1 வாசகர் - 5 விமர்சனங்கள்புனைவு

லிங்கத்தின் வழி கசிகிறது எல்லாம்!


ஆசிரியர் குறித்து: லார்க் பாஸ்கரன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச் சேலத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைத்துறையில் வரைகலை தொழில்நுட்புனராக உள்ளார். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தேனி அமைப்பின் அசோகமித்திரன் படைப்பூக்க விருது பெற்றுள்ளார். நடந்து முடிந்த சென்னை புத்தகச் சந்தையில் 160 க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு அட்டை வடிவமைப்பு செய்துள்ளதை தமிழ் இந்து இதழ் குறிப்பிட்டுள்ளது.

முன்னுரை:

லார்க் பாஸ்கரனி கவிதைகள் காலத்தின் அலைக்கழிப்புகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் பன்மை கொண்டவை. ஒவ்வொரு கவிதைகளுக்குள்ளும் காலத்தின் சூக்கும வெளிகளை இழுத்துவந்து புடம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்ட சொற்களால் ஆனவை. வானம்பாடிகளின் தற்காலத்திய வாரிசு அவர் என்பது மிகையல்ல.

“கவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும் உணர்ச்சிப்
பான்மையையும் சாந்தி செய்வது”

– புதுமைப்பித்தன்.

ஒரு பிரதியின் மீதான வாசிப்பின் மதிப்பீடு என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை நோக்கிய தீர்ப்புகளாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு முறை வாசிப்பிலும் அப்பிரதி புதிய கிளர்ச்சியினை, புதிய தெறிப்புகளை வழங்கும் சாத்தியமுள்ளவை. ஏதோவொரு கணத்தில் எவரோ ஒருவருக்கான திறப்பினைத் தரும் வல்லமை ஒவ்வொரு பிரதிக்கும் இருக்கிறது. அது கண்டடைவோரின் மனங்களில் சாந்தியினை உண்டாக்கும்.

சமகால நெருக்கடி வாழ்வு முறையில் எதிர்காலம் என்பது நிச்சயமற்ற சூன்ய வெளியாகிறது. இரண்டுக்கும் இடையில் ஊடாடும் காலத்தே அசாத்தியங்களை கண்டடையத் தவிக்கும் ஒரு சாமான்யனின் மன அவசங்களின் வெளிப்பாட்டை, யாரும் பேசத் தயங்குகின்ற இருண்ட பக்கத்தினை கோடிட்டுக் காட்டுவதைச் செய்கிறது மரணக் குறிப்புகள் எனும் இப்பிரதி.

ஜெய் பீம்:

பொய் ஒட்டிய வாய் எனும் தலைப்பிட்ட கவிதையில் கவிதையின் எதுகை மோனை ஓசை நயம் என ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வந்து ஈற்றடியில் ஈய்க்கள் மொய்த்தது என்பார். கவிதை எழுதுதல் என்பது தூய்மைக்கலை என இதுகாறும் பயிற்றுவிக்கப்பட்ட காலம் மரணித்து விட்டது என்பதனைச் சுட்டும் ஒரு அற்புதமான கவிதை அது. காலங்காலமாக கவிதை மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை அது. ஆனாலும் நிகழ்காலத்திலும் அத்தகைய போக்கு இன்னும் மாறிவிடவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

“பம்பரமாய் நான்
தெரு வீதியில் எல்லாக்
கதவுகளையும் தட்டினேன்….
நான் மயானத் தெருவில்தான்
இன்றும் தூங்கி விழிக்கிறேன்.”

என்ற இக்கவிதையை வாசிக்கையில் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் அலறும் பெண் பேய் உட்குவிந்த வயிற்றில் அடித்துக்கொண்டு ஓடியதை நினைவுறுத்துகிறது. மயானத் தெருவில் வசிப்பதற்கும் ஒரு நெஞ்சுரம் வேண்டும் எனச் சொல்வது ஏற்புடையதல்ல. ஆயினும் மயானத்தை ஒட்டியுள்ள அல்லது மயனத்தினை அண்டிப் பிழைக்கின்ற மக்களின் வாழ்வியலை கூர்ந்து நோக்க வேண்டுகிறது இக்கவிதை ஒரு ஜெய் பீம் போல்.

மரணத்தின் அறுவடை:

அவனின் அவன், நிதர்சனம் மற்றும் மூன்றாம் தலைமுறை எனும் கவிதைகள் நோய்க்காலத்தின் பேரவலத்தை சுட்டிச் செல்கின்றன.

“கண்ணீர் தாங்கிய கப்பல்
அவன் கால்மாட்டில்
நின்று கொண்டிருக்கிறது”

என அவனின் அவன் கவிதையில் மரணம் நின்ற காட்சியினையும்,

“நீண்ட வரிசையில்
காலத்தின் பிணத்தை
எரிக்கவும் புதைக்கவும்
தவிக்கிறது ஒரு கூட்டம்”

என்ற நிதர்சனம் கவிதை நாம் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாத பேரவலத்தின் கொடுங்காட்சி. ஆட்சியாளர்களின் பேயாட்டம், கார்ப்பரேட் முதலாளிகளின் பேராசைகளின் விளைவுகள் அக்காட்சி என்பதனை நாம் மறுக்கவோ, மறக்கவோ முடியாத மரணத்தின் அறுவடை.

 

காதல் சாதல்:

காதல் தோல்வியினால் ஏற்படும் தற்கொலை வாயிலாக ஒரு மரணக் குறிப்பினைச் சுட்டிக்காட்டுகிறார். அவன் தற்கொலைக்கு முயன்று பிழைத்து வந்தாலும் ஆசைகள் ஈய்க்கள் மொய்த்தபடி இருந்ததை அவன் பார்த்திடக் கூடாத மரணத்தின் வாசலினை ‘கடிகார நாட்கள்’ கவிதை சுட்டுகிறது.

“காட்டுப் பூக்கள்
பூத்த நாள்
மயக்க மருந்தை
செலுத்திக் கொண்ட நாள்”

என விரியும் ஒரு நாள் கவிதையில்,

“அந்த நாள் எனக்கு நினைவில்லை
அந்த நாள் உங்களுக்கும் தெரியாது
என்று சொல்லுங்கள்”.

என்கிறார். அமைதியான அவளின் அரவணைப்பின் கதகதப்பில் உயிர்த்தெழுந்த அந்த ஒரு நாள் எமக்கும் நினைவில்லை என்பதும் சாலச் சிறந்ததுதான்.

ஒவ்வொரு கவிதையும் ஒரு குறுங்கதையாடலை நிகழ்த்திச் செல்கிறது. பிரதியின் தலைப்பான மரணக் குறிப்புகள் என்ற தலைப்பிட்ட கவிதை ஒரு சாவு வீட்டின் நிகழ்வுகளை குறிப்பெடுக்கிறது. இக்கவிதை உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அதியுட்சமான கவிதை என்றால் மிகையில்லை. மரண வீட்டில் சடலத்தின் மீதான சடங்கு, சம்பிரதாயங்களை எல்லாம் காட்சிப்படுத்தி வந்து இவையெல்லாம் வேண்டாம் என்பதோடு

“நான் ஒரு தயாரிப்பு
ஆகையால்
மருத்துவமனைக்கு
ஒப்படையுங்கள்…”

என்கிறார். இறப்பிற்குப் பிறகும் இச் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் சிறந்த படைப்பாளியின் அல்லது படைப்பின் வெற்றி. இது பொதுவுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடு.

உடலரசியல்:

“ஆட்சி செய்த யோனிக் கலவையை சாப்பிட சபிக்கப்பட்டவன்”.
“யோனி உடலுறவுக்கு மட்டுமல்ல”.

என்ற கவிதை வரிகளில் பெண்ணுடல் மீதான ஈர்ப்பும், விலக்கமும் என இருண்மை கொண்டிருக்கிறது.

கற்பிதம் என்ற கவிதையில்

“யோனியும் லிங்கமும்
புணர்ந்த படிமத்தை
வழிபடும் ஆறறிவு
பண்பாட்டின் உடன் விளைவு”.

என்கிறார். மதத்தின் தவறான கற்பிதம் என நாம் எடுத்துக் கொண்டாலும்,

“மனிதனின் முதல் சிந்தனையில் கூட
மதம் இருந்திருக்கலாம்”.

என்பதனை பிரதியாளனிடம் மதம் ஏற்படுத்தியிருக்கும் தவறான கற்பிதமாகவே இதைக் கொள்ள முடியும். ஏனெனில் ஆதியில் மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் என்ற ரீதியில்தான் பரிணாம சிந்தனா வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானம் நிரூபிக்கிறது. பிறகுதான் குடி, குலம் என்ற தோற்றப்பாடுகளில் மதம் நுழைகிறது.
முத்தம் என்ற கவிதையில் நான் லிங்கத்தை வணங்குகிறேன் என்பதும், லிங்கம் என்ற தலைப்பிலான கவிதையில்

“லிங்கத்தின் வழி கசிகிறது
எல்லாம்”

என்பதும் தாய்வழிச் சமூகக் கோட்பாட்டைச் சிதைத்து ஆண்வழிச் சிந்தனையின் பெண்ணுடல் மீதான ஒடுக்குமுறையை அதாவது லிங்க மையம் பெண்ணுடலை விளிம்புக்குத் தள்ளுதலை சுட்டுகிறது. யோனி ஏற்றுக்கொள்ளாத லிங்கத்தின் கசிவுக்கு அடையாளம் இல்லை என்பதே நிதர்சனம். உடலின் மீதான அரசியல் ஆதிக்கம் ஆண் பெண் எனும் வர்க்க வேறுபாட்டில் ஆணாதிக்கப் போக்கு, பெண் உடல் மீதான வக்கிரம், போகப் பொருளாக பெண்ணுடல் பாவிக்கப்படல் என சமகாலத்திலும் காமச்சூரியன் பிரகாசிப்பது பெரும் துயரே.

எதிரொலிக்கும் சோகம்:

மரணக் குறிப்புகள் எனும் தலைப்பு தஸ்தாவெஸ்கியின் நாவலின் தலைப்பான மரண வீட்டின் குறிப்புகளை நினைவுறுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. மரணம் இங்கு சொல்லாக, வாழ்வின் துவக்கமாக, வாழ்வின் முடிவாக, காலவெளியில் சூன்யமாக, பாதையாக, நிழலாக, நினைவாக, ஏக்கமாக, தனிமையாக, வெறுமையாக, இருளாக, வெளிச்சமாக ஒவ்வொரு கவிதையிலும் குறிப்புணர்த்தும் ஒரு குறியீடாக வருவதால் தலைப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. ஒவ்வொரு கவிதையிலும் தனிமையும், வெறுமையும், மன ஆற்றாமைகளும் என ஒரு சவக்குழிக்குள் இட்டுச் செல்லும் அசாத்தியம் கொண்டவையாக வார்த்தைப் பகுமானம் கொண்டுள்ளன.

மேற்குலகின் கவி ஷெல்லியின் கவிதைகளை சோக எண்ணங்களின் எதிரொலி என்பார்கள். அப்படியாகத்தான் லார்க் பாஸ்கரனின் மரணக் குறிப்புகள் சோகங்களோடு பெரும் பதற்றத்தையும் எதிரொலிக்கிறது.

“எந்தக் கவிதையும் முழுமையாக
எழுதி முடிக்கப் படுவதில்லை
எல்லாக் கவிதைகளும் பாதியிலேயே
கைவிடப் பட்டவைதான்”.

– எஸ்.ரா.பவுண்ட்.

கவிதை வாசிப்பவரை கைபிடித்து அழைத்து வந்து பாதியில் விட்டு விலகிச் சென்றுவிட வேண்டும் என்பார் ப்ரமிள். அதிலிருந்து மீண்டு, மீட்டு வெளியே வரவேண்டியது வாசிப்பவரது திறமையும், பிரதியின் வெற்றியும் ஆகும். லார்க் பாஸ்கரனின் மரணக் குறிப்புகள் அதன் முதல் படியில் எட்டு வைத்துள்ளது என்பதை துணிந்து கூறலாம்.


துணை நின்றவை:
1. முபீன் சாதிகா கட்டுரைகள்- காவ்யா பதிப்பகம்
2. இந்திரனின் கவிதையின் அரசியல் – அலைகள் வெளியீடு
3. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்.

 

நூல் தகவல்:

நூல் :  மரணக் குறிப்புகள்

வகை :  கவிதைகள்

ஆசிரியர் :  லார்க் பாஸ்கரன்

வெளியீடு :  காலக்ரமம்

ஆண்டு :  நவம்பர் 2021

பக்கங்கள் :  

விலை:  ₹  150

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *