையக் குரல்கள் எழாவிட்டால் நாடு மென்மேலும் நசிந்துபோவதைத் தடுக்க முடியாது.
மூன்றாவது உலகப் போர் வருவதாயிருந்தால் அது தண்ணீர்ப் பற்றாக்குறையினால்தான் உருவாகுமென்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மழை பொய்த்து நதிகள் வறண்டு நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாறிவிட்டதில் நம்நாடும் தண்ணீருக்காக அல்லாடுகிறது. அரசும் சொல்கிறது ‘தண்ணீரை வீணாக்குவதும் மாசுபடுத்துவதும் அபராதத்திற்குரிய குற்ற’மென்று! நம் அரசின் ‘தண்ணீர்க் கொள்கை’ மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மக்களின் இன்னல்கள் கண்டே அரசு இப்படியான சட்டத்தை இயற்றியிருப்பதால் நாம் மகிழ்ச்சியடையத்தானே வேண்டும்? ஆனால் அரசின் அக்கறையும் சட்டமும் பொல்லாங்குத் தன்மையனவாக இருக்கின்றன. தண்ணீரை வீணாக்குவதும் மாசுபடுத்துவதும் ஏன் குற்றமாகிறது? அதனை விற்கும் நிறுவனங்கள் வாழ வழியில்லாமல் போய்விடுமே என்ற அச்சம்தான் காரணம். அதாவது தண்ணீர் நம் உரிமையன்று; அது முதலாளிகளின் சொத்து. ஆனால் தண்ணீரை எந்தவொரு நிறுவனமும் உருவாக்க முடியாது. இயற்கையில் அதுவாகக் கிடைத்தால்தான் உண்டு. அப்படியானால் பொதுவில் இயற்கை நமக்குத் தந்த அருளை எப்படி தனிநபர்கள் தம் இலாபத்திற்காகக் கைப்பற்ற முடியும்? இந்த நிலையைக் கண்டு ‘துயரங்களை மட்டும் உணவாக உட்கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு நம் தமிழ்நாடு என்று சொல்லத் தோன்றுகிறது’ என எழுதுகிறார். இதைத்தான் நாம் சமூக ஆவேசம் என்கிறோம்.
சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாடுகளில் கூடக் காண முடியாத அளவில் இந்தியாவில் குரூரமான படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இவை கும்பல் படுகொலைகள் ஆகும். இவற்றில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள் தலித்துகள் உள்ளிட்ட ஏழையெளியவர்கள். இதனை உலகம் கண்டு அதிர்ந்தது. ஏன் இந்தக் கொலைகள்? இதனைப் பொதுச் சமூகமா செய்தது? ஃபாஸிஸ்டுகள் ஆட்சியிலிருப்பதால் ஃபாஸிஸக் குண்டர்கள் இத்தகைய படுகொலைகளைச் செய்தார்கள். அவ்வாறு பிறரைக் கொல்வதற்கு சர்வ அதிகாரங்களையும் பெற்றவர்கள்போல அவர்கள் நடந்துகொண்டார்கள். தனித்தோ ஓரிருவராகவோ செல்லும் முஸ்லிம்கள் மாட்டிறைச்சியைக் கொண்டு செல்கிறார்கள் என்று அபாண்டமாகப் பழிசுமத்தி இருபது முப்பதுபேர் கொண்ட குண்டர்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றார்கள்; அல்லது மாடுகளைக் கொன்று தோலுரித்தார்கள் என்ற அபாண்டம் விழுந்தது. அதன் விளைவாகவும் தோலுரித்து தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது அந்தக் கொலையாளிகள் கைதுசெய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. நாட்டின் பிரதமர் இத்தகுக் கொலைகளைக் கண்டிக்கத் துப்பில்லாமல் உலக நியாயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்.
இப்படியாக நாடுமுழுவதுமே ஒருவகைப் பீதியில் விழுந்துவிட்டது. யாருக்கு எங்கே என்ன நேருமென்று எவராலும் அறுதியிட முடியவில்லை. மக்களின் நலன் பேசப்பட்டதைவிடவும் மதங்களின் நலனே பேசப்பட்டது. மதங்களின் நலன் பேசப்பட்டாலும் அந்த மதங்களைச் சார்ந்தோரின் வாழ்க்கை நலன்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டன. ஆகவே சமூகம் குறித்த சிந்தனையில்லாதோர் எதைப் பேசினாலும் நாடோ மக்களோ வாழப்போவதில்லை. இதனால்தான் மோகன் ‘கோமகனே விழித்தெழு…விரட்டியடி’ என்று அறைகூவல் விடுக்கிறார்.
இப்படியாக அவர் ஏதோ எழுதித் தீர்க்க வேண்டுமென்று ஒரு வார்த்தையைக் கூட எழுதவில்லை. சமூக முன்னேற்றம்! அமைதி வளர்ச்சி போன்ற மக்களின் தேவை குறித்தே பேசுகிறார். அதைச் சொல்வதற்கான துணிவை முன்வைக்கிறார். நம் கண்களிலும் கருத்திலும் படாத பல செய்திகளை அக்கறையோடு தொகுத்திருக்கிறார். எந்த ஒரு கட்டுரையும் சல்லிசான உரையாடலை முன்னெடுக்கவில்லை; மலின உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கவில்லை. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சமூகத்திடம் மட்டுமே பேசவேண்டுமென்று எண்ணுகிற ஒவ்வொருவருக்கும் இந்த மேன்மை வாய்க்கும்.
இங்கே மூன்றுவிதமான கட்டுரைகளை முன்வைத்து மட்டுமே எழுதுகிறேன். இந்த மூன்றும் வெவ்வேறு பொருள் சார்ந்தவை. இவற்றை அவர் அணுகும் விதத்தில் தராசின் முள் நேராக நிற்கிறது. அதாவது எந்தப் பக்கம் நியாயம் இருக்க வேண்டுமோ அந்தப் பக்கத்திற்கான நியாயத்தைப் பேசுகிறது; அல்லது எந்தப் பக்கம் நியாயம் இருந்தாக வேண்டுமோ அதற்கான முன்னெடுப்புகளைக் கட்டுரை பேசுகிறது. இதுவே நமக்கு இன்று தேவைப்படும் அரசியல் சமூகப் பார்வை.
டைட்டஸ் மோகன் சரியாக இருக்கிறார். மேலும் பல கட்டுரைகளை வாசித்தும் நான் என் கருத்தை உறுதிபடுத்தியிருக்கிறேன். நண்பர் இன்னமுள்ள வருங்காலத்தில் இன்னும் சிறப்பான அரசியல் வழிகாட்டியாக ஆவார் என்கிற நம்பிக்கையை இத் தொகுப்பு என்னுள் விதைத்திருப்பதால் நான் அவரை மனதாரப் பாராட்டுகிறேன். என் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகள் மோகன்!
– களந்தை பீர்முகமது
காலச்சுவடு இணை ஆசிரியர்.
நூல் : யோக்கியர்கள் கவனத்திற்கு
பிரிவு: சமூக - அரசியல் - விழிப்புணர்வுசார் கட்டுரைகள்
ஆசிரியர் :ம.டைட்டஸ் மோகன்
வெளியீடு : நம்வாழ்வு, சென்னை
வெளியான ஆண்டு : ஜனவரி 2020 .
விலை: ₹ 150