ஹரிஷ் குணசேகரனின் “காக்டெயில் இரவு ” சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய முன்னுரை.


புதிதாகப் பிறக்கும் குழந்தை  முதலில் நீந்தி மெல்லத் தவழ்ந்து, தளர் நடைபோட்டு பின் தடுமாறி நடந்து அதன்பிறகு ஓடத் துவங்கும். ஆனால் ஹரிஷ் குணசேகரன் எடுத்த எடுப்பிலேயே பாய்ச்சலாக ஓடிவிட்டு இப்போது இங்கு சவகாசமாக நடை பழக வந்துள்ளார். தனது முதல் படைப்பாக ஏற்கனவே “நான் அவள் கேபுச்சினோ” என்கிற பெயரில் ஒரு நாவலை எழுதி பதிப்பித்து விட்டுத்தான் இப்போது சிறுகதை எழுத வந்துள்ளார் என்பதைத்தான் இங்குசொல்ல வந்தேன்.

இந்தத் தொகுப்பில் பதினான்கு கதைகள் உள்ளன. இங்கு ஹரிஷ் ஒரு கதை சொல்லியாக படர்க்கையில் பேசாமல் பெரும்பாலான கதைகளை, தன்னிலையில்  நின்று வாசகர்களோடு நேரடியாக உரையாடுவதாக எழுதியுள்ளது  வாசிப்பவருக்கு கதைகளோடு ஒரு நெருக்கத்தைத் தந்து விடுகிறது. இந்த புத்தகம் பல்வேறு தளங்களில் பயணம் செய்கிறது. காதல், காமம், விரகம் ,வேதனை, நடுத்தர வர்க்க மக்களின் ஆற்றாமை, பணியிடங்களில் ஏற்படும் கையறு நிலை, பெண்களின் மீதான சுரண்டல், சாதி வெறி, அரசியல் அக்கிரமங்களின் மீதான பகடி உறவுகளின் ஆழம், அதைத் தொட்டு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் என பொதுவான பல்வேறு தளங்களில் தான் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளையோ, செய்திகளையோதான் கதைகளாக வடித்திருக்கிறார் என்பது வாசித்து வரும்போது புலப்படுகிறது.

இத்தாலி நாட்டில் படித்து வருகின்ற ஒரு மாணவராக இருப்பதால் அந்த நாட்டு கல்லாச்சாரத் தாக்கங்கள்  நிறையவே தெரிகிறது. அதே நேரத்தில் இங்கு இந்திய நாட்டில் மென்பொருள் துறையிலும் பணிபுரிந்திருப்பார் என்பது அவரது  கதைகளின் கருப்பொருட்களிலிருந்து புலப்படுகிறது.  தன் துறை சார்ந்த பணிகளில் ஏற்படும் வலிகளையும் ஏமாற்றங்களையும் சுரண்டல்களையும், ஆற்றாமைகளையும் வெகு சரளமாகவும், எதார்த்தமாகவும், எளிமையாகவும் சொல்லி விடுகிறார். அதற்கு அவரது மொழி வளமும், எழுத்து நடையும் அவருக்கு உதவி செய்கிறது.

வாசிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்னவென்றால், பொதுவாக இந்தத் தலைமுறை இளைஞர்கள் சென்ற தலைமுறை இலக்கியத்தையும் மொழி நடையையும், உத்திகளையும்  “அவுட் ஆஃப் டேட்” என்று சொல்லி அலட்சியப்படுத்துவார்கள். ஆனால் ஹரிஷின் கதைகளில் நல்ல தமிழ்ச் சொற்களும், நல்ல மொழி நடையும் கையாளப்படுகிறது. அதோடு அவர் எழுதுகின்ற பாணியில் தீவிரமான வாசிப்புள்ளவர் என்பதும் தெளிவாகிறது.

ஒரு இளைஞர் என்பதால் பாலியல் உறவுகள், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதுகையில் எந்தக் கூச்சமும், தயக்கமும், மனத்தடையுமின்றி துணிச்சலாக, வெளிப்படையாக எழுதுகிறார். மிக விரிவாகவும் ரசனையோடும்  அனுபவித்து எழுதுகிறார். வாசித்து வருகையில் நமக்குத்தான் சற்று அச்சமாக உள்ளது. கட்டற்ற காமம் என்பது இன்றைய தலைமுறையினர் மிகச்சாதாரணமான, எளிதில் கடந்து போகின்ற ஒரு விஷயமாக இருப்பதை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். வாசிக்கும்போதுசில இடங்களில் வருத்தமாக இருந்தாலும், நடைமுறை உண்மை அதுதான் என்பதை நாமும் மறுக்க முடியாது. ஆனால் அப்படிபட்ட விவரணைகள் காட்சி வர்ணனைகள் எல்லாமே கதைகளோடு ஒட்டி தேவையான ஒன்றாகவும், வலிந்து திணிக்கபடாததாகவும் உள்ளதால் அவை ரசிக்கக் கூடியனவாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாகவும் உள்ளன. உத்திகளையும், வர்ணனைகளையும் மட்டுமே நம்பியெழுதாமல்  சொற்களை சிக்கனமாகக் கையாளுபவராகவும், உள்ளடக்கத்தில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் உள்ளார்.

இளமையும், காதலும், காதல் உணர்வுகளும், விரக தாபங்களும், இச்சைகளும் வேட்கைகளும் எந்த அளவிற்கு பேசப்பட்டுள்ளதோ அதேபோல மனித மனங்களின் விசித்திரங்களும், சமூக அவலங்களும், அரசியல்  நையாண்டிகளும் கருப்பொருளாகக் கையாளப்பட்டுள்ளது தனிச் சிறப்பு..

முதல் கதையான ‘ஏறக்கூடாத விமானமும்’,  கடைசிக் கதையான ‘திடீர்ப்பயணமும்  ஒரு மரணத்தின் இரு கூறுகளைப் பேசுகின்றன.  முதல் கதையில் அறிவிக்கப்படாத ஆனால் யூகிக்கக் கூடிய மரணமும் அதையொட்டி நிகழும் தவிப்பும், அவஸ்தைகளும்,  கடைசிக் கதையில் ஒரே மரணத்தை ஒவ்வொரு உறவும் எப்படி பார்க்கின்றனர், எவ்வாறு எதிர் கொள்கின்றனர் நட்பும் உறவும் ஒரு மனிதனின் இருத்தலும், மறைவும் என்ன செய்கின்றது என்பதை களத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை எற்படுத்துகிறார் ஹரிஷ். ‘ டிஜிட்டல் இண்டியா’, ஜிஎஸ்டி போண்டா, ஒரு தேசத் துரோகி படம் பார்க்கிறான், போன்ற கதைகளில் வருகிற அரசியல் பார்வையும் ,கூர்மையும் மனதாரப் பாராட்டச் சொல்கிறது. கடைசி முத்தத்திலும், புது வெள்ளி டம்ளரிலும் தனது சமூகப் பார்வையை தடம் பதிக்கிறார். மற்ற கதைகளில் தனது காதல் சாம்ராஜ்யத்தில் ரகளையாக, ரசனையாக காதல் ரசம் சொட்டச் சொட்ட தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

தமிழில் எழுத முற்படும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் கரம் குலுக்கி வரவேற்க வேண்டிய காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். அதுவும் ஹரிஷ் குணசேகரன் போன்ற நுட்பமாகவும், தெளிவாகவும்  நல்ல மொழியில், நல்ல நடையில் எல்லா களங்களிலும்இயல்பாகப் புகுந்து புறப்படும் ஒரு இளம் எழுத்தாளரை  ஆரத்தழுவி அன்போடு வரவேற்போம்.

வாழ்த்துகளுடன்

ரவிச்சந்திரன் அரவிந்தன்.

கோவை-19.

நூல் தகவல்:

நூல் : காக்டெயில் இரவு

பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : ஹரிஷ் குணசேகரன்

வெளியீடு : கலக்கல் ட்ரீம்ஸ்

வெளியான ஆண்டு : ஜனவரி 2019.

விலை: ₹ 145