இன்றைய நவீன தமிழ் கவிதை சூழல் மொழியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. நிறைய கவிதைத் தொகுப்புகள் வருகின்றன. மற்றைய இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் மொழி கட்டற்ற சுதந்திரத்தோடு பயணிப்பது கவிதையில் மட்டும்தான். எனவே கவிதை மொழி பற்றி நிறைய பேசுவதற்கும், விவாதிப்பதற்குமான சூழலையும் நாமே உருவாக்க வேண்டிய தேவையும் இன்று இருக்கிறது. மரபுக்கவிதையானாலும் சரி, புதுக்கவிதையானாலும் சரி, நவீன கவிதையானாலும் சரி,
கவிதை என்றால் என்ன?
கவிதைக்கான இலக்கணம் என்ன?
கவிதைக்கான வரையறைகள் எவையெவை?
அதன் உத்திகள், உள்ளீடுகள், பாடுபொருள்கள் போன்ற பல்வேறு விடயங்களை இதுவரை கேள்விகளாகவும், மாறி வரும் காலங்கள், சூழல்கள், இயங்குதளங்கள் இவற்றிற்கேற்ப மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை இதுவரை நம்மிடையே வந்து சேர்ந்து இருக்கின்ற கவிதைகள் வழியாகவும் நாம் கண்டு வந்திருக்கிறோம். ஆனால், இந்தக் கேள்விகளையும், பதில்களையும் புறம் தள்ளிவிட்டு இன்றைய நவீனக் கவிதைகள் மொழியிலும் தனக்கான வெளியிலும் புதிய புதிய தளங்களில் உருவாகிக் கொண்டே போகின்றன.
இந்த உருவாக்கங்கள் நேற்றைய மொழியில், நம்மிடையே இருந்த இடைவெளிகளை, தயக்கங்களை உடைத்தெறிந்துவிட்டு கட்டுகளற்ற சுதந்திரத்துடன் பயணிப்பதை பார்த்து வருகிறோம்.
சுருக்கமாகச் சொன்னால், மொழியின் சுதந்திரமே கவிதை.
ஆனால், மனிதன் சுதந்திரமானவனா?
அவனது வாழ்வு சுதந்திரமானதா?
என்ற கேள்விகளை முன் வைத்தோமானால், இன்றைய மனிதன் நவநாகரீகமான நவீன வாழ்க்கையை வாழ்வதாக நம்பிக் கொண்டு போலித்தனமான இயந்திரமயமான வாழ்வியலை மேற்கொண்டு வருகிறான். அதன் விளைவாக ஏற்படக்கூடிய தனிமனித உளவியல் சிக்கல்கள், சமூக உளவியல் சிக்கல்கள் இன்றைய இலக்கிய வடிவங்களில் பிரதிபலிக்கின்றன.
அது போலவே, ஒரு இனத்தின் மீதான அல்லது ஒரு மொழியின் மீதான தாக்குதல்களாலும், ஒடுக்கு முறைகளாலும், அவன் இலக்கின்றி அலையும் தருணங்களில் தன் இனத்திற்கான அல்லது தன் மொழிக்கான மீட்சியை தேடி அடைய வேண்டியிருக்கிறது. இந்த தேடல் அவனது மொழியின் வழியாக அமையும் பட்சத்திலேயே அவன் ஒரு படைப்பாளியாகவும் பரிணமிக்கின்றான். மொழியின் வழியாக அவன் தேடிய ஏதோ ஒன்று படைப்பாக உருவெடுக்கும் போது, அது இன்றைய இலக்கிய வடிவங்களாக அறியப்படுகின்ற கதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடகம் என ஏதோ ஒரு வடிவத்தை அடைந்து விடுகிறது.
இந்த வடிவங்களில் இன்று அதிகமாக உற்பத்தியாவது கவிதை மட்டுமே. கவிதையை தேர்ந்து கொள்வது என்பது படைப்பாளியின் சுதந்திரமான தேர்வு தான். இது ஒருவித மனோநிலை. பத்து, பதினைந்து வரிகளுக்குள் தான் நினைப்பதை, சொல்ல வந்ததை எளிதாகச் சொல்வதற்கு கவிதையை விட்டால் வேறு வழியில்லை. நிறைய படைப்பாளர்களை கவிதை வழியாகவே நாம் அடையாளம் கண்டுவிட முடிகிறது.
நவீனத் தமிழரின் வாழ்க்கை முறை நமக்கு நிறைய நவீன கவிதைத் தொகுப்புகளை நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கின்றன.
கவிதை மொழி என்பது படைப்பாளனுக்கு இலக்கிய உலகில் ஒரு அடையாளத்தையே தந்து விடுகிறது.
ஒரு கவிதைத் தொகுப்புக்கூட இன்று ஒரு ஆதார் அட்டையைப் போலவே இன்று நமக்கு ஒரு அடையாளமாகவே இருக்கிறது.
இந்த அடிப்படையில் க.சி.அம்பிகாவர்ஷினியின் தேக்கு மரப்பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் என்ற கவிதைத் தொகுப்பினை நான் அணுகிய போது, முதலில் அவரது முன்னுரையை வாசித்து விடுவது நல்லது எனத் தோன்றியது. அந்த முன்னுரையில் ஒரு இடத்தில் கவிதை என்பது அவருக்கு வனமாகவும், இன்னொரு இடத்தில் கவிதை அவருக்கு தேன்கூடாகவும் இருப்பதை தெளிவுபடுத்துகிறார். வனம், தேன்கூடு இவையெல்லாம் குறியீடுகள். கவிதையில் இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் இந்தக் குறியீடுகளோடு பொருந்தியும், சில பொருந்தாதனவாகவும் இருக்கலாம்.
கவிதை மொழி என்பது படைப்பாளனுக்கு இலக்கிய உலகில் ஒரு அடையாளத்தையே தந்து விடுகிறது.
அதே போல், வாழ்வின் அலைக்கழிப்பிலிருந்து விடுபடும் போதுதான் கவிதையின் கரங்களில் இவர் தன்னை ஒப்புக் கொடுக்கிறார்.
பெரும்பாலும், மனிதர்கள் வாழ்வின் அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லல்படும்போதோ அல்லது அழுப்புத்தட்டும்போதோ அவன் :. அவள் ஏதோ ஒரு உள்ளார்ந்த தேடுதலுக்கும் தவிப்புக்கும் உள்ளாவதை கண்டுகொள்ள முடிகிறது. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
வாழ்க்கை எளிதாக இருக்கும் போது நமக்குள் அதிகமாக ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. ஏதோ ஒன்று நம்மை இடறும் போதுதான் நமது அகம் விழிப்படைந்து சுதாரிக்கத் தொடங்கிவிடுகிறது. எச்சரிக்கையோடு நாம் கவனித்துப் பார்த்தால் நமக்கு முன் எத்தனையோ கவிகளின் விரல் நுனிகளின் வழியே கவிதை கசிந்து வந்திருப்பதை அறிய முடிகிறது.
உயிர்ப்பு (பக்-11) என்றொரு கவிதையில் அவள் மடியில் கட்டிக் கொண்டு வந்த தானியங்கள் முளைகட்டி, ஈரிலைத் தேடலாய் தான் விட்டு வந்த நிலம் தேடுகிறது. அதன் தாய் வீடான கதிர்க்குழிகள் அந்த நிலத்திலே கிடக்கின்றன. அந்த ஈரிலைக்கும் கதிர்க்குழிகளுக்குமான நெருக்கமான உறவை இன்னொரு மழை வந்துதான் அறியக்கூடும் என்கிறார். அது இயற்கையின் நுட்பமான அறிவு. இயற்கை அறிவியலை தனது கவிமொழியில் அழகாகப் பதிவு செய்த விதம் பாராட்டுதற்குரியது.
அந்த நிலத்தைப் போலவே பதைபதைக்கும் இவரது மனம் ஈர மண்ணைப் பூசி விளையாட ஒரு நிலம் வேண்டுவதும், அதுவும் சொந்த நிலமே வேண்டுவதும், இவரது நிலத்தின் மீதான உரிமையை கோருவதாகவே தெரிகிறது. இந்தக் கவிதையில் நிலம், மண், வேர், மழை, கதிர்கள், தானியங்கள் இவற்றின் தொடர்புடைய நுட்பமான இயற்கை அறிவு இவரது கவி மொழியில் அழகாக வெளிப்படுகிறது. அதே போல நிலத்தை விட்டு அகன்ற தானியங்களோடு, புலம் பெயர்ந்த மனிதர்களின் வலியையும் தொடர்புபடுத்தி பார்க்க முடிகிறது.
குட்டியம்முவும் சில கவிதைகளும் (பக்.20) – இதில் மண்ணாலாவது என்ற ஒரு கவிதை :
மண்ணால்
பானகம் ஆற்றுகிறாள்
மண்ணால் குளிப்பாட்டிவிடுகிறாள்
மண்ணில் விளையாடிவரும்
பொம்மையைப் பாப்பா என்கிறாள்
பிறகு அதே மண்ணை
உதறிவிட்டெழுந்து தனித்து வருகிறாள் மண்ணுக்குள்தான்
எத்தனை எத்தனை சிதறல்கள்?
மண் என்பது குழந்தைகளுக்கு நாம் நினைத்திருப்பதைப் போல வெறும் மண் அல்ல. குழந்தைகளின் கற்பனையில் அவை விலை மதிப்பிட முடியாத ஒன்று. மண்ணிலே கோபுரம் எழுப்புவார்கள் மண்ணிலே வீடு கட்டுவார்கள் மண்ணிலே சமைப்பார்கள் மண்ணையே மாளிகையாக்கி விளையாடும் குழந்தைகளின் விளையாட்டை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?
மண்ணுக்குள் சிந்தும் அவர்களின் கற்பனைச் சிதறல்கள்தான் எத்தனை? எத்தனை?
அம்பிகாவர்ஷினியின் குழந்தை விளையாட்டின் பாற்பட்ட இந்தக் கவனம் பாராட்டுதற்குரியது.
சுடர்விடும் மெழுகுவர்த்தி(பக்.16)
உன் பிம்பத்தில்
மூன்று மெழுகுவர்த்திகள் சுடர்கின்றன…
அவற்றில் ஒன்றுக்கு மட்டும் தேனிற முறுவல்…
என் மெழுகுவர்த்திக்கு முகம் கருத்திருக்கிறது
இத்தனையாண்டுகளில் அது
எரிந்திருக்கக்கூடும்தான்
எரிதலை மறந்து கோவில் துாண்களில் ஒன்றில்
தலைசாய்த்தபடி தயங்கிக் கொண்டிருக்கிறது
போதும் இனியும் அது உருகுவதென்றால்
தயங்க வேண்டியதில்லை…
மூங்கில் மரங்களை விலக்கிக் கொண்டு வருகிறாய்…
உன் முகத்தில் நிழலாடும் வாட்டம்
நீலமயிலொன்றின் தோகை முறிவாயிருக்கிறது…
ஏய், மெழுகுவர்த்தி !
இன்னும் கொஞ்சம் முகம் சுருங்கியே வா
நீ விலக்கிக்கொண்டு வருவது
பச்சை மூங்கில்களின் பசலை வட்டங்களை…
சுடர்விடும் மெழுகுவர்த்தியில்
ஒளிர்ந்து ஒளிர்ந்து
உருகுகின்றன நட்சத்திரங்கள்
எப்படி அச்செடுக்க
ஒளியாகவா? மெழுகாகவா?
சுடர்விடும் இவரது மொழி, மூங்கில் மரங்களை விலக்கிக் கொண்டு வருகிறது. நீல மயிலொன்றின் தோகை முறிவாகவும், பச்சை மூங்கில்களின் பசலை வட்டங்களாகவும் தனது ஒளியின் முகத்தை சுருக்கவோ அல்லது விரிக்கவோ செய்யும் அந்தச் சுடரின் ஒளி போலவே இவரது சொற்கள் ஒளிர்ந்து ஒளிர்ந்து நட்சத்திரங்களாய் உருகுகின்றன. எப்படி அச்செடுக்க .. ஒளியாகவா? மெழுகாகவா? என்ற கேள்வியில் ஒளியைப் போலவே நகலெடுக்க முடியாத வார்த்தை வளங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கவிதை சில நேரங்களில் வார்த்தைகளுக்குள் தன் உடலைத்திருகி நுழைப்பதைக்கூட இன்று ஒரு அழகியல் கவிதையாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம். இந்தக் கவிதை வார்த்தைகளுக்காக தன்னை வார்த்துக் கொண்ட பச்சை மூங்கில்கள்.
அம்பிகாவர்ஷினியின் மழலை வெயில் (பக்.34) என்னை வெகுவாக ஈர்த்தது.
மாலை வெயில்தான்
எவ்வளவு சுதந்திரமாய்
வீட்டினுள் நிரம்பிவழிகிறது
ஒரு தென்னைமரத்தின்
கீற்றுகளைப் பிடித்துத் தொட்டிலாடுகிறது
வெண்மேகம் வரைந்து
சாம்பல் நிறம் தீட்டுகிறது
மிதித்துச் செல்வோரை
நிழல்களாக்கிப் பார்க்கிறது
வாசல் நின்று
தன்னை வரவேற்ற
மரக்கதவின் முகத்தில்
பொன்முலாம் பூசிய பூக்களை
அப்பிவிடுகிறது
வழியில்
காலி குடத்தைவைத்து
பச்சைக் குதிரை தாண்டியும்
பூரித்தோடி வருமதன் கால்களுக்கு
இருளும் வரை
கொண்டாட்டம்தான்….
வெயிலின் கொண்டாட்டத்தை எளிமையான மொழியில் இயல்பான துள்ளலுடன் அழகாக வெளிப்படுத்தும் போதுதான், வெயில் நாம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகத் தோன்றுகிறது.
வெயில் பற்றிய இந்தக் கவிதையை வாசிக்கும் போதுதான், எனக்கு குட்டி ரேவதியின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.
மேகப் பொதிகள் சிதையும்
அடிவானப் படுகை
சுண்ணாம்பு வெயில்
அழுத்தமான மௌனத்தோடு வெறிக்கிறது
வெம்மையாய் புகையும்
வெறுமையின் சுவாசம்
கருவேலப் புதர் நிழலுடன்
சுருண்டு பதுங்கும் ஆடு
தன் ஒற்றைக் காலால்
என் முகத்தின் மீது
நடந்து சென்றது
வெயில்
என்று “பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’ என்ற கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார்.
மழையை கொண்டாடுவதற்கு நமது மொழியில் மழைக் கவிதைகள் நிறையவே உண்டு. ஆனால், வெயிலைக் கொண்டாட நம்முடைய மொழிக்குத் திறமிருந்தாலும், நம் விருப்பம் எதுவோ, அதுதான் மொழியிலும் தேர்வாகிறது. நம்முடைய தமிழ்க் கவிதைகளில் மழையைக் கொண்டாடிய அளவிற்கு வெயிலைக் கொண்டாடியதில்லை. ஏனெனில் நம் நிலத்தில் வெயில் அதிகம். மழை குறைவு.
எது நமக்குத் தேவையோ, அதை நோக்கித்தான் நமது மொழியும் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், அம்பிகாவர்ஷினி கொண்டாடுவது தலையைப் பிளக்கக்கூடிய உச்சிவெயில் அல்ல. இள-ை மயான மாலை வெயிலைத்தான் கொண்டாடுகிறார். அதிலும் இவருடைய மொழியில் மாலை வெயில் பச்சைக் குதிரையும் தாண்டி வருகிறது. இந்த விளையாட்டு இருந்தால் வெயில் என்ன? மழை என்ன? எல்லாமே கொண்டாட்டம்தான்.
இந்தக் கவிதைக்கு நேர்மாறாக இன்னொரு கவிதை இந்தத் தொகுப்பில் உள்ளது. குடைவரை மழை (பக்.55)
இதை வாசிக்கும்போதே கவிதையை குறிப்பெடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
1) புராதன வாழ்வுக்கு / நாக்கை நீட்டும் மலை
2) அங்கு வரலாறுகளை விற்கும் / ஒரு கடைப்பரப்பியின் / அகோரப் பசி
3) புகைப்படம் எடுக்கும் / கனவுகள் புதைந்து/ அண்ணாந்து பார்த்தால் சித்தன்ன வாசல் ஓவியத்தில்/ ஆயிரம் தாமரைகள்
4) இருட்டறைக்குள் / மௌனித்திருக்கும் சிலைகள்
5) வெளியே மழை என்றாலும் / உள்ளே வியர்க்கும் அலைபேசிகள்
6) மலர்களற்ற மரத்தில் / மழை மொக்குகள்
7) ஒரு மிடறு மூலிகை வண்ணம் விழுங்கி / பாறை வழுக்கில் கால் பதிக்க இடம் தேடுதல்
8) மலை உச்சியிலிருந்து பார்க்கும் போது /. உலகம் ஒரு சிற்றுாரைப் போலவே மாறுதல்
சித்தன்னவாசல் ஓவியங்களைப் போலவே இவரது கவிதை வரைவுகள் இவருக்குள் தீட்டும் ஓவியங்கள்! இந்தக் கவிதையின் வழியே பிரதிபலிப்பது ஒருவேளை பிகாசோ ஓவியமாகக்கூட இருக்கலாம். கவிதைக்காரர்களையும்கூட பிகாசோ விட்டு வைக்கவில்லை என்பது போல் தெரிகிறது.
பக்.67ல் ஒரு சிறிய கவிதையொன்று என்னை லேசாக சிதறடித்தது.
மூங்கில் மரத்தைச் சுற்றி
குறுந்தகடாய்
உதிர்ந்து கிடக்கின்றன
சருகுகள்
காற்று சுழன்றால் தேவலாம்
ஒரு மெல்லிசைக்கு…
சருகுகள் குறுந்தகடுகளாகவும், காற்று சுழன்றால் அது ஒரு மெல்லிசையாகவும் மாறுமென்றால், கவிதை எதார்த்த வாதங்களை உதறி விட்டு, மாயத்தன்மைக்குள் மாறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
என் கண்ணீரின் ஒருத்துளி விஷம் நீ (பக்.45) என்ற கவிதையில் கண்ணீர் பற்றிய இவரது வருணனைகள் சொற்களுக்குள் அடங்க மறுக்கின்றன. இவரது கண்ணீரோடு சொற்களும் நுங்கு போல கண் பறித்துக் கொத்துக்கொத்தாய் கிடக்கிறது.
அம்பிகாவர்ஷினியின் பெரும்பாலான கவிதைகளில் மழை என்ற சொல் அதிகமான இடம் பெறுகிறது. மழைக்கும் இவரது கவிதை மொழிக்குமான உறவை, பல்வேறு விதமான இவரது உணர்வு நிலைகளோடு கலந்து வண்ண வண்ணக் குடைகளாகவே விரித்து வைத்திருக்கிறார்.
பொதுவாக இவரது கவிநிலத்தில் மழைப்பொலிவு அதிகமாகவே இருந்தாலும் இவரது கவிதை வானில் மிதந்தலையும் சொற்பறவைகள் அவற்றிற்கான தானியங்களை இவரது நிலம் வழங்கும் மொழியிலிருந்தே பெற்றுக் கொள்கின்றன.
கவிஞர் மஞ்சுளா.
நூல் : | தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | க.சி.அம்பிகாவர்ஷினி (புலமி) |
வெளியீடு: | படி வெளியீடு (டிஸ்கவரி புக் பேலஸ்) |
வெளியான ஆண்டு : | 2019 |
பக்கங்கள் : | 88 |
விலை : | ₹ 90 |
- இந்நூல் குறித்தான மேலும் சில பதிவுகள்:
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.