ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவில் அடிமையாக விற்கப்படும் ஒருவன் தனது பிள்ளைக்கு தனது வரலாற்றைக் கூற, அவன் தனது வாரிசுக்கு தங்களது வரலாற்றைக் கூற…. என இப்படியே ஏழாவது தலைமுறையைச் சார்ந்த இந்நூலாசிரியர் தனது பாரம்பரியத்தின் வேரினைத் தேடிக் கண்டடைவதே இந்நாவலின் உள்ளடக்கம்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டின் ஒரு சிற்றூரான ஜப்பூரில் 1750 ஆம் ஆண்டு மாண்ட்டோ எனும் பழங்குடி இனத்தைச் சார்ந்த உமரோவுக்கும் அவன் மனைவி பிண்ட்டேவுக்கும் முதல் ஆண்மகனாக பிறக்கும் குண்ட்டா கிண்ட்டேவிலிருந்து இக்கதை தொடங்குகிறது.
இப்பழங்குடியினர் பெயர் சூட்டுதலில் தங்கள் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது, தங்கள் பரம்பரை வரலாற்றை மவுல்வியார் வாயிலாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் புகழ்ந்துரைப்பது, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவும், வீரமும் கற்பிப்பது என அத்தனையும் நமக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தை வழங்குகின்றன.
“ஆப்பிரிக்கா என்றாலே இருண்ட கண்டம்! அங்குள்ள மக்கள் மிருகங்களிடையே நடமாடும் காட்டு மிராண்டிகள்! அவர்கள் நாகரிகமோ, கலாச்சாரமோ, வரலாறோ இல்லாதவர்கள்! அமெரிக்கா சுதந்திரத்தின் சொர்க்கம்! வீர சாகசம் மிக்கோரின் பிறப்பிடம்!” – இவைதான் வெற்றி கொண்டவர்கள் எழுதி வைத்த சரித்திர புரட்டுகள். உலகை அறியாமை இருளிலே மூழ்கடித்த பொய்யான எழுத்துகள்! – என்று நூல் அறிமுகத்தில் குறிப்பிடுவது அத்தனை வீர புருஷர்களின் மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றையும் புரட்டிப் போடக் கூடிய உண்மை.
காட்டில் விறகு பொறுக்கச் செல்லும் குண்ட்டா வெள்ளையர்களால் அடிமை வியாபாரத்திற்காக கடத்தப்படுகிறான்… எவ்வளவு முயன்றும் அவனால் தப்ப இயலவில்லை. ஒவ்வொரு முறை தப்பிக்க முயற்சி செய்தும் மாட்டிக் கொண்டு கசையடிகள் பெறுகிறான். இறுதியில் தப்பிச் செல்ல முயன்றதற்கு தண்டனையாக கால் பாதத்தில் பாதி வெட்டப்படுகிறது. வேறு வழியின்றி அங்கேயே அடிமையானாலும் மனதில் மட்டும் சுதந்திர வேட்கை அடங்கவில்லை. பெல் என்பவளைத் திருமணம் செய்து அவர்களுக்கு பிறக்கும் மகளுக்கு கிஜ்ஜி என்று பெயர் சூட்டி அவளுக்கு தன் பரம்பரை வரலாற்றைக் கூறுகிறான்.
அடிமைகள் படிப்பது சட்டப்படி குற்றம் என்ற அமெரிக்க சட்டத்தை மீறி சில வார்த்தைகள் படிக்கக் கற்ற கிஜ்ஜியை வேறு ஒருவனுக்கு இவர்களது துரை விற்றுவிட அவளுக்குப் பிறக்கும் குழந்தையான ஜார்ஜ்க்கு அவள் தன் பரம்பரையின் வரலாற்றைக் கூறுகிறாள். சேவல் சண்டையில் வல்லவனான ஜார்ஜ் தன் 6 மகன்கள், 2 மகள்களுக்கும் தங்கள் வரலாற்றை தாய் கிஜ்ஜி மூலம் உரைக்கிறான்.
அவர்களில் ஒரு மகனான டாம், டாமின் மகள் சிந்தியா, சிந்தியாவின் மகள் பெர்த்தா ஜார்ஜ், பெர்த்தா ஜார்ஜின் மகன் அலெக்ஸ் ஹேலி என குண்ட்டாவின் வரலாறு வரி மாறாமல் கடத்தப்படுகிறது.
இவ்வாறு 7 தலைமுறைகளாக தங்கள் வரலாற்றினை தொடர்ச்சியாக பரிமாறி வருவது மிகப் பெரும் வியப்பே….
இறுதியாக அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையினை ஒழித்து சட்டம் இயற்றுதலினால் அத்தனை அடிமைகளும் சுதந்திரம் அடைகின்றனர்.
மிக நீண்ட நெடிய கருப்பின அடிமைகளின் போராட்டத்தையும் ஆசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார்.
கருப்பரான குண்ட்டாவின் ஏழாவது தலைமுறை வாரிசு முழுவதும் ஒரு வெள்ளையனாக மாறுகிறான்.
முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல அமெரிக்க மக்களிடம் நிச்சயம் இது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
இதைப் படிக்கையில் நம் வம்சத்தின் வரலாற்றை நாம் இன்னும் சரிவர தெரிந்து கொள்ளாததற்காக நாணம் ஏற்படுவது இயல்பே.
- ஜெ. திவாகர்
நூல் : ஏழு தலைமுறைகள் (Roots)
பிரிவு: நாவல், மொழிபெயர்ப்பு
ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி
தமிழில் : ஏ.ஜி.எத்திராஜூலு
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
வெளியான ஆண்டு : 2016
விலை : ₹230
அருமையான புத்தகம்! தன்னுடைய வேர் தேடும் ஏழாவது தலைமுறை. மிகவும் விருவிருப்பான புத்தகம்.