கி.ரா அய்யாவிடம் ஒரு சந்திப்பின் போது கேட்டேன்.
“நீங்க எழுதுனும்னு நினைச்சதெல்லாம் எழுதிட்டீங்களா..?”
”இல்ல..,”
“இன்னும் ஏதாவது பாக்கி இருக்குன்னு நினைக்கிறீங்களா..?”
வழக்கமான புன்சிரிப்பை தவழவிட்டபடி..,
“அதெப்படி முடிஞ்சிடும்…? முடிஞ்சுடுச்சுன்னா அவன் எழுத்தாளனாவே இருக்க முடியாது .,.. அது எப்பவும் தீராது.”
புத்தகத்தின் தலைப்பு தான்
“மிச்சக் கதைகள் ” .
ஆனால் இதுவே மிச்சமிருக்கும் கதைகள் என நினைத்து விடக்கூடாது.
கி.ரா என்றாலே எனக்கு பிரமிப்பு தான். அவர் கதைகள் போலவே அவர் உடல் மொழியும் நம்மை வாஞ்சையோடு இழுத்துக் கொள்ளும்.
அய்யாவை நான் எப்போது பார்க்க சென்றாலும் என் தொண்டையில் இளநீர் இறங்காமல் திரும்பியதில்லை. நாம் மறுத்துக் கொண்டிருக்கும் போதே பிரபி அண்ணன் ஒரு பெரிய டம்பளரில் இளநீர் தளும்ப நிற்பார். அந்த அருமையான பானத்தின் நினைவில் கணவதி அம்மையாரின் சுவையை நினைவு கூர்கிறார்.
வெற்றிலைகள் பற்றி அவர் கதை சொல்லும் போது பழக்கமில்லாத நமக்கும் வாய் நம நமுக்கும். நாமும் வெற்றிலையை ஒரு வாய் மென்று அதக்கத் தோன்றும்.
கெட்ட வார்த்தை கதை சொல்லி ஒருவர் ஜாம்பவானாக முடியுமா..?
மனித மனதின் பெரும் பகுதி வெளிப்படையாக இருப்பதில்லை. நிழல் இருட்டில் பதுங்கி கொள்ளும். காரணம் ஆபாசமாகி விடுமோ என்கிற அச்சம், தயக்கம். அதை ஆபாசமில்லாமல் வெகு நேர்த்தியாக கதையாக்கி நெய்வது இவருக்கு இயல்பானது.
பாமர மக்களின் மனங்களை உள்ளபடியே காட்டும் சூட்சமம் தெரிந்தால் தான் இந்த உறுத்தாத ஜிகினா வேலையின் நாசூக்கு சாத்தியப்படும்.
சமீபத்தில் எழுதிய அண்டரெண்ட பட்சியை அச்சு பதிப்பாக கொண்டு வரலாம் என்று பேசிய போது… “இல்ல அத அப்படியே இருந்துட்டு போகட்டுமே… எமர்சன் கதெ மாதிரி..!
..,..நமக்கு ஒரு நியாயம் இருக்கில்லியா..” அதான் கி.ரா.
இந்த நவீன ஊடக யுகத்தில் கூட சமீபத்த்தில் அவர் எழுதிய குறுநாவல் “அண்டரெண்டபட்சி ” கையெழுத்து பிரதியாகவே சுற்றி வருகிறது. இதுவும் அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாதனை.
இலக்கியத்தில் உள்ள நிற அரசியலின் பூடகத்தை உடைத்து பேசுகிறார். சிறும்பான்மை பெரும்பான்மை மீது சவாரி செய்வதும் பெரும்பான்மை சிறும்பான்மை மீது சவாரி செய்வதும் தான் இப்போது நடக்கிறது. இதுல எந்த மாத்தமும் மில்ல.., சமத்துவம் என்பது மோதலை பேசி வளர்ப்பதிலேயே நீள்கிறது. இதில் எதுவும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல.
“ரசிகமணிச் சமாச்சாரங்கள் பெரிய்ய கடல் .இந்தச் சிறிய பக்கங்களில் அவை அடங்காது.” என சிலாகிக்கும் கி.ரா -விற்கு டி.கே.சி என்றால் கொள்ளைப் பிரியம் .
“வெறும் ஆசைகள் தான். அவை வாழ்நாள் பூராவும் அப்படியே இருந்து விடுவதுண்டு.” என்று சொல்லும் கி.ரா ” வாழ்க்கை என்பது குழந்தை விளையாட்டல்ல . கொஞ்சம் கொண்டாட்டமாகவும் மீதி நேரங்கள் திண்டாட்டமாகவும் இருக்கும் ” எனும் நிதர்சனத்தையும் தருகிறார்.
பல நாட்கள் மருத்துவமனையில் இருந்தாலும் அவர் எழுத்துகள் ஒரு போதும் முடங்கியதில்லை. பெரும்பாலான பஞ்சத்தை உருவாக்குவது மகத்தான மனிதசக்தி தான்.
“மழையை இறங்க விடாமல் செய்தது எது? உடங்காடு அழிப்பு தான். அது அப்படியே இருந்திருந்தால் மழை ஒண்ணுக்கு பாதியாவது பெய்திருக்கும். கரிசல் விவசாயத்துக்கு சிறுமழைகளே போதும் ”
இந்த சூழலியல் சிந்தனையும் விவசாய அக்கறையும் நாம் கவனிக்க வேண்டியது.
இந்நூல் சிறப்பான வடிவமைப்பில் வந்திருக்கிறது. கி.ரா வை ஒரு பேரருவியை படம் பிடிப்பது போல் பிடித்திருக்கிறார் நிழற்படக் கவிஞர் புதுவை இளவேனில்.
பக்கங்கள் ஒவ்வொன்றிலும் பேரருவியை தரும் சிலிர்ப்பை நமக்கு தந்து இப்புத்தக பொக்கிஷத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
“மலை உச்சியும் மர உச்சியும் மனுசனுக்கு ஏதோ ஒரு உற்சாகம் தரும் போலிருக்கு” கி.ரா வின் மிச்சக் கதைகளும் அப்படித்தான்.
இந்த புத்தகத்தின் விமர்சனத்தை கி.ரா அய்யாவிடம் வாசித்து காட்டிய போது “உள்ளது உள்ளபடி சொல்லி யீருக்கிங்க.., நல்ல வாசகனுக்குள்ள நல்ல எழுத்தும் பதுங்கியிருக்கும்.” என்று சொன்னார்.– மஞ்சு நாத்
நூல் : மிச்சக் கதைகள்
பிரிவு : சிறுகதைகள் |
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியீடு : அன்னம் வெளியீடு
வெளியான ஆண்டு : முதற்பதிப்பு- ஜனவரி 2021
பக்கங்கள்:104
விலை : ₹ 300
தொடர்புக்கு : 99430 59371
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.
மிச்சக் கதைகள் குறித்த தோழர் மஞ்சு நாத்தின் எழுத்து ஒரு அழகிய கி . ராவின் சித்திரம். தொன்ம அடர்த்தியான வாசனையை சுவாசித்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள்…