‘தேக்குமரப் பூக்களாலன மீச்சிறு மேகமூட்டம் ’கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற  கவிஞர் க.சி. அம்பிகாவர்ஷினி-யின் “என்னுரை” 


“என்னைச் சுற்றும் உலகம் …”

னது தனிமையை நான் உணர விரும்பும் போதெல்லாம் என்னால் தனிமையாக இருக்க முடிவதில்லை.என்னை ஒளி கூசும் வெளிச்சத்தில் அமர்த்திவிட்டு நீங்கள் செல்வதாயின் என்னைச் சுற்றிலும் எங்காவது சிறிது தொலைவிலாவது தனிமையென்பது உங்கள் கண்களுக்குத் தென்படுமாயின் நீங்கள் எப்படி என்னை அமர்த்திவிட்டுச் செல்வீர்களோ அப்படியே அங்கே நிலைத்துவிடுவேன். ஆனால் இந்தத் தனிமையை எப்படி உங்களால் கண்களால் காணமுடியும் ?! என்னை எங்காவது அமரவைத்துத் தான் பாருங்களேன்.

கவிதை ஒரு வனமென்றால் அங்கு சுதந்திரமாக காற்று கூட வந்து போக முடியாது. ஆனால் வனத்தினுள் சுவாசித்தல் நிகழும். வாழ்வு ஒரு பெரும் அலைக்கழிப்பு.  இந்த அலைக்கழிப்பிலிருந்து எப்போது நான் விடுபடுகிறேனோ அப்போதே கவிதையின் கரங்களில் நான் கரையாகிவிடுகிறேன்.

உறக்கத்தைக் காட்டிலும் கனவுகள் எனக்கு ஆழ்ந்து வருகின்றன. கனவுகளே என் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் துவக்கிவிடுகின்றன. கனவுகளால் என்ன செய்துவிட முடியுமென்றால் பரந்த உலகிலிருந்து எனக்கொரு அரவணைப்புச் செய்துவிட முடியும்.

நான் என்பது இயற்கையின் கண்கள்.எனது கண்கள் வழியே நானெழுதும் கவிதைகளுக்கு பார்வையுண்டாயின் அவை மெல்ல நகரும் இயற்கையின் உயிர்மையாயிருக்கின்றன. என் வீட்டிற்கு எதிர்த்தது போல ஒரு மலை ஆவாரை மரமிருக்கிறது. அந்த மரத்திலிருந்து முதல் முறையாக ஆவாரைப் பூக்கள் மலர்ந்த சில கிளைகளை ஒடித்து அதிலுள்ள பூக்களைப் பறித்து தலையில் ஒரு இளவரசியைப் போல செருகிக் கொண்டேன். அதோடு ஆவாரை மரம் தொடர்பாக ஒரு பழமொழியும் அறிந்து கொண்டேன். பிறகு மழைக்காலம் தொடங்கிய சில நாட்களில் அந்த மரத்தின் கீழ் ஒதுக்குப்புறமாக ஒரு வெள்ளை நிறக் காளான் முளைத்திருப்பதைக் கண்டேன். அதிலிருந்து சில நாட்கள் கழிந்து அதே காளான் தனது வளர்ச்சியைக் கூட்டியிருப்பதையும் கண்டேன். அது தனது குடையை பாரம் தாங்காது போல ஒரு பக்கமாக தலைசாய்த்திருந்தது. மரத்தையொட்டி நின்றவாறு புகைப்படம் ஒன்று எடுத்துக் கொள்ளும்போது, ஒரு பக்கம் நான் மரத்தை பற்றி நின்றிருக்க மற்றுமொரு பக்கத்தில் சிறிய நத்தைச் சுருளொன்று ஒட்டிக்கொண்டிருந்தது. பிறகு அந்த மரத்தில் மிக ரகசியமாக உருவாகிக்கொண்டிருக்கும் தேன்கூடு தென்படும் போது தான் தெரிந்துகொண்டேன். ஒரு தேனீயாக அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறேன் என்று. கவிதையெனக்கு எனக்குத் தேன்கூடு.

மழைக்குக் கூட பொய்க்கத் தெரிந்துவிட்ட காலகட்டத்தில், மழை வரும்போதெல்லாம் அதை பத்திரமாக கவிதைக்குள் சாட்சியப்படுத்த தெரிந்துவிடும் மாய எதார்த்தம் கவிக்கும் அகநிலைக்கே உரித்தாகிவிடுகிறது. மழை மண்ணில் விழும் போதே பெருமழையாகிவிடுகிறது. எப்போதும் ஒரு புத்துணர்வு எனக்குள் அகநிலையாகிவிடும்போது, என் மழைக் கவிதைகளின் சாட்சியங்கள் மிகப் பத்திரமாக இருப்பதையே உணர்கின்றேன். எனக்கு மழை பிடிக்குமா என்று யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயமாக என்னால் முற்று முழுதாக ஒரு பதிலைக் கொடுக்கத் தெரியாது. கடைசியாக,

“அமானுஷ்யம் தான்

மூன்று முறை

உட்புகுந்தும் ஒரு கனவை

அதனால் கலைத்துவிட

முடியவில்லை…

தூக்கத்தினால் மட்டுமே

விழித்துக்கொள்ளவும் முடிகிறது…”

உறக்கத்தின் பின்னடைவில் என் விழிப்பு நிலையை உணர்ந்துகொண்ட போது எழுதிய வரிகளிவை.இது கவிதை தான்.

க.சி. அம்பிகாவர்ஷினி


நூல் தகவல்:
நூல் : தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: க.சி.அம்பிகாவர்ஷினி (புலமி)
வெளியீடு: படி வெளியீடு (டிஸ்கவரி புக் பேலஸ்)
வெளியான ஆண்டு :  2019
பக்கங்கள் : 88
விலை : 90

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *