இராசேந்திரசோழன் கதைகள் நடைமுறை வாழ்கையின் சமூக இயங்குதளத்தின் மீதான எதார்த்தக் கேள்விகளை சமரசமின்றி எழுப்புகிறது. பொருளாதாரப் பாகுபாடு சமூகக்கலச்சார வேர்களின் நீளத்தையும் அதன் ஊன்றிச்செல்லும் ஆற்றலையும் தீர்மானிக்கின்றன. இவரது கதை உலகில் பெண்களின் எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் சத்தமாக எதிரொலிக்கின்றன என்றாலும் ஆண்களின் கவனம் வேறுதிசையில் கட்டுண்டு இருப்பதையும் காணமுடிகிறது.
பெண்களின் மனஉணர்வுகள் வழியே காலத்தை உறைய வைக்கும் சிறுகதைகள் அழுத்தமானவை. சிறந்த இலக்கியங்கள் திரைப்படங்களாகும்போது சுவை குன்றி விடுவதுபோல் சமூக எழுச்சிக்கான கொள்கைக் கோட்பாடுகள் கட்சி என்கிற குறுகி வடிவத்திற்குள் திணிக்கப்பட்டு அதிகாரத்தை அரங்கேற்றும்போது முற்றிலும் பொருத்தமற்ற உருவத்தையே பிரதிபலிக்கிறது. அரசியல் கட்சிகளின் உள்அரசியலை சொல்லும் இவரது கதைகள் விவாததுக்குரியவை.
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள ‘இரசேந்திரசோழன் – தேர்தெடுத்த சிறுகதைகள்’ இருபது கதைகள் கொண்ட தொகுப்பு. இக்கதைகளை தேர்வுசெய்து தொகுத்திருப்பவர்கள் எழுத்தாளர் பா.இரவிக்குமார் மற்றும் பாவலர் புதுவை சீனு.தமிழ்மணி. இரசோ என்கிற பெருங்கலைஞனை உணர வைப்பதே தொகுப்பின் நோக்கம் என்கிறார்கள்.
எழுத்தாளர் இராசேந்திரசோழனின் அனைத்து சிறுகதைகளும் கவனத்துக்குரியவை என்பதோடு அதற்கான தேடலையும் தெளிவையும் இத்தொகுப்பு துவக்கி வைக்கிறது.
கோணல் வடிவங்கள்
மனவக்கிரங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மனித உணர்வுகளோடு அதன் மறுபக்கத்தையும் பிரதிபலிக்கிறது. நேர்மை என்பதை பெண்களிடம் மட்டுமே எதிர்பார்க்கும் ஆண்களின் முதுகில் ஏகத்துக்கும் அழுக்கு சுமைகள். அவைகளை அகற்றி சுத்தப்படுத்துவதற்கும் பெண்ணின் கை அவசியம்… என்றாலும் சில ஆண்களுக்கு பரிசுத்தம் என்பது எட்டாத உயரத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரம். எதிர்மறையாக செயல்புரிந்தாலும் நேர்மையின் சுவடை பற்றியிருக்கும் பெண்ணின் அகம்.
புற்றில் உறையும் பாம்புகள்
கதைக்குப் பொருத்தமான தலைப்பு. ஒரு புற்றில் பாம்புகள் உள்ளதா? இல்லையா? என்பதை அனுபவசாலிகள் வாசத்தின் மூலமாகவே அறிந்து விடுவார்கள். கறையான்கள் தீர்ந்துபோன பின்பு பாம்புகள் தனது இருப்பிடத்தை உடனடியாக மாற்றிக்கொள்ளும். மனிதர்களின் எண்ணங்கன் கறையான்களாக மாறி அவனை/அவளை சிதைத்து விடுகிறது. புரிந்துகொள்ளுதல் பலவிதம். புலம்பலில் விடுதலை என்பது சாத்தியப்படாது. பிணைந்திருக்கும் சங்கிலி எது என்பதை தெரிந்துகொள்ள சற்றுபேசினால் போதும். நமது சங்கிலியை அறிந்துகொள்ள பேசாமலிருத்தலே உத்தமம். பெண்களின் எதிர்மறை அகவெளிப்பாடுகள் புரிதலுக்கும் வெளிப்படுத்துதலுக்கும் இடையில் சமூகம் எனும் கோட்டை சுவர் தடையாக நிற்கிறது. புற்றில் உறையும் பாம்புகள் தமிழின் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றென எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார்.
தனபாக்கியத்தோட ரவ நேரம்
“வச்சிக்னு குடுத்தனம் பண்ணப் போறாராமே. பண்ணட்டமே ஆரு வேண்டான்னா. இருக்கறவரிக்கும் தெரியாது தனபாக்கியம்மா யாருன்னு. பூட்டாதான் தெரியும்… ஆம்பளன்ன வாசிதான் அந்தப் பேச்சி.”
50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் மீது ஆண்களின் ஆதிக்கத்தைக் காட்டும் வரிகள். இதில் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ளன.சுதந்திரம் எனும் அத்துமீறலும் மனைவி முக்கியத்துவத்தின் இருப்பும் ஆண்களின் ஏதேச்சதிகார குடையின் கீழ் இருக்கிறது.
குடும்பம், கணவன், குழந்தை இவைகள் தங்கள் விடுதலைக்குத் தடை என்கிற போது அதிலிருந்து விலகிவிடும் தற்போதிய பெண்ணுரிமை சாத்தியங்களுக்கு பின்னோக்கிய காலம் எதிர்மறையானது என்பதைக் காட்டும் கதை.
தற்செயல்
மனிதனின் கொண்டாட்டங்களும் துன்பங்களும் ஏதேனும் ஓர் அதிர்ச்சியில் தற்செயலாகி விடுகிறது. 1973-ல் எழுதப்பட்டக் கதை. கோடு தண்டுதலுக்கு எதிராக இருக்கும் சமூக சூழலலில் எளிதாக அதாவது தற்செயல்போல் திருமணத்திற்கு முன்பான பாலியல் நுகர்ச்சியை வத்சலா அணுகுகிறாள். உளவியல் ரீதியான படிம வெளிப்பாட்டை கடைசி வரியில் புலப்படுத்துவது கச்சிதமான தெறிப்பு. மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் சுயபாதுகாப்பிற்கு பங்கம் தரக்கூடாது என்பது புத்திசாலி பெண்களின் பொதுஎதிர்பார்ப்பு அல்லது இயல்பான ஜாக்கிரதை உணர்வு என்றும் புரிந்து கொள்ளலாம்.
கரசேவை
கை தனது பெருமை பேசும் கட்டுரை. தலையாட்டும் கூட்டம் போல் கரவொலி கூட்டங்கள் கவனச்சிதறல். எதற்காக ஒருவர் பேசிய பின்பு கை தட்டுகிறார்கள்? உற்சாகப்படுத்துவா? நன்றியின் வெளிப்பாடா? சீக்கிரமாக பேசி முடி! என்பதற்கான எச்சரிக்கையா? சீக்கிரம் பேசி முடித்ததிற்கான உவகையா? கரவொலி அதிகம் விரும்பும் அரசியல் நாகரீகம் தற்போதும் வாழ்கிறது. தலைவலி கருதி நாம் விலகியிருப்பது நலம்.
வினை
முப்பது பக்கத்திற்கு குறுநாவல் சாயல் கொண்டு நகர்கிறது. தனது கொள்கைகளை மனைவி மீது திணிப்பதும் ஒருவகை அடக்குமுறையே. தற்போதைய சூழலில் அரசியல் காட்சிகளின் தொண்டர்கள் குறித்த சிறுகதைகள் வருவதில்லை. தான் சார்ந்த கட்சியின் மாதர் சங்க ஊர்வலத்திற்கு மனைவியை அனுப்பும் கணவனின் எண்ணங்கள்… பொருளாதாரம் + பெண் சுதந்திரம் + ஆணதிகாரம் என மூன்றையும் சடை பின்னலாக முயற்சிக்கும் கதை. ஆனால் முதலில் சிக்குகள் நீக்கப்பட வேண்டும். தோல்வியுறும் எதிர்பார்ப்புகள் கீழ்மத்திய வர்க்கத்தின் வாழ்வியலோடு அதிகம் கலந்துவிட்ட ஒன்று.
நிலச்சரிவு
ஒருவனின் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் முளைத்தெழும் கனவுலகம் உவப்பும் உவப்பற்றதுமான இரண்டு பக்கங்களைக் கொண்டது. இன்றைக்கு காதுகளை குடையும் செய்திச்சேனல்களை சிறிதுநேரம் பார்த்துவிட்டு உறங்கினால் மண் இளகிச்சரியும் பாதாளத்தில் பயணமாகுதல் எல்லோருக்கும் எளிதாக நிகழும். இது 1983-ல் எழுதப்பட்ட கதை என்பதால் ஊடகங்களின் தாக்கமானது அப்பொழுதைய மாறுபட்ட சிந்தனையின் புதிய கதைவடிவமாக இருந்திருக்கலாம்.
சூழல்
பாதகமா சாதகமா என்பதுடன் ஒருவரது நடத்தைகளை தீர்மானிப்பதின் முக்கியக்காரணி சூழல். ஆனால் மனதின் ஆற்றலால் சூழலை உருவாக்கலாம், நமக்கேற்றவாறு திருப்பலாம், பிரச்சனையெனில் விலகலாம் மேலும் மேலும் சிக்கலாக்கி கொள்ளலாமல் அமைதியாகவும் இருக்கலாம். வாய்ப்புகளை கையாள்வதற்கு பதிலாக அதில் தொலைந்து போகிறது மனித மனம். நல்லது செய்கையில் தூற்றுவதும் கெட்டது செய்யும்போது போற்றுவதும் உலக வழக்கு. நேர்கோட்டில் அழகாக சொல்லப்பட்ட கதை.
நான் பண்ணாத சப்ளை
நாம் மகிழ்சியாக இருக்கும் போது இவ்வுலகமே சொர்கமாகத் தெரியும். நாம் துன்பமாக இருக்கும் போது இந்த உலகத்தை சபிக்கும் வார்த்தைகள் சரளமாக வெளிப்படும். முடிவெடுத்தலில் மனைவியின் அழுத்தம் கணவனை படுத்துவதால் இவ்வுலகமே தலைகீழாகி விடும். இதை குடும்பிகள் அறிவார்கள். போதாக்குறைக்கு வெளியாட்களின் அபிப்ராயங்கள் மனைவியின் துலாக்கோலாக இருக்கும்பட்சத்தில் கணவனது நிலைமை மேலும் ஊசலாட்டம் தான்.
எதிர்பார்ப்புகள்
அது ஏனோ தெரியவில்லை பள்ளி படிப்பு முடித்தவுடன் அழகான குழந்தைகள் மீது அளவிட முடியாத அன்பு நெகிழ்ந்தோடுகிறது. கட்டுப்படுத்தமுடியாத இவ்வுணர்ச்சி மூடம் நிறைந்த அதிக பிரசங்கித்தனம் என்பது வளர்ந்து பிறகே புரிகிறது. ஒருவரது குழந்தை மீது அன்பு இருப்பது வேறு… அதில் கன்னியம் இருக்க வேண்டும். அன்பு என்ற பெயரில் கூடுதல் உரிமை எரிச்சலானது. இது சுயநலத்துடன் கூடிய அத்துமீறல். காட்சிகள் வழியே உணர்வுகளைக் காட்டும் கதை.
சவாரி
மேலோட்டமான வாசிப்பில் கட்சியின் நடவடிக்கைகளை பகடிசெய்து எழுதப்பட்ட கதைப் போல் தோன்றும். பொதுவுடமை , சனநாயகம் என்று அதிகம் வீறிடும் கட்சிகள் குறித்த நிதர்சனமான உண்மைகள் தரும் கதை. கட்சியின் தலைமை தனக்கு தேவையேற்படும்போது ஒன்றை பேசுவதும்… அது தோல்வியுறும் போது வேறுவாயாக மாறிவிடுவதும் அரசியல் கேலிக்கூத்துகள்.
கட்சியின் பயணத்திற்கும் கெளர வாகனமாக குதிரை தேர்வு செய்யப்படுகிறது. ஆனால் எவ்வளவு குலுக்கியும் புரவி நிதி நிறையவில்லை. திட்டத்திலிருந்து பின்வாங்கினால் அது ஊழலாகி விடும். ஒருவழியாக நோஞ்சான் குதிரை இல்லை ஒரு கழுதையை வைத்தாவது ஒப்பேற்ற நினைத்தால் குதிரை பாராமரிப்பு செலவுடன் பிரச்சனைகளும் மிகுதியாகிறது. கட்சியின் கமிட்டியினர் ஒன்றுகூடி குதிரையின் முகம், வாய், வயிறு, கால்கள், சூத்து என ஒவ்வொரு அஜெண்டாவாக பிரித்து விவாதிக்கின்றனர். வாய் பற்றி பேசும் போது வாய் பற்றியும், வயிறு பற்றி பேசும் போது வயிறு பற்றி மட்டுமே பேசவேண்டும். வயிற்றுக்கும் சூத்துக்கும் தொடர்பு இருக்கும் ஒரேக் காரணத்தால் அவைகள் குறித்து ஒன்றாக கருத்து கூறுவதற்கு அனுமதி இல்லை. அது கட்சி கொள்கைக்கு விரோதமானது.
கட்சிக்கு குதிரை வாங்கும் மசோதாவிலும் நல்லசாதி குதிரைக்குத் தான் மதிப்பு. அடிக்கடி கட்சி கூட்டத்தில் கழியும் குதிரையின் துர்நாற்றத்தை இலட்சியவாதிகள், கொள்கை பிடிப்புள்ளவர்கள் மட்டுமே சகித்துக்கொண்டு நிற்கிறார்கள்.
‘அம்மாடியோவ்’ சிரிக்காமல் வாசிக்க முடியவில்லை. அரசியல் கட்சியின் நையாண்டி – என்று இக்கதையை வாசிக்கும் தோழர்கள் கடந்து போகமாட்டார்கள். 2006-ல் தீராநதியில் வெளியான இக்கதை தோழர்கள் மத்தியில் பலவிதமான சலசலப்புகளை உண்டாக்கியது.
காசுக்காக அல்ல
வாழ்வு பிழைப்புடன் தொடர்புடையது. பிழைப்போ பொருளாதாரத்தின் ஊட்டத்தைக் கோருகிறது. ஊட்டமாக இருப்பவனது உலகம் வளமையானது.
பாசிகள்
பெற்றெடுத்த ஆண் பிள்ளைகளின் அலட்சியத்தால் தனது மகளுடன் விபச்சாரம் செய்யும் தாயின் அவலம். எதிர்கால ஏக்கத்துடன் நிகழ்கால பயத்தையும் குற்றவுணர்வையும் புறந்தள்ள முடியாத பயணம். சுயகௌரவத்தை சீண்டும் சமூகத்தின்முன் கொப்பளிக்கும் கோபத்தை மறைத்துவிட்டு சிரிக்க வேண்டிய நிர்பந்தம். இலகுவான கதை வலுவான சங்கதி.
வானம் வெளிவாங்கி
1972-ல் எழுதப்பட்ட கதை. திருமணமாகத ஒருவன் முன்னின்பம் காண்பதற்காக பரத்தியர்கள் கூடும் விடுதிக்கு செல்கிறான். துவக்கம் முதல் இறுதிவரை இயல்பான விவரிப்பினூடே அவனது பதட்டமும் உள்ளழுந்திக் கிடக்கும் மனஅழுத்தமும் பீறிடுகிறது. ஜீ.நாகராஜன் மட்டுமே இருண்ட மனிதர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சிய கதைகளை எழுதியவர் என நினைத்திருந்தேன், இராசேத்திரசோழன் வெளிச்சத்தின் எதிரில் நீளும் மனவிகார நிழலின் குறிப்புகளையும் கூடுதலாக தருகிறார்.
ஊனம்
தாம்பத்தியம் பொருந்தாமல் போகும்போது தம்பதிகள் பிரிவது இயல்பானதாகி விட்டது. பிரிவு தரும் விடுதலையை சிலர் விரும்புவதில்லை. அதற்கு பின்னால் மறைந்திருக்கும் எதிர்கொள்ளவியலாத பயத்தையே அதில் காண்கிறார்கள். மென்மையான ஆண்களும் இருக்கிறார்கள். மனைவியை மாற்றவும் மாற்றிக்கொள்ளவும் விரும்பாதவர்கள், தீராக்காதலின் குருட்டு துணிச்சலுடன் தற்கொலையை நாடுகிறார்கள். சம்பவங்கள் வைத்து மட்டும் கணவன்-மனைவி ஊடலை வரையறுத்தல் கடினம்.
பக்தி மார்க்கம்
சிந்திப்பவன் அரசியல் கட்சிகளை உருவாக்கலாமே ஒழிய ஒருபோதும் அடிமட்டத்தொண்டராக கட்சியின் உறுப்பினராக இருக்க முடியாது. நிலைபாடு என்பது சூழ்நிலைகேற்ப மாறும் ஆதாய வேஷம். கொள்கைக் கோட்பாடுகள் அப்போது பெரும்பாடாகிறது.
“ஆகவே தோழர்களே இன்றையக் காலகட்டத்தில் இப்போது உள்ள எதார்த்த நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக பரிசீலனை செய்து ஐந்தும் ஐந்தும் ஒன்பது என்கிற ஒரு சரியான தெளிவான அரசியல் நிலைப்பாட்டிற்கு நமது கட்சி வந்துள்ளது. ஆகவே வரக்கூடிய காலகட்டங்களில் நடைபெற இருக்கிற… தேர்தலில்…” கதையின் துவக்கமே நம்மை சிரிக்க வைத்து விடுகிறது. அரசியல் கட்சிகளின் கோமாளி வேஷத்தை கலைத்து பகடி செய்யும் இராசேந்திரசோழன் கதைகளுக்கு நிகர் இல்லை.
சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் ஏகபோக பொதுவுடமை. தோழர்கள் ஞானமார்க்கத்திலிருந்து விலகி பக்தி மார்க்கத்திற்கு பயணித்து வெகுகாலமாகி விட்டது. அது இக்கதை எழுதப்படுவதற்கு (1985) முன்பே துவங்கிய பயணம். இதன் கருத்து தற்போதைய இலக்கிய சூழலுக்கும் பொருந்துகிறது.
மையம்
கட்சி என்பதின் அனைத்து நெளிவு சுளிவுகளையும் விரிவாக பேசுகிறது என்பதைவிட வெங்காயத்தோலை உரிக்கிறது என்பதே பொருந்தும். கட்சிகள் வளரட்டும் தோழர்களின் வயிற்றைக் காயப் போடாமல்…
அவரோட லோகம்
ஒவ்வொரும் ஒவ்வொரு விதமான உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அதனதன் கனப்பரிமானங்கள் அவரவர்களை பொறுத்தவரை ஒன்றாகவும் நிஜத்தில் வேறொன்றாகவும் காட்சியளிக்கும். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு இரண்டாம் உலகத்தின் உண்மை உருவம் புலப்படலாம். ஒரு வாகன ஓட்டியின் பார்வையில் அவரோட லோகம் வெளிச்சமாகிறது.
மதராஸும் மன்னார்சாமியும்
நடைமுறை எதார்த்தம் மிளிரும் கதை. அதிகார வம்சத்தை திருப்திபடுத்தும் காவல் துறை. ஒன்னுக்கு ரெண்டுக்கு போனவனையெல்லாம் கைது செய்து வழக்கு போடுகிறது. அடக்கி வைக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றுவதற்கு வசதியில்லா நவீன நகரங்கள். தற் பொழுது பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுஇடங்களில் பரவலான கழிப்பிடங்கள் உள்ளன, சுகாதாரமற்ற நிலையில்… அபராதத்திற்கு பதில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியொருவனின் மலச்சிக்கலும் மனச்சிக்கலாகி விடுகிறது.
சென்னையில் பார்க்க வேன்டிய இடங்கள்
தலைப்புக்கேற்ற கதை என்றாலும் கட்சி இரத்தம் ஊறிய மனிதனைக் கணவனாக கொண்ட மனைவியின்பாடு திண்டாட்டம் தான். எழுத்தாளர் நம்மையும் திண்டாட விடுகிறார். நமக்கும் அயற்சியாகி விடுகிறது. அடையாளப்படுத்திக் கொள்ளுதல் நிரந்தர அடையாளமாகி நிகழ்காலத்தின் காட்சிகளோடு உடனிருப்பவர்களின் உணர்வுகளையும் புறந்தள்ளிவிடுகிறது. இத்தொகுப்பில் தவிர்த்திருக்க வேண்டிய கதை.
ஒரு எழுத்தாளனின் ஒட்டுமொத்த படைப்புகள் மட்டுமே அவனது தகுதியையும் இடத்தையும் நிர்ணயம் செய்யும். மாற்றுக் கருத்துகளுக்கு ஆட்படும் கதைகள் வைத்து மட்டும் எழுத்தாளனின் பிம்பத்தை வரையறுத்தல் கூடாது. அதேசமயம் கவனிக்கப்படும் எழுத்தாளன் / கவனத்திற்குள்ளான எழுத்தாளனின் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் விமர்சன வட்டத்திலிருந்து தப்பிவிடாது.
இராசேந்திசோழனின் படைப்புகள் மீது கவனம் செலுத்துவதற்கு டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் துவக்கம். இத்தொகுப்பில் உள்ள கதைகளை புதுவை சீனு.தமிழ்மணி, முனைவர்.பா.இரவிக்குமார், ஆகியோர்கள் தேர்வு செய்துள்ளனர். மேலும் இவர்கள் 2019-ல் முனைவர். இரா. செங்கொடி மற்றும் முனைவர் வி. செல்வப்பெருமாள் ஆகியோருடன் இணைந்து நட்புக் குயில்கள் என்ற அமைப்பின் பெயரில் ‘பன்முகப் படைப்பாளி இராசேந்திரசோழன் (அஸ்வகோஷ்) – வாழ்வு – படைப்பு – செயல்பாடு’ என்ற தலைப்பில் இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1945 டிசம்பர் 17இல், உளுந்தூர்பேட்டையில் பிறந்தவர் இராசேந்திரசோழன். ஆசிரியராகத் தன்னுடைய பணியைத் தொடங்கியவர், ஏராளமான சிறுகதைகள் எழுதினார். 1970ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ நடத்திய தென்னார்க்காடு மாவட்டத்துக்கான சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டதில் இவருடைய கதை முதல் பரிசு பெற்று வெளியானது. படைப்பிலக்கியத்தின் ஊடே மார்க்சியக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டார். மதுரையிலிருந்து செம்மலர் வெளிவரத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அஸ்வகோஷ் என்ற பெயரில் அதில் நிறைய கதைகளை எழுதினார். கூடவே கசடதபற, கணையாழி, அஃக் இதழ்களிலும் எழுதினார். நாடகத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டு, தில்லி தேசிய நாடகப் பள்ளி தமிழகத்தில் திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில் 10 வார காலம் நடத்திய தீவிர நாடகப் பயிற்சிப் பட்டறையில் ஊதியமில்லா விடுப்பு போட்டு கலந்து கொண்டார். பயிற்சி முடிந்து நெய்வேலியில் அனல் மின் நிலையத் தோழர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழுவை ‘செஞ்சுடர் கலாமன்றம்’ என்கிற பெயரில் தொடங்கி, நகரங்களிலும், சிற்றூர் புறங்களிலும் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். மார்க்சியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் எழுதிய “கடவுள் என்பது என்ன?” “சொர்க்கம் எங்கே இருக்கிறது?” என்கிற நூல்களும், பின்நவீனத்துவக் கோட்பாட்டை விமர்சித்து எழுதிய “பின் நவீனத்துவம் - பித்தும் தெளிவும்” என்கிற நூலும் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பதில் முன்னோடியாய்த் திகழ்ந்தவர்களில் ஒருவர். இவரது ‘மொழிக்கொள்கை’ என்ற நூல் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது. மேலும் அறிய : http://www.tamilwriters.in/2021/05/blog-post_29.html Courtesy : Tamlwriters.in .
நூல் : இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தேர்வும் தொகுப்பும்: பா.இரவிக்குமார், புதுவை.சீனு.தமிழ்மணி வகை : சிறுகதைகள் வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் வெளியான ஆண்டு : பிப்ரவரி 2021 பக்கங்கள் : 288 விலை : ₹ 300 Kindle Edition :
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.