பாட்டியின் கதைகளின் மூலமே காவியங்களையும் காதலையும் கண்டெடுத்தவர்கள் நாம். கார்ப்பரேட் உலகத்தில் பாட்டிகள் எல்லாம் காலாவதியாகிப் போக அந்த இடத்தில் கதைசொல்லிகளும் கதை ஆசிரியர்களும் உள்ளனர். சமூகத்தில் நிகழும் அவலங்களைச் சுட்டிக்காட்டி அதற்குரிய தீர்வுகளை ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைக்கும் நிகழ்வாக ஆசிரியர் விஜிலா தேரி ராஜன் அவர்களின் இறுதிச் சொட்டு சிறுகதைத் தொகுப்பு அமைந்துள்ளது.
பெண்களின் மனதில், உடலில் நடக்கும் கலவரங்களையும் வலிகளையும் கதாபாத்திரங்கள் மூலம் படிக்கும் வாசகருக்குப் பல இடங்களில் கடத்தியிருக்கிறார் கதையாசிரியர்.
21 கதைகளில் சில உடன்குடி வட்டாரத்தின் மொழியில் அமைந்திருக்கும் விதம் அருமை. பெண்களின் வலி ஒரு பெண்ணிற்குத் தெரியும் என்பதால் வலிகளையும், அதற்குரிய தீர்வையும் காண வேண்டுமென்ற உள்ளக்கிடக்கையைப் பல கதைகள் உணர்த்துகின்றன. ஓய்வு பெற்ற தாவரவியல் ஆசிரியராகிய விஜிலா தேரி ராஜன் அறிவொளி இயக்கத்திலும் த மு எ க ச விலும் சிறப்புடன் பணியாற்றி வருகிறார். இவருடைய சிறுகதைகள் இலக்கிய நாளிதழிலும், மாத இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சமுதாய சீர்கேடுகளை அறச்சீற்றத்துடன் பதிவு செய்கிறார்.
ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தும் ஆண் ஆசிரியரை சகப் பெண் ஆசிரியர் புகார் அளித்தும் நீதி மறுக்கப்படுகிறது. ஏழ்மையின் நிதியின்மையால் நீதியும் மறுக்கப்படும் சமூக அவலத்தைப் பதிவு செய்யும் கதைக் களம் தான் “மண் குதிரை”.
“தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப விபத்தினால் தன் வீட்டில் நடந்த மரணத்தின் வலியை உணர்ந்த அண்ணாச்சி, ஜப்தி செய்யப்பட்ட பேருந்திலிருந்து இறங்கியவர் “இன்னிக்கு ஒரு நாள் நாம கொஞ்சம் கஷ்டப்பட்டா பரவாயில்ல” என்று மெல்லிய குரலில் பேசியவரிடமிருந்து “அதே வலியை”உணரலாம்.
45 வயதை நெருங்கும் பெண்களுக்கு உடலில் கட்டி என்றாலே அது கேன்சர் தான் என்று பொதுப் புத்தியில் தோன்றியிருக்கும் எண்ணத்தினால் , பெண்ணிற்குள் எழும் மனப்போராட்டத்தை “மாதவம்” மூலம் கடத்துகிறார் கதையாசிரியர்.
‘இலவசம் கொடுத்தே நாடு நாசமாப் போச்சு’ என்று ரேஷனில் வழங்கப்படும் பழுப்பு நிற அரிசிக்கும், ஒரு சலவையில் தாவணியாய் சுருங்கிப் போகும் சேலைக்கும் எதிராக எழும் கண்டனக் குரல்கள். சில பெரும் நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி செய்யும் போது அந்த இலவசத்தை நாட்டின் வளர்ச்சிக்கு என்று புளங்காயிதம் அடையும் சில வேடிக்கை மனிதர்களை நாம் அறிவோம். மூன்று ஏக்கர் நிலம் வைத்திருக்கும் முத்துசாமி இலவச விவசாய கரண்டிற்காக ஈ.பி ஆபிஸில் 2 லட்சம் டி.டி எடுத்துக் கொடுத்தும், வீட்டிலிருந்த நகை மற்றும் கோழி ஆடுகளையெல்லாம் விற்றும் இலவச கரண்டிற்காக இறுதியில் ஃபோர்மேன் எனக்கு 300 ரூபாய் வேண்டும் என்றதும், வெகுண்டுயெழுந்தவர் கட்டி இருந்த வேட்டியையும் மேஜையின் மீது வைத்துவிட்டு “கோவணத்தைத் தவிரக் கொடுக்க ஒன்னுமில்ல வேணும்னா இதையும் உருவிக்கிடுங்க” என்று வெளியேறியவரின் கோபத்தை “இலவசம்” கதையின் மூலம் அறச்சீற்றம் கொள்ளாமல் கடக்க இயலவில்லை.
“குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்”, என்ற அபாய எழுத்துக்களை எவ்வித அச்சமின்றி அரவணைத்துக் கொண்டாடும் குடிமகன்களின் ஆண் திமிரையும் இது போன்ற குடிமகன்களுக்கு வாக்கப்பட்டு வாழ்க்கையை இழந்த ‘தங்கம்’ போன்ற பல தங்க மகளின் வாழ்க்கையின் அவலங்களை “புதைகுழி” பதிவு செய்கிறது.
தாய்மை என்ற உணர்வு தான் உலகம் மேலும் உயிர்ப்புடன் இருந்து அடுத்த தலைமுறைகளை உருவாக்குகின்றது .”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று குருவியையும் மனித சாதிக்காரர் ஆக்கிவிட்ட பாரதியின் ஆசைக்கிணங்க கோமதியின் தாய்மை உணர்வை அவள் வீட்டிலிருந்த குருவி குஞ்சுகளுக்காக மழையில் குடையைப் பிடித்தவாறு வீடு நோக்கித் திரும்பி நடந்ததன் மூலம் தாய்மை உணர்வை “பட்டு மனதில்” அறியலாம்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாடு தள்ளாட, மது போதையினால் குடிமகன்கள் தள்ளாட நடுவில் பெண்கள் படும் பாடுயிருக்கே அப்பப்பா சொல்லி மாளாது. போதையினால் மதி மயங்கியவர்கள் தள்ளாடாமல் இருப்பதற்காக அவர்கள் பிடித்துக் கொள்ளும் கொம்பு தான் சந்தேகம் . கணவனின் போதையினால் வாழ்க்கையை இழந்து, அவனின் சந்தேகத்தினால் குடும்பத்தை இழந்த பொன்னாகாவின் கண்ணீர் கதையை “சவால்” பேசுகிறது.
“என்ன ரெண்டு தடவை பாம்பே கொத்திருச்சு, வைத்தியம் பார்த்துகிட்டு வேலைக்கு வரல” என்று பெண்கள் வேலை செய்யும் இடங்களில் மனித விஷமுடைய பாம்புகள் இடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள “ரௌத்திரம் பழக” சொல்கிறார் சுப்புத்தாயி மூலம் கதையாசிரியர்.
‘அந்தக் காலம் போலயில்ல’ என்று அங்கலாய்த்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு மாற்றத்தினால் மாறிக்கொண்டே தான் இருக்கிறோம். மனிதாபிமானம் குறைந்து கொண்டே போகும் சமூகத்தில் மறுபுறம் வேறு ஒரு தோற்றத்தில் ‘மனிதன்’ உதவுவதையும் கொரோனா போன்ற துயர் நாட்கள் உறுதிப்படுத்துகின்றன. வலியப் போய் உதவி செய்பவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சடகோபன் போன்றவர்களும் மாற்றத்திற்காகவே கவிதாவின் உதவிகள் தொடர்வதை வாழ்த்தலாம் “தவறிய கணிப்பில்”.
பெண்களின் உடல் அமைப்பு கூட பல அசௌகரியங்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அறிவுரைகளில் ஒன்று “கவுனை இழுத்து விட்டுட்டு உட்காரு” என்று குழந்தையாக இருக்கும்போதே ஆரம்பமாகும். அடக்கத்தைச் சிறுவயதிலிருந்தே போதிப்பதினாலோ என்னவோ ஆத்திரத்தையும், மூத்திரத்தையும் பெண்கள் மட்டும் அடக்க வேண்டும். ஆனால் இது ஆண்களுக்கு ‘ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது’ என்று எல்லா வகையிலும் சுதந்திரத்தை அளிக்கும் சமூகம்.“இங்கே போகாதீங்கப்பா, ஹோட்டல்ல போய்க்கலாம் அம்மாவும் போகணும் இல்ல” என்று குழந்தையின் குரலில் வருங்கால தலைமுறையினர் அம்மாவின் (பெண்கள்) உணர்வை புரிந்தவர்களாக “இறுதிச் சொட்டு” கதையின் மூலம் கூறியிருப்பது இக்கதையாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டும் அன்பும். !
– மைதிலி கல்யாணி
நூல் : இறுதிச் சொட்டு ஆசிரியர் : விஜிலா தேரிராஜன் வகை : சிறுகதைகள் வெளியீடு : பாரதி புத்தகாலயம் வெளியான ஆண்டு : 2022 பக்கங்கள் : 154 விலை : ₹ 150
சிறந்த வாசிப்பாளரான மைதிலி கல்யாணி சிறுகதை எழுத்தாளராகவும் திகழ்கிறார். பெண்ணியச் செயல்பாட்டாளரான இவர் த.மு.எ.க.ச அமைப்பின் விருதுநகர் மாவட்ட துணைத் தலைவராகவும் உள்ளார்.