2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி.  மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது. ஆனால், அந்த வேலியைப்பற்றிய ஒட்டுமொத்த நினைவுகளும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக இத்தேச மக்களுக்கு மறந்துபோனது. பழங்ககதைகள் துவங்கி தற்போதைய வரலாற்று நூல்கள்வரை எதிலும் அந்த வேலிபற்றிய சிறுகுறிப்புகூட  இடம்பெறவில்லை. பிரிட்டனிலிருந்து கிளம்பிவந்து, ஒரு தேசமே மறந்துவிட்ட சுங்கவேலியின் மிச்சமான சிறுபகுதியைக் கண்டடைந்து ஆவணப்படுத்தினார் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம்.

உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இந்தியாவின் குறுக்காக முள்மரங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் உயிர்வேலியின் வரலாற்று எழுச்சியும் வீழ்ச்சியும் அடங்கிய தொகுப்பே இந்நூல். ‘கொத்துகொத்தாய் லட்சக்கணக்கில் செத்துமடிந்த பெரும் பஞ்ச காலங்களில், அத்தனை சுங்கவரிகளும் தளர்த்தப்பட்ட நிலையிலும், கடைசிவரை உப்பின் மீதான வரி குறைக்கப்படவில்லை’ என்ற தகவல் உப்பின் மீதான நமது கண்ணோட்டத்தையே மாற்றிவிடுகிறது. காந்தி, தண்டி யாத்திரையில் அள்ளிய கைப்பிடி உப்புமண் சுமந்திருந்த வரலாற்றுப்பின்புலம் எத்தகையது என்பதனையும் இப்புத்தகம் விவரிக்கிறது.

சமகால இந்திய வரலாற்றாவணங்களில் தவிர்க்கமுடியாத ஆக்கங்களில் இப்புத்தகமும் இடம்கொள்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து நிலங்களில் நிலவியல் வரைபடங்களோடு அலைந்துதிரிந்து, இறுதிவரை தனது முயிற்சியைக் கைவிடாமல் பயணித்த வரலாற்றாசிரியர் ராய் மாக்ஸம் அவர்களின் பெருந்தேடல், உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை நமக்கு ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளது. தவறவிட்டுவிடக்கூடாத வரலாற்று ஆவணமான ‘உப்புவேலி’ புத்தகம், சிறில் அலெக்ஸ் அவர்களின் தமிழ் மொழியாக்கத்தில், தன்னறம் நூல்வெளி வாயிலாக மீள்பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.

உப்பின் உலகவரலாற்றில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருண்டுகிடந்த ஒரு பெருங்கட்டமைப்பை, அணையா நெருப்பை நெஞ்சிலேந்திய ஒரு வரலாற்றாய்வு எழுத்தாளர் தன் தளரா முயற்சியின் ஒளியால் நமக்கு எழுத்துப்படைப்பாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். இத்தேசத்தின் வரலாற்றை அறியவிரும்பும் ஒவ்வொரு மனதுக்கும், நிஜத்தில் நிகழ்ந்த ஒரு பேருண்மையின் சாசனமாக இப்படைப்பு நிச்சயம் இருக்கும்.


நூல் தகவல்:

நூல் : உப்புவேலி

பிரிவு:  மொழிபெயர்ப்பு / வரலாறு
ஆசிரியர்   : ராய் மாக்ஸம்
தமிழில்       : சிறில் அலெக்ஸ்
வெளியீடு  : தன்னறம் நூல்வெளி
வெளியான ஆண்டு : 2020
விலை     : ₹400

இணையதளத்தில் நூலை பெற  http://thannaram.in/product/uppuveli/

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *