நூல் விமர்சனம்புனைவு

பிழை திருத்திக் கொள்ளும் சரித்திரங்கள்


தேவிபாரதியின் எல்லா கதைகளிலும் பாரமாக அழுத்திக் கொண்டிருக்கும் அம்சம் சரித்திரம். கழிந்த காலங்களின் கசப்பாக கணக்கைத் தீர்த்துக் கொள்ள எதிர்பார்த்திருக்கும் ஞாபகங்களாக, சரித்திரத்தை சரி செய்வதற்காக காத்திருக்கும் கதைகளே திரும்பத் திரும்ப அவரிடமிருந்து வருகின்றன.

தேவிபாரதி வழக்கமாக நெடுங்கதைகள் எழுதுபவர். அவரது சிறுகதைகள் குறுநாவலின் அளவுக்குச் சற்றே குறைந்திருப்பவை. முதல் நாவலான ‘ பிறகொரு இரவு ‘ சற்று அளவில் குறைந்திருந்தது. ‘ நட்ராஜ் மகராஜ் ‘ இல் அவரது வடிவ செய்நேர்த்தி முழுமையை அடைந்திருக்கிறது.

நாவல் நிதானமாக தன்னை அவிழ்த்துக் கொள்கிறது. அடையாளச் சிக்கல்களை உட்கொண்டிருக்கும் நாவல் என்பதால் பாத்திரங்கள், இடங்களின் பெயர்கள் அவற்றின் முதல் எழுத்துக்களால் மட்டுமே சுட்டப்படுகின்றன. இந்த உத்தி கதைசொல்விக்கு அளிக்கும் சுதந்திரம் கட்டற்றது. ‘ ந என்பவன் வெறும் நவோ, ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரோ அல்ல; மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடியான ஒரே வாரிசு ‘ என்ற வாக்கியமும், அவனும் அவன் குடும்பமும் ஒண்டியிருக்கும் அந்த சிதிலமான, இற்று வீழ்ந்து கொண்டிருக்கும் அரண்மனையின் காவல் கூண்டுகளுக்குள் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருக்கும் நாகப்பாம்புகளும் திரும்பத்திரும்ப சொல்லப்படுவதும் மற்றொரு தேர்ந்த உத்தி. நாவலுக்குத் தேவைப்படுகின்ற கசப்பையும் மயக்கத்தையும் உள்ளடக்கிய தொனியை இந்த உத்திகள் எளிதாக ஏற்படுத்தி விடுகின்றன.

தனக்கென்று தனித்துவமான அடையாளம் எதுவுமின்றி ஒரு சாதரணனாக, தனது சிறிய குடும்பத்துடன் எளிய கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் மீது சரித்திரம் ஒரு பிரமாண்டமான சுமையாக கவிகிறது. அவன் இந்த உலகத்தின் முகமற்ற கோடானுகோடி மக்களில் ஒருவனல்ல என்று நம்பவைக்கிறது. அடையாளமற்று வாழ்ந்து வருதலின் சுகம் ஒரே கணத்தில் குலைக்கப்பட்டு சுயம் குறித்தான பிரமைகள் அவன் தலைக்குள் வளரத் தொடங்குகின்றன. அந்நியமாதலின் துயரம் இதுதான். அவன் சுமப்பதற்கு சற்றும் விரும்பியிருக்காத கிரீடம் அது.

ந என்பவன் நாவலின் தொடக்கத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். கடன் வசூல் செய்யபபோகும்போது தன் எளிய இயல்பை மீறி கடினமான வசைகளை உதிர்க்க வேண்டியிருக்கிறது. முதலாளியிடம் அந்த வார்த்தைகளை மீண்டும ஒப்பித்து , தனது வசூல் உத்திகளை நிரூபிக்கவேண்டியிருக்கிறது. இதில் அவன் உணரும் சங்கடங்களிலேயே அப்பாத்திரத்தைப் பற்றிய முழுசித்திரத்தையும் தேவிபாரதி கொண்டு வந்து விடுகிறார். மிக விரைவாகக் கடந்து போய்விடுகிற இந்த ஆரம்பப்பகுதி நாவலின் வலுவான ஆதாரமாக ஊன்றியிருக்கிறது. ந என்ற அந்த எளிய மனிதனை நம்மோடு உடனே அடையாளப்படுத்திக் கொண்டுவிடுகிறோம். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பதிவறை எழுத்தர் ஒருவர் அவனுக்கு அரசுவேலை வாங்கித்தருவதாக உத்திரவாதமளிக்கும் போது அவனோடு சேர்ந்து நாமும் அதை நம்புகிறோம். அவனுடன் சேர்ந்து நாமும் அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளையும், கிராமநிர்வாக அலுவலர்களுககான தேர்வையும் எழுதுகிறோம். அவனுக்கு மிகச்சாதாரணமான சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைத்ததும் ஆசுவாசமடைகிறோம்.

சத்துணவு வழங்குவதில் அவனுக்கு நேர்கின்ற அறம் சார்ந்த சிக்கல்கள் அவனைக் கொஞ்சக்கொஞ்சமாக மாற்றும்போது அவனை நம்மோடு இன்னும் அதிகமாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம். ஒரு வெற்றிகரமான சத்துணவு அமைப்பாளராக இருப்பதன் சூட்சுமத்தை அவன் அறிந்துகொள்ளும் போது நாவல் அதன் அடுத்த கட்டத்துக்கு மேலேறுகிறது, ஒரு சாதாரணனின் எளிய குறிக்கோள்கள் கைக்கெட்டும் தூரத்தில் நின்று அவனை ஈர்க்கின்றன. அரும்பாடுபட்டு தொகுப்பு வீடு ஒன்றைக் கட்டிக்கொள்வதற்கான விண்ணப்பத்தைப் பெறுகிறான். தொகுப்பு வீட்டுக்காக விண்ணப்பம் எழுத உதவுபவர்களிடமிருந்து, விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் வரை எல்லோரிடமும் அவன் குடும்பம் ஒண்டியிருக்கும் பாழடைந்த அரண்மனையின் காவல்கூண்டில் பாம்புகள் சர்வசாதாரணமாக உலவிக்கொண்டிருப்பதை அவன் ஒப்பிக்க வேண்டியிருக்கிறது. திரும்பத்திரும்ப வரும் இவ்விவரிப்புகளும், ந என்பவன் வெறும் நவோ , ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரோ அல்ல என்ற வாக்கியங்களும் ஒரு விஸ்தாரமான கச்சேரியின் நிரவல்களாகவே சுழன்று சுழன்று வந்து கொண்டிருக்கின்றன. இது ஒருவகையில் வாசகனை நாவலின் அடுத்தகட்டத்துக்கு தயார்படுத்தும் உத்தி.

அவன் ஒரு மாபெரும் சரித்திர வீரனின் உயிருள்ள ஒரே வாரிசு என்பதைத் சொல்லும் பரம்பரை வரைபடம் அவனிடம் ஒப்படைக்கப்படுகிற போது அவனது வீழ்ச்சி ஆரம்பமாகிறது. மரபுப்பெருமை உள்ளே இறங்கத்தொடங்கியதும் சுயம் கனமேறிவிடுகிறது. அந்தப் பாரம் உங்களை சாதாரணமாக இருக்க விடுவதில்லை. ஒரு நீண்ட சரித்திரப் பாரம்பரியம் நிழலாக வளர்ந்து உங்கள் பாதங்களைக் கவ்விப்பிடித்துக் கொள்கின்றன. மானசீக கிரீடங்கள் முளைத்தபிறகு உங்கள் விழிகளிலிருந்து ராஜபார்வை மட்டுமே வரத்தொடங்கி விடுகிறது.

தனிநபர் ஒருவன் மீது சுமத்தப்பட்ட இப்பாரம்பரியச் சுமையை அங்கீகரித்தாகவேண்டிய கட்டாயம் மக்களின் அரசுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அரசாங்கம் வரலாற்றைச் சரிசெய்தாக வேண்டும். புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுப் பெருமைகளுக்கு அரசாங்கம் கௌரவம் அளிக்கத் தவறிவிட்டால் அது மற்றொரு நிகழ்காலப் பிழையாகிவிடும். இந்தப்பிழையை உங்களை வைத்தேதான் அரசாங்கம் சரிசெய்ய முடியும்.

வரலாற்று நாயகனின் வாரிசான ந வின் மேல் கூசவைக்கும் பேரொளி கவியத் தொடங்கியதும் உலகின் கவனம் முழுக்க அவன் மேல் குவிகிறது. அவன் தன்மேல் உடுத்தப்பட்ட கனத்த மரபுப்பெருமை வஸ்திரங்களோடு வானோக்கி உயர்த்தப்படும்போது, அவனது எளிய வாழ்க்கையையும், தொகுப்பு வீட்டிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகளும், ஆதாரமான வேலையும் சிதைந்து வீழ்கின்றன.

அரசாங்கம் என்ற நிறுவனத்திற்கு தனிநபரின் அழிவுகள் பொருட்டல்ல. வரலாற்றுப் ‘பெருமையை மீட்டெடுப்பது அரசாங்கத்தின் பெருமையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காகத்தான். அரசாங்கத்துக்காக, பாரம்பரியப் பெருமைக்காக ந வைப் போன்ற சாதாரணன் பலியிடப்படலாம். அவனைவிட அவனது பிம்பமே பிற்கால சரித்திரத்துக்கு முக்கியமானது.

தேவிபாரதியின் இம்மகத்தான நாவல் ந என்ற சாதாரணனின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் மட்டுமே சொல்லி அதன் வீச்சைக் குறுக்கிக்கொள்ளவில்லை. சரித்திரம், அரசு, சமூகம், தனிமனிதனின் சுயபிரமிப்புகள் என அனைத்தையுமே இது எள்ளி நகையாடுகிறது. நடந்தவையனைத்தும் உண்மையிலேயே நடந்தவைதானா அல்லது நாவல் நம்முள்ளே தோற்றுவித்த மாயச்சித்திரமா என்று குழம்ப வைக்கிறது. ந என்பவன் உண்மையில் யார் ? அவனுக்கான இடம் எது ? அல்லது அவன் உண்மையிலேயே வாழ்ந்து முடிந்தவனா அல்லது அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மின்விசிறியின் சுழற்சியில் பறந்துபோன காகிதக்கற்றை போல சிதறிய வாழ்க்கையை வாழ்ந்தவனா ? அல்லது புத்தகங்களுக்கிடையேயிருந்து வந்த சுண்டெலிகள் அணிவகுத்து நின்று அவனைத் தாக்க முற்பட்டதைப்போலவும் , காளிங்க நடராஜ் வேடமணிந்திருக்கையில் சுற்றிச்சூழ்ந்த கரப்பான் பூச்சிகளைப் போலவும் அவனும் ஓர் உருவெளித்தோற்றம்தானா?

தேவிபாரதி எண்ணற்ற கேள்‘விகளின் வழியே நமக்களித்திருப்பது ஓர் உன்னதமான படைப்பை. உலகின் எந்தமொழியிலும் மொழிபெயர்த்து இது எமது நாட்டின் நாவல் என பெருமையாகக் கூறிக்கொள்ள தமிழர்களுக்குக் கிட்டியிருக்கும் அற்புத வாய்ப்பு. ‘உலக நாவல்‘ என்று சொல்லிக் கொள்ளும்படி நம்மிடையே அதிகம் இல்லை. இந்நாவலை தைரியமாக முன்வைக்கலாம்.


நன்றி : 

–  ஜி.குப்புசாமி

எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர்

நூல் தகவல்:

நூல் : நட்ராஜ் மகராஜ்

பிரிவு: நாவல்

ஆசிரியர் :தேவிபாரதி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2016

விலை: ₹ 350

Amazon Kindle Edition : 


 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *