கவிஞர் ம.கண்ணம்மாளின் “சன்னத் தூறல்” கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை. 


ன்னத் தூறல்” என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலமாக கண்ணம்மாள் தன்னுடைய கவிதை மனதை தொகுக்க முனைந்திருக்கிறார். கவிஞர் கண்ணம்மாவின் மழை மனதிற்கு வாழ்த்துகள்.

பெண்களுக்கு முறையான கல்வி சாத்தியமாகும் முன்னமே அவர்களுக்குள் இயல்பாகவே இருக்கிற ஒன்றுதான் கவிதை உணர்வு. சொல்லப் போனால் ஆண்களுக்கான மொழியின் தொடக்கமாகவும் நிறைவாகவும் பெண்ணே இருக்கிறாள். உயிரியல் வேறுபாடு காரணமாக வாழும் சூழலும், அதன் காரணமான சிந்தனைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நுட்பமான வேறுபாட்டினைக் கொண்டிருக்கிறது. ஒரு காலகட்டத்தில் பெண்கள் யார் யார் படைப்பிலக்கியத்தில் இயங்குகிறார்கள் என்பது கேள்வியாக இருந்தது. அதன் பின்பு அவர்கள் என்ன எழுதுகிறார்கள், யாருக்காக எழுதுகிறார்கள், பெண் எழுத்தின் பின்னிருக்கும் அரசியல் என்ன அல்லது பெண் எழுத்து கொண்டிருக்க வேண்டிய அரசியல் என்ன என்பது போன்ற கேள்விகள் பெண்களின் படைப்புலகம் சார்ந்து கிளைத்துக் கொண்டே இருக்கின்றன. இத்தனை கேள்விகளையும் உருவாக்குபவர்கள் ஆண்களாக இருக்க, இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பெண்களின் படைப்புலகம் நகரத் தொடங்கும் போது ஆண்களே பெண்களின் சிந்தனையைக் கட்டுகிற முகமாக மாறி விடுகிறார்கள். இந்நிலையில் பெண்களின் மனமானது தன்னுடைய மெய்யான உணர்விலிருந்து வழுவி, தான் முற்றிலும் உணர்ந்திராத புதியதோர் உலகில் பயணிக்க தொடங்குகிறது. அவ்வாறான பெண் படைப்புகள் தன்னுடைய உண்மைத் தன்மையை இழந்ததாகவே கருதலாம்.

உண்மையில் ஒரு பெண் பெரும்பாலும் தான் சார்ந்த கவிதைகளையே எழுதுகிறாள் அல்லது புறச்சூழலின் நிகழ்வுகளையும் தன்னுடைய அகத்திலிருந்தே அவதானிக்கிறாள். இச்சூழலில்தான் பெண்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.

கண்ணம்மாள் தன்னுடைய கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதக் கேட்டுக் கொண்டபோது, “மழை வேட்கைப் பெண்” அல்லது “பற்றி எரியும் செம்பருத்தி” என்கிற இருவேறு விதமான தலைப்புகளுடன் கவிதைகளை அனுப்பித் தந்திருந்தார். கவிதைகளை வாசித்து முடித்தபோது உள்ளும் புறமும் மழை வேண்டி நிற்கிற ஒரு பெண் என் முன்பாகத் தோன்றி யிருந்தார். இதுவா அதுவா இந்தக் கவிதைக்குள் ஊடாடுகிற பெண் மனம் என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது கூடவே மழைக்குத் தவித்திருக்கும், மழை வேண்டிக் காத்திருக்கும் அல்லது மழையாகவே தன்னை உணர்கிற பெண்களின் மனமும் என் முன்பாக விரியத் தொடங்கின.

இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘சன்னத் தூறல்’ என்று இறுதி செய்து கொண்டதாக கவிஞர் கண்ணம்மாள் என்னிடம் தெரிவித்ததோடு, “மழை சன்னமாக இருக்கும்போது யாராக இருந்தாலும் ரசிப்பார்கள், சன்னமான அந்தத் தூறலில் யாருக்குமே நனையப் பிடிக்கும், சன்னத்தூறலாக இருக்கிற மழையை பிடிக்கலைன்னு ஒருத்தர் கூட சொல்ல மாட்டோம்” என்றும் சொன்னார். உண்மைதான்.

வானம் என்பது இரகசியங்களின் இரகசியம், வானம்தான் போதி மரம். ஒரே ஒருமுறையேனும் தான் விரும்புகிற வானத்தில் சிறகு விரிக்க விரும்பாதவர் யாரேனும் இருக்கக் கூடுமா? தூவானமாக நிலம் தொடுகிற மழை என்பது நம்மைத் தழுவுகிற வானம்தான். கண்ணம்மாள் தன்னுடைய கவி வானம் தொடுகிற முயற்சிக்கு மழைத் தூறலைத் துணை சேர்க்கிறார்.

கவிஞர் கண்ணம்மாளின் கவிதை வரிகள்,

நெடுங்காட்டிடை 

கற்றாழை தின்னும் பசு 

வாயசைத்தல் போல 

வறண்ட நாவிற்கு 

அன்பெனும் நீர் தந்து 

தேற்ற வருவாயோ..”

 

துயரங்களைக் களைந்து விடுகிற 

ஒரு சொல்லைத் தேடுகிறேன்

யார் மீதோ கோபம் கொண்டு 

மேகத்துள் பதுங்கிய நிலா

 

நாடோடியாக அலைகிறது.”

ஒரு பெண்ணின் சீற்றம் 

நடுக்காட்டின் தீயெனப்பரவும்போது 

சாதியத்தனம் மிகுந்த ஒரு வீடு 

புதியதான 

ஓவியமாக தன்னைத் தீட்டிக் கொள்கிறது

 

ஓய்வறியாமல் உழைக்கும் பெண்கள் 

பொழுதுகளைக் கடந்தும் 

தங்கள் வீடுகளில் 

அன்பை நெய்துகொண்டிருக்கின்றனர்

 

வானத்தில் வெண்மையாக ஒளிர்கிற நிலவை 

அள்ளியெடுத்து தன்னுள் நிரப்பிக்கொள்கிறாள்

 

ஒரு பிடி உணவில் 

பறவையோடான பிணைப்பு

நெஞ்சில் கதகதப்பாய்.” 

என பல கவிதைகளில் நிலம், வான், நிலவு என எல்லாம் கடந்து பெருவெளியில் மிதக்கும் பெண்ணாக, எல்லையம் நிற்கிறவளாக, பழங்கதைகளைப் புறம் தள்ளி, புதிய புதிய தூரங்களைக் கடந்து பயணம் செய்கிற பெண்ணாக பெண்ணுலகை பல்வேறு வகைகளில் எழுதிப் பார்க்கிறார்.

மழைநாளில் தன்னுடைய விடைபெறுதலை விரும்புகிற பெண், யாதொரு தடையுமின்றி எங்கும் பயணிப்பவள், அம்மா’ என்கிற ஒற்றைச் சொல்லை அதுவாகவே ஏந்திக் கொள்பவள், அன்பெனும் விதை நடுகிறவளாக, பின்பொரு நாளில் சொற்களால் அன்றி சிறியதொரு தொடுகையினால் தன்னுடைய மனப் பிறழ்வைச் சமன் செய்து கொள்ள முனைபவளாக, மனதுக்குள் இருக்கிற ஒரு நேசத்தைக் கலைத்துவிட இயலாத ஒரு பெண் மலையைப் போல தூக்கிக் கொண்டே அலைகிறவளாக, மேலும் அன்பினால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிற பெண், அதனை சரியென்றே நம்புகிறவளாகவும் இருக்கிறாள், தவிர, மழையின் ஈரத்தில் விதை தூவ, நிலம் முளையரும்பிய காட்சியில் முழுமையான பெண்ணாக நிலம் மலர்கிறது என்கிறார். நிலத்தில் நல்லது கெட்டது உண்டா என்று ஒரு கவிதையில் கேட்கிறார். இன்னொரு கவிதையில் செம்பருத்திப் பூ ஒன்று இவரது பார்வையில் கானகத்து நெருப்பை சூலம் கையிலேந்தி ஆடுகிற கொற்றவையின் தோற்றத்திலும் இருக்கிறது.

வருந்திச் சேர்த்த உணவுத் துகள் அத்தனையும் கொட்டித் தீர்த்த பெரு மழையில் கரைத்து அடித்துச் சென்ற பின்பும் மீண்டும் உணவுத் தேடலில் ஈடுபடுகிற எறும்புகள் பற்றிய கவிதை வாசித்து முடிக்கையில் எறும்புகள் பற்றியது அல்ல இக்கவிதை என்று உணரும்படியாக இருக்கிறது. இதனைப் போலவே மருத நிலத்தின் நெற்களஞ்சியத்தை களவு போன சொல்லோடு ஒப்பிடுகிற கவிதையொன்றில் பசுமையான நிலமெல்லாம் வறண்ட பூமியாகிக் கொண்டிருக்கும் நிலையை, பயிருக்கு உதவாத உவர் மண், கனவு அல்லாத வாழ்க்கையில் யாருமற்றுப் போவது என கவிஞர் கண்ணம்மாளின் கவிதைக்குள் உலவுகிற பெண் அகம், புறம் என யாவற்றையும் நிலமும் மழையுமாகவே பார்க்கிறாள்.

நேசிப்பின் பொருட்டு எத்தனை துயருற்றும் மீண்டும் நேசிப்பையே வழங்குகிற யாருக்கும் இத்தொகுப்பின் உள்ளே ஊடாடுகிற பெண் மனம் புரியும்.

ஒரு பெண்ணின் வாழ்வில் அவள் பொழுதுகள் நிறங்களால் ஆனவையாக இருக்க விரும்புகிற ஒரு பெண்ணுக்கு, வாரத்தில் ஒருநாள் வண்ண உடை உடுத்தும் பள்ளிச் சிறுமியின் மனத்தைக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு மழையெனும் நிரந்தரத் தோழி ஒருத்தியும் இருக்கிறாள். அந்த நிரந்தரத் தோழி சன்னமாக தன்னுடைய அன்பைத் தூவுகிறவளாக இருக்கிறாள்.

கவிஞர் கண்ணம்மாளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

அன்புடன்,

சக்தி ஜோதி

அய்யம்பாளையம்.

23.10.2019

 

நூல் தகவல்:
நூல் :  சன்னத் தூறல்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: ம.கண்ணம்மாள்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு : டிசம்பர் 2019
பக்கங்கள் : 88
விலை : 100
தொடர்புக்கு : +91 87545 07070
Kindle Edition :

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *