நாடிழந்தவர்களைப் பற்றிய கதைகளை ஈழத்து சூழலிலிருந்து நாம் நெருக்கமாக அறிந்திருக்கிறோம். இந்த நாவல் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பல்வேறு நாடுகளை, இனங்களைச் சார்ந்த மனிதர்கள், வெவ்வேறு கலாச்சாரங்களையும் மனநிலையும் கொண்டவர்களின் புகலிடமாக பிராப்ளம்ஸ்கி விடுதி இருக்கிறது. அதில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வலி மிகுந்த கதை இருக்கிறது. அவர்களின் காதல், காமம், போராட்டம், வாழ்வின் மீதான அவநம்பிக்கைகள், சிடுக்குகள் என்று அத்தனையையும் அங்கதச்சுவையோடு சொல்வதே இந்த நாவல்.

ஒரு புகைப்படக்காரனின் கேமரா பார்வையில் இருந்து தொடங்குகிறது நாவல். அப்படியே ஒவ்வொரு தேசமாக பயணித்து நாடிழந்தவர்களைப் பற்றிய அவலச் சித்திரங்களை விவரித்தபடியே கதையும் நாடிலியாக பயணிக்கிறது.

 ‘நான் புகைப்படம் எடுக்க விரும்பும் சாகும் தருவாயில் உள்ள இந்த சிறுவனின் புகைப்படம் மிக உண்மை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று நாவல் தொடங்குகிறது.

மரணத்திற்கு அருகில் இருக்கும் சிறுவனும் அவனை சாப்பிடுவதற்காக காத்திருக்கும் கழுகின் படமும் சோமாலியா புகைப்படக் கலைஞன் கெவின் கார்ட்டரால் எடுக்கப்பட்டது. புகைப்படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் குற்ற உணர்வால் மூன்று மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். அப்படியான ஒரு இடத்திலிருந்து தான் இந்த கதையும் தொடங்குகிறது. மரணத்தின் முன் கிடக்கும் அந்தச் சிறுவன் தன் விரலை சப்பிக் கொண்டிருந்தான். அதைவிட நல்லதாக ஏதாவது கிடைக்காதா என்று பரிதாபமாக அண்ணாந்து பார்த்தான். ‘அவன் இறந்து கொண்டிருப்பதை நான் படம் எடுக்க வேண்டும். இறந்த பின் அல்ல, இறந்தபின் எடுப்பதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்’ என்று ஆரம்பிக்கும் முதல் அத்தியாயமே வாசகனுக்கு பெரும் அதிர்வை கடத்தி விடுகிறது.

தாயும் மகளும் வேறு வேறு தேசத்தில் இருப்பார்கள். மகள் லண்டனின் மையப்பகுதியில் உள்ள தொலைபேசி கூண்டுக்குள் இருந்து பேசுவாள். அவளது இடது புறத்தில் தேம்ஸ் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அவளால் பிக்பென் பாலத்தையும் பாராளுமன்ற கட்டடத்தையும் பார்க்கமுடிகிறது.  லண்டன் ஒரு அழகான நகரம், மக்கள் எல்லோரும் அவ்வளவு சினேகமாக இருக்கிறார்கள் என்று அவள் எண்ணிக் கொள்கிறாள். செல்பேசிகள் இல்லாத 90-களின் காலம் அது. தனது ஊரில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு தன் தாயுடன் பேச முயற்சிப்பாள் அந்த அஞ்சலக ஊழியர். நேற்றைய குண்டு வீச்சில் உன் தாய் பிழைத்திருந்தால் அழைத்து பேச வைக்கிறோம் என்பார்.

இப்போது இங்கே இரண்டு சாத்தியங்கள் உள்ளன. உருளைக்கிழங்கின் தோலை உரிப்பதையும், கோழியை வெட்டுவதையும் சட்டென்று நிறுத்தி, கத்தியைக் கீழே போட்டுவிட்டு தபால் நிலையத்திற்கு அதிவிரைவாக அந்த தாய் ஓடி வரக்கூடும்  அல்லது கோழி இன்னும் உயிரோடு இருக்க தபால் நிலையத்துக்கு ஓடிவர யாரும் இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் அந்தக் கோழிகளுக்கு கெட்ட காலம் என்று அந்த இடத்தை அவர் விவரிக்கிறார்..

நாவலின் பல இடங்களில் நடக்கும் உரையாடல்கள் அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தரக்கூடியவை. அதில் ஒரு இடத்தில்,  “நானும் உன் அப்பாவும் ஒரு ரயில் பாதைக்கு அருகில் குடியிருந்தோம் அதன் ஓயாத கடகடவென்று இரைச்சலுக்கு இடையே எப்படி உங்களால் உறங்க முடிகிறது என்று மற்றவர்கள் ஆச்சரியமாக கேட்பார்கள். அதன் பின் ஒரு வழியாக சிறிய வீட்டுக்கு மாறினோம். ஒவ்வொரு இரவும் நாங்கள் விழித்துக் கொண்டே இருப்போம். அந்த ரயில் சத்தத்தை நாங்கள் நினைத்துக் கொண்டே இருப்போம். மிகப்பழைய ஒன்றை இழந்து விட்டோம்” என்பதாக அந்த உரையாடல் தொடரும். நம்முடைய மனம் எப்படி இழந்தவைகளை கொண்டாடுகிறது என்பதற்கான ஒரு அற்புத சாட்சியாக இந்த இடத்தை சொல்ல வேண்டும்.

“மூன்று கால்கள் உடைந்துவனுக்கே புகலிடம் தர மறுத்து விட்டார்கள் என்றால் இரண்டு கால்கள் உடைந்தவனுக்கு எப்படி கிடைக்கும்.”

“நாங்கள் ஒரே மாதிரியான மனம் உடைய சோப்புகளையே பயன்படுத்துகிறோம். ஒரே மாதிரியான மனமுடைய ஷாம்புகளையே பயன்படுத்தி வருகிறோம். அவை ஒரே மரத்தின் ஆப்பிள்களில் இருந்தே தயாரிக்கப்பட்டவை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்”

“இந்த தூக்க மாத்திரையின் பெயர் எத்தனை கவித்துவமாக இருக்கிறது. எவ்வளவு அபாயமோ, அவ்வளவு அழகு” என்பது அதன் பெயர்.”

“ஒரு செவ்வாய்க்கிழமையின் முதல் கவனிக்கத் தக்க நிகழ்வு, அவனை முட்டாள் என்று தெரிந்து கொண்டது தான், இல்லை என்றால் அதுவும் ஒரு புதன்கிழமை போலவோ, வெள்ளிக்கிழமை போலவோ கடந்து போயிருக்கும்.”

“அவனுடைய மகத்தான படைப்பு மூன்று பதிப்புகள் வந்திருக்கிறது, ஆனால் வாங்குபவர்கள் தான் யாரும் இல்லை, நான் ஒருவன் மட்டும் தான் அதை வாசிக்கும் முட்டாள், அந்தக் கொடுமையை வாசிப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை, ஏனென்றால் ஏதோ ஒரு புரியாத காரணத்திற்காக அதை எனக்கு அவன் அர்ப்பணம் செய்து இருந்தான்.”

அனேகமாக இப்படி கதை முழுவதுமே அங்கத சுவை நிரம்ப எழுதப்பட்ட ஒரு நாவல் இதுவாகத்தான் இருக்கக் கூடும். அதுவும் கம்பி மேல் நடப்பது மாதிரியான கதையின் வழியே ஒரு சாகசப் பயணம் இது. எள்ளலும் நகைச்சுவையும் நாவலை வேறு தளத்திற்கு உயர்த்தி கிளாசிக் தன்மையைத் தந்து விடுகிறது.

உலகம் முழுக்க 12000 வகைகள் ஈக்கள் இருக்கின்றன. அவற்றில் பாதியாவது ஆப்பிரிக்கர்களின் வயிற்றில் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கின்றன என்று தொடங்கும் முதல் அத்தியாயத்தில் வராத ஈ, கடைசி அத்தியாயத்தில் வந்து நாவலை நிறைவு செய்கிறது.

“குடித்து மட்டையானான்” என்று ஓரிடத்திலே மொழிபெயர்த்திருக்கிறார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட மொழிபெயர்ப்பாளருக்கும் நாவலாசிரியரைப் போலவே அங்கதம் சிறப்பாக கைகூடி இருக்கிறது.

நாவலில் ஒரு இடத்தில் “சப்பாத்து” என்று ஒரு சொல் வரும். அது ஈழத்தில் புழங்கும் சொல். காலணியை குறிக்கக் கூடியது,, மொழிபெயர்ப்பின் நுட்பமான இடம். இது புதிய சொற்களை வாசகனுக்கு அடையாளப்படுத்தும் முயற்சி மட்டுமல்லாது, ஒரு அகதி நிலத்தின் மொழியை கடத்தும் முயற்சியும் கூட. இப்படியான முயற்சிகளை நாவலில் மொழிபெயர்ப்பாளர் முயன்று பார்த்திருக்கிறார். மிகவும் சிக்கலான கதைக் களம் கொண்ட ஒரு நாவல். வெவ்வேறு இடங்களுக்கு தாவித்தாவி செல்லக்கூடிய கதையோட்டம். ஆனாலும் வாசகனை சோர்வடையச் செய்யாத மொழியாக்கம்.

தோழர் லதா அருணாச்சலத்தின் மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு படைப்பிற்கு நேர்மை செய்திருக்கிறது. கடினமானதும் சவாலானதுமான பணியினை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.  முற்றிலும் புதிய களம் புதிய முயற்சி இந்த மொழிபெயர்ப்பு ! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழருக்கு..!


டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் (பி. 1972)
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். பதினைந்து நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 29 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ‘Problemski Hotel’ மற்றும் ‘The Misfortunates’ இவரது முக்கியமான நாவல்கள். இருபது வயதுகளில் துவங்கிய எழுத்துப் பயணத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘Problemski Hotel’ நாவல் திருப்புமுனையாக அமைந்தது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. வாழ்வைப் பிரதிபலிக்கும் தொகுப்பு நூல்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைத் தொட்டு விரித்து, சமூகம் பற்றிய கூர் அவதானிப்போடு அப்பட்டமாக அங்கதச் சுவையுடன் எழுதும் படைப்பு முறைக்காக வாசகர்களால் கொண்டாடப்படுபவர் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்.

லதா அருணாச்சலம்

சென்னையைச் சேர்ந்தவர். முதுகலை ஆங்கிலம் மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர். நைஜீரியா தேசத்தின் லாகோஸ் நகரில் வசித்து வருபவர் . இவரது முதல் நூல் “உடலாடும் நதி” கவிதைத் தொகுப்பு (எழுத்து பிரசுரம்) இரண்டாவது நூல் எழுத்து பிரசுரம் வெளியிட்ட  ”தீக்கொன்றை மலரும் பருவம்” மொழிபெயர்ப்பு நாவல்  (மூல ஆசிரியர்: நைஜரீய எழுத்தாளர் அபுபக்கர் ஆடம்).  2022- ஆம் ஆண்டு நூல் வனம் வெளியீடாக ஆக்டோபஸின் பேத்தி  -மொழிபெயர்ப்பு சிறுகதைகள், காலச்சுவடு வெளியீடாக “பிராப்ளம்ஸ்கி விடுதி” – நாவல் (மூல ஆசிரியர்: பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்) ஆகிய நூல்கள் வெளியாகி இருக்கிறது.

பல்வேறு அச்சு  மற்றும் இணைய இதழ்களிலும் இவரது சிறப்பான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தீக்கொன்றை மலரும் பருவம் நாவலுக்கான மொழிபெயர்ப்பு தமிழ் வாசகப் பரப்பில் அதிக கவனத்தை பெற்றது. இந்த நாவலுக்காக விகடன் விருதும், வாசகசாலை விருதும் பெற்றிருக்கிறார்.

நூல் தகவல்:

நூல் : பிராப்ளம்ஸ்கி விடுதி

வகை :  மொழிபெயர்ப்பு நாவல்

ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

தமிழில் : லதா அருணாச்சலம்

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

 ஆண்டு:  2022

பக்கங்கள் : 120

விலை:  ₹ 150