நவீன இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனை வாசித்தல் ஒரு பிரபஞ்ச அனுபவம். சற்றே மெனக்கெட்டு பொறுமையோடு அவர் வார்த்தைகளினூடே பயணித்தல் பெரும் சுகம்.
இந்தத் தொகுப்பு NCBH ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டிருக்கிறது. முதல் பதிப்பு 2017ல் வெளிவந்தது.

துன்பக் கேணி என்கிற சிறுகதையில் தொடங்கி பத்து சிறுகதைகள் அடங்கியது இந்தத் தொகுப்பு.

ஞானக்குகை

தலைமைக்கார தேவர் மகன் தன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்தும் கூட ஊமையாக,  வாயில் எச்சில் அருவி போல வழிந்த வண்ணமாக இருக்கிறது அவர் குழந்தை. அவன் பிறந்ததும் தாயார் இறந்து விடுகிறாள். பத்து வருஷங்களாக வெறும் அப்பா அம்மா என்று சொல்கிற குழந்தை மேல் தீராக் காதல் தேவருக்கு. பதினைந்து வயதில் அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார் தேவர். பெண் பெயர் கருப்பாயி. கருப்பாயியைக் கண்டவுடன் தனக்கும் அவளுக்கும் ஏதோ சம்பந்தமிருப்பதாக உணர்கிற அவனுக்கு இப்போது அப்பா அம்மாவுடன் கருப்பாயி என்கிற வார்த்தையும் வருகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் கதை. புதுமைப்பித்தனின் கதைப் போக்கு வாசிப்பவரை வசீகரித்து விடுகிறது.

சாப விமோசனம்.

(ராமாயணம் பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்த கதை பிடிபடாமல்- அல்லது பிடிக்காமல் இருக்கலாம்- அதை நான் பொருட்படுத்தவில்லை என்கிற ஒரு டிஸ்கியுடன் ஆரம்பிக்கிறது இக்கதை)

சாபம் நீங்கப்பெற்ற பின் அகலிகை இந்திரனிடம் ஏமாந்தது அவளை உறுத்துகிறது. சாபம் நீங்கப்பெற்றும் உலகம் அவளை அதே கோணத்தில் பார்ப்பதாகப் படுகிறது. கோதமனுக்கோ வேறு கவலை. நெஞ்சினால் தவறு செய்யாதவளை சபித்த தன் தவறை எண்ணி வருத்தப் படுகிறான்.

கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே அகலிகை கவலை. அகலிகைக்குத் தான் ஏற்றவனா என்பது கோதமன் கவலை.

இந்த இருவரின் மனசாட்சி உறுத்தல்களுக்கு வாசிக்கும் நம்மை அவர்களிடமே போய் ஆறுதல் சொல்ல வைக்கிற எழுத்து நடை. கதைப் போக்கின் நடுவிலே அவர்கள் மகன் சதானந்தன், கைகேயியுடனான சந்திப்பு வனவாசம் முடிந்து திரும்புகிற சீதையோடு அகலிகையின் விவாதம், அக்னிப் பிரவேசம் பற்றிய பேச்சு இதோடு தொடர்கிறது கதை.

அப்புறம் என்னவானார்கள் அகலிகையும் கோதமனும் என்கிற விஷயத்தை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

ஆற்றங்கரைப் பிள்ளையார்

கதை சம்பவிக்கும் காலம் ஊழிக் காலத்திற்கு முன். அல்லது கி.முவில் எப்போதோ. வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கும் கரையில் ஒரு பிள்ளையார். அவரை கற்பாறைகளும் மணற்குன்றுகளும் துன்பப்படுத்திக் கொண்டிருப்பதைக் காணச் சகியாத கிழவர் சமூகம் என்கிற மேடையைக் கட்டி, நிழலுக்காக சமய தர்மம் என்கிற அரச மரத்தையும் ராஜதர்மம் என்கிற வேப்ப மரத்தையும் நட்டு வைத்தார். காலப்போக்கில் இவைகள் இரண்டும் பிள்ளையாருக்கு என்னென்ன இம்சைகள் தந்தன என்பது தான் கதை. நடுநடுவே பிள்ளையாருக்கு உதவ இரு கிழவர்கள் வந்து போகிறார்கள் ஒரு கிழவன் பெயர் புத்தன், அடுத்த கிழவன் ஜீனன், அப்புறம் ஒவ்வொருவராய் சங்கரன் ராமானுஜன் மத்வன் என்று வருகிறார்கள். ஏன் பிள்ளையாருக்கு உதவ புத்தகமும் சிலுவையுமாய் நீண்ட தாடியோடும் ஒரு கதாபாத்திரம் வருகிறது.

பல விஷயங்கள் அரங்கேறுகிறது. இறுதியில் பிள்ளையார் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வியோடு முடிகிறது கதை. வித்தியாசமான  சிந்தனை. வித்தியாசமான கதைப் போக்கு.

வாடாமல்லிகை
இரு பக்கங்ளே வருகிறது இச்சிறு கதை. ஆனால் மனதை நீண்ட நேரம் பிசைந்து விடுகிறது.

ஸரஸு (இப்போதெல்லாம் நாம் சரசு என்கிறோம்) பதினேழு வயதிலேயே விதவையான பிராமணப் பெண். (எந்த அமைப்பிலும் விதிவிலக்குகளான சிறுபான்மையோர் கஷ்டப்படத்தான் வேண்டும் என்கிற இடத்தில் எதற்குச் சொல்கிறார் இதை என்கிற குழப்பம் வராமல் இருக்காது.) தன் தம்பி துரைசாமிக்குச் சாந்தி முகூர்த்தம் நடக்கிற அந்த இரவில் ஏற்படுகிறது மனப்போராட்டம் அவளுக்கு. அந்த இரவில் இயற்கையின் தேவையைத் தாங்க இயலாமல் அழுகிறாள். அதன் பின் நடக்கிற நிகழ்வுகளில் கதாசிரியருக்குச் சற்று தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டதோ என யோசிக்க வைக்கிற கதைப் போக்கு.

ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தை வேண்டுபவர்கள் முயற்சித்துப் பாருங்கள்.

 

நூல் தகவல்:

நூல் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்

பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு

தொகுப்பு : NCBH ஆசிரியர் குழு

வெளியீடு :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)

வெளியான ஆண்டு :  2017

விலை: ₹ 75

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *