புதியமாதவியின்  “பச்சைக் குதிரை” புதினத்தை முன்வைத்து

 

”பின்னை நவீனத்துவம் மையப்படுத்தப்பட்ட, முழுமைப்படுத்தப்பட்ட வரிசை முறைக்கும் இறுதிநிலைக்கும் உட்பட்ட அமைப்புகளை/ஒழுங்கமைவுகளை எதிர்த்து கேள்வி கேட்கிறது. ஆனால் அவ்வாறு அழிக்க நினைப்பதில்லை. பண்பாட்டில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட விழுமியங்களை அல்லது மதிப்புகளை இது இடைமறித்துக் கேள்வி கேட்கிறது.ஆனால் இந்தக் கேள்விகளோ, குறிப்பிட்ட ஒரு முறைமைக்குட்பட்டன அல்ல; மாறாக அந்தந்த விஷயங்களையும் சந்தர்ப்பங்கஆலியும் ஒட்டியனவேயாகும்”எனும் லிண்டா ஹூட்சியோ வின் மேற்கோளை [தி சு நடராசன்,திறனாய்வுக்கலை,பக்237] அடிப்படையாகக் கொண்டு இப்புதினத்துக்குள் நுழைவோமேயானால் மிக எளிதாக வாசகன் கதைக்குள் பயணப்பட இயலும்.

காதலில் திளைத்த சமாதான மேரி ஏன் இறை சகோதரி யாக மாறுகிறாள்…கண்மணி யின் வாழ்க்கையில் நடந்தது என்ன? ஏன் கண்மணி வீட்டை விட்டு வெளியேறினாள்? எது அவளை இப்படியெல்லாம் நடந்து கொள்ளத் தள்ளியது..? ஒரு சாமான்யையாய் வளர்ந்த செந்தாமரையை அரசியலுக்குள் தள்ளியதெது? இவ்வளவு பிரச்னைகளிலும் மருத்துவராகி மற்ற தோழிகளை இணைக்கும் பாலமாக தெளிவான சிந்தனைகளோடி சகத் தோழிகளுக்கு சங்கீதா நிழலாய் இருப்பது எங்கனம்..? இப்படிப் பல்வேறு வினாக்களைத் தன்னுள் கொண்டு பயணிக்கும் பச்சைக் குதிரையைப் பெண்ணியம் சார்ந்த புதினமாய் பார்க்க இயலுமா எனில் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும்.

“இன்று உலகம் எங்கிலும் காணலாகும் பெண்ணியக் கருத்தியல்கள் : 1.மிதவாதப் பெண்ணியக் கருத்தியல் 2.சமதர்மப் பெண்ணியக் கருத்தியல் 3.தீவிரவாதப் பெண்ணியக் கருத்தியல் என மூவகைப்படுகின்றன. இவற்றுள் தீவிரவாதப் பெண்ணியக் கருத்தியல் குடும்பத்தகர்ப்பு,தாய்மைப் புறக்கணிப்பு, ஓரினச்சேர்க்கை ,சோதனைக்குழாய்க் குழந்தை ஆகியவற்றைப் பெண்ணுரிமைத் தீர்வாக முன்வைக்கிறது.இத்தீவிரவாதக் கருத்தியல் இயற்கை விதிகளை மீறுவதால் அடிப்படைப்  பெண்ணியத் தத்துவத்திலிருந்து முரண்படுகிறது. தத்துவம் வேறு கருத்தியல் வேறு என்பதை விளங்கிக் கொண்டால் பெண்ணியம் என்ற தத்துவத்தின் தேவை புரியும்” எனக் குறிப்பிடும் முனைவர் இரா செல்வியின் சிந்தனை இங்கு மிக முக்கியமானது [முனைவர் இரா செல்வி,பெண்ணியமும் மனித குல விடுதலை யும் பக் 25]

“ஒரே சர்ச், ஒரே ஜீசஸ், ஒரே மாதா, ஒரே பைபிள்… எல்லாம் ஒண்ணா இருந்தாலும் இண்டச் சாதி மட்டும் தனித்தனியா எங்கப்போனாலும் விடாம ஒட்டிக்கிட்டே இருக்குதாக்கும்” எனத் தொடங்கும் பச்சைக்குதிரையின் ஓட்டம் சாதி கடந்ததோர் காதல் இணையின் சேர்தலோடு முடிகிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையில் நான்கு கல்லூரித் தோழிகளின் வாழ்வின் மீது தீட்டப்பட்ட கோட்டோவியங்களே புதினத்தை வழிநடத்துகின்றன.
“வாழும்போது மதம் தேவைப்படுகிறதோஎன்னவோ ஒருவன் செத்தபிறகு மதம் அவன் இதுவரை வாழ்ந்து அனுபவித்த உடலை என்ன செய்வது என்பதில் பெரியப்பங்கு வகிக்கிறது என்பது ரொம்பவும் வேடிக்கைதான்” நாவலில் எந்தவித முக்கியத்துவத்துமில்லாத முகம்மது கனியின் மரணம் நாவலின் போக்கில் எவ்வித அதிர்வையும் ஏற்படுத்துவதில்லை.

திருநெல்வேலியில் தொடங்கி மும்பை வழியாக நாக்பூரில் முடியும் நாவலின் MACRO BASE ஆக மதமும் சாதியும் எனில் MICRO BASE ஆக உடலும் உடல் மீதான் அதிகாரங்களும் மீறல்களும் காதல் மற்றும் காமம் தூவப்பட்டு பேசப்படுகின்றன.

நாவலின் பெரும்பான்மையானப் பெண் பாத்திரங்கள் கற்பு எனும் புனிதப்போர்வையை தூக்கி எறிந்துவிட்டு மிக எளிதாக விரும்பியவனுடன் உறவு கொள்கிறார்கள். விதி விலக்காக சங்கீதா. குழப்பங்களூடே பயணிக்கும் பாத்திரங்களுக்கு மத்தியில் சங்கீதா மட்டுமே மிகத் தெளிவாக சிந்திக்கிறாள், தீர்வு சொல்கிறாள். ஆக படிப்பறிவு வாழ்க்கையின் பிரச்னைகளுக்கு தீர்வையோ திசையையோ காட்டுவதாக இல்லை என மறைமுகமாக உணர்த்தும் ஆசிரியர், திராவிட இயக்க அரசியலை..  நடைமுறைகளை செந்தாமரை கைம்பெண்ணாகும் சூழலில் கடுமையாக விமர்சிக்கிறார். செந்தாமரையின் அப்பா இருக்கும் அரசியல் கட்சிக்காரர்கள் கவிஞர் பாரதிதாசனையும் அவர் பாடல்களையும் மேடைகள் தோறும் தூக்கிப்பிடித்தவர்கள். வேரில் பழுத்தப் பலா இவர்கள் தோட்டத்தில் மட்டும் இலையில் பழுத்ததோ? தங்கள் பெண்ணுக்கு மறுமணம் செய்யவில்லையே ஏன்?
நாவல் யார் பார்வையில் சொல்லப்படுகிறது… இடையிடையே முகம் காட்டி தன் குரலைப் பதிவுசெய்யும் கதாசிரியரின் திடீர் நுழைவுகள் வாசிப்பில் சற்றே அயர்ச்சியைத் தரக்கூடும், போலவே உரையாடல்களில் உயிர்ப்பின்மையும்.

“சுய அனுபவத்தின் அடிப்படையிலொருவர் நாவல் எழுதத் தொடங்கும் போது, சில கடந்த கால நிகழ்வுகளை எழுதும் அவசியம் ஏற்படலாம். நாவல் நிகழும் காலத்திற்கும், நாவல் எழுதும் காலத்திற்குமிடையே ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பு. இதை இட்டு நிரப்ப கள ஆய்வும், நூலறிவும் அவருக்குத் தேவைப்படுகின்றன” எனும் ஆ.சிவசுப்பிரமணியனின் [ஆ.சிவசுப்பிரமணியன், இனவரைவியலும் தமிழ் நாவலும் பக் 23] வழிகாட்டுதல் புதியமாதவிக்கு உதவலாம்.

ஃபிளாஷ்பேக்.. சமகாலம் எனப் தாவிப் பறக்கும் புதினத்தின் காலம் எங்குமே புலப்படுவதில்லை. தோட்டக்காரன் முகம்மதுகனியின் எம் ஜி ஆர் பட ஆர்வத்தை மையமாக கொண்ட உரையாடலிலிருந்து புதினம் தொடக்கம் 1970-71 ஆக இருக்கலாமென ஊகிக்க முடிகிறது. ஆனால் நாவலின் பம்பாய் பக்கங்களில் மும்பை பங்குச் சந்தை குண்டு வெடிப்பு குறித்த குறிப்பைக் கொண்டு 1993 -94 என்றும் வாசகன் ஊகிக்கலாமே தவிர ஆசிரியரின் காலப்பதிவுக் குறிப்புகள் காணக்கிடைப்பதில்லை. நாவல் தொடங்கும் திருநெல்வேலி பின்புலம் ஒரு குறியீடெனில் முடிவுறும் நாக்பூர் மற்றொருக் குறியீடாக மலர்வது நம்பிக்கையூட்டுவது.

தன் சுய அனுபவங்களின் மையத்தோடு கற்பனையைக் குழைத்து தீட்டப்பட்டி பச்சைக்குதிரை எனும் இப்புதினம் பின்நவீனத்துவ வாசகனுக்கு புதிய அனுபவங்களை வழங்கும் என்பதில் அய்யமில்லை.


அன்பாதவன்

 

நூல் தகவல்:
நூல்: பச்சைக் குதிரை
பிரிவு : நாவல்
ஆசிரியர்: புதியமாதவி
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
வெளியான ஆண்டு
பக்கங்கள்:
விலை : ₹ 140
 கிண்டில் பதிப்பு:

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *