காற்று வளையம். தலைப்பே சற்று தடுமாற்றத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் கற்பு, ஒழுக்கம், காதல், உறவு சமூகம், சாதி என்பன போன்ற ஏதோ ஒரு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டோ அல்லது அவன் தனக்குத் தானாக அந்த வளையத்தைப் போட்டுக் கொண்டோ இருக்கிறான். அப்போது காற்று வளையம் சொல்ல வருவது என்னவாக இருக்கும் என்று எண்ணியபடியே பதிப்பக விபரம். அட்டை வடிவமைப்பு.. நூலாக்க விபரங்கள் கடந்து முன்னுரையைப் படிக்கத் தொடங்கினேன். அப்போது தான் இந்த நாவல் அவள் விகடனில் தொடராக வெளிவந்ததை அறிந்து கொண்டேன். மேலும் இந்தக் கதைக்கான கரு யாரிடமிருந்து உருவானது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நாவலில் பயணிக்கும் கதாபாத்திரங்கள் :

 • விஷ்ணு
 • மல்லிகா
 • அர்ச்சனா
 • ராகவன்
 • விக்னேஷ்
 • செல்வம்
 • நித்யா
 • முதலாளி
 • சுதாகர்
 • மணி

இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் இதைக் குறித்து ஒரு ஐயம் தோன்றியது. இதை நாவல் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை நீள்கதை என்று எடுத்துக் கொள்ளலாமா?. நாவல் என்றால் குறைவான கதாபாத்திரங்கள் மற்றும் குறைந்த திருப்பங்கள் தான் இருக்கின்றனவே. நீள் கதை என்றால் சரியாக இருக்குமோ என்ற மனவோட்டத்தின் நடுவே காற்று வளையத்தை கைகளால் வரைந்து பார்த்துக் கொண்டேன். என்னைச் சுற்றி வரைந்தேன் . எதிரிலிருப்பவரைச் சுற்றி வரைந்தேன். வழியில் போவோர் வருவோரைச் சுற்றி.. இப்படி வரைந்து கொண்டே இருந்தேன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வடிவத்தில் சூழ்ந்து நின்ற காற்று வளையத்தைக் காதலர்களைச் சுற்றி வரைந்து பார்த்தேன் அங்கே தான் அதற்கான முழுமை எனக்குப் புரிய ஆரம்பித்தது.

இரண்டு மனங்களுக்கிடையே உள்ள எளிதில் உடைந்துவிடக்கூடிய வளையத்தை விரல் நகங்களுக்கிடையே மாட்டிக் கொண்ட குறுந்தகடைப் போலக் கையாள வேண்டியுள்ளது. காதல் இது எங்குப் பிறக்கிறது . எத்தனை முறை. எத்தனை வகை இதன் ஆயுள் எவ்வளவு. இது போன்ற கேள்விகள் சமீபமாக என் மனதைக் குதறியபடியே இருக்கின்றன.

எனக்கு ஒருவரை பிடித்திருக்கிறது அவர் என்னை ஈர்க்கிறார் என்றால் அதற்கு நான் காதலென்று பெயரிட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் இன்னொருவர் இன்னொரு முறையில் அதே ஈர்ப்பை மனதிற்குள் உணர்த்துகிறார் என்றால் அதையும் என் மனம் காதல் என்றே கொண்டாடுகிறது. சிலரிடம் இதைப் பற்றி விவாதித்தேன் அவர்கள் இதை உளவியல் என்கிறார்கள். மனித மனம் தாவத்தான் செய்யும் என்கிறார்கள். சிலர் காமத்தைத்தான் காதலென்று முகமூடியிட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள் இன்னும் சிலர் அரிப்பு என்கிறார்கள். ஒரு காதல் ஏற்படும் நிமிடங்களில் அந்த இரண்டு மனங்களுக்குமிடையே நிகழும் நுட்பமான தடுமாற்றங்களை அழகியலோடு சொல்லுகின்ற நாவல்தான் இந்தக் காற்று வளையம்.

அர்ச்சனா விக்னேஷ் இவர்களுக்கிடையே மலரும் காதல். அந்தக் காதல் அவர்களுடன் எத்தனை நாள் பயணிக்கிறது என்பது தான் இந்த நாவலின் ஒரு வரிக் கதை. விக்னேஷிற்கு அம்மா இல்லை நடுத்தர வசதியுள்ள அப்பா தான் வேலை செய்துவந்த கடையில் ஏற்பட்ட திருட்டுப் பழியினால் மனநிலை பாதிக்கப்பட அவரை அழைத்துக் கொண்டு சென்னை வரும் விக்னேஷ் மனநல மருத்துவரான அர்ச்சனாவின் தந்தையிடம் தன் தந்தைக்கு மருத்துவம் பார்க்கச் செல்கிறான்.சென்ற இடத்தில் காதல் மலர்கிறது . அர்ச்சனாவின் படித்த மற்றும் தாங்களும் காதல் திருமணம் செய்து கொண்ட பெற்றோரால் இவர்களது காதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.நெருங்கிப் பழகும் அர்ச்சனாவும் விக்னேஷும் சந்தர்ப்ப வயத்தால் உடலால் இணைகிறார்கள். பாதுகாப்பான முறையில் இவர்கள் வைத்துக் கொண்ட உடலுறவு அடிக்கடி நடக்கிறது. ஒரு கட்டத்தில் எந்த காரணமும் இன்றி இருவரிடையேயான ஈர்ப்பு குறைகிறது . தினமும் பேசாமல் இருக்கவே முடியாது என்று இருந்தவர்கள் வாரக் கணக்கில் பேசாமல் இருக்கிறார்கள். சந்தித்துக் கொண்டால் காதலை அள்ளி அள்ளி ருசித்தவர்கள் இப்போது சந்தித்தால் அவர்களின் எந்த உரையாடலும் சுவைப்பதில்லை இந்த இடைவெளி அத்தனை ஆத்மார்த்தமாக இருந்த இரண்டு மனங்களிடையே வந்ததற்கான உளவியல் என்ன என்பதைத்தான் இந்தக் காற்று வளையம் நிறுவ முயற்சி செய்திருக்கிறது. இந்த நாவலின் நுண்ணிழை எளிதில் பேசக் கூடிய விவாதப் பொருள் இல்லை அறிவியல் ரீதியாகவும் இதை நாம் அணுகியாக வேண்டும். அதே சமயம் மனம் என்பது முழுவதுமாக அறிவியலுக்குள் பிடிபடும் விசயமும் இல்லை. இந்த நாவலை வாசித்து இதை நான்காகப் பிரித்துக் கொண்டேன்

 • அன்பு
 • காதல்
 • நம்பிக்கை
 • காமம்

இந்த நாவலில் அன்பு என்பது பெற்றோர்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனாவின் பெற்றோரும் சரி விக்னேஷின் தந்தையும் சரி அன்பிற்கான முழுமையைத் தருகிறார்கள்.

 • காதல்

இந்த நாவலில் அர்ச்சனா விக்னேஷ் காதலோடு அவர்களின் நண்பர்களான செல்வம் நித்யா காதலும் இடம்பெறுகிறது இந்த இரண்டு காதல்களுமே காதலின் ஆழத்தை நிறுவிச் செல்கின்றன

 • நம்பிக்கை

இந்த நாவலில் செல்வம் நித்யா காதலைப் பற்றிச் சொல்லும்போது நித்யாவின் பொசசிவ்னஸ் காரணமாகச் செல்வத்தைத் திருமணம் செய்து கொள்ள அவள் சொன்ன ஒரு பொய் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த செல்வத்தின் மனநிலையில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது. நம்பகத்தன்மை குறைவது காதலை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது போன்றவற்றை நிறுவுகிறது

 • காமம்

இதுதான் இந்த நாவல் சொல்லியிருக்கும் காற்று வளையம் இரண்டு மனங்களைச் சுற்றியிருக்கும் காம வளையம். இதில் ஏற்படும் சலிப்பே இரண்டு மனங்களை விலக்கி வைக்கிறது. திருமணம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட உறவுமுறை காதல் என்பதில் கட்டுப்பாடுகள் அத்தனை இருப்பதில்லை. அதிலும் பெற்றோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காதலுக்கான சுதந்திரம் இன்னும் அதிகம் இப்போதைய சமூகத்தில் மணமுறிவு அதிக அளவில் ஏற்பட்டு இருப்பதற்கு இந்த மெல்லிய நூலிழைப் புரிதலின்மையே காரணமாக இருக்கின்றது. இரு மனங்கள் இணையும்போது அதில் சில ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப் பாதுகாக்கப்படும் ரகசியங்களில் உள்ள ஈர்ப்புதான் அந்த மனங்களை அதே கிளர்ச்சியோடு வைத்திருக்கும் . முழு உடலையும் நிர்வாணமாகப் பார்ப்பவனுக்கு ஏற்படும் சலிப்பு மிச்சம் மீதி வைத்து ரசிப்பவனுக்கு வருவதில்லை அதே போலத்தான் காதலும் காமம் என்ற உடல் தாகத்தை ஒட்டுமொத்தமாகத் தணித்துக் கொள்வதும் அதில் எதிர்பார்த்த முழுமை கிடைக்காத விரக்தியுமே காதலை மழுங்கடிக்கக் கூடியதாக அமைந்துவிடுகிறது.

ஆகவே இந்தக் காற்று வளையத்திற்குள் அடைபட்டிருக்கும் ரகசியங்கள் ரகசியங்களாக இருக்கும் வரை காதல் காதலாக இருக்கும் என்பதே உண்மை. மேலும் இந்த நாவலின் நோக்கமென்பது திருமணத்திற்குப் பின் கட்டமைக்கப்பட்ட உறவிலும் சகிப்புத்தன்மையும் விட்டுக் கொடுத்தலும் இருந்தாலும் பரஸ்பரம் சலிப்பை ஒப்புக்கொண்டு மனம் விட்டு உரையாடுதல். புதுப் பயணங்கள் ,மாறுபட்ட உடல் உறவு, மீண்டும் மீண்டும் எதையேனும் தேடுதல் போன்றவற்றில் ஈடுபடல். என்ற திசைகளில் பயணிக்கும் மனதின் நூலிழை வளையத்தையும் விட்டுச் செல்வதாக இருக்கிறது. எது எப்படியோ மனமாராய்தல் என்பது ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே நிகழ்த்திக் கொள்ள வேண்டியது அப்படி ஒரு சுயபரிசீலனைக்குட்பட்ட தயாராகும் போது வளையங்களும் உறவுகளும் பலப்படும் என்பதில் ஐயமில்லை.

மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும் பாஸ்கர் சக்தி அவர்களுக்கு.


அம்பிகா குமரன்

 

நூல் தகவல்:
நூல் : காற்று வளையம்
வகை : நாவல்
ஆசிரியர்: பாஸ்கர் சக்தி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு :  –
பக்கங்கள் :  –
விலை :   120
Buy on Amazon

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *