காதல்-காமம் இரண்டுக்கும் மத்தியில் மெல்லிய நீட்சியாய் புரையோடிக் கொண்டிருக்கும் உடலியல் கற்பிதங்களுக்கு, சமூகத்தின் மீதான பிழையான பிம்பங்களுக்கு வெள்ளைச் சாயமடிக்கிறார் லதா கழிவறை இருக்கை நூலில்.

காமம் சார்ந்த மொழிகளில் சின்ன சின்ன குறு வாக்கியங்களில் புரிதல் நிமித்தங்களில் வந்து போகிறது கழிவறை இருக்கையின் பக்கங்கள்.

கழிவறைக்கு அவசர அவசரமாய் சென்றாலும் உள்ளிருந்து வெளியேற்றம் நிகழும் போது நாம் இலகுவாகிறோம். அதுபோல ஆணும் பெண்ணை தான் உபயோகிக்கும் கழிவறை இருக்கையாகப் பார்க்கிறான் என்பதை முகத்தில் அறைந்து விலாசுகிறார். எதைப் பேசினால் தவறு எதைத் தெரிந்து கொண்டால் தவறு என்று சித்தரிப்பு வேடமிட்டு காமம் பற்றிய புரிதலை அதன் உணர்ச்சி சாரத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் பகிர்ந்தளிக்கப்படாது ஆணுக்கு மட்டும் சுயச்சார்பு தன்னையாகச் செயல்படுத்தி உடலின் தேவை ஆணுக்கானது பெண்கள் அவர்களுக்கானவர்கள் என்கிற பொய் சூழ்ந்த படலத்தைத் தான் சமூகம் விரித்து வைத்திருக்கிறது.

உணர்தல், தெளிதல், பகிர்தல் என்கிற காதலின் நீட்சியான காமத்திற்குத் தொடுதல் என்கிற ஒற்றை கோடிட்டு சக மனுஷியின் தன்னுணர்வைப் புரிந்து கொள்ளும்படியாக உணவு, உடை, இருப்பிடம் போலக் காமம் ஆண் பெண் சார்ந்த நான்காம் பொதுவியல் தேவையாகப் புத்தகம் பேசுகிறது.

புத்தகத்திலிருந்து.. 

  • காமம் யாருடன் நிகழ்ந்தால் அது சரியெனப்படுகிறதைக் கூறும் வரிகள்.
  • கலவி கொள்ளும் சமயத்தில் நீ ஒரு முறையேனும் சிரிக்கவில்லையெனில் நீ தவறான மனிதனுடன் உறவு கொள்கிறாய்.
  • உனக்கு முக்கியமில்லாத பாலுறவை உனக்கு விருப்பமில்லாத அதை உன் கணவனோ மனைவியோ மற்றவருடன் கொள்வதில் உனக்கு ஆட்சேபனை இருக்கக் கூடாது என்று உடலின் தேவைகளைத் தனி மனித விருப்பத்தைப் பற்றிக் கூறுகிறார்.
  • உடலின் மீதுள்ள தேடலில் அன்பின் பரிதவிப்புகளை மறந்து விடுகிறோம். லவ் ,லஸ்ட் இரண்டிலிரும் உணர்வு சார்ந்த உடல் சார்ந்த தேவைகளின் அடித்தளத்தில் காதல் மலரும் நிலையினை  எடுத்தியம்புகிறது.
  • நாம் தப்பித்தவறி செய்யக் கூடாது என நினைக்கும் சுய இன்பத்தைத் தெய்வத்தன்மைக்கு ஒப்பிடுகிறார் .
  • முதலில் நான் எனக்குப் பரிட்சியமான, நான் விரும்பக் கூடிய, எனக்குத் தெரிந்த ஒருவருடன் சுய இன்பம் கொள்வதில் மகிழ்வுறுகிறேன் என்பதையும், எனக்கு விருப்பமில்லாத ஒருவருடன் நான் வலுக்கட்டாயமாகப் புணரப்படுதலின் அவதிகளையும், சக மனுஷிகளின் உடலில் உணர்வு கொலைகள் நிகழ்வதையும் தூக்கிப் பிடிக்கிறது.
  • நாம் சுய இன்பம் கொள்வதைக் கடவுள் திட்டமிடாது இருந்திருந்தால் அவர் நம் கரங்களின் நீளத்தைக் குறைவாக அமைத்திருப்பார்.
  • சுய இன்பத்தைப் புறந்தள்ளாதே எனக்குப் பிடித்த ஒருவருடன் நான் உறவு கொள்கிறேன்.
  • பாலியல் சின்னமாகக் கருதுகிற சிலர் பெண் குழந்தைகளிடம் அத்துமீறலையும், அதனை வெளியே கூற முடியாத அளவிற்கு அவர்கள் பெற்றோரிடம் நன்மதிப்பு கொண்டவராகத் தன்னை காட்டி வாழ்நாள் முழுவதும் அவளுக்கே தெரியாமல் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக குறுங்கொலை செய்து கொள்ளும் அநீதியையும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்பையும் நேரத்தையும் அவர்கள் அச்சுறுத்தல் அடையும் போது நம்பிக்கையையும், சட்ட ரீதியான நடவடிக்கைகளில் காமுகர்களை எதிர்க்கவும் கற்றுக் கொடுப்பதை விவரிக்கிறது .பெண்கள் மற்றும்  குழந்தைகள் மீதான வக்கிரங்களில் நொடிக்கு ஒரு இழப்பு நிகழ்ந்து கொண்டிருப்பதை வெளிச்சமிடுகிறார் ஆசிரியர்.

ஒரு விதவை பெண் தன் கணவன் இறந்த பிறகு எப்படி தன் தேவைகளை நிறைவு செய்வாள். ஒரு தன் பாலின சேர்க்கை நபர் எவ்வாறு தன் விருப்பத்தைத் தீர்த்துக் கொள்வார். ஒரு முதிர் கன்னி மற்றும் முதிர் ஆண் எப்படி தன் காமத்தை நிறைவு செய்வார் தனக்கு விருப்பமுள்ள காமத்தை விருப்பமுள்ள ஆணுடன் இருவரும் இணங்கிக் கொள்வதில் தவறில்லை. தற்சார்பு சுதந்திரத்தைப் பற்றி இவர்கள் தெளிவுற அறிந்திருத்தல் அவசியமாகிறது.

சமூகம் இன்னும் சங்கிலியிட்டு கொள்ளச் சொல்லும் பெண்ணின் தேவையை உணர்வுகளைக் கொன்றும் அவளை உயிர் திரவம் நிரம்பும் புட்டியாகப் பார்க்கும் வெளிறிய சிந்தனையிலிருந்து மீளக் கழிவறை இருக்கை ஆணும் பெண்ணும் படிக்க வேண்டிய புத்தகம்.சமூகத்தில் இருக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் பாலியல் கல்வி சார்ந்த பாடத்திட்டங்களில் எந்த அளவு அரசு கவனம் கொள்கிறதென்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் காமம் சார்ந்த புரிதலையும் பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தையும் பாலியல் சார்ந்த தப்பெண்ணங்களையும் தெளிவுற விவரிக்கிறார் ஆசிரியர் லதா.

கழிவறை இருக்கை..  உலகை ஆளும் அண்டகமும் விந்தகமும் பற்றிய சமூக விளாசல்!

நூல் தகவல்:

நூல் : கழிவறை இருக்கை

வகை :  கட்டுரை

ஆசிரியர் : லதா

வெளியீடு : நோராப் இம்ப்ரிண்ட்ஸ்

வெளியான ஆண்டு:  நவம்பர் -2020

பக்கங்கள் : 224

விலை:  ₹  90

Kindle Edition :  கழிவறை இருக்கை

அமெசானில் நூலைப் பெற :