நூல் விமர்சனம்புனைவு

முளை கட்டிய சொற்கள் – கவிதைத் தொகுப்பு -ஒரு பார்வை


காலம் தோறும் நடந்து வருகின்ற யுத்தங்கள் மண்ணையும் மனித உறவுகளையும் கலைத்துப் போட்டிருக்கின்றன. போர்க்காலத்திற்குப் பின்பு ஈடு செய்யவியலாத பிரிவினைச் சந்தித்து வந்திருக்கிறோம். உலகமயமாதலினால் உலகம் சிறுத்துவிட்டது. உலகம் முழுக்க மனிதர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு வாழ்தலின் நிமித்தமாகப் பிரிந்து செல்கின்றனர். வாழ்வின் வழிகள் எங்கெங்கோ கிளைகள் பிரித்துக் கிடக்கின்றன. இத்தகைய சூழல் நிலவுகின்ற தற்காலத்தில் உறவுகளை விட்டு வேறு வருடங்களுக்குக் குடி பெயர்ந்து வாழும் போது ஏற்படுகின்ற வலியும் வேதனையும் பூர்ணாவின் கவிதைகளாக வெளிப்படுவதாகச் சக்தி ஜோதி அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார்கள்.

அவர் மேற்கோளிட்டிருக்கும் கவிதையில் மிக முக்கியமான ஒன்றை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.

“எங்கே விழுந்தாலும் முளைத்து கற்றுக் கொடுக்கின்றன வாழ்க்கைத் தத்துவத்தை விதைகள்”

என்று பூரணா விதைத்த சொற்களைத் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டியிருப்பது சிறப்பு.

ஜேசுதாஸ் எனும் இயற்பெயர் உடையவர், பூரணா எனும் புனைபெயரில் வெளியிட்டிருக்கும் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்திருக்கின்ற கவிதைகளின் தொகுப்பே இது. அவருடைய அத்தனைக் கவிதைகளும் சக்தி ஜோதி குறிப்பிட்டதை போல பெயர்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறையினை பதிவு செய்கிறது. குறுங்கவிதைகளாகட்டும், நீள் கவிதைகளாகட்டும் சொற்களும் கையாண்டிருக்கும் விதமும் சிறப்பு.

பறக்கும் நிலம்

“தரையிறங்கி
சேற்றில் இரைதேடி
பறந்து செல்லும் பறவையின் காலில்
ஒட்டியிருக்கிறது
சிறிது நிலம்”

எங்கெங்கிருந்தெல்லாம் இருந்து புலம் பெயர்ந்து இங்கே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும் இரை தேடவும் பறவைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றின் காலில் ஒட்டியிருப்பது அவை சார்ந்த நிலம் என்பது உண்மை.

“எந்த இலை
எப்போது எப்படி உதிருமெனக் காற்றுக்குத்தான் தெரியும்”

“உதிர்ந்து கிடக்கும்
பூக்களிலிருந்து விடைபெற்றுப் பறந்து திரிகிறது மணம்.”

வெவ்வேறு கவிதைகளில் இடம் பெறுகின்ற வரிகள். ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதாகவே தோன்றுகிறது. இயற்கை சார்ந்த நவ லியை வரிகளாக்கித் தந்திருக்கின்றார்.

வீரம்

“பொழுதுக்கும்
எவனோ ஒருவன்
உதிரத்தை உறிஞ்சுகையில் கைக்கட்டி இருந்துவிட்டு,
இரவு உறங்கும் தருணம் பசியோடு கடிக்கும் கொசுக்களிடம் காட்டப்படுகிறது வீரம்,”

இதைவிட எப்படி நாம் வீரமற்று அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்று பகடி செய்ய இயலும். கொசுவிடம் காட்டுவதா வீரம்? வேதனை.

வலி..

”சொந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாறுதல்
சொந்த ஊரிலிருந்து வேறொரு ஊருக்குப் புலம் பெயர்தல்
சொந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குத் துரத்தப்படுதல்
வாடகை வீட்டிலிருந்து மற்றொரு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்தல்
இவையனைத்திலும் ஒவ்வொரு வலி இருக்கிறது.
இவையனைத்தும் ஒருங்கிணைந்த வலியைத் தருகின்றன
தனிக் குடித்தனம்”

கூட்டுக்குடித்தன வாழ்வு தொலைந்து போனதை வலியோடு பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு இடம் மாறும் போதெல்லாம் ஏற்படுகின்ற வலியை விட அனைத்திலும் ஒருங்கிணைந்த வலியாகத் தனிக்குடித்தனம் இருக்கிறது என்பது வேதனையான உண்மை. அந்த வலியை நேர்த்தியாக பதிவு செய்து இருக்கின்றார்.

“முறிந்து
இற்றுக் கிடக்கும் கிளையிலிருந்து
சுள்ளி எடுத்துச் செல்கிறது பறவையொன்று,”

அந்த மரம் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறது அல்லது இயற்கையாக தன் கிளையினை உதிர்த்து கிடக்கிறது. ஆனால் அந்த கிளையிலிருந்து பிரிந்த சுள்ளியைக் கூடு கட்ட எடுத்துச் செல்வதாகப் பதிவு செய்திருப்பது மரத்தை அழிக்கலாமா? என்று நம்மைக் கேள்வி கேட்பது போல் இருக்கிறது.

“கல் விழும் தருணம்
வலி தாங்க முடியாமல்
குமுறும் தண்ணீர்
யார் கல்லெறிந்தார்களென்று பார்த்து வர
நீர் வளையங்களை அனுப்புகிறது. கரை வரை…”

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்று பாடியிருப்பார் வைரமுத்து. இங்கே போகிற போக்கில் விளையாட்டுக்காகவோ அல்லது வேண்டுமென்றோ கற்களை வீசி எறியும் பொழுது அது வெளிப்படுத்தும் நீர் வளையங்கள் கல்லடி பட்டு வலிக்கின்ற வலியினைக் கடத்திச் சென்று அது யாரால் என்று பார்த்து வரச்செல்வதாகப் பதிவு செய்திருப்பது வலி.

“இத்தனை ஆண்டுகள் எப்படி எப்படியோ
உழைத்ததால் வந்திருக்கும் நோய்க்கும் நிர்வாகத்திற்கும்
எந்த சம்பந்தமும் இருப்பதில்லை”

எத்தனை வலி மிகுந்த வரிகளை இவை. ஆண்டாண்டு காலமாக வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பணியிடத்தில் அதிகமாக இருந்து கொண்டு உழைத்து உழைத்துக் கொட்டிய நமக்கு மிஞ்சுவது நோய் மட்டுமே. ஆனால், அந்த நோய்க்கும், நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முடித்திருப்பது உண்மையான வேதனை. எப்படி தற்போது நிலவி வரும் சூழலை அன்றே தீர்க்கதரிசனமாய் பதிவு செய்திருப்பது விந்தையளிக்கிறது. எல்லா காலத்திலும் இதுபோன்று நிறுவனங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. இது போன்று பணியிடத்தில் உழைப்பைக் கொட்டி கொட்டி இறுதியாக நோய்களைப் பெற்று வந்த உழைப்பாளிகளும் தொழிலாளர்களுக்கும் என்ன செய்துவிடுகின்றன அந்நிறுவனங்கள்?

“விதை நெல் புதைக்கப்படுகிறது ஒரு சாண் சதைக்குள்”

இந்த வரிகள் ஆழ்ந்த உளவியலைப் பேசுவதோடு மட்டுமில்லாமல் பசிக்கொடுமையையும், அதை விளைவிக்கும் விவசாயியின் வலியையும் பதிவு செய்கிறது.

இந்த தொகுப்பில் திரும்பத் திரும்பி வாசித்து என் மனத்தைக் கவலை கொள்ளச் செய்த வரிகள் இவை.

“அண்ணாந்து
அருந்தப்படுகிறது நீர்
குனிந்து உண்ணப்படுகிறது சோறு
இயற்கை எதையோ நினைவூட்டுகிறது..”

எவ்வளவு நேர்த்தியாக வாழ்வியலைச் சொல்லியிருக்கிறார் என்று ஆச்சரியப்படத் தோற்றுகின்றது. உதித்தோம் விழுகிறோம் இதுவும் பொருந்தும். அண்ணாந்து பார்க்கின்ற வாழ்க்கைக்குப் பூமி தான் அஸ்திவாரம் என்பதுவும் புலப்படுகிறது. விழும் போதெல்லாம் நாம் வீறுகொண்டு எழ வேண்டும் என்ற தன்னம்பிக்கை வரிகளாகவும் இது தோன்றுகிறது.

“தென்னையை வைத்தவன் தின்னுட்டு
பனையை வைத்தவன் பார்த்துட்டு சாவானென்பது பழமொழி.
இனிவரும் சந்ததியினர் பனையைப் பார்க்காமலேயே
இந்த பிரபஞ்ச வாழ்வை முடித்திருப்பார்கள்”

என்ற கவிதை வரிகள் சங்க காலம் தொட்டே நம்மோடு இயைந்த வாழ்ந்து வந்த பனையை நாம் வெட்டி வெட்டி நம்முடைய மரபினை தொலைத்திருப்பதைச் சாட்டை எடுத்துச் சுழற்றி சொல்கிறார். தற்போது விதைப்பந்து மூலம் பனை விதைகள் விதைக்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது.

பூர்ணாவின் இந்த முளைக்கட்டிய சொற்கள் விதையினை விதைத்துச் செல்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இயற்கையினை சூழலியலை வெகு நேர்த்தியாகக் கவிதைகளாக்கி இன்றைக்கு நாம் தொலைத்துக் கொண்டிருக்கின்ற இயற்கையினை கண்முன்னே காட்சிப்படுத்தி விழிப்புணர்வைத் தூண்டுகிறார். நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.


நூல் தகவல்:

நூல் :   முளை கட்டிய சொற்கள்

ஆசிரியர் : பூர்ணா

வகை :   கவிதைகள்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வெளியான ஆண்டு :  ஜூலை 2013

பக்கங்கள் :  86

விலை : ₹  55

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *