பெருந்தொற்று ஒட்டுமொத்த மனித சமூகத்தையே  கலங்கடிக்கும்  இந்த சூழலில் நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட  சாதுவான பாரம்பரியம் என்கிற  ஃபின்லாந்து நாவல் நமது தற்போதைய  வாழ்வின் மீதான புரிதலை ஆழப்படுத்துகிறது.

1919-ல் எழுதப்பட்ட  இந்நாவல் 1936-ல் அலெக்சாண்டர் மேட்சன் அவர்களால்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 2017-ல் முடன் குட்டி முகம்மது அலி மூலம் ஆங்கிலத்திலிருந்து தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டது.

ஃபின்லாந்தின் மிகச் சிறந்த எழுத்தாளராக கொண்டாடப்படும் சீலன்பா கடுமையான வறுமையின் பின்புலத்தை சுவாசித்துக் கொண்டு 1888-ல் பிறந்தார். தாவர அறிவியல் கல்வி பயிற்சியும், இயற்கை மீதான ஈடுபாடும் ,ஏழை மக்கள் மீதான பிணைப்பும் அவரது எழுத்தை செழுமையாக்கின.

இவரது முதல் நாவல் “இளமையில் இருக்கும் போது தூங்கியவள் “. அவர் எழுதிய “சாதுவான பாரம்பரியம் இரண்டாவது நாவலாகும். இது நோபல் பரிசு பெற்றது. தான் வாழும் காலத்தில் ஃபின்லாந்தில் நிகழ்ந்த கடுமையான பஞ்சத்தையும், புரட்சியையும், போரையும் ஒரு குடியானவனின் பிரதிநிதியாக நின்று பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் ஃபின்லாந்தின் கடைநிலை  குடிமகனின் வாழ்வையும்,வறுமையும், நிலத்தின் மீதான அவனது தொடர்பையும், அவனது அக  சிந்தனையையும் அற்புதமாக பதிவு செய்தமைக்காக  1939-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

பல தலைமுறைகளாக  மனித இனத்தின் அடி ஆழத்தில் பதிந்துள்ள துயர் மிகுந்த  உணர்வுகளின் வரலாற்றைப் பேசுகிறது. யாருக்கும் எந்த வகையிலும் தீங்கு புரியாத யூகா என்கிற முதியவரின் மரணத்திலிருந்து  இல்லை. மரண தண்டனையிலிருந்து கதை துவங்குகிறது.

மரணத்தை விட அசாத்தியமான வலிகளை அவர் தன் வாழ்வில் சந்தித்திருப்பதால் அவரது வாழ்வில் இது சிறு நிகழ்வு மட்டுமே. மரணத்தை முன்னமே கூறி விட்டப் பின்பும் கூட ஒரு நெடுஞ்சாலை தொலைதூரப் பயணத்திற்காக நம்மை வரவேற்கிறது.

யூகாவின் முழுப்பெயர் யூகா தொய்வோலா என்கிற யூஸி தொய்வோலா சில நேரத்தில் இவன் யான்னெ என்றும் அழைக்கப்பட்டான்.

ஃபின்லாந்தின் “கொக்கமாக்கி ” பகுதியில் 1857-ல் பெஞ்சமினின்  மூன்றாவது மனைவிக்கு யூகா பிறக்கிறான்.

“ஒரு குழந்தை பிறந்த சிறிது காலத்திற்குள் இறந்து போனால் அது குழந்தை பிறந்த போது இருந்ததைவிட அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய சந்தர்ப்பம்” என்கிற மனநிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம். காரணம் பசியும் பட்டினியும்.

1866-ல் தொடங்கி சுமார் மூன்று ஆண்டுகள் வரை ஃபின்லாந்தின் வரலாற்றில் அடர்ந்த  நெடும் நிழலாய் அச்சுறுத்தும் கொடிய பஞ்சம் நிலவியது. கடுமையான குளிர் மற்றும்  பெரும் மழையால் விளைச்சல் முற்றிலும்  சேதமடைந்தது.மக்கள் கடும் பசியில் மாண்டனர்.

நோயாளிகள் மற்றும் வயதானவர்களின் ஆடைகளை களவாடிக் கொள்ளும் வகையிலான வறுமையின் கோரத்தாண்டவங்கள். சுமார் ஒன்றறை லட்சம் மக்கள் இந்த பெரும் பஞ்சத்தால் மண்ணுக்கு உரமாயினர்.

யூகாவின் தந்தை பெஞ்சமினின் விவசாயம் கானல் நீராகிறது. அவனுக்கு சொந்தமாக இருந்த சிறிது நிலத்தையைும் கடனுக்கு ஈடாக பறிக்கப்படுகிறது.

பெண்களை அடிமையாக நடத்தும் ஆணின் ஏதேச்சதிகாரம் உலகம் முழுவதும் இருந்த ஒரு உண்மையான பொதுவுடமை. குழந்தைகளை அடிப்பதும் பெண்களை இம்சிப்பதற்கும் பொருளாதாரம் ஒரு போதும் தடையாக இருந்தது கிடையாது.

சிறு வயதிலேயே தனது தந்தையின் மரணம், பெரும் பஞ்சத்தின் இறுக்கமான பிடி, பசியும் பட்டினியும் யூகாவையும் அவனது தாயையும் அங்கிருந்து துரத்துகிறது.  பிழைத்தலுக்கான பயம் உள்ளத்தில் நிறைந்திருந்த போதும் அவர்கள் செல்லும் வழியில், தனிமையின் பயம் மட்டும் தீண்டவில்லை. அவர்களைப் போன்றே  பல்லாயிரம் மக்கள் கூட்டம் கூட்டமாய்  நெடும் பயணத்தை பஞ்சத்திலிருந்து விலகிச் செல்ல மேற்கொண்டுள்ளார்கள். எரிபொருள் இல்லாத வாகனம் போல் மனித சடலங்கள் வழி முழுவதும் கிடக்கின்றன. ஒரு சிறுமி தடுமாறும் கண்களுடன் (அழுவதற்கு கண்ணீர் வேண்டுமெனில் அதற்கும் உணவு தேவை.) தன் தாயின் சடலத்தினருகில் நின்று கொண்டேயிருக்கிறாள்.

” வா கிராமத்திற்கு போகலாம் இல்லையென்றால் இரவில் ஓநாய்கள் உன்னை பிடித்து தின்று விடும்” அந்த சிறுமியின் வெற்று பார்வை அந்த சடலத்தின் மீதே வெறித்திருக்கிறது.

“விளிம்புவரை நிரம்பித் தளும்புகிறது, துயரின் கோப்பை .”

மேலும்..,

“இப்போது மட்டும் என்ன ..? நமது காலத்திலும் இது நிரம்பி தான் இருந்தது ”

இந்த காலச்சக்கரத்தின்  முன்னறிவிப்பு  நமது தற்போதைய சூழலை ஒப்பிடுகிறது. எழுத்தாளன் மீதான வியப்பு மேலிடுகிறது.

தாய் மாமன் வீட்டில் அடைக்கலமாகும் யூகா மிதமிஞ்சிய உழைப்பை தருகிறான். அதே அளவு அவமானத்தையும் பெறுகிறான். அவன் தாயையும் இழந்து விட்டான்.

வேறு ஒருவர் செய்யும் செயலுக்கு தண்டனைகள் பெறுகிறான். மாமன் வீட்டில் துரத்தப்பட்டு, வேறு  பல இடங்கள்  சென்று  பலரால் ஏமாற்றப்பட்டு  மரம் வெட்டும் வேலை செய்து தேய்ந்து போகிறான்.

இறுதியில் காய்ந்து சருகாகி தனது பூர்வீக கிராமத்தில் வேலைக்காரி ரீனாவை தற்செயலாய்  சந்தித்து  திருமணம் செய்து கொள்கிறான்.

“பல ஊர்களை சுற்றித் திரிந்து பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வரும் ஒருவனுக்கு ஊரிலேயே தங்கி வாழ்பவர்களை விடவும் நல்ல நிலையில் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது .நல்ல உடை, பணம் ,பிறரை விட உயர் நிலையிலிருப்பதற்கான தோரணையை அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.”

இதற்கு நேர் எதிரான தோரணையில்  தன் சொந்த கிராமத்தில்  யூகா குடி அமர்கிறான் .

ஃபின்லாந்தின் பண்ணை விவசாய முறையில் பெருமளவு நிலம் கொண்ட ஜமீன் முதலாளி தனது கீழுள்ள விவசாயிக்கு ஒரு சிறு பகுதி நிலத்தை குத்தகையாக  அளிப்பார். அதற்கு ஈடாக குத்தகை விவசாயி ஜமீன் நிலத்தில் ஊதியமின்றி வேலை செய்ய வேண்டும். அவனுக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் இருந்து வரும் மகசூல் தான் அவன் கூலி. அந்நிலத்தில் வசிக்க சிறு வீடும் இருக்கும்.

வறுமை இரைப்பையை இறுக்கி பிடித்தாலும் ஏழை தாய்மார்களின் கருப்பையை அல்ல. யூகா ஐந்து பிள்ளைகளுக்கு தகப்பனாகிறான்.  ஒன்று ஒடிப் போகிறது. ஒன்று நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறது. இன்னொன்று கொத்தடிமை வேலைக்குச் சென்று மாண்டு போகிறது.  இறுதியாக மனைவியும் ஒரு துளி மருந்திற்கு வழியில்லாமல் இறந்து போகிறாள். ஒரு மனிதனுக்கு துயரத்தின் உச்சம் எதுவோ அதுவே யூகாவிற்கு விதிக்கப்பட்டதாக இருக்கிறது.

அப்போது அந்நாட்டில்  வேலை நேரம் 15 மணி நேரம். அவ்வளவு உழைத்தாலும் நிரம்பியது  என்னவோ வெறுமை மட்டும் தான்.

வாழ்க்கை தத்துவம் எனும் இயற்கை நிகழ்வு  யூகாவின் உதிர்ந்த மூளையில் மங்கலாக உருவாகிறது.

“தலை காலியாக உள்ள பெரும்பாலான சாதாரண மக்களுக்கு கடவுள் ஒரு பெயர்தான்”.

வாழ்கை முழுவதும் வெறும் உழைப்பு மட்டும் தான். நம்பிக்கை வற்றிப் போய் சோர்ந்த கிழவனின் புலம்பல்கள் அவனை புரட்சிக்கும்பலுக்குள்  தள்ளி விட்டது.

முதலில் சுவீடன் மன்னராட்சியின் கீழிருந்த ஃபின்லாந்து 1808-ல் ருசியாவின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டது. உலகப்போரின் தோல்விக்கு பின்பு ருசியா பின்வாங்கிக் கொண்டதும் 1917-ல் விடுதலை பெற்றது. அப்போது உள்நாட்டு கலவரங்கள் வெடித்தன. அதில் விவசாய கூலிகள் தொழிலாளிகள் அடங்கிய செஞ்சேனை அணியை, விவசாய முதலாளிகள், மத்திய (அ) உயர் வர்க்கத்தினர் அடங்கிய வெள்ளை அணி வெற்றி கொண்டது.

“போர் தோல்வியில் முடியாமலிருக்க வேண்டுமானால் போரின் போது கொல்லப்படுவதில் ஒருவன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ”

ஒரு குடியானவனையும் அவனது குடும்பத்தையும் வைத்து ஃபின்லாந்து  தேசத்தின் ஒரு அதிமுக்கிய  வரலாற்று நிகழ்வை பதிவுசெய்துள்ளார் சீலன்பா. நூறாண்டுகள் கடந்த பின்பும் ஒரு அதிர்வை வாசகனுக்குள் ஏற்படுத்தும் இந்த எழுத்தாளனை  கொண்டாடி மகிழ்கிறேன்.

நிறைய மொழியாக்க படைப்புகள் மூலத்தின் உணர்வை  முழுமையாக கடத்துவதில்லை.  மொழிப்பெயர்ப்பாளர் முடவன்குட்டி முகம்மதுஅலி அதை முறியடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

– மஞ்சுநாத்

நூல் தகவல்:

நூல் : சாதுவான பாரம்பரியம்

பிரிவு :  நாவல், மொழிபெயர்ப்பு

ஆசிரியர்:  ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா

தமிழில்: முடவன் குட்டி முஹம்மது அலி

பதிப்பகம் : காலச்சுவடு

விலை : ரூ 225

வெளியான ஆண்டு : 2018

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *