டேங்கப்பா.., ”

கதை சொல்லும் விதம், அதன் நடை, அதன் மொழி, அதன் மனிதர்கள் அதன் களம், எல்லாமே பிரமிப்பாகவும் புதிதாகவும் உள்ளது.

இப்படிக்கூட ஒரு நாவலை எழுத முடியுமா..? படித்து முடித்து அதிலிருந்து வெகுநேரம் மீளவே முடியவில்லை..!.

கார்ஸ் துருக்கியின்  வடக்கிழக்கு எல்லையோரம் உள்ள ஒரு இரண்டுங்கெட்டான் நகரம்.கார்ஸ் மட்டுமல்ல எல்லா நகரமே ஒரு இரண்டுங்கெட்டான் நகரம் தான்.

கார்ஸில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது. அழகான பனிப்பொழிவு.., சாலைகள் பனிகளால் நிரம்பி வழிகின்றன.

சுற்றியுள்ள எல்லைகள் மூடப்படுகின்றன. போக்குவரத்து தடைபடுகிறது. மோசமான வானிலை .. கூடவே அழகான பனியின் அட்டகாசமான தினங்கள் ஆரம்பமாகின்றன.

வானிலை என்பது ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால் கார்ஸ் நகரின் சூழல் அமைதியானதாக பாதுகாப்பானதாக தற்போது இல்லை. அது மிகவும் கொந்தளிப்பாக இந்த அழகை ரசிக்க முடியாதபடி படிக்கு இருக்கிறது.

எப்போதெல்லாம் கலாச்சாரமும் பண்பாடும் தனது முகத்தை மாற்றிக் கொள்கிறதோ, அப்போதெல்லாம் மனித உயிரிழப்பு என்பது சர்வசாதாரணமாக  இருந்து வந்துள்ளது.

சமீப காலமாக கார்ஸ்ஸில் புர்கா   எனும் முக்காடு அணிந்த  பெண்கள் தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் அவர்கள் முக்காடு அணிய  ஆளும் அரசின் அழுத்தம்  தான் காரணமா …? என்பதை ஆராய ஒரு பத்திரிகையாளன் வருகிறான்.

ஜெர்மனி ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து வரும் பத்திரிகையாளனான “கா” முன்னாள் இஸ்தான்புல் வாசி. “கா” என்பது அவனது முழு பெயர் அல்ல. ஆனால் அவன் அப்படி அழைக்கப்படுவதையே விரும்புகிறான். அவன் தற்போது ஒரு அரசியல் அகதி. தற்கொலை பற்றி அயல் பத்திரிகைகளுக்கு செய்தி சேகரித்து தருவதற்காக கார்ஸ் நகரத்திற்கு வருகிறான். குறிப்பாக முக்காடு அணிந்த பெண்களின் தற்கொலைகள் பற்றிய தரவுகளை   சேகரிப்பதற்காக..,

புர்கா அணிந்த பெண்களின் தொடர் தற்கொலைகளுக்கு பின்னனியில் உள்ள அரசியல், மதம், ஆணாதிகாரம் , அரசின் அமைப்புகள் என அவனது விரும்பத்தகாத தொடர்புகள் அதிகமாகின்றன.

துர்குத் பே அவர்களுக்கு சொந்தமான ஸ்னோ பேலஸ் ஹோட்டலில் தங்குகிறான். அந்த ஓட்டலில் அவனது பள்ளி சினேகிதி இபெக்கை  சந்திக்கிறான். இபெக் ஒரு பேரழகி .. வசீகரமானவள்.., அவளை பார்க்காமல் இருப்பது என்பது ஒரு பெரிய சாதனை. அனைவரையும் திரும்பி  பார்க்க வைக்கும் அசாத்தியமான  அசரடிக்கும் பேரழகு கொண்டவள்.

கார்ஸில் ஒரு உறைய வைக்கும் ராணுவ புரட்சி நடக்கிறது. இஸ்லாமிஸ்ட்டுகள் தங்கள்

மதக் கொள்கைகளை காத்துக் கொள்ள வன்முறையை கையில் எடுக்கிறார்கள். ராணுவ ஆட்சி மதச்சார்பின்மையை நிலைநாட்ட வன்முறையான அடக்குமுறைகளை கையில் எடுக்கிறது. இடையில் குர்த்துக்கள், சோஷலிஸ்டுகள், தேசியவாதிகள், MIT, PKK, போலீஸ் (Z டெர்மிகோல்) இப்படி பல குழுக்கள் கார்ஸின் அமைதியை பங்கு போட்டுக் கொள்கின்றனர்.

அரங்கேறும் அரசியல் நாடகத்தில் விருப்பமில்லாத ஒரு பகடைக் காயாக்கப் படுகிறான் கா. அவன் இபெக்கை தீவிரமாக காதலிக்கிறான். இபெக் தனது முன்னாள் கணவர் முக்தாருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறாள். அவளுக்கும் காவின் மீது காதல் பிறக்கிறது. அவர்கள் இருவரும் ஜெர்மனுக்கு சென்று வாழ்வதற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்கள். இபெக்கின் தங்கை கடிஃபே  நீலம் என்கிற   மதம் சார்ந்த தீவிர மனிதன் அல்லது அரசுக்கு விரோதமான தேடப்படும் குற்றவாளியுடன் காதல் புரிகிறாள்.

கார்ஸில் கா விற்கு நிறைய  கவிதைகள் பிறக்கின்றன. எப்போது என்று சொல்ல முடியாது.., கவிதைக்கான மன உந்துதல் வரும்போது அந்த கவிதைகளை உடனுக்குடன் எழுதி விடுவான். நாவல் முடிவு வரை அவன் 1 கவிதைகளை எழுதுகிறான். இந்த கவிதைகள் அனைத்தையும் பனி என்ற தொகுப்பாக கொண்டுவர   தீர்மானித்திருந்தான். ஆனால் இறுதியில் ஒரே ஒரு கவிதை தான் அவனது நண்பன் ஓரான் பாமுக்கால் கண்டெடுக்கப்பட்டது.

அது “கடவுள் இல்லாத இடம் “என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை .

இந்நகர மக்கள் அவனை ஒரு வேண்டாத விருந்தாளி போலவே பாவிக்கின்றன. ஆனால் கா அங்கு இருப்பது கவிதைகளுக்காகவும் அவன் தீவிரமாக நேசிக்கும் இபெக் என்ற பேரழகிற்காகவும் மட்டுமே. தீவிர பனிப்பொழிவால் மூடப்பட்டிருக்கும் நகர எல்லைகள் திறந்த பின்பு அவளை தன்னுடன் ஜெர்மனிக்கு அவன் அழைத்துப் போவது  தான் அவன் குறிக்கோளாக இருக்கிறது.அதற்காக அவன் பல அரசியல் வேலைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. தேவையில்லாத பல தொடர்புகளை அவன் சகித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

நகரத்தில் பலர் நினைப்பது போல் அவன் நாத்திகன் அல்ல. atheist (நாத்திகன்) என்ற சொல் கிரேக்கச் சொல்லான athos  என்பதிலிருந்து உருவானது. ஆனால் அந்த சொல் கிரேக்க மொழியில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை குறிப்பிடுவதில்லை. கடவுளால் கைவிடப்பட்ட அனாதரவானவர்களைக் குறிப்பிடுவது.  எனவே மனிதர்கள் எப்போதும்  நாத்திகர்களாக இருக்க முடியாது. கா கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மேற்கத்தியனாகவே இருக்க விரும்புகிறேன்.

இடைவிடாமல் பனியால் போர்த்திக் கொள்ளும் கார்ஸின் இளம் மஞ்சள் ஒளி வீசும் ஒரு அறையின்  கனப்படுப்பின்  கதகதப்பில் இருக்கும் போது  திடீரென குண்டுகள் வீசப்படும்.

முக்தாரின்  மனைவியாக இருக்கும் போதே இபெக் நீலம் என்கிற பயங்கரவாதி உடன் காதல் புரிந்து வந்தாள் என்கிற செய்தியை கா அறிந்த போது மிகவும் நொறுங்கிப் போகிறான். இருப்பினும் தனது மனதை தேற்றிக் கொண்டு அவன் முடிவில் இருந்து பின்வாங்கமல் இருக்கிறான்.

அதற்குமுன் அவளிடமே இதைப் பற்றி நேரடியாக பேசுகிறான்.  கடும் சொற்களால் காயப்படுத்துவது என்பதின்  உள்ளார்ந்த நோக்கம் எந்த அளவுக்கு  காதலன்/காதலி  காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதே .

இது அவன் வாழ்க்கை முடியும் வரை அவனிடமே தங்கியிருந்தது. நீலத்துடனான தொடர்பு ஒரு  விபத்து என்பதாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறான். இபெக்கும் அதை ஒத்துக் கொள்கிறாள். தற்போது கா வை மட்டுமே தீவிரமாக நேசிப்பதாக  கூறுகிறாள்.

மதச்சார்பின்மைக்கு மதச்சார்புக்கும் இடையில் பெரும் அரசியல் போராட்டம் நடக்கிறது. அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுகின்றனர் வாழ்க்கை என்பது கொள்கைகள் பற்றியது அல்ல. அது மகிழ்ச்சியை பற்றியது.

பெண்களின் தற்கொலை பற்றி நாவல் தீவிரமாக பேசுகிறது. ஒரு பெண்ணுக்கு அவள் எதற்காக தற்கொலை செய்து கொள்கிறாள் என்பது துல்லியமாக தெரிந்தால் அவளுக்கான காரணங்களை வெளிப்படையாக சொல்ல முடிந்தால் அவள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் தற்கொலைக்கான உண்மையான காரணம் சுய கௌரமாக பார்க்கப்படுகிறது. அந்த சுயகௌரவத்தை காட்டிக் கொள்வதற்காக அவர்கள் தற்கொலைக்கு விரும்புகிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

சுனய் ஸயிம் என்ற மேடை நாடக அதீத நடிகன் அவன் நண்பன் இராணுவ அதிகாரியுடன் சேர்ந்து கொண்டு இருக்கும் இராணுவ லாரிகளையும் பீரங்கிகளையும் வைத்துக் கொண்டு கார்ஸில் சிறு புரட்சி செய்கிறார்கள்.

அவர்களிடம் அகப்பட்ட நீலத்தை விடுவிக்கும் உடன்படிக்கை படி கடிஃபே  (முக்காடு அணியும் பெண்களின் தலைவி )

முக்காடு அகற்றும் புரட்சி பாத்திரமேற்று இறுதியில் தற்கொலை செய்து கொள்வதாக நடிக்க வேண்டும்.

முக்காடு அணிவது மதச்சார்பிற்காக என்று கூறிக்கொள்ளும் பெண்கள். தற்கொலை என்பதும் மதத்திற்கு எதிரானது என்பதை மறந்துவிடுகிறார்கள். (இதை குரானில் உள்ள நிஸா செய்யுள் உறுதிப்படுத்துகிறது).

ராணுவப் புரட்சியும், அரசியலும், தீவிரத்தன்மையும்..,கூடவே பனி மீது பாயும் ஒளியை போல்  காதலும் ஒரு கட்டத்தில் மிக வேகமாக நகருகிறது. அப்போது நம்மால் நாவலை விட்டு வெளியே வரவே முடியவில்லை. கார்ஸின் பனிப்பொழியும் வானிலையை போல் தீவிரமாக இந்நிகழ்வுகள் நம்மை உறைய வைக்கின்றன.

பனித்துளிகள் ஒரு சருகை போலவே  மேலிருந்து கீழிறங்கி வருகின்றன. நீர் உறையும் போது அது அறுகோண வடிவில் தான்  பனித்திவலை ஆகிறது. இந்த படிகம் வானில் இருந்து கீழே விழுவதற்கு எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை ஆகின்றது. அது கீழே கீழே விழுவதற்குள் அதன் அசல் வடிவம் முற்றிலும் மாறிவிடுகிறது. இதனை வெப்பம், காற்றின் திசைவேகம், மேகத்தின் உயரம் என பல காரணங்கள்  நிர்ணயிக்கின்றன.

மனிதனும் பல நேரங்களில் பனித்திவலையை ஒத்திருக்கின்றான். “கா” வைப் பனித்துளியின் மையப்புள்ளியாக பொருத்துகிறார் ஓரான் பாமுக்.

மையப் புள்ளியிலிருந்து வாழ்வு பற்றிய கவிதைகள் முகிழ்கின்றன. காவின் கவிதை தலைப்புகள் வசீகரமானவை ..,

சாக்லெட் பெட்டி,

கனவு வீதி,

உலகம் முடிவடையும் இடம், சுட்டுக்கொல்லப்படுதல்,

சொர்க்கம்,

தற்கொலையும் அதிகாரமும், நட்சத்திரமும் அவற்றின் தோழர்களும்,

நாதியற்றவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டியவை,

மானுட வர்க்கமும் நட்சத்திரங்களும், கடவுள் இருக்காத இடம்,..….

என்னைப் பொறுத்தவரை கார்ஸ் நகரத்தின் மனநிலை போல்தான் காவின் மனநிலையும் இறுதி வரை இருந்ததாக சொல்வேன்.அவன் ஜெர்மனியில் ஃபிராங்ஃபர்ட்டில் சுட்டுக் கொல்லப்படும் வரை அவன் மனம் எதிர்கால கனவிலும் பயத்திலும் நிகழ்காலத்தை உணர முடியாமலேயே இருந்து வந்துள்ளது.

ஓரான் பாமுக் தனது நண்பன் காவின் தடத்தை பின்பற்றி அவன் சென்ற இடங்களுக்கெல்லாம் செல்கிறார். அவன் எழுதிய குறிப்புகளைக் கொண்டு அவனது கவிதைகளை கண்டடைந்து விட முயற்சி செய்கிறார். ஆனால் அவருக்கு அவன்  எழுதி வைத்த மொத்தக் கவிதைகள் கொண்ட அந்த “பச்சைநிற ” நோட்டு புத்தகம் மட்டும் கைக்கு  கிடைக்கவே இல்லை.

கார்ஸ் நகரத்திற்குச் சென்று அவன் அருந்திய தேநீர் கடையில்அமர்கிறார், அவன் நடந்த வீதியில் நடக்கிறார், அவனைப் போல் ராக்கியை மிதமிஞ்சி குடித்து பார்க்கிறார், மல்பரோ புகைக்கிறார், அவனது காதலி இபெக்கை சந்திக்கிறார், அவன் பழகிய நண்பர்களை சந்திக்கிறார், அவன் தரிசித்த எல்லா இடங்களையும் பார்த்த பின்பும் கூட அவனைப் போலவே வெறுமையாக தான் திரும்பி வருகிறார்.

இது துருக்கியில் 1990 வாக்கில் நடந்த அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இப்படி ஒரு அப்பட்டமான அரசியல் நாவலை நான் முதன் முறையாக வாசிக்கிறேன்.

இந்த அரசியல் நாவலுக்குள் மனித உணர்வுகளையும் சமூக மற்றும் மதக் கொள்கைகளையும் ஒன்றோடொன்று இணைத்து எழுதுவது மிகவும் கடினமான ஒரு செயல்.

ஆந்தோன், துர்க்கனேவ் போன்ற ரஷ்ய இலக்கியவாதிகளின் எழுத்துகளை நாவலின் சில இடங்களில்  உதாரணப்படுத்துகிறார்.

ஓரான் பாமுக் 2006 இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்.

இந்த நாவலுக்குப் பிறகு நான் அவரின் தீவிர ரசிகனாகி விட்டேன். தமிழில் தி.ஜா வின் காதப்பாத்திரங்கள் போல் இவரது காதபாத்திரங்களும் அழுத்தமான பதிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இவரின் முதல் படைப்பே எனக்கு ஒரு பொக்கிஷமாக அமைந்துள்ளது.

கடந்த பத்து நாட்களாக  கார்ஸ் நகரத்தின் சாலைகளிலும் சந்துகளிலும்  மூலைகளிலும் கா உடன் சேர்ந்து நானும் சுற்றி திரிந்தேன். பனியில்  மெய் மறந்து திகைத்துப் போய் நின்றேன். கனவு கண்டேன். கவிதை எழுதினேன்  இன்ன பிறவும்..,

ஒரு மொழிபெயர்ப்பு நாவலின் வெற்றி என்பது அந்த மொழிபெயர்ப்பாளருக்கு உரியது. இந்த நாவல் முழுவதிலும் கா வின் மூச்சுக்காற்று போல் ஓரான்பாமுக்கின் கண்களைப் போல் நம்மை ஊடாட விட்ட இதன் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.. பாராட்டுகள்.

மஞ்சுநாத்

 

நூல் தகவல்:

நூல் : பனி

பிரிவு:  நாவல் | மொழிபெயர்ப்பு

ஆசிரியர் : ஒரான் பாமுக். (துருக்கி எழுத்தாளர்)

தமிழில் : ஜி.குப்புசாமி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2013

பக்கங்கள் : 576

விலை: ₹  650

Buy on Amazon: