கவிதைகள்நூல் அலமாரி

பனித்துளி விழுங்கிய ஆகாயம்


கவிஞர் குகை மா.புகழேந்தியின் “பனித்துளி விழுங்கிய ஆகாயம்” கவிதைத் தொகுப்பிற்கு (இதுவரை எழுதிய 15 கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு) மா.காளிதாஸ் அவர்கள் எழுதிய அணிந்துரை.

 

காலத்தின் சிடுக்குகளைக் கையாளும் கவிஞன்

ங்கிருந்தோ வந்த சிட்டுக்குருவி, சிதறிக் கிடக்கும் உணவுத்துகளை, வாலாட்டிக் கொண்டே வாயில் கவ்விச் செல்வதைப் போல, கவிதைக்கணம் நிகழ வேண்டுமெனவே ஒவ்வொரு கவிஞனும் மெனக்கெடக்கூடும்.

மூளையின் மடிப்புகளில் உணர்வுகளைப் போல ஒளிந்து கிடக்கின்றன சொற்கள்.  முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு தன்னைக் கொஞ்சச் சொல்லிக் கெஞ்சாமல் கெஞ்சும் மழலையைப் போன்ற இயல்புடையன சொற்கள்.  அதை மூட்டைப் பூச்சியைப் போல வக்கிரத்தோடு எடுத்து நசுக்கித் தரையை ரத்தக்களரியாக்குவதும், தூக்கி வெயிலில் போட்டுத் துடிப்பதை ரசிப்பதும், குவளைத் தண்ணீரில் ஒவ்வொன்றாக இட்டு ஒட்டுமொத்த வம்சத்தையே அழித்துவிட்டது போல் பெருமிதம் கொண்டு தூவாக்குழியில் கவிழ்த்துவிடுவதும் அவரவர் மன ஓட்டத்தின் வெளிப்பாடே.

சொற்களை வைத்து சொக்கட்டான் ஆடுகிற பழைய உத்திகள் காலாவதியாகிவிட்டன.  சிந்தாமல் சிதறாமல் ஒரு சின்னக் கத்தி கொண்டு வெட்டி, கேக்கைப் போல ஊட்டி விடுவது மட்டுமின்றி, தனக்கும் ஒரு வாய் கிடைக்காதா என ஏங்க வைக்கிற லாவகம் புதிய எழுத்து முறைமையிடம் மேலோங்கி நிற்கிறது.

இயல்பை மொழிதல், பிறிதொரு மொழிதல், தற்குறிப்பேற்றம் போன்றவற்றை இலக்கண பாணியில் அல்லாது எதேச்சையாகவும், பூடகமாகவும் புலப்பட வைக்கும் போக்கு நவீன தமிழ்க் கவிதைச் சூழலை மடைமாற்றியிருக்கிறது.

நிதானிப்புகள், அவதானிப்புகள், கொண்டாட்டங்கள், திண்டாட்டங்கள், திணறல்கள், கதறல்கள் அனைத்தையும் சொல்லால் சுண்டியிழுக்கும் சூட்சுமம் கைவரப்பெற்றதாக, தடுமாற்றமில்லாத தத்துவ விசாரங்களாக, ஒரேவொரு ஊசி குத்தி உப்பிய பலூனை வெடிக்க வைப்பதாக உருமாற்றம் கொண்டுள்ளன நவீன கவிதைகள்.

இருண்மை என்பது சங்ககாலத்தின் தொடர்ச்சியாகவும், தேடலின் படிநிலையாகவும் கைக்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான வாசக மனம், தன்னளவில் அதற்கான புறக்கணிப்பையும் முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

இப்படியான தமிழ்க்கவிதைச் சூழல் மனநிலையோடே குகை மா. புகழேந்தியின் கவிதைத் தொகுப்பையும் வாசிக்க நேர்ந்தது.  2001ல் “காற்றுக்குப் பதிலாய்” தொடங்கிய எழுத்துப் பயணம் 13   தொகுப்புகளைத் தாண்டியும், 600 பக்கங்களுடன் முழுத்தொகுப்பாக உருமாறியிருப்பது, புகழேந்தியின் தீராத கவிதை தாகத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.  மன ஓட்டங்களை அச்சரம் பிசகாமல் எழுத்தாக்க முயல்வது அப்படியொன்றும் அரிய செயலல்ல.  ஆனால் எந்தவொரு தங்குதடையின்றித் தன்னையும், தன் எழுத்தையும் பின் தொடரும் தியான மனநிலை இயல்பாகவே வைத்திருக்கிறது புகழேந்திக்கு.

சூழல் மீதான அக்கறை, புல்லுயிரிகள் மீதான அளவற்ற அன்பு, வேர்களையும் வேரற்ற பொழுதுகளையும் வேறுவேறாகக் காண விழையாத துடிப்பு, கடவுள் மற்றும் சகமனிதர்கள் உடனான கனவுநிலைத் தொடர் உரையாடல் எனப் புகழேந்தியின் தரிசனங்கள் மாறுபட்ட பரிமாணங்கள் கொண்டவை.

எறும்புகளும், மரமும், இரவும், பறவையும், மழையும் இவரது கவிதைகளின் பெரும்பாலான மையப்புள்ளிகளாக ஊடாடுகின்றன.  எதிர்கால தரிசனம் குறித்த ஜாதக / சாதக எண்ணம் கொண்டவனாகவே கவிஞன் எப்போதும் உள்ளான் என்பதற்கான சான்று அவரது கீழ்க்காணும் வரிகள்.

“……………………………………………………………………….

……………………………………………………………………….

வாசலைத் தாண்டவே அச்சமாய் இருக்கிறது

……………………………………………………………………..

 

நான்கு சுவர்களுக்குள்

முடங்கிக் கிடப்பதற்கு

எதற்காக வேண்டும் உயிர்?”

கொரோனா என்கிற நோய் தோன்றும், அது மக்களை, மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக முடக்கிப் போடும், எதேச்சதிகாரப் போக்கு மிகவும் மறைமுகமாகத் திணிக்கப்படும் என 20 ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞனோ அல்லது சாமானியனோ யோசித்திருப்பானா என்ன?  ஆனால் மேற்காண் வரிகள் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போனது எவ்வாறு?  இது கவிஞனின் தீர்க்க தரிசனமா? காலத்தின் இடையறாத போராட்டமா? என்ற கேள்விக்குப் பதில் மௌனமாகவே வெளிப்படுகிறது.

அதிரச் செய்யும் ஒரு நிகழ்வில், கைநீட்டப்பட்ட ஒரு சொல்லில் கிடந்து உழலுதல் என்பது சபிக்கப்பட்ட மனதின் வாடிக்கையாகிவிட்டது என்பதை,

“கயிற்றை மிதித்துவிட்டுப்

பாம்பென்றலறிவிட்டு

பாம்பல்ல

கயிறுதானென்று தெளிந்த போது

தெரிந்த பாம்பு எங்கேவென

யோசித்தேன்.

மீண்டும் நெளியத் துவங்கியது

கயிறு.”

 

என்றும்,

“கொல்லாமல் விட்ட பாம்பு

மறுபடி மறுபடி

அங்கேயே நெளிந்து கொண்டிருக்கிறது.”

என்றும், வெவ்வேறு இடங்களில் கவிஞன் பாம்பைக் குறியீடாக  குறிப்பிடும் போது, இங்கே கயிறாகவும் பாம்பாகவும் நெளிவது மனித எண்ணங்கள் தானே தவிர, எண்ணம் சீரானால் குழப்பத்திற்கு அங்கே ஏது இடம் என்ற தெளிவும் பிறக்கிறது.

கடவுள் மறுப்பைத் திட்டவட்டமாகப் பதிவு செய்வதில் முனைப்பு காட்டியிருக்கும் புகழேந்தியின் சில வரிகள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகின்றன.

“கடைசி வரை

ஒன்றுமே செய்யாமல்

ஊரை ஏமாற்றும்

சாமியும் பேயும்.”

 

“கடவுளுக்கு நான் எழுதிய கடிதமும்

கடவுள் எனக்கு எழுதிய கடிதமும்

இன்னும் வந்து சேராமல்

துருப்பிடித்த

ஒரே தபால் பெட்டியில் கிடக்கிறது.”

 

“யார் யாரோ

கடவுளாகிவிட்டனர்

என்கிறார் முன்னாள் கடவுள்.”

போன்ற வரிகளில் கடவுள் குறித்த எக்காளம், முக்காலமும் உணரும்படி சகமனிதனிடம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

தியானநிலைக்குச் செல்வதற்கும், தத்துவ விசாரம் செய்வதற்கும் கடவுளை அல்லது அரூபத்தைத் தரிசித்திருக்க வேண்டியதில்லை என்பதைத் தன் கவிதையில் உணர்த்தத் தலைப்படுதல் சாதாரணமல்ல.

“அடியில் போடும் உடலை

காலடி தான் கணக்கிடுகிறது.”

என்பதில் ‘காலடி’ என்கிற பதம் கவனிக்கத்தக்கது.  உடல் அரசியலையும், மத அரசியலையும் ‘காலடி’ ஒருசேர வெளிப்படுத்துவதோடு, மனதின் போக்கு ஒவ்வொரு முறை மாறுபடும் போதும், தமக்கான எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருவதை மனிதன் உணரத் தலைப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது கவிதை.   அதே போல், நம் நடத்தை தான் நம் முக்காலத்தையும் முன்னிருத்துகின்றன என்பதை,

 “புறப்படும் வரை

நடப்பதெல்லாம்

இருப்பதற்கான முயற்சியே.”

எனச் சொல்வது போல் சொல்ல வந்து, நடப்பு அரசியலையும் நையாண்டி செய்திருப்பது, சொல்லைக் கவிஞன் எப்படியெல்லாம் தன் போக்கிற்கு வளைக்கிறான் என்பதற்கான சிறந்த உதாரணம்.

காதல் பொது, காமம் பொது, உணர்வும் புணர்வும் வெவ்வேறு என்பது எல்லாக் கட்டத்திலும் பல்வேறு தரப்பிலும் உணர்த்தப்பட்டாலும் கூட

  “உழைத்துச் சலித்த உடலில்

கழுவாத சகதியாய்

ஒட்டியிருக்கிறது காமம்”

என்றும்,

 “குளிர்ந்த சூரியனின்

ஒருபிடிச் சிரிப்பு வேண்டும்

காமத்தை அடக்க.”

என்றும், காமத்தைத் தன் பார்வையில் சகதி என்றும், பொல்லாக்கோபம் என்றும் கவிஞன் முன்வைக்கும் போது, மணிமேகலையில்,

 “கொலையே களவே காமத்தீ விழைவு

உலையா உடம்பில் தோன்றுவ

மூன்றும்”

எனச் சீத்தலைச்சாத்தனார் குறிப்பிடும் வரிகள் மின்னி மறைகிறது.

தன்னையும், தன் சூழலையும் ஓயாமல் தத்துவ விசாரணைக்கு உள்படுத்தக் காலந்தோறும் கவிஞன் தவறுவதில்லை.  அதை ஒரு மாபெரும் இயக்கமாகத் தன்னுள் வளர்த்துக் கொண்டே இருக்கிறான்.  மேம்பட்ட தத்துவ ஞானத்தின் மூலம் உடல் குறித்தும், உள்ளம் குறித்தும், அவற்றின் தூய்மை குறித்தும் சதா தனக்குள் எழும் கேள்விகளைக் கொன்றைப்பூவைப் போல இந்த சமூகத்தின் மீது தூவிக் கொண்டே இருக்கிறான்.

நகுலனும், ஆத்மநாமும், பிரமிளும், தங்கள் வாழ்வின் உள் ஒளியைத் தத்துவங்கள் வழியாகவே தரிசித்தார்கள்.  அந்த வழியின் தொடர்ச்சியாகவே புகழேந்தியின் கவிதைகளையும் ஸ்பரிசிக்கிறேன்.

“தானம் பிறருக்கிடுவது

நிதானம் நமக்கிடுவது”

 

“இறையும்

இரை தான்”

 

“எப்போதும் நனைதலை விரும்பி

அடியாழத்தில் நழுவுகிற ஒரு கல்

எனதுடல்.”

 

“என் இதயத்தின் முதுகில்

நானோர் அழுக்கு மூட்டை.”

என இந்த உலகின் பேரிரைச்சலில் இருந்து விடுபட்டுத் தனக்குள் கொட்டும் அமைதிப் பேரருவியில் நிர்வாணமாய் நனைய ஆசைப்படும் கவிஞன், நம்மையும் அச்சூழலோடு ஒன்றும் முயற்சியில் விரல் நீட்டும் போது பற்றாமல் இருப்பது மாபெரும் அறிவீனம்.

இருள் ஜொலிக்கும் அணிகலனாகவும், வெளிச்சம் பிடிக்க இயலாக் கள்வனாகவும் மாயம் காட்டிக் கொண்டே இருக்கிறது.  நம்மை நம் ரகசியப் பகுதியில் ஒளித்து வைக்க அவ்வளவு பாடுபடுகிறது வெளிச்சம்.  இருளோ கொஞ்சமும் தயங்காமல் உள்ளங்கையில் நம்மைத் தாங்கி வெட்டவெளியைத் தரிசிக்க வைக்கிறது.

“இவ்விரவு

என்னிலிருந்து வழியும்

மாபெரும் கண்ணீர்த்துளி.”

என்னும் கவிதையைப் படித்த போது,  எனக்குள் மலர்ந்த வியப்பு அவ்வளவு எளிதாக அகல மறுக்கிறது.  இரவு கண்ணீர்த்துளியாக வழிகிறது எனில் அவ்விரவில் நேர்ந்த துயரம் என்ன? இரவு, தூங்கவிடாமல் கண்ணீர்த்துளியாகப் பெருக்கெடுக்க எது காரணம்? நிறமற்ற நீர்த்துளி முழுவதும் கறுப்பாக வடிவெடுத்து வழிகிறது எனில் அதன் அடர்த்திக்குள் பொதிந்திருக்கும் குமுறல் என்ன எனக் கேள்விகள் கிளை விரித்துக் கொண்டே செல்கின்றன.

 “இரவை

விழுங்கினேன்

ஒரு தூக்க மாத்திரையாய்.”

என்றும் இரவைக் கொண்டாடிக் கழிக்கும் போது, இரவு, அவருக்கான ஜென்ம நட்சத்திரமாய் அவ்வளவு ஜொலிக்கிறது.

ஒப்புக்குப் புன்னகையை படரவிட்டு ஆவதென்ன?  அது எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடுகிறது.  புன்னகையைப் போலக் கற்றுக் கொடுப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் இலகுவான மொழி வேறெதுவும் இல்லை.  அதே நேரம் மௌனத்தைப் போலக் கடினமான மொழியும் வேறெதுவும் இல்லை. மௌனத்தை மொழிவதைக் காட்டிலும், மொழிபெயர்ப்பது இயலாத ஒன்றாகவே இதுவரை இருக்கிறது.  படிக்கட்டில் இறங்கச் சிரமப்படும் நிலையிலும் முடிந்த மட்டும் தானாகவே தன் இலக்கை அடையப் பிரயத்தனப்படும் முதுமையின் வறட்டுத் திமிரைப் போலவே, மௌனமும் தன்னை அடையாளப்படுத்தி விடாமலிருக்க அவ்வளவு மன்றாடுகிறது.  கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போலத் தனக்குள் பொதிந்து கிடக்கும் சொற்களைக் கவர வருவோரைப் பார்வையாலும், அசட்டுப் புன்னகையாலும் விரட்டியடிக்கிறது மௌனம் என்பதை,

 “பேசா மௌனம்

ஒரு திரைச்சீலை அலங்காரம்”

என வெளிப்படுத்தும் போது, மௌனம் தெய்வீகம், அதற்காகத் தவமிரு; தானாகத் தன்னைத் திறந்து காட்டினால் ஒழியத் திரையை விளக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்க்க விழையாதே என்றும், மௌனம் கதவு, தாழ்ப்பாள், பூட்டேல்லாம் இல்லை; வெறும் திரைச்சீலை.  உள்ளார்ந்த ஒரு செருமல் போதும்; தானாக உணர்ந்து தன்னை முழுவதுமாகத் துறந்து சரசமாட உன்னை வாவென்று அழைக்கும்.  காத்திருக்கிறது உன் நிழல் என்கிற சைகை போதும்; உள்ளிருந்து மௌனம் தன் ரகசியங்களை உடைத்துக் கொண்டு சொற்களாக முகம் காட்டும் என்றும் பேசாமல் அவ்வளவு பேசுகிறது புகழேந்தியின் மௌனம்.

நம் மண்ணைச் செரித்து உரமாக்கி, நம் செடிகளுக்கு ஓட்டமாக நமக்குள்ளேயே மண்புழுவைப் போல நெளிகிறது உண்மை.  பஞ்சு போல அவ்வளவு மிருதுவாக, அவ்வளவு சாதுவாகத் தன்னைக் காட்டிக் கொண்டு வெள்ளை அந்துப்பூச்சியைப் போல நம் பசுமையை நாசமாக்கிவிடுகிறது பொய்.

இருந்தும் பொய்மீது நாம் காட்டும் அக்கறையில், நூறில் ஒரு பங்கு கூட, உண்மை மீது காட்டத் தவறுகிறோம்.

அமிலமழையென  நம் மீது பொழிகிறது பொய்.  குட்டிச்சுவரைப் போல வழிந்தோடிக் கரைகிறோமே ஒழிய, கூரையற்று நாதியற்றுக் கிடக்கும் நம்மை நாமே கண்டு கொள்ளாமல் ஓரக்கண்ணால் பார்த்தபடி நகர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.  கண்முன்னே யாருடையதோ உண்மை கழுத்தறுபடும் போது, எதையும் பார்க்கவில்லை, நான் அந்த இடத்திலேயே இல்லையென வாழ்தலின் பொருட்டு வாழாவெட்டியாகிறது நம் உண்மை. இறந்தே பிறந்த உண்மை நாம்.

“உண்மையின்

அண்மையில் தான் இருக்கிறோம்

என்றாலும்

தொலைதூரப் பொய்யை நம்பிப்

புறப்பட்டுவிடுகிறோம்”.

பொய்யை நம்பிப் புறப்பட்ட நாம், போய்ச்சேரும் இடமறியாமல் தவிக்கப் போகிறோம்;  உண்மையை அனாதையாக்கிவிட்டு உல்லாசப் பயணம் போகும் நாம், ஒரு மாபெரும் விபத்தில் சிக்கிச் சீரழியப் போகிறோம்;  அப்போதும் நம்  அடையாளம் காட்டப் போவது, எப்போதோ நாம் கழுத்தில் அணிந்திருந்த உண்மை தான் என்பதற்கான சான்றாவணமாகவே இக்கவிதையை உள்வாங்க முடிகிறது.

நாம் பிரம்மாண்டமென நம்பிக் கொண்டிருக்கும் எதுவும் பிரம்மாண்டம் இல்லை.  நமக்கென ஒரு எல்லையையும் வரையறைகளையும் வகுத்துக் கொண்டு நம்மை நாமே பிரம்மாண்டப்படுத்திக் காட்டுகிறோம்.  வியந்து வியந்து கடைசியில் நாம் ஒன்றுமே இல்லாத வெட்டவெளி என்கிற உணர்வை நமக்கு நெருக்கமானவர்களுக்கு நாமே புலப்படுத்திவிட்டு, நம் அத்தனை பைசாசங்களும் சுக்குநூறான அசதியிலும் அருவருப்பிலும் முடிவில் ஆளரவமற்றுக் கிடக்கிறோம்.

 “வானம் என்பது

உண்மையில்

தலைகீழ்ப் பள்ளம்.”

என்ற வரிகளைப் படித்த போது, திடீரென ஒரு தொட்டிச்செடி, தலைகீழாய்க் கவிழ்ந்து,  தன்னை விடுவித்துக் கொண்டு, மண்ணோடும் மண்ணடி நீரோடும் என் தலையில் விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு பெரும் பள்ளத்தில்  யாரோ என்னைக் குப்புறத் தள்ளியது போலவும், என் திடீர்த் தலைகீழ்ப் பிரவேசம் கண்டு, ஒரு அண்டசராசரப் பட்சி விசுக்கெனப் பறந்து போவது போலவும்,  அதுவரை அந்த அதலபாதாளத்தில் அறுந்து கிடந்த பழைய இரும்பு வாளி,  ஓரங்கள் சரிந்து விழுந்த களிமண், யாரோ ஒருத்தியின் நைந்து கிழிந்த சேலை, எட்டிப் பார்த்த முகம் தெரியாத முகங்கள் எல்லாம் என் தலை மேல் பொலபொலவென உதிர்வது போலவும் தோற்றம் கண்டேன்.  ஒரு கவிதையை, காடாக, மலையாக, வெட்டவெளியாக, பெரும் பள்ளமாக, மழையாக, வெயிலாக வெவ்வேறான வார்த்தைகளால் வடிவம் கொள்ளச் செய்கிறான் கவிஞன் என்பதற்கு இக்கவிதையை விட வேறெந்த உதாரணமும் தேவையில்லை.

அன்புக்காகத் தான் இந்த உலகின் ஒவ்வொரு உயிரும் தவம் கிடக்கிறது.  அன்புக்கு ஈடாகத் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் எந்த உயிரும் தயங்குவதில்லை.  அன்பு தான் நீர், அன்பு தான் விதை, அன்பு தான் வேர், அன்பு தான் பசுமை, அன்பு தான் கனி, அன்பு தான் பசி, அன்பு தான் புசித்துச் செரிக்க வைக்கும் முத்தம்.  அன்பு பட்டுப் போகும் போது மனம்

பாலைவனமாகிவிடுகிறது.  ஒட்டகத்தைப் போல அன்பைத் தேக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு உயிரும் யாரையோ சுமந்து தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு புன்னகையால், ஒரேவொரு சொல்லால், ஒருதுளிக் கண்ணீரால், நெருக்கமான விரல் பற்றுதலால், தீர்க்கமானதொரு பார்வையால் எனத் தன்னை எப்படியாவது வெளிப்படுத்த அரும்பாடுபடுகிறது அன்பு.  தேக்கி வைக்கப்பட்ட அன்பு, நம்மைக் கரை சேர்க்கிறது.  திறந்துவிடப்பட்ட அன்பு, நம்மை உள்ளிழுக்கிறது.  அன்புக்கு அடிமையாவதற்கு யாரும் வெட்கப்படுவதில்லை.  அன்பிலிருந்து விடுபடவும் யாரும் விரும்புவதில்லை.

 “உடைந்து அழ

ஒரு மதகின் தோள் வேண்டும்.”

என்னும் புகழேந்தியின் கவிதையில், உடைதல், மதகு, தோள் என்பதன்  பின்னுள்ள அன்பின் சாரங்கள், நம்மைக் கட்டிப் போடுகின்றன, நம்மைக் கட்டவிழ்த்தும் விடுகின்றன.

காலத்தின் சிடுக்குகளில் தன் ஒரு சொல்லையும் சிக்கவிடாமல், மிகவும் லாவகமாகக் கையாளக் கவிஞன் மேற்கொள்ளும் உத்திகள் கைவரப்பெற்றால், உலகம் பேரமைதியின் சுவர்க்கபுரியாக மாறிவிடும்.  ஒரு சொல்லை நேரடியாக கேட்கும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கை விட, எழுத்தின் வழி அதை உணர்வது காலாகாலத்திற்கும் நமக்குள் பலவித அதிர்வலை எழுப்பிக் கொண்டே இருக்கும் என்பதற்கு குகை மா. புகழேந்தயின் கவிதைகளே சான்று.

வாசித்து முடித்து வெகுநேரம் கழித்தும் இயல்புநிலைக்குத் திரும்ப விடாமல், அதிலேயே உழன்று கிடக்க வைக்கும் கவிதைக் கலையைக் கொஞ்சமும் பிசிறின்றி வெளிப்படுத்தும் புகழேந்தியின் சொல்வலையில் பூச்சியைப் போலச் சிக்குண்டு கிடக்கிறேன்.

பேரன்புடன்,

மா. காளிதாஸ்.

 (15.08.2020)

 

நூல் தகவல்:

நூல் : பனித்துளி விழுங்கிய ஆகாயம்

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : குகை மா.புகழேந்தி

வெளியீடு : பரிதி பதிப்பகம்

வெளியான ஆண்டு :   நவம்பர் 2020

விலை: ₹800

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *