நூல் விமர்சனம்புனைவு

அகிலாவின் “மணலில் நீந்தும் மீன்கள் ” ஒரு அறிமுகம்


னிதனுக்கு உடலை உறுதி செய்ய வேண்டுமென்றால் ஊட்டச்சத்து அவசியம் வேண்டும். அதேபோல், மனதுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்றால் எழுத்தும், வாசிப்பும் மட்டுமே இருக்கிறது. வாழ்க்கை பல சமயங்களில் பல மனிதர்களுக்கு நம்பிக்கையின் கோலூன்றித் தான் நடக்க கற்றுத் தருகிறது.

அந்த நம்பிக்கையின் சுடரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தன் கையில் ஏந்திப் பிடிக்கின்றனர்..

சிலர் எழுத்தின் வழியாகவும், வாசிப்பின் வழியாகவும், இன்னும் அநேகர் தங்களுக்குத் தெரிந்த வெவ்வேறு வழிகளில் அந்த நம்பிக்கைச் சுடரை கையில் ஏந்திக் கொண்டு வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டேயிருக்கின்றனர். இதில் சற்றும் மனம் தளராமல் ஓடிக்கொண்டிருப்பவர்களில் கோவையைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளருமாகிய அகிலா அவர்கள்.

கோவை அகிலா ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும் மனநல ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். ” தவ்வை “என்ற நாவலும், இங்கிலாந்தில் நூறு நாட்கள் என்ற பயண கட்டுரை நூலும் வெளிவந்துள்ளன.

மேலும் மிளகாய் மெட்டி, சம்முகம் போன்ற சிறுகதை நூல்கள் வெளிவந்துள்ளன.
கோவை அகிலா அவர்களின் மணலில் நீந்தும் மீன்கள் அவரது நான்காம் தொகுப்பு. இந்த தொகுப்பின் வழியே கடந்த போது, பெண்ணியத்தின் மென்மையான கூறுகளில் அமிழ்ந்து கிடக்கும் உணர்வுப் பொதிகளை மீச்சிறு தேடல்களாக பதிவு செய்கிறார். நம் வாசிப்புக்கான தளத்தில் வேறு வேறு புரிதல்களுக்கு உள்ளாக்கி நகரும் இவரது கவிதை மொழி பெண்ணியத்தின் குரலை அதிரடியாக சுட்டாவிட்டாலும் சற்றேனும் சில அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகிறது.

எதுவாகவோ மாறி (பக் 10)

“இங்கு
அரசியல் பேச
ஆணாய் மாற வேண்டியுள்ளது

அடுப்படி,
பெண் உரிமை பேச
பெண்ணாய் மாற வேண்டியுள்ளது

முலைகளைப் பற்றிப் பேச
அவளா நீ என்னும்
கேள்வியாய் ஆக வேண்டியுள்ளது

எது குறித்து பேசவும்
எதுவாகவோ மாறி
கவலைப்பட வேண்டியுள்ளது ”

பெண்ணுரிமை என்பது இன்னும் பெரியாரின் ஏட்டை விட்டும், பாரதியாரின் பாட்டை விட்டும் இன்னும் அதிகப் படியாக சொல்ல வேண்டுமென்றால் பேச்சாளர்களின் பிரச்சார மேடையை விட்டும் கூட வீட்டுக்குள் நுழைவதேயில்லை.

பெண் பற்றிய தனது ஆண் மைய பிம்பங்களை குடும்பம், வீடு, சமூகம் போன்ற நிறுவனங்கள்பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் அடைகாத்து நிற்க வேண்டிய அவலத்தில்தான் இன்றும் உள்ளது. கேட்க வேண்டிய கேள்விகள் பல இன்னும் கேட்கப்படாமலே குளத்தில் படிந்த பாசி போல் இந்த சமூக வெளியில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது.
அகிலா, அந்த பாசியை களைத்து விட முடியாத ஏக்கத்தில் கொஞ்சம் விலக்கி பார்க்கிறார்.

‘பெண்ணியம் ‘என்ற தீவிரத்தை விட்டு பெண் என்ற பாலின அடையாளமாய் கவிதைக் குள்ளாகவே நகரும் அவளின் மொழியை அவளே பேசித் தீர வேண்டியுள்ளது. பெண் குறித்து பேசத் தயங்கும் ஆண்களிடமும் இதே மொழி மெல்ல உள்ளிறங்கி ஆண் மனதை வேவு பார்ப்பது போல், ஒருவித உளவியல் பாங்குடன் அமைந்துள்ளது தலையங்கம் என்ற கவிதை

தலையங்கம் (பக் 6)

“பேருந்து நிறுத்தத்தில்
அவனும் அவளும்

அவன்
அசையாமல் நிற்கிறான்
அவள்
எப்போதும் போல்
அழுகிறாள்

பிச்சை போடுவது பற்றியே
ஆண்களின் தலையங்கம்
பேசுகிறது

மௌனம் உடை (பக் 15 )

ஏய் மீனே,
வற்றிப் போகும் குளத்துக்காக
சத்தமிட்டு அழுதிருக்கலாம் நீ

அப்படியாகிலும்,
தக்க வைத்திருக்கலாம்
உன் உயிரை “

இந்தச் சத்தம் உறங்குபவனுக்கு கேட்கும். உறங்குவது போல் நடிப்பவனுக்கு எப்படி கேட்கும்?
சமூகத்தின் ஒரு பாதி எப்போதும் நடித்துக்கொண்டேதான் இருக்கும்.
உன் குரலை நசுக்கும் வரை…. அல்லது உன் உயிர் போகும் வரை…

இல்லறமே துறவறம்( பக் 24)

“நீர்த்து விட்டதென்றும்
சொல்ல முடியவில்லை
இல்லாவிடினும்
இதுதான் நிலை

பட்டினத்தாரின் உருவம்
வந்து செல்கிறது என்னுள்
துறவறத்திற்கு கரும்பெதற்கெனும்
கேள்வியுடன் “

கேட்கப்படும் கேள்விகள் அனைத்துமே அதன் விடைகள் எதுவாயிருந்தாலும் இல்லறத்தில் பெண் எத்தகையவள் என்ற ஒழுகும் சார்பின் தன்மையால் அது அத்தகையதாக மாறும் என்பது எழுதப்படாத விதி போல் என்றும் அமைந்துள்ளது.பெண்ணுக்கான கேள்விகள் இன்னும் இல்லறத்திலேயே தீர்ந்த பாடில்லை.

பஞ்சாயத்து (பக் 25 )

“மதிய நேர காற்றில்
அகோரத்தின் நிழல்
அரசமரத்தடியில்

அடி…. அம்மாடியோவ்…
என்றதான மருதாயின் குரலுக்கு
கருப்பண்ணன் கடையின் தட்டி திறக்கிறது
அங்கங்கேயிருந்து
ஏராளமான கண்களுடன் முகங்கள்

……….
……….

மேய்ந்து விட்டு
கொட்டடிக்குள் அட்டகாசம் செய்யும்
மாட்டை
கதிர் அறுத்தாச்சுன்னு
சத்தம் போட்டு சொல்கிறாள்

குத்திட்டு உட்க்கார்ந்து
வெட்டப்பட்ட அவனின் தலையின்
முடிக்கொத்தை விடுவிக்கிறாள்
சொத்தென்று விழுந்து
சத்தம் குறைந்த ரத்தச் சொட்டுக்களை
தரையில் விரிக்கிறது அது

………………
…….

தலையசைத்து
ஆசுவாசப்படுகிறது பஞ்சாயத்து
அரசமரம் “

பெண் தன் சுயத்தை தானே அறியும் போதும் தொடர்ந்து அதன் மீது விழும் தாக்குதல்களின் போதும், ஒரு பொழுதில் மீறும் அவள் சுயம் இங்கே கதிர் அறுப்பதாக சுட்டுகிறது. வெட்டப்பட்ட அவன் தலை வழியாக விழும் சத்தம் குறைந்த ரத்தச் சொட்டுகள் வழியாகவே அவளின் சுயத்தை பிறர் அறியச் செய்வதாகவும் இருக்கிறது. இதில், பெண்ணின் வலிதான் சத்தம் குறைந்த ரத்தச் சொட்டுகளாக தரையில் விரிகிறது.

மனுஷி (பக் 42 )

“சாமியைப் பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்ளாமல்
நடந்தாள் தாய்

ஏனமா…. என்றாள் மகள்
வீட்டுக்கு தூரம்
அப்படியென்றால்?
முட்டை கருவாவதில்லை
சாமிக்கு தூரம் வருமா?
அதை அவளிடமே கேட்டுக்கொள்.
உன்னிடம் பதிலில்லையா?

மனுஷிகளிடம்
பதில்கள் இருக்காது
என்றாள் “

ரத்தமும் சதையுமாக இருக்கும் மனுஷிகள்தான் கல்லாய், சிலையாய் நிற்கும் தெய்வங்களிடம் தங்கள் பக்தியையும், பயத்தையும், வலியையும் கொட்டித் தீர்க்கிறார்கள். கோயில் சுற்றுப்பிரகாரங்களில் தீச்சட்டி எடுத்தும், அங்கப் பிரதட்சிணம் செய்தும் இன்னபிற வடிவங்களில் எல்லாம் தனது நேர்த்திக் கடன்களை அள்ளி வழங்கி விட்டு, தன் உடம்பில் இயற்கையாய் வரும் ரத்தப் போக்கிற்காக தெய்வங்களை விட்டு விலகி தானல்லாத ஒன்றாக அதை பாவிப்பதை காண முடிகிறது. இதற்கான கேள்விகளை தேட முடியாதவர்களாகவும், பதில்கள் இல்லாதவர்களாகவும் இருப்பது, தீட்டு என்ற பெயரில் பெண்களின் மீது நுண்ணரசியல் செய்து வரும் ஆதிக்க சக்திகளின் வெளிப்பாடாகவே இந்தக் கவிதை அமைந்து விடுகிறது.

மணலில் நீந்தும் மீன்கள்

……………………
……………………

“கொட்டிக்கிடக்கும் சுடுமணலை
உண்டு வளரும் மீன்களுக்கு
கட்டுமரங்களைப் பற்றிக் கவலையில்லை

……………………
……………………

ஒவ்வொரு முறையும்
கவனிக்கத் தவறி விடுகிறாய் இங்கு
மீன்கள் மணலில்தான்
நீந்துகின்றன “

“மணலில் நீந்தும் மீன்கள்” என்ற தொகுப்பில் மொத்தம் நாற்பது கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பெண்ணின் உள்ளார்ந்த மன அடுக்குகளுக்குள் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் ஒரு வித தொனி தொடர்ந்து ஒலிக்கிறது.

முற்றிலும் பெண் சார்ந்த கவிதைகள் என்பதால் என்னவோ அவர்களின் அகம் பற்றிய பொருளில், தனித்த உளவியல் நோக்கில் கவிஞர் அகிலாவால் கவனிக்கப் படுகிறது.

மேலும், கவிஞர் மன நல ஆலோசகராகவும் இருப்பதால், தனது மொழியை உளவியல் பாங்கான நடையிலேயே தனது பெரும்பாலான கவிதைகளை அமைத்துள்ளார். இது வாசிப்பில் வேறொரு புரிதலை சுட்டக் கூடியது என்ற கவிஞரின் பார்வையிலேயே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


 – கவிஞர் மஞ்சுளா

நூலிலிருந்து .. 

என்னுரை

‘மணலில் நீந்தும் மீன்கள்’ என்னும் இந்நூல், என்னுடைய நான்காவது கவிதைத் தொகுப்பு. ‘சின்ன சின்ன சிதறல்கள்’, சொல்லிவிட்டுச் செல்’ என்ற என் முதல் இரண்டு தொகுப்புகளும் இயல்பாய் நிகழ்ப வைகளைச் சொல்லிச் சென்றவை. மூன்றாம் தொகுப்பான மழையிடம் மௌனங்கள் இல்லை’ என்பது மழையும் மழைக் காலத்தையும் கவிதைகளாய் உள்ளடக்கியவை. பெண்ணாக இருந்து பெண்கள் குறித்த கவிதைத் தொகுப்பு ஏதுமில்லையா என்று என்னிடம் கேட்டவர்கள் அதிகம்.

‘மணலில் நீந்தும் மீன்கள்’ என்னும் இத் தொகுப்புதான், முற்றிலும் பெண் சார்ந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு. கவிதைகளின் தொனியில் இருக்கும் மென் அழுத்தம், ஒப்பீடு முறை முதலியவை நேரடியான அதிரடி பெண்ணியத்தை சுட்டுபவை அல்ல. இவற்றில் சில உங்களுடன் நேரடியாகவும் சில மறைமுகமாகவும் பேசலாம். மீண்டுமான வாசிப்பில் இவை வேறு புரிதலையும் சுட்டலாம். வாசித்துச் சொல்லவும்.

இதில் இருக்கும் இரு கவிதைகள், கைம்பெண்’, காத்திருப்பு போன்றவை Cultural Centre of Vijayawada & Amaravati என்னும் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகின் பல மொழிகளிலான International Multilingual Poetry Anthology of Women Poets’, ‘Amaravati Poetic Prism’ என்ற இரு நூல்களிலும் வெளிவந்துள்ளன.

அன்பும் நன்றியுடனும்
அகிலா

 

நூல் தகவல்:
நூல் :

மணலில் நீந்தும் மீன்கள்

பிரிவு : கவிதைகள்
ஆசிரியர் : அகிலா
வெளியீடு: கரங்கள் பதிப்பகம்
வெளியான ஆண்டு :  ஜனவரி 2020
பக்கங்கள் :
விலை :
மின்னூல் பதிப்பு :

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *