ஒரு குவளை நீர் எப்போதைக்குமான நம் தாகம் தணிக்கிறது. நம் நெடுநாள் ஊத்தைகளை வெளியேற்றுகிறது. புதிய வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. பழைய புண்ணைக் கழுவி எடுக்கிறது. வியர்வை வழிந்த முகத்தை அலம்புகிறது.
வளர்ந்தும் வளராத நம் மனச்செடியை ஒரு குவளை நீரால் வாடவிடாமல் பாதுகாக்கிறோம். கொஞ்சம் உப்பு கலந்து கொப்பளிக்கும் போது, நம் மனப்புண் கூட சில சமயங்களில் ஆறிவிடுகிறது. மெனக்கெட்டு யாரும் குவளைகளைத் தன் பொருட்டு கூடக் கண்ணீரால் நிரப்ப விரும்புவதில்லை.
உப்புக் கரையில் கால் நனைக்க மட்டுமே நம்மில் பெரும்பாலோர்க்கு விருப்பம். அலை இழுத்துச் செல்லும் பயத்தோடே நம் சுவடுகள் மண்ணில் பதிகின்றன.
தூரத்தில் ஒரு மீன்பிடி படகு கரை திரும்பும் போது, செதில் உரசிய மசாலா தடவிய உடலங்களும் கருவாட்டு வாசமும் உள்ளிறங்குகிறது நம்முள்.
அறுந்த வலைகளோடு கரை திரும்புபவன், எல்லை தாண்டிப் பயணித்துக் காணாமல் போனவன், பெருமீனால் விரட்டப்பட்டு சிறுமீனாகத் தப்பி வந்தவன் பற்றிய பிம்பங்கள் கூடக் கண்ணில் படாமல், வட்டமாய் நறுக்கிய வெள்ளரித்துண்டுகளோடும், புரண்டெழுந்த கொஞ்சம் உப்பு மண்ணோடும் விட்டமின் D சேர்த்துக் கொண்டிருக்கின்றன வெற்று மார்புகள்.
அதிரூபனோடு ஆழ்கடலுக்குள்ளும், ஆழிப்பேரலை சுருட்டி அள்ளிய அவல வாழ்வுக்குள்ளும் ஒரு நாளாவது பிரவேசித்துத் திரும்பினால், வகைவகையாய் விதம்விதமாய் மீன் சாப்பிடுகிற, உப்புப் போட்டு சோறுண்கிற ஆசையே அடியோடு வெறுத்துப் போகும்.
“சகதியும் பசிய கொடியும் காற்று நீரும் புகைவளையமெனச் சுருள்மூச்சும் களவாடித் திரிந்த மேலமுந்தல் காற்றும் அலை வந்து போகும் மணற்குடிலும் தான் இந்த முகம்மதியார் புரம்” எனக் கடற்கரையோரத்துக் கிராமத்தைக் கண்முன் காட்சிப்படுத்தும் போதும், “மணல்கூடுகளில் இருந்து கொம்புகளை நீட்டும் ஊற்று விலங்குகளாய் புயலில் தொலைந்த எலும்பு மனிதர்கள்”
என்று சுனாமியின் கோரத்தை அடையாளப்படுத்தும் போதும், அவற்றை வெறும் காட்சிப் படிமங்களாக மட்டும் கடந்து போக முடியவில்லை.
“களவாடித் திரிந்த மேலமுந்தால் காற்று” – நம் மனத்தைக் கொள்ளை கொண்டு மேலாகத் தென்றலாக வீசிய காற்றே, சுழன்றடிக்கும் சூறாவளியாக உருமாறி, ஒட்டுமொத்த வாழ்வையும் கால நாய்க்குக் கவ்வக் கொடுக்கும் போது, எப்படி ரசிக்கத் தோன்றும் எதிர்வரும் இளந்தென்றல்களை என்ற கவிஞனின் கேள்விக்குப் பதில் இல்லை நம்மிடம்.
வாழவும் வைத்து, மரிக்கவும் வைத்த மணற்கூடுகளிலிருந்து ஊற்றாக எலும்பு மனிதர்கள் எழுந்து வரும் அவலம் சொல்லில் மாளாதது. ஆனாலும், கடலும் கடல் சார்ந்த பகுதியுமே கடைசி வரைக்குமான உறைவிடமாக வாழ்பவனின் முழுநேர ஜெபம் போன்ற,
“மன்னிக்க முடியாத காற்று மீண்டும் வீசுகிறது நான் காற்றை மன்னிப்பேன் காற்று என்னை மன்னிக்கும் தண்டிக்கத் தெரியாத காரணங்களோடு நாங்கள் வாழ்வோம்”
என்பதன் பின்னால் ஒலிக்கும் கடற்கரையோர மனிதர்களின் எப்போதும் உலராத ஈரமனமும், அவர்களின் நம்பிக்கைக் கூர்முனை அறுத்து, ஒட்டுமொத்தமாகச் சரியும் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்ற அவநம்பிக்கை மரங்களும் கண்முன் விரிகிறது.
நண்டுகள் ஒளிந்து கொள்ளும் வளைக்குள் இத்தொழிலே வேண்டாமென எத்தனை முறை தூக்கி வீசினாலும், அதைவிட்டாலும் வேறு பிழைப்பும் இல்லை எனும்போது, ஈரப் பிசுபிசுப்போடு இருக்கும் வலைகளை மீண்டும் எடுக்கக் குனியும் மீனவ வாழ்வு என்பதை,
“நீ உறங்கும் நண்டுச் செலவில் உயிரோடு இருக்கும் தூக்கி வீசிய ஈர வலைகள்”
எனச் சொல்லாமல் சொல்லிச் செல்வது தான் கவிதையின் அழகே.
2004 வந்த சுனாமி தான் நம் இப்பிறப்புக்கான நேரடி சாட்சி. ஆனால் அதற்கு முன்னமே சுனாமிகளால் கடலோரங்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை இணையத்தில் தேடி கடற்கோள்கள் பற்றி அறிதலின் மூலமும், முற்றாய்த் தன் முகமிழந்து நிற்கும் தனுஷ்கோடியை ஒருமுறை வலம் வருவதால் மட்டும் உணர்ந்துவிட முடியாது.
இடிவிழுந்த வீடு போல், உழைக்கும் உயிரை இழந்த குடும்பம் போல், நிர்கதியாய் நிற்கும் சிதிலமான கட்டிடங்களால் பைத்திய மனநிலைக்குத் தள்ளப்பட்டு, வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட கடலோரங்கள் குறித்து,
“அனைத்தையும் வணங்கும் தெய்வத்தின் கையில் தான் புகைமரங்கள் ஆட நீர் பெருகியது கண்கள் நிலத்திலிருந்து கடலுக்குத் தாவ நீரின் ஆழத்தில் அசையும் பனைமரத்திற்கு உயிர் இல்லை அதன் கொப்புளை உலுப்பும் மீன்களுக்கு மரணமும் இல்லை.”
என்பதில் வெளிப்படுவது வெறும் விவரணைகளா? ஆழிப்பேரலை சூழும்போது தப்பியோடும் வழி தெரியாமல் “கண்கள் நிலத்திலிருந்து கடலுக்குத் தாவ” என்பது எத்தனை பெரிய கொடூரம்?
ஆளுயரப் பனைமரத்தை அநாயசமாகத் தூக்கியெறிய கடல் சீற்றத்தால் முடிந்தது என்றால், வேர்களற்ற எங்கள் கரை வாழ்வு எம்மாத்திரம் என்பதினூடே,
“நீரின் வெளிக்குள் அமர்ந்து கொண்டு பாழின் சங்கீதத்தை வணங்கும் எளிய பிறப்பு தானே நாமெல்லாம்”
என இரு கைகளையும் அகல விரித்து, பாதித்த எஞ்சிய மனங்களைத் தன்னோடு பிணைத்துக் கொள்ளுதல் என்பது எத்தனை துயரம்?
அரையிருட்டில் அமர்ந்து கொண்டு, சுதி பிறழாமல் மேடையில் நீங்கள் இழுக்கும் சங்கராபரணம், யதுகுல காம்போஜி, மத்யமாவதி ராகங்களை லயித்தபடி தொடை தட்டும் நீங்கள், பாழின் சங்கீதத்தைக் காத்து கொடுத்தாவது கேட்டதுண்டா என பனைமர உயரத்திற்கு அதிரூபன் எழுப்பும் அதிர்வலையையும், “மங்களம்… மங்களம்… சுபமங்களம்” எனத் திரை போட்டு, நிவாரணங்களால் நெகிழ வைத்ததை திருப்திப்பட்டுத் திரும்பும் மனங்களின் கோப்பையில், பில்டர் காபிக்குப் பதில், ஒவ்வொரு முறையும் ஊற்றிக் கொடுக்க வேண்டும் ஒரு குவளை உப்புநீர் என்பதை,
“உன்னை வணங்கச் சொல்லி வீசும் பெரிய காற்றிடம் தின்னச் சொல்லி நீட்டு ஒரு கடல் உப்பை”
என்கிறார். கடல் பரப்பின் கதை சொல்லி மட்டுமல்ல நான் என, தன் அகலப் பார்வைகளை விரித்துக் கொண்டே போகிறார் தன் வழி நெடுக.
தலைமுறை இடைவெளிகள், இன்பத்தையும் துன்பத்தையும் அணுகும் விதம் என்றென்றைக்கும் கூடுதல் பதட்டத்தையே கையளிக்கிறது என்பதை,
“பிள்ளைகளைக் கடிக்க வரும் பாம்புகளை அடிக்க வேண்டாம் அம்மா அவை உண்மையிலேயே விளையாடுவதற்குத் தான் வருகின்றன.”
என எதையும் விஷக் கண்ணோட்டத்தோடே தொடரும் குப்பை கூளத்தின் மீது, ஒரு சின்னத் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். அதுவோ கொழுந்துவிட்டு எரிகிறது.
வளர்ப்பு நாயின் மேலிருக்கும் உண்ணியைக் கையடக்க சில்வர் தொரட்டி கொண்டு பிடுங்கிப் போடும் உயர்தர வர்க்கத்திடம் புழுதுண்ணியை அறிமுகப்படுத்தும் சாக்கில், அடிபட்ட வாழ்வில் அண்டிக் கிடக்கும் மிச்ச சொச்சங்களையும் கூண்டோடு பறிக்க நாள் குறித்த வண்ணமிருக்கும் நடப்பு அரசியல் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான நம் போராட்டங்கள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது குறித்தும் சாட்டை விளாசுகிறார்.
“மேலாடை தொலைந்து போக ரோமங்களால் மார்பு மறைக்கும் வெண்சிகை நிறைந்த புழுதியுடம்பில்” என்ற வரிகளில் உள்ள காட்சிப் படிமமும், “இது ரத்தம் ஊறாத சவப்புழுதி தின்ன, கடிக்க இதில் மரணம் மட்டுமே இருக்கிறது.”
என்கிற முடிப்பும், வறுமையின் கோர தாண்டவத்தையும், தன் கார்க்கண்ணாடி மீது படிந்த புழுதியை ஓட்டுனரைக் கொண்டு துடைப்பத்தோடு மட்டுமின்றி, அதில் தன் முகத்தை சீர்படுத்தி அழகு பார்க்கும் கார்ப்பரேட் மனநிலையின் மீது, கடைசி உமிழ்நீரையும் காறி உமிழ்கிறார்.
அகவயம் குறித்தே அதிகமும் மலரும் எழுத்துகளுக்கு மத்தியில் சூழலியல் குறித்தும் கவிஞனுக்குச் சூடு சொரணை வேண்டும் என, படிக்காமல் அடம் பிடிக்கும் முரட்டு மாணவன் தலையில் ஓங்கிக் குட்டுகிறார் இந்த ஆசிரியர்.
“பிறந்ததில் இருந்து யாருமே தூக்கிக் கொஞ்சிடாத குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? இதைச் சொல்லும் போது கிடப்பு நீரின் வளையத்திற்குள்ளிருந்து நதி ஏன் அழுகிறது?”
என்ற கேள்வி எழுப்பி, வெறும் பேராக மட்டுமே நிலைபெற்றுவிட்ட நதிகள் குறித்தும்,
“உயிரின் ஒலி வறண்டு தண்ணீரை நீர் என உச்சரிக்கும் பசித்த குரல் தாகம் சுணங்கிச் சுணங்கி குரல் ஒடுங்குகிறது தண்ணீர் தண்ணி தண் த.”
எனவும், நா வறள, நம் தாகம் 1000 அடி, 2000அடி என உறிஞ்சி எடுக்கப்படும் அவலத்தை இதைவிட வேறு எவ்வாறு சலனப்படுத்த முடியும்?
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என வள்ளலார் வாய்மொழி உகுத்ததற்கும், தண்ணீர் இன்றி வாடி வதங்கும் பயிர்களைக் காணச் சகிக்காமல், தன் வாழ்வை ஒரு சொம்பு நீர்மாலைக்குள் சுருக்கிக் கொள்கிற விவசாயியின் கொடும்பேறுக்கும் இடையிலான மனவேறுபாடுகளை,
“காய்த்த காயெல்லாம் தின்று தான் தீர்க்கணும் நல்ல விலைக்குப் போகாத காய்களைப் பார்த்தால் நல்ல பாம்புப் புற்றுக்குள் தான் கைவிடத் தோணும்.”
என உள்ளுக்குள் பிரவாகமெடுக்கும் கண்ணீரை ஓரிரண்டு வார்த்தைகளுக்குள் அடக்கவும் அசாத்திய மனதிடம் வேண்டும்.
வெயிலின் கோரத்தை சர்பத் குடித்தும், கரும்புச் சாறு அருந்தியும், தர்ப்பூசணி தின்றும், சொட்டும் வியர்வையை ஆள்காட்டி விரலால் வழித்து நிலம் பருகவும் செய்யும் நம்மிடம்
“தாவாத பூனையாக இருக்கிறது வெயில்”
எனக் காட்சிப்படுத்துவதன் மூலம், வருடத்தின் 11 மாதங்களுமே வெயிலோடு மல்லுக்கட்டுகிற பருவநிலைக்குத் தள்ளப்பட்ட சூழலும்,
“மரங்கள் இமைக்காமல் பார்த்த போது எல்லா இலைகளையும் கண்களாகவே பார்த்தேன் இருட்டுக்கு முன்னும் பின்னும் யாருக்கும் தெரியாத பிரார்த்தனையாகவே இருந்தன கண்கள்.”
நகரமயமாதல், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பசுமைச் சூழல் வெட்டி வீழ்த்தப்படும் கோரம் விரிகிறது.
அப்பாக்களின் உலகம் மகள்களின் முத்தக்காடுகளால் எப்போதும் பசுமையாக இருக்கிறது. ஓடிவந்து மகள் ஏறும் உப்புமூட்டையை சர்க்கரை மூட்டையெனவே கொண்டாடுகிறார் அப்பா. கடிந்து கொள்ளும் போது அப்பாவுக்கும் மகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டதாகக் குதூகலமிடும் மனங்களைக் கூனிக் குறுக வைக்கும், அப்பாவின் விரல் பிடித்துக் கொண்டே சிராய்த்து சிராய்த்து நடை பழகும் மகளின் கால்கள்.
“சோம்பல் முறிந்த கதிர்களின் கண்கள் ஒரு வினாடி திறந்து மூடின சிறிய வெளிச்சம் தான் வந்தது எனது அறையில் இருந்து மகளின் ஓவியத்திற்குச் செல்லும் வழி தான் அது.”
என மகளின் உலகத்திற்குள் எளிதாக நுழைய, தன்னையே புள்ளியாகச் சுருக்குகிற அப்பாக்கள், மகளின் மலர்தலை, அம்மாக்களை விடவும் அவ்வளவு கொண்டாடுகிறார்கள்.
“முத்தம் நதிநீரென ஓடும்போது கால்களை நனைய விட்டது பருவம்.”
என்ற வரிகளின் வழி, நேற்று வரை கைகள், மார்பு, முதுகை மைதானமாகக் கருதி துள்ளி விளையாடிய குழந்தைமை, மலர்தலுக்குப் பின், அப்பாவிடம் கூட, ஒரு மெல்லிய விலகலைத் தன்னைச் சுற்றி வேலியாகப் போட்டுக் கொண்டு, அப்பாவிடம் நெற்றி முத்தத்திலிருந்து தன்கனவை நீட்டிக்கிறது.
நிறம் தான் எல்லாவற்றையும் பிரித்துக் காட்டுகிறது. நிறமற்ற எதையும் நிஜமற்றதாகப் புனைந்து கொள்கிறது மனிதமனம். சிவந்த மேனிக்கு இருந்த சிறப்புகள் எல்லாம் தவிடு பொடியானாலும் சிவப்பு குறித்த மாயை இன்னும் அகலாததால் தான் ‘க்ரீம்’களின் விற்பனை இன்னும் சக்கைப் போடு போடுகிறது. யாருக்கு வேண்டும் செவ்வுடம்பு? சிவப்பு மட்டுமா அழகு?
“இது பனங்காடு பூமி நாங்கள் பனங்கள் குடித்து கறுப்பானவர்கள் தாயோடு கோபம் கொண்டு பனைமரத்தொடு நிற்போம் …………………………… …………………………… கரும்பு நாயின் நிமிர்ந்த வாலே நீயே தான் எங்கள் ஊரின் உடம்பு.”
என பனைகளுடனான நேசத்தையும், பனங்கள்ளின் வாசத்தையும் கூறும் சாக்கில் நிறம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்.
“உண்மை சொன்ன சாமிக்குத் தாகமெடுக்க பனைமரமே சாய்ந்து பனங்கள்ளை ஊற்றும்.” எனவும், “பெரிய கைகளோடு நீர் ஓடி வந்து மன்னிப்பு கேட்க பேச முடியாமல் நின்றது நாலு பனைக்கூட்டங்கள்.”
என அலையின் கோரப்பிடியிலிருந்து எஞ்சிய பனைகளின் அழுகையினூடே, இன்னமும் உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் உயிரை விடும் உள்ளங்கள், கிராமத்துக் கிழவிகளின் பம்படங்களாய் ஆடிக் கொண்டு தான் இருக்கின்றன என, சாரல் விழுந்த செம்மண் வாசனையையும் கமழத் தருகிறார் கவிஞர்.
தொகுப்பு முழுக்க மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பறை இசையோடு பயணிக்கும் அதே வேளை,
“ஒரு பெண்ணின் முத்தம் செஞ்சாய முட்களைப் போல் சிவந்திருந்தால் உடலில் முள் தைக்க நினைக்கும் ஆடவர் நினைப்பு.” எனும்போதும், “சன்னல் கண்களில் காற்றுப்பட நிர்வாணங்களை வரையச் சொல்லும் வயது.” எனும்போதும், “எனது சிறிய துவாரத்திற்கு உங்களின் ஒரு இலை மட்டும் போதும் அதை நானே பறித்து கொள்வேன்.”
ஆண்மனம் குறித்த விகாரங்கள் கிண்டலாக வெளிப்பட்டிருக்கிறதா, போகிற போக்கில் பொத்தாம் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்கிற இடறல்கள், கவிஞரே குறிப்பிடுவது போல,
“கனவுகள் என்பது மையாலான நூலகம் புரிய முடியா அடுக்குகளின் உறைவிடம்.”
தானோ என்று சந்தேகச் சிடுக்குக்குள் சிக்கிக் கொள்ள வைக்கிறது.
– மா.காளிதாஸ்
நூல் : மணற்புகை மரம்
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : அதிரூபன்
வெளியீடு : சால்ட்
வெளியான ஆண்டு : ஜனவரி 2021
விலை: ₹150
விற்பனை உரிமை : தமிழ்வெளி
தொடர்புக்கு: +91 9094005600