ஹரிஷ் குணசேகரனின் “குரலற்றவர்கள்” சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் சுப்பாராவ் எழுதிய முன்னுரை.
குரலற்றவர்களின் குரலாக….
பல ஆண்டுகளாகவே நான் துறை சார்ந்த எழுத்து தமிழில் இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவன். இப்புலம்பல் யார் காதில் விழுந்ததோ, இல்லையோ ஹரிஷ் குணசேகரனின் காதில் விழுந்துள்ளது. ‘அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்’ என்பது போல, தான் சார்ந்துள்ள மென்பொருள் துறை சார்ந்த படைப்புகளை வரிசையாக வெளியிட்டு வருகிறார். ‘நான், அவள், கேபுச்சினோ’, ‘காக்டெயில் இரவு’ ஆகிய நூல்களுக்குப் பிறகு மூன்றாவதாக இப்போது ‘குரலற்றவர்கள்’.
அமெரிக்க தீயணைப்பு மற்றும் அவசர உதவித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற Rodney Mortenson எழுதியுள்ள Paramedic 189’s final report என்ற அற்புதமான சுயசரிதையைச் சமீபத்தில் வாசித்தேன். அதில் அவர், “நீங்கள் தினமும் அலுவலகம் செல்லும்போது, உங்கள் மேஜையில் என்ன வேலை காத்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், நான் தினமும் காலையில் என் அலுவலகம் செல்லும்போது, அன்று என்ன வேலை வரும் என்று என்னால் ஊகிக்கக் கூட முடியாது,” என்று எழுதியிருப்பார். தினமும் காலையில் வேலைக்குச் செல்லும்போது, என்ன வேலை என்பது தெரிவது ஒருபுறமிருக்க, முதலில் அன்று வேலை இருக்குமா, இல்லை வீட்டிற்கு அனுப்பப்படுவோமா என்பதே தெரியாத ஒரு துறை மென்பொருள் துறை. அந்தத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு இது. ‘ஊரடங்குகால இரவு’ என்ற ஒரு சிறுகதை மட்டும் ஒரு இளைஞியின் கதை.
நிச்சயமற்ற வேலை, உழைப்பிற்கோ அல்லது படிப்பிற்கோ சம்பந்தமற்ற குறைவான சம்பளம், அந்தச் சம்பளத்திற்குச் சற்றும் பொருந்தாதபடி வேலைபார்ப்பவனிடம் எதிர்பார்க்கப்படும் உழைப்பு என்று ஒவ்வொரு கதையிலும், மென்பொருள் துறையின் கோர முகம் இயல்பாக வெளிப்படுகிறது. எல்லாக் கதைகளின் பாத்திரங்களும் ஷேர் ஆட்டோவில், மெட்ரோவில் பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் பாடுகள் பற்றித் தமிழில் ஓரளவு வந்திருக்கிறது. ஆனால், வெளிநாட்டில் படிக்கச் செல்பவர்கள் பற்றிய முதல் பதிவு ஹரிஷினுடையதுதான் என்று நினைக்கிறேன். அவரது பதிவுகள் உண்மைக்கு வெகு அருகில் நிற்பவை. அதனாலேயே பல நேரங்களில் அதிர்ச்சியும் தருகின்றன. வெளிநாடுகளில் அறைகளில் உடன் தங்கும் ஆந்திர இளைஞர்கள் பற்றி, குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் நிறைய புலம்பியிருக்கிறார்கள். அந்தப் புலம்பல்களை இலக்கியப் பதிவுகளாக்கி இருக்கிறார் ஹரிஷ்.
இந்த உலகம் அனைத்துப் பொருட்களும் விற்கப்படும் சந்தை. வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைகளின், மருந்து கம்பெனிகளின் சந்தைகளாக இருக்கிறார்கள். இளைஞர்கள் முதலில் கல்விச் சந்தையில். பின் வேலை வாய்ப்புச் சந்தையில். அதற்குப் பின் உண்மையாகவே திருமணச் சந்தையில். திருமண ஏற்பாடு நிறுவனங்கள் – மேட்ரிமோனி கம்பெனிகள் பற்றிய மிக அற்புதமான கதையோடு ஆரம்பிக்கும் இத்தொகுப்பு, கொரோனா ஊரடங்கு கால இரவொன்றில் மென்பொருள் துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் மனவோட்டங்கள் பற்றிய கதையோடு முடிகிறது. அவரது மற்ற இரு படைப்புகளைப் போலவே இந்தத் தொகுப்பும், அரசாங்க தனியார் நிறுவனங்களின் குமாஸ்தாக்கள் அறியாத முற்றிலும் ஒரு புதிய உலகைக் காட்டுகிறது. முதல் கதையை ஆரம்பிக்கும்போதே டிண்டர் என்றால் என்ன என்று கூகுளிட்டுப் பார்த்துக் கொண்டேன். பின்னரொரு கதையில் ஹிக்கி… ஆனால் இந்தக் கதைகள் ஹிக்கி செய்யும், பல ஜிபி அளவில் ஆபாசப்படங்கள் சேகரித்து, சுற்றுக்கு விடும் இளைஞர்கள், புகை பிடிக்கும், டிண்டரில் உலவும், ஒருவனைக் காதலித்துக் கொண்டு, மற்றவனோடு சுற்றும் இளம் பெண்கள் பற்றியது மட்டுமல்ல.
இந்தக் கதைகள் சமகாலப் போக்குகளின் கதைகள். கொரோனா காலத்து ஊரடங்கு பற்றிப் பேசுபவை. நிற்காமல் போகும் புலம் பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலின் ஜன்னல் வழியே அவர்களுக்காகத் தண்ணீர் பாட்டில்களையும், உணவுப் பொட்டலங்களையும் வீசும் நல்ல உள்ளங்களைப் பற்றிய கதைகள். இந்த நல்ல உள்ளங்களுக்குத் துணையாக நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் மெயிலுக்கு 30 சதவீத ஊதியம் வெட்டு என்ற செய்தி வரும் யதார்த்தத்தைப் பதிவு செய்பவை. குரலற்றவர்களின் குரலாக அவர்களின் துயரை, வாதையை, சில சமயங்களில் அவர்களது சந்தோஷங்களைப் பேசுபவை. பல கதைகளுக்கு முடிவு என்று ஒன்று தனியாக இல்லை. வாழ்வின் ஒரு கட்டத்தைச் சொல்லிச் சென்றுவிடுகின்றன. அந்தக் கட்டத்திலிருந்து அவர்கள் மீள்வார்கள் என்பது நமக்குப் புரிகிறது.
ஈரத் துணி என்றென்றும் ஈரமாகவேவா இருந்துவிடப் போகிறது? எப்படியாவது காய்ந்துதானே ஆகவேண்டும்? என்று சமீபத்தில் எங்கோ, எதிலோ படித்தேன். துணி காய்ந்து எடுத்து உடுத்திக் கொள்வது போல ஹரிஷ் எங்கும் எழுதவே இல்லை. ஆனால் அவரது கதைகளில் எங்கோ வெயில் வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஈரத்தில் புழுங்கும் துணிகளை அந்த வெயிலை எதிர்பார்த்து அவரது கதை மாந்தர்கள் வெளியில் கொண்டு வந்து விரிக்கிறார்கள். அவற்றின் ஈர வண்ணங்களை நாமும் பார்க்கிறோம்.
ஹரிஷ் குணசேகரனுக்கு எனது வாழ்த்துகள்…..
என்றென்றும் அன்புடன்,
ச.சுப்பாராவ்.
நூல் : குரலற்றவர்கள்
பிரிவு: சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : ஹரிஷ் குணசேகரன்
வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்
வெளியான ஆண்டு : பிப்ரவரி 2021
விலை: ₹ 150