ளமையும், துடிப்பும் ததும்புகிற இருபதுகளின் ஆரம்பத்தில் ஒரு மனிதன் வாழ்வை முதலில் மகிழ்ச்சியாக அனுபவிக்க நினைப்பான். அந்த வயதில் ரஷ்யாவின் இளம் இளைஞன் ஒருவன் பேனாவினை கையில் எடுக்கிறான். அதன் பிறகு அவன் ஜனவரி 28.1881 மரணமாகும்வரை எழுதிக்கொண்டேயிருந்தான். அவை யாரும் ஒருவர் இலக்கியத்தில் இன்றுவரை அடைய முடியாத அடைவுகள். ஒவ்வொரு எழுத்தாளனுடைய இடம் இன்னொரு எழுத்தாளரால் நிச்சயமாகப் பூர்த்திசெய்ய முடியாததுதான். ஆனால் எழுத்துலகில் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எங்கோ ரஷ்யாவின் ஒரு மூளையில் இருந்துகொண்டு ஒட்டுமொத்த உலகில் உள்ள கடைக்கோடி மனிதர்களுக்காகவும் இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார். அந்த இடம் இலக்கியத்தில் யாராலும் மீள் நிரப்ப முடியாதது. 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யச் சமுகத்தில் காணப்பட்ட சிக்கலான அரசியல், சமூக, பொருளாதார நிலைமையினை தாழ்த்தப்பட்ட தனிமனிதனின் உளவியலை, விளிம்பு நிலையில் உள்ள மனிதனின் இருண்ட பக்கங்களை அவரைப்போலப் பேசியவர் எவரும் இல்லை. தத்துவமும், ஆன்மீகமும் அவரது படைப்புகளில் நிரம்பி வழிந்தது. அவரது எழுத்துக்களிலிருந்து மீட்சி பெறும் ஒரு சொல்லுக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்கள் காத்துக்கிடந்தார்கள்.

அவருடைய இருபதுகளில் தாஸ்தோவ்ஸ்கி எழுத ஆரம்பித்திருந்தாலும். அவருடைய முதலாவது. நூல் “புவர் ஃபோக் “ என்ற பெயரில் 1846 இல் பிரசுரமானபோது அவரின் வயது 25. அதனைத் தொடர்ந்து “குற்றமும் தண்டனையும் “, அசடன், அசுரர்கள், கரம்சவ்சகோதரர்கள் வெளியாகி இருந்தது. அவர் வாழ்நாளில் 11 நாவல்களும், மூன்று குறுநாவல்களும், 17 சிறுகதைகளும் எழுதியிருந்தார். இப்படியான காலப்பகுதியில் 1846 _ 1848 வரை “ஆனல்ஸ் ஆம் தி பாதர்லாண்ட் “ என்ற பத்திரிகைகளில் மிஸ்டர். ப்ரொகார்ச்சின், தி லாண்ட் லேடி, பலவீனமான இதயம், வெண்ணிற இரவுகள் போன்ற கதைகளை எழுதியிருந்தார். அவர் எழுதிய காலத்தில் வரவேற்பைப் பெறாமல் நிதி நெருக்கடிக்குத் தள்ளிய கதைகளாக இவற்றைச் சொல்வார்கள். அன்று அப்படிச் சொல்லப்பட்ட கதைதான் பின்னர் உலகம் முழுவதும் தஸ்தாயெவ்ஸ்கிக்கு கோடிக்கணக்கான இரசிகர்களைப் பெற்றுத்தந்தது. காதலைக் கொண்டாடுபவர்களுக்கு என்றும் புறக்கணிக்க முடியாத மாயத்தினை வெண்ணிற இரவுகள் என்ற அவரின் கதை செய்தது. அந்த கதையை வாசிக்கும் எல்லோரையும் அது கவர்ந்திழுத்துக்கொண்டது. அதை அடிப்படையாகக் கொண்டு கொண்டு பல சினிமா திரைப் படங்கள் வெளிவந்தன. Luchino visconti, Robert Bresson, Ahista Ahista, Saawariya, தமிழில் “ இயற்கை போன்ற படங்கள் இதனைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களே.

அப்படிப்பட்ட வெண்ணிற இரவுகள் கதை எதைப்பற்றியது என்றால், பீட்டர்ஸ்பெர்கின் விசித்திரமான சந்து ஒன்றில் வாழ்கின்ற இளைஞன் பற்றியது. மனம் முழுவதும் கனவும் காதலும் கனவுகளும் நிறைந்து வாழ்கிற இளம் பெண் பற்றியது, காதலா இல்லையா, வருவானா, வரமாட்டானா என்ற இளைஞன் பற்றியது, மாஸ்கோவில் எண்ணற்ற கனவுகளுடன் வாழ்ந்த கனவான்கள் பற்றியது, பெரும் நினைவுகளாக அசைவற்று நிற்கின்ற கட்டிடங்கள் பற்றியது. பூக்கள் பற்றியது, முதியவர்கள் பற்றியது, அனாதரவாக விடப்படுகின்ற சாலைபற்றியது, பீட்டர்ஸ்பெர்க் எனும் பேரழகி பற்றியது, உண்மையில் காதலும், தூய்மையும் அதைக் கையாள முடியாத பதட்டமும், இயலாமையும், வறுமையும் நிறைந்த பீட்டர்ஸ்பெர்கின் இளைஞன் ஒருவனைப்பற்றியது. முதலில் எல்லாவற்றுக்கும் முதல் அந்த விசித்திரமான இளைஞன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு முதல் வெண்ணிற இரவுகள் என்றால் என்ன என்பது பற்றிச் சொல்கிறேன். வெண்ணிற இரவு என்று சொல்லப்படுவது இளமையும், துன்பமும், பதட்டமும், கனவுகளும் நிறைந்தவர்களுக்கு உறக்கமில்லாத இரவு. இன்னுமொன்று இரவிலும் நிர்மலமான வானத்தில் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைக்காலத்தில் பனிப்பிரதேசங்களில் இதுபோல நிகழ்வதுண்டு. இரவு பத்து மணிவரை சூரியன் இருக்கும். அது போலவே சூரியன் உதயமாவதும் விடியலை மூன்று மணிக்கே தொடங்கிவிடும். அந்த நாட்களில் முழு இரவும், புலர் வெளிச்சமும், கொண்ட இரவாக இருக்கும். ஆனால் ஒளி இருந்துகொண்டே இருக்கும். மிகச்சிறிய இரவு கொண்ட நாட்களாக அது இருக்கும். ரஷ்யாவின் ஜீன் மாதத்தில் இப்படியான நீண்ட பகல்கள் ஏற்படுவதுண்டு. பீட்டர்ஸ்பெர்கின் சூரியன் ஒளிரும் இரவைப்பற்றி தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதியிருக்கிறார் .

இப்பொழுது கனவுகளுடன் இரவை கடக்கின்ற இளைஞன் பற்றிச் சொல்கிறேன். பீட்டர்ஸ்பெர்க் நகரின் இருண்ட ஒரு மூளையில் இருந்தபடி எண்ணற்ற கனவுகளுடன் வாழ்கின்ற ஒரு இளைஞன். ஒரு அற்புதமான இரவை அண்ணாந்து பார்த்தபடி விண்மீன்களை இரசிக்கக்கூடியவன். பாசாங்கற்ற இந்த நிர்மலமான ஒளிர்ந்த வானத்தின் கீழ் பலவகையான முசுடுகளும், மூர்க்கர்களும், எப்படி வாழமுடியும் என்று கேள்வி எழுப்பக்கூடியவன். இப்படியான இளமையான கேள்விகள் அருமை வாசகரான எங்களுக்கும் அடிக்கடி மனதில் ஏற்பட வேண்டும் என ஆண்டவனிடம் மனதார பிரார்த்திக்கக்கூடிய மனம் முழுவதும் காதல் நிரம்பிய இளைஞன்தான் வெண்ணிற இரவின் நாயகன்.

அவன் எல்லோரிடமும் கதைக்க வேண்டும் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து எப்போதும் அந்த எண்ணம் தோல்வியில் முடிவதால் சோர்வடைபவன். ஆனால் அவன் அந்த எட்டாண்டுகளாக பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் உள்ள எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். பீட்டர்ஸ்பெர்கின் நேவ்ஸ்கி சாலைபற்றி அவனுக்குத் தெரிந்திருக்கிறது. வசந்தப்பருவத்தில் பூக்களால் நிறைந்திருக்கும் பூங்காக்கள் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கிறது. பீட்டர்ஸ்பெர்கின் ஆற்றங்கரைபற்றி அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஃபன்தான்கா ஆற்றங்கரையில் நாள்தோறும் காலை ஒரே நேரத்தில் சந்திக்கின்ற ஒரு கிழவர் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஒருவரைப்பற்றி ஒருவர் புரிந்துகொள்ளும் அளவு அவனுக்கும், அந்த முதியவருக்கும் இடையில் ஒரு அன்னியோன்னியமான நட்பு உருவாக்கியிருந்தது. ஆனால் அந்த பெரியவரிடம் அவன் ஒருபோதும் கதைத்ததில்லை. வாய்ச் சொல்லாக வெளிப்படாமல் அவர்கள் உள்ளத்தினுள் ஒளிர்ந்த அன்புடன் ஒருவரை ஒருவர் கடந்து சென்றார்கள். பீட்டர்ஸ்பெர்க் மக்களின் மனநிலை அவர்கள் அந்தஸ்து, அந்த சாலையில் மலர்ச் செடிகள் விற்பவன், அதை வாங்குகின்ற சீமாட்டி என எல்லாவற்றையும் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இறுக்கமான இரவுகளிலிருந்து வெளிவர விரும்புகின்ற இளைஞனாக அவன் இருந்தான். அவனை எல்லோரும் கனவுலகில் வாழ்கின்ற கனவுலக வாசி என்று அழைத்தனர். மனிதர்கள் நடமாடுகின்ற பகல்களை வெறுப்பவன். யாரும் கவனிக்காத இரவை அதிகம் விரும்புபவன்.

மனிதர்களிடம் மட்டுமே அவனால் நட்பு பாராட்ட முடியவில்லை. மற்றபடி வீடுகளையும், தெருக்களையும் அவனுக்கு நண்பர்களாக்கிக்கொள்ளத் தெரிந்திருக்கிறது. அவன் வாழ்ந்த அந்த தெருக்களில் உள்ள வீடுகள் முழுவதும் அவனுக்கு நண்பர்களாக இருந்தன. அந்த வீடுகளிடமும், ஜன்னல்களிடமும் நலம் விசாரிக்கின்ற அளவு அவர்களுடைய உறவுகள் இருந்தது. “ என்ன சேதி, சுகமாக இருக்கிறாயா?, என்று கேட்கப் பதிலுக்கு அவையும் “ மே மாதத்தில் எனக்கு இன்னொரு மாடி கட்டப்போகின்றார்கள்., என்றோ, தீப்பிடித்து எரிந்துபோகப்பார்த்தேன், பயந்து நடுங்கிப் போனேன், மஞ்சள் நிறம் பூசி என்னைக் கெடுத்து விட்டார்கள் முரடர்கள் “ என்று வீடுகள் அவனிடம் கதைத்துக்கொள்ளும். இப்படி மனிதர்களைத் தவிர பீட்டர்ஸ்பர்க் முழுவதும் நண்பர்களாக்கிக்கொள்ளத் தெரிந்தவன் கதையின் நாயகன்.

ஒரு நாள் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுகொண்டிருக்கிறான். அந்த சாலையில் உள்ள ஒரு வீட்டை எல்லா வீடுகளைப்போல அவனால் கடந்து செல்ல முடியவில்லை. அவனால் ஒருபோதும் மறக்கமுடியாத பெண் அங்குதான் வசித்திருக்கிறாள். அந்த வீடு இப்போது முற்றிலும் உருமாறியிருக்கிறது. அவள் பற்றி அந்த நினைவுகள் பற்றி இளைஞன் நினைக்கத் தொடங்குவான்.

முன்னமே சொல்லியதுபோல இது இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண் கூடவே நான்கு இரவுகளில் அவர்கள் வாழ்வில் எதுவெல்லாம் நடந்தது என்பது பற்றியதுதான் வெண்ணிற இரவுகள் சிறுகதை பேசுகிறது.

ஒரு நாள் கதையின் நாயகன் இரவில் வழமைபோல நடப்பதற்கு வெளியே வருகிறான். அந்த நேரத்தில் பொதுவாக மனிதர்களை வெளியே காண்பது அரிது. அவன் அன்று நீண்ட தூரம் நடந்திருந்தான். அவன் மனதில் உள்ள மகிழ்வையும் துக்கத்தையும் வெளியில் சொல்ல ஒரு நண்பரேனும் அற்றவன். ஆனால் அவன் மனம் பூப்படைகிறபோது மகிழ்கிறபோது ராகம் பாடி பாட்டை முணுமுணுத்தபடி செல்வதை வழக்கமாகக் கொண்டவன். அப்படித்தான் அன்று அவன் சென்றுகொண்டிருந்தான். அவன் அன்று நகருக்குத் திரும்பியபோது நெடுமரமாகியிருந்தது. அவன் அறைக்குச் செல்லும் வழியில் ஒரு கால்வாய் கரை இருந்தது. பொதுவாக அந்த பகுதியில் அந்த நேரத்தில் யாரும் நிற்பதில்லை. அப்போது ஒரு அதிசயத்தை அவன் பார்க்கிறான். ஒரு பெண் அந்த கால்வாயின் ஓரத்தில் நின்றபடி அந்த கால்வாயின் கரிய நீரை உற்றுப்பார்த்தபடி நிற்கிறாள். மனிதர்களுடன் நட்பு பாராட்ட முடியாத இவன் அந்த பெண்ணை அந்த நேரத்தில் மனித நடமாட்டம் அற்ற அந்த இடத்தில் பார்த்ததும் பயந்துபோவான். அவளை எப்படியாவது கடந்து வீடு சென்றுவிடவேண்டும் என்று நினைத்த அவன் மூச்சை அடக்கிக்கொண்டு நெஞ்சு படபடக்க அவளைக் கடந்து போவான். அப்போது அந்த பெண் ஆடாமல் அசையாமல் இருப்பதைக் காண்பான். அந்த பெண் வாய் சத்தம் வெளியே கேட்காதவாறு விம்மி அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று அவனுக்குத் தெரிகிறது. ஆனால் எப்படி உதவுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. பேசமுயன்று தன்னால் முடிகிற உதவியைச் செய்ய முனைவான் அந்த பெண் விலகி தெருவைக் கடந்து மறுபக்கம் போய்விடுவாள். பிரக்ஞை ஏதுமற்று வெறும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டிருக்கிற அந்த பெண் தனித்துவிட்டால் இன்னும் வேறு பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளலாம் என்று எண்ணிய நம் கதையின் நாயகன் அவளைத் தொந்தரவு செய்யாத வகையில் பின்தொடர்ந்து செல்வான். அவன் நினைத்ததுபோல சாலையில் அவளை ஒரு விசித்திரமான பண்பற்ற ஆண் ஒருவன் பின்தொடர்ந்து தொந்தரவு செல்வான். யாருமற்ற அந்த சாலையில் அவளை விரட்டி சென்று எட்டி பிடித்துவிடுவான். அந்த பெண் மிரண்டுபோவாள். இதைக் கண்ட இளைஞன் அவனது கைத்தடியை எடுத்துக்கொண்டு தாக்குவதற்கு ஓடுவான். யாருமற்ற பெண்ணை எதுவும் செய்யலாம் என்று வந்தவன் ஏமாந்துபோவான். அந்த மனிதன் பயந்து ஓடிவிடுவான். நடந்த சம்பவத்தில் மிகுந்த அதிர்ச்சியும் பயமும் கலந்திருந்த அவளின் கை பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும்.

“இப்படிக் கொடுங்கள் கையை, இனி அந்த ஆள் நம் பக்கம் வரமாட்டார்” என்று அவளைச் சமாதானப்படுத்துவான். “ இப்பொழுது தெரிகிறதா, என்னை நீங்கள் உதறித் தள்ளிவிட்டுப் போயிருக்கக் கூடாதென்று? நான் பக்கத்திலிருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது அல்லவா? “ என்று சொல்வான்.

அவளும் இப்படிச் சொல்வாள்
“ஆனால் அப்பொழுது எனக்குத் தெரியாது உங்களை. நான் நினைத்துக் கொண்டேன்.. நீங்களும்..” என்று சொல்வாள்.

அப்படியானால் இப்பொழுது தெரிந்துகொண்டாயா என்று அவன் கேட்பான். அதற்கு அவள்,

“கொஞ்சம் தெரிந்து கொண்டேன். முதலில் இதைச் சொல்லுங்கள். உங்களுக்கு ஏன் இந்த நடுக்கம்? ” என்று அவள் கேட்பாள்.

ஒரு நிமிடத்தில் அவளால் என் நிலைபற்றி புரிந்துகொள்ள முடிந்தது என மிக்க மகிழ்ச்சியடைவான். இப்படி முதல் நாளிலேயே அவர்களால் ஒருவரை ஒருவர் ஆழ்ந்து புரிந்துகொள்ள முடிந்தது. இதுவரை வாழ்வில் ஒரு நண்பரேனும், இல்லாத , இதுவரை எந்த பெண்ணிடமும் பேசதெரியாத பேசியிருக்காத அவன் இதுவரை காலம் காத்திருந்தது இதற்கு தானா என்பதுபோல அவளிடம் கரைந்து போவான். ஆனால் அவனுக்கு இதுவும் தெரிந்திருக்கிறது இப்படி ஒரு தேவதைபோன்ற பெண்ணையும் காயப்படுத்துவது யார்?, எந்த துயரம் அவளை வீட்டில் இருக்கவிடாது பைத்தியக்காரிபோல அலையவிடுகிறது என யோசித்து குழம்பிப்போவான். அவளைப் பிரிந்து சென்றால் மறுபடியும் தன்னால் சந்திக்கவே முடியாதுபோகும் என்று வேதனை கொள்கிறான். இப்படித்தான் அவர்களின் முதல் இரவு இருந்தது. அந்த இரவின் பின் வருகிற இரவை அவன் பயங்கரமாக வெறுத்தான். இரவில் ஒளிர்கின்ற சூரியனால் என்ன பயன் என்று துயருறுகிறான். பகல்கள் அடங்கினால்தானே இரவு வரும் என்று யோசிக்கிறான். அடுத்த நாள் அவளைச் சந்திக்கும்வரை இருக்க முடியாது தவிக்கிறான்.

இரண்டாவது நாள் இரவு அவளைப் பார்ப்பதற்காக அதேயிடத்தில் போய் நிற்கிறான். அவள் வருவாளா இல்லையா என்பதுகூட தெரியாது. அது நட்போ, காதலோ அதன் எதிர்காலம்பற்றி அவனுக்குத் தெரியாது. ஆனாலும் அவன் நிற்கின்றான். அவன் நினைத்தது போலவே அவள் வருகிறாள். அன்றுதான் அவள் பெயர் நாஸ்தென்கா என்று அறிந்துகொள்கிறான். அந்த பெயரை மீண்டும் மீண்டும் உச்சரிக்கிறான். அந்த சொல் அவனை அப்படியே அவனுக்குள்ளாகக் கரைத்துவிடுகிறது. இப்படிப்பட்ட தூய்மையான உறவைப் பார்த்ததன் பின் அவள் அவளுடைய வாழ்வில் இப்பொழுது அவளை துயரமுடைய செய்கின்ற எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வாள்.

அவள் பெயர் நாஸ்தென்கா. வயது பதினேழாகிறது. பீட்டர்ஸ்பெர்கின் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு அறையை வாடகைக்கு விட்டு அந்த பணத்தில் தன் கண்தெரியாத பாட்டியுடன் வாழ்ந்து வருவாள். பாட்டிதான் இவளை கவனித்துக்கொள்கிறாள். அந்த அறையில் வாடகைக்கு ஒரு அழகான இளைஞன் வாழ்ந்து வருகிறான். அவனோடு பழகுவதற்கு, கதைப்பதற்குப் பாட்டி தடை போடுகிறாள். எங்கே தன் பேத்தி காதல் அது இதுவென்று போய்விடுவாளோ எனப் பயந்து ஏகப்பட்ட தடைகளைப் போடுவாள். அப்படி இருந்தும் நாஸ்தென்கா அந்த இளைஞனிடம் மனதைப் பறிகொடுத்துவிடுவாள். அவன் அவளுக்காகப் புத்தகங்களைப் பரிசளிக்கிறான். அவளையும் பாட்டியையும் அழைத்துக்கொண்டு ஒபாரா என்ற நாடகம் பார்க்கச் செல்கிறார்கள். இப்படி வாழ்க்கை போய்க்கொண்டிருக்க அவன் ஒரு நாள் திடீரென ஊருக்குக் கிளம்பிவிடுகிறான். பிரிவு தாங்காத அவளும் அவனுடன் செல்ல தயாராகிறாள். அதைச் சற்றும் எதிர்பாராத அவன் மீண்டும் அவளை வந்து திருப்பி அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்கிறான். அன்றிலிருந்து அவன் வரும் நாட்களுக்காக அவள் காத்திருக்கிறாள். இப்படிப் பரிதவிக்கும் இரவில்தான் நமது நாயகனைக் காண்பாள்.

அவன் அவளது துயரைத் துடைக்க நினைக்கிறான். அவளை ஆற்றுப்படுத்துகிறான். தான் நேசித்த பெண்ணுக்காக அவள் நேசித்த மனிதனைத் தேடிப்போகிறாள். காதல் கடிதங்களை அவனிடம் சேர்க்கிறான். இந்த இடைப்பட்ட நாளில் அவர்களுக்குள் ஆழ்ந்த புரிந்துணர்வும், அன்பும், காதலும் நிறைகிறது. அவளை அக்கறையுடன் கவனிக்கிறான். எது செய்தால் அவள் மகிழ்ச்சியாக இருப்பாள் என ஒவ்வொன்றாய் பார்த்துப் பார்த்து செய்கிறான். அவள் ஒருகட்டத்தில் தான் உயிர் வாழ்கிறேனா இல்லையா என நினைக்காத அவன் எங்கே, தன் மகிழ்ச்சிக்காகப் பார்த்துச் பார்த்து செய்யும் இவன் எங்கே என யோசிப்பாள், சலனப்படுவாள் தவிப்பாள்.

நம் நாயகன் போன்றவனுக்கு நாஸ்தென்கா நீண்ட காலம் காத்திருந்து கிடைத்த வரம். அவனைப்போன்ற மனிதனை இப்படி அப்பழுக்கில்லாது எவராலும் நேசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. இருந்தாலும் அவன் அவள் காதலுக்கு வழிவிட்டு மேலும் மேலும் சலனப்படுத்தாது அவளைத் தேற்றி ஒரு பட்டாம்பூச்சிக்குக் கொடுக்கிற விடுதலைப்போல விலகி நிற்பான். அந்தப்பட்டாம்பூச்சி அவன் கைகளில் பறக்க மனமின்றி மீண்டும் மீண்டும் வந்தமரும் பின் சலனப்படும், என்னவென அறியாது
திகைத்து நிற்கும். கனவுலக வாசி இழக்க கூடாதவொன்றை இழக்கத் துணிவின்றி செய்வதறியாது பார்த்து நிற்பான். இது அனைத்தையும் அவர்கள் மனதில் நிரம்பிய தூய காதல் நிகழ்த்தும். இறுதியில் நாஸ்தென்காவின் காதலன் வருவானா? நாஸ்தென்காவும் கனவுலக வாசியும் சேர்வார்களா இதுதான் வெண்ணிற இரவுகள் சிறுகதை. வாழ்வில் எந்தவொரு வாசகனும் தவறவிடக்கூடாத கதையாக என்றும் இது நிச்சயமாக இருக்கும்.


நூல் தகவல்:

நூல் :வெண்ணிற இரவுகள்

வகை : நாவல்

ஆசிரியர் : ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்

தமிழில் : பத்மஜா நாரயணன்

வெளியீடு : எதிர் வெளியீடு

ஆண்டு : 2013

பக்கங்கள் :  120

விலை : ₹ 120

Buy On Amazon : 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *