லக்கியம் சோறு போடுமா என்று ஒரு முறை கேள்வி கேட்க படுகிறது.

போட்டிருக்கிறது என்று பதில் வருகிறது. எந்தவித குறை கூறும் தொணியும் இன்றி அப்படி ஒரு அழுத்தமான பதில். அந்த ஒற்றை பதில் எத்தனையோ படைப்பாளிகளுக்கு டானிக். உள்ளார்ந்த தேடல் உள்ள இலக்கியவாதிகளுக்கு அதில் உள்ள உன்னத வேட்கை சக்தி கொடுக்கும் என்றால் நம்பலாம்.

இடைசெவலில் பிறந்த கி ரா 35 வயதுக்கு பிறந்து தான் எழுத ஆரம்பிக்கிறார். ஆனால் எழுத்தென்பது வாழ்வியலாக அவர் பிறந்ததில் இருந்தே அவரோடு நடை பயின்றிருக்கிறது என்று அவரின் பிற்காலத்திய படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. 99 வயது வரை எழுதிக் கொண்டே இருந்த எழுத்தாளரை உலக அளவில் எங்கும் காண முடியாது என்றே நம்புகிறேன். விடாப்பிடியாக எழுதுகிறேன் என்று கிறுக்கவில்லை.அவர். கடைசி வரை விசை இருந்த எழுத்து அவருடையது என்றால் திசை எட்டும் வணங்கி ஆமோதிக்கும்.

வட்டார வழக்கு சொல் அகராதியினை முதலில் உருவாக்கிய பெருமை கி ரா வையே சாரும். கரிசல் இலக்கியத்தின் முகம் அவரிடம் இருந்தே பிரகாசிக்கிறது. “கோபல்லபுரத்து மக்கள்” நாவலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தது. அது……அதுவரை இருந்த மொழி போல அல்லாமல்., மக்களின் மொழியிலும் இலக்கியம் இருக்கலாம் என்பதை தமிழ் சூழலுக்கு விளக்கியது. 97 வயதில் “அண்ட்ரென்ட பட்சி” குறு நாவலை தன் கை எழுத்திலேயே எழுதி வெளியிட்டார். அச்சிட வேண்டாம்  என்பது ஆசையாய் இருக்க, அசல் எழுத்துக்கள் அவரையே வடித்திருந்தது. ரத்தமும் சதையுமாக அவரின் எழுத்துக்கள் அவரையே உருட்டி உருட்டி கதையாகியிருந்தது. மண்ணின் உணர்வுகளை மனங்களுக்கு கடத்திய மகத்தான எழுத்து இவருடையது.

கி.ரா இது வரை யாருமே செய்யாத இன்னொன்றையும் செய்திருக்கிறார். தனது படைப்புகளின் உரிமையை தனது உணர்வுபூர்வமான வாசகர் “புதுவை இளவேனில்” அவர்களுக்கு எழுதி வைத்திருக்கிறார். எழுதுபவன் எழுத்தால் மட்டும் இந்த உலகோடு தொடர்புடையவன் அல்ல. இதயத்தாலும் தொடர்புடையவன் என்பதற்கு இதை விட சான்று வேறென்ன வேண்டும். ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இந்த கி.ரா என்ற மாணவன் தான் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியராக இருந்தார் என்பது தான் எழுத்து செய்திருக்கும் அற்புதம். மண்ணின் மைந்தனை அவன் மொழியிலேயே எடுத்து அவனிடமே வைக்கும் பாங்கு அலாதியானது. அதில் கோலோச்சும் சொரூபம் எல்லாருக்கும் வாய்க்காது. வாய்த்த மனிதன் ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்த இந்த கி.ரா என்ற மாமனிதன்.

கதை சொல்லல் என்றொரு பதம் சமீபத்தில் மீண்டும் மீண்டெழுந்திருப்பதை நாம் அறிவோம். அதை எப்போதும் தமிழ் சமூகத்துக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்த கதை சொல்லலில் மன்னன். பேராசான்…கோவில்பட்டியை இலக்கியத்தில் குடி புகுத்திய இந்த பிதாமகன். கரிசல் சொல் அகராதியை உருவாக்கி வெளியிட்டது… ஒரு பல்கலைக் கழகம் செய்திருக்க வேண்டிய பணி. கி.ரா என்ற ஒற்றை மனிதனின் உற்சாகத்தோடு சில உள்ளங்களும் சேர்ந்து செய்து முடித்தன என்பது இலக்கிய கால விதி.

கி.ரா என்றொரு பிரம்மாண்டத்தின் பின்னும் முன்னும் “கணவதி அம்மாள்” என்றொரு நிழல் மிக அற்புதமாக வழி நடத்தி சென்றிருக்கிறது என்பதை அறிகையில், ஆகையால் காதலிக்கலாம்… என்று இலக்கியம் இன்முகத்தோடு இசைக்கிறது. சட்டையில்லாத கி.ரா என்ற அந்த கூட்டில் இலக்கிய பறவைகள் ஏராளம் குடியிருந்தன. தமிழ் இரண்டெழுத்தாக சுருங்கி கி.ரா ஆகி விட்டது என்று கூட சொல்லலாம். சொற்குவியல்களின் பொக்கிஷம் கி ரா என்றால் அது பொன்னோவியம் மின்னும் அவர் தீர்க்க கண்களில் இருந்து ஆம் என சொல்லும் அற்புதம்தான்.

மொத்தம் தனக்கு நான்கு தலைகள் என்று சொல்லும் கி.ரா….. நான்காவது தலை தான் என் சொந்த தலை என்பார். மூன்றாம் தலையை இலக்கியம் என்று சொல்லும் கி.ரா…. இரண்டாவது தலையை அரசியல் என்கிறார். முதல் தலையை அழுத்தமாக சங்கீதம் என்கிறார். ஆம் சங்கீதத்தில் ஆர்வம் உள்ள கி.ரா… இளம் வயதில் நாதஸ்வர வித்வான் குருமலை பொன்னுசாமி அவர்களிடம் சங்கீதம் கற்றவர். தன் ஊரை சார்ந்த கு.அழகிரிசாமி கி.ரா வின் இளமை கால நண்பர். அவர் பல்வேறு சமயங்களில் பல்வேறு ஆளுமைகளுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து கு அழகிரிசாமியின் கடிதங்கள் என்று கடித இலக்கியம் தொகுத்தவர் கி ரா. நண்பனுக்கு ஆற்றும் நற்பதங்கள் இலக்கியமானது நமக்கு வரம். நாவலுக்கான எந்த இலக்கணமும் இல்லை என்று வழக்கம் போல சம கால மேட்டிமை எழுத்து வியாதிகள் புறந்தள்ளிய கி ரா வின் முதல் நாவல் “கோபல்ல கிராமம்” இப்போது வரை வாசக மனங்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பது… நல்லவை நின்று விளையாடும்.. தகுதி உள்ளவை காலத்தை வெச்சு செய்யும் என்பதற்கு உதாரணம்.

இறுதி காலத்தில்… அவரின் நினைவுகளில் இருந்து கசிந்துருகி காகிதத்தில் கவனமாய் காலம் சேர்த்தது “மிச்ச கதைகள்” என்ற தொகுப்பு. எப்போதும் எழுத அவரிடம் உக்கிரம் இருந்தது. எப்போதும் பேச அவரிடம் சொற்கள் இருந்தன. எப்போதும் சிந்திக்க அவரிடம் மௌனம் இருந்தது. ஒரு தூரத்து வட்டத்தில் அவரின் வானம் அவர் சொல்லுக்கிணங்க பறவைகளை அனுப்பிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் அவருக்கு ஒவ்வொரு எழுத்து.

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி ரா மறைந்து விட்டார் என்பது நமக்கு நாம் சொல்லிக் கொள்ளும் சமாதானம். உண்மை மிக உயரத்தில்…. தமிழோடு கலந்திருக்கிறது. கரைந்திருக்கிறது. அவரை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்பது தான்….  RIP க்கு பதிலாக ‘ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜன்” என்ற கி.ராவுக்கு நாம் செய்ய வேண்டிய புகழஞ்சலி.

கவிஜி


சில தகவல்கள் -நன்றி:  மதுக்கூர் ராமலிங்கம்