Ki-Raகி.ரா - புகழஞ்சலிநூல் விமர்சனம்புனைவு

காலகாலத்துக்குமான வாழ்வியல் கதை “கிடை”.


ரு குறுநாவலில் இத்தனை விஷயங்களை சொல்வதே தெரியாமல் சொல்லிவிட முடியுமா? Moral சொல்லாமலே சொல்லப்படும் Morals. ஒவ்வொரு காலகட்டத்திலும் வழக்கத்தில் இருந்துவரும் Morality.

தப்பு செய்வதே வழக்கமாக கொண்டவராக இருந்தாலும், தவறேதும் செய்யாத வெள்ளந்தியாக இருந்தாலும்  சில திணிக்கப்பட்ட முடிவுகளை மாற்ற முடியாமல் மௌனமாக ஏற்றுக்கொள்வது தவிர வேறெதுவும் செய்துவிட முடியாதென்பது எக்காலத்துக்கும் பொருந்தும் நீதி.

ஒருவர் பலகாலமாக தப்பு செய்துகொண்டே இருந்தால், செய்யாத ஒரு தவறில் எக்குத்தப்பாக சிக்கி தண்டனைக்கு உள்ளாவதும், அந்தந்த காலகட்டத்தில் நடைமுறையில் இருக்கும் சமூக வரையறைகளை மீறிய விருப்பங்களை வளர்த்துக்கொள்வதால் கையறு நிலையில் ஓர் இளம் பெண் பரிதவிப்பதும், களம் வேறுவேறானாலும் காட்சிகள் மாறினாலும் இந்த நியதிகள் மட்டும் என்றென்றும் எவ்விடத்தும் நிரந்தரம்தான்.

கி. ரா அவர்களின் சிறப்பு வெறுமே கரிசல் மொழியை கையாள்வதில் மட்டுமல்ல. அம்மக்களின் வாழ்வை கோப்பு காட்சிகளாக படம்பிடித்து விடுவதில், இயல்பான மக்களின் ஒரு காலகட்டத்து வாழ்வியலை துல்லியமாக கண்முன் நிறுத்துவிடுகிறார். அதிலும் ஆடுகளின் பெயர்களை, பெயர்க்காரணங்களை அவர் சொல்லும்போதும் சரி, குறிப்பெடுக்க அவசியமின்றி அதை நினைவில் கொள்ளும் திறன் பற்றி மறை பொருளாய் குறிப்பிடும்போதும் சரி, எவ்வாறு வம்சாவளியாக ஒரு வேலை செய்யும்போது அவ்வேலை மிக இயல்பாக மிக எளிதாக மிகச்சிறப்பாக நடைமுறையில் கைக்கொள்ளப்பட்டுவிடும் என்பதை கிடை நிர்வாகத்தின் நடைமுறையில் உணர்த்திவிடுகிறார்.

மிக மிக நுண்மையான வகையில் உணரப்பெறும் வயசுப்பெண்ணின் “வாசமும்” வயசாளியின் “வீச்சமும்” போகிற போக்கில் சொல்லப்பட்டுவிடுகிறது. ஒரு சமுதாயத்தில் கோபம், காமம் போன்ற உணர்ச்சிகள் இயல்பானவையாக ஏற்றுக்கொள்ளப்படும் வரைதான் அதில் practical ஆக குற்றங்கள் குறைநிலையில் இருக்கும். தப்புகளும் தவறுகளும் மிகக் கடுமையாக வரையறுக்கப்பட்டு, தவறு நேர்கிறபோது கீழ்மையான சுய விமர்சனம் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டு, மேலும் மேலும் அழுத்தப்பட்ட உணர்வுகளை கையாளத்தெரியாத சமூகம் கால ஓட்டத்தில் வக்கிர உணர்வுகளால் நிரப்பப்பட்டுவிடும். குழந்தைகளுக்கு கூட சுயமரியாதை உண்டு என்று எதுக்களிக்கும் இன்றைய காலகட்டத்தில் கிழவனாரை கோபப்படுத்தி, அவர் வசைபாடுவதை ரசித்து சிரிக்கும் இளம்பெண் என்ற காட்சி மிக எளிமையாக ரம்மியமாக மனதை தொட்டுவிடுகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுநிலை சமூக கட்டுதிட்டங்கள் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாததாக போனாலும் ஒரு அறிவில் முதிர்ந்த மனிதரை வழிகாட்டுதலாக கொண்ட சமூகத்தால் கௌரவமாகவே கையாளப்பட்டுவிடுகிறது.

கலெக்டர் என்று பெயர் காரணத்தோடு ஒருவர் முன்னிலை படுத்தப்பட்டாலும் அவ்வூரின் சூத்திரதாரியாக இருப்பவர் திம்மநாயக்கரே. இது கூட எக்காலத்துக்கும் பொருந்தும் king and king maker என்கிற formula தான்.

குறி கேட்டல், பேயோட்டுதல் போன்றவை மூடநம்பிக்கைகள்தான். ஆனால் மூடநம்பிக்கைகள் பல காரணங்களுக்காக கட்டமைக்கப்பட்டவை என்பதை எளிதாக புரிய வைத்து விடுகிறார். இங்கு பேய் பற்றிய புரளியை, ஒரு தனி மனிதர் தன் சுயநலத்துக்காக கையாள்கிறார். ஆனால் முள்ளை முள்ளால் எடுப்பது போல குறி கேட்டல் என்கிற மற்றோர் மூட நம்பிக்கையால் சூத்திரதாரி திம்மநாயக்கர் பலநாள் திருடனை செய்யாத தவறில் சிக்க வைத்துவிடுகிறார். அதாவது “ஆடும்வரை ஆடு” என்று விட்டுவைத்து, சரியான சமயத்தில் வளித்து வம்பில் சிக்க வைத்து சூழ்நிலையை தன் விருப்பத்துக்கு அமைத்துக்கொள்கிறார். தவறு செய்யும் யாவரும் தங்கள் குடுமி ஆட்டுவிப்பரின் கையிலே இருப்பதை மறந்துவிட்டு ஆடுவதும், சரியான சமயத்தில் அது நினைவூட்டப்பட்டு விடுவதும் கூட எல்லா காலகட்டத்திலும் நடப்பதுதான். பேய் ஓட்டுவதற்காக அந்த இளம் பெண்ணை அழைத்து சென்று மிளாறினால் அடித்தும் மென்மையான சோகம் இழையோடும் உடுக்கை ஒலி இசைத்தும் அவளை இளக்கி அவளுடைய depression க்கு வடிகால் அமைத்துவிடுவது எளிய மக்களுக்கான கடைசி மற்றும் கண்கண்ட மருத்துவமாவதை காண முடிகிறது.

மொத்தத்தில் காலகாலத்துக்குமான வாழ்வியலை எளிமையாக எடுத்துரைத்த கதை “கிடை”.

  • ஆர்த்தி சிவா

 

நூல் தகவல்:

நூல் : கிடை

பிரிவு :  குறுநாவல்

ஆசிரியர் :  கி.ராஜநாராயணன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :    

முதற்பதிப்பு : 1968  (அறுசுவை, வாசகர் வட்டம்)

மறுபிரசுரம் :  டிசம்பர் 2017

பக்கங்கள்: 61

விலை :  ₹ 75

Kindle Edition:

கி.ராஜநாராயணின் “கிடை” நாவலை தழுவி அம்சன் குமார் இயக்கத்தில்  “ஒருத்தி” எனும் பெயரில்  2003 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளியானது. இதுகுறித்து மேலதிகமாக அறிய  இங்கே சொடுக்கவும்

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *