சிறுகதைகள்நூல் அலமாரிபுதியவை

சவுக்காரம்- அணிந்துரை


மக்களை பற்றி சிந்திக்கும் போது தான் ஒரு படைப்பாளிக்கு சரியான அர்த்தம் சேர்கிறது.

சும்மா……. நான்…….  என் இருட்டு…… என் ஜன்னல்……. என் அறை என்று எழுதிக் கொண்டிருந்தால்…. அது சுய பச்சாதாப எழுத்துக்களாகவே தான் இருக்கும். ஜன்னல் தாண்டி……கதவு தாண்டி…. வீதி தாண்டி……. ஊர் தாண்டி……  உலகத்தை சுற்றும் போது தான்….. அந்த எழுத்து மானுட வடிவத்துக்கு தன்னை மலராக்கிக் கொள்கிறது. அப்படி “நிழலி”யின் ஒவ்வொரு கதையும்…. மிக நுட்பமாக மானுடத்தின் விளிம்பு நிலை கோடுகளைத் தேடிக் கொண்டே செல்கிறது. ஒரு சாதாரண குடும்பத்து பெண்ணின் அகமும் புறமும் எண்ணவியலாத வண்ணங்களோடு அலைக்கழிக்கப்படுவதை வெகு அருகில் நின்று படம் பிடித்துக் கொண்டே பின் தொடர்கிறார். அவர் காட்டும் பாதையில்… உள்ளது உள்ளபடியே இருக்கிறது.

எந்த மிகை உணர்ச்சியுமற்று…… எந்த சுய அயற்சியுமற்று….  சமூக கதவுகளின் விடியலை தன் மெல்லிய கைகளால் திறந்து விடுகிறார்.

ஒரு கதையில்…… திறந்திருக்கும் ஜன்னல் வழியே அறை  நுழைந்த பட்டாம்பூச்சி…… அந்த அறையில் தன் உலகை காணாமல் சுற்றி சுற்றி வருகையில்… குறியீடும்.. படிமமாக….. சத்தமில்லாத யுத்தமொன்றில் வண்ணம் தொலைவதைக் கண்டேன். பிறகு பல்லியின் வாய்க்குள் பெரும்பசியாய் அது நம்மையும் சேர்த்தே விழுங்கி கொள்கிறது. சிக்கலில்லாமல் கை கூடும் எழுத்து நடை எப்போதாவது நிகழும். அது ஆர்ப்பாற்றமின்றி… அத்தியாவசியமாக…… வார்த்தைகளின் கூடு விட்டு நிஜத்தின் சிறகு பொருத்தி நிழலிக்கு வாய்த்திருக்கிறது.

ஒரு கதையில்.. தன் அக்காவின் முகம் நினைத்த நேரத்தில் மணமாக வந்து போகிறது என்று எழுதுகிறார். அப்படி எழுத வெறும் கற்பனை மட்டும் போதாது. ஒரு காத்திரமான வாழ்வியல் முறை உணர்ந்திருக்க வேண்டும்.

“ராணி மாதிரி வாழ்க்கை இருந்தா அந்தப்புரம் மட்டும் தான் சொந்தம்ன்னு தெரியல என் தெய்வத்துக்கு” என்று சீக்கிரம் பொண்ணை கல்யாணம் கட்டிக் கொடுத்து விட தவிக்கும் ஒரு அப்பாவைப் பற்றி பேசுவதாக ஒரு வரி ஒரு கதையில் வருகிறது. வாழ்வின் மற்றொரு கோண எல்லையை இச் சிறு வயதிலேயே அவதானிக்கும் ஆற்றல் வாய்ந்த நிழலியின்……. பெண்களின் உலகம் குறித்தான கற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை. அதே கதையில் புதிதாக திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்ணின் மறுநாள் விடியல் எப்படி இருக்கிறது என்று மிக அமைதியாக…  நிதானமாக…. ஒரு நிகழ்த்துக் கலையை நிகழ்த்திக் காட்டுகிறார். எல்லாமும் புதிதாக இருக்க….. சொல்லொணா துக்கத்தை குளித்து முடித்து முகத்தில் சூடிக் கொண்டு கணவனுக்காக காத்திருக்கும் தவிப்பில் தன் வீட்டு நினைப்பும் அந்த வீடு முழுக்க அவளோடு சேர்ந்து அல்லாடுகிறது.

ஒரு கதையில் வரும்….. அம்மா அரைக்கும் புதினா துவையலை மருதாணி மாதிரி விரல்களில் வைத்து சாப்பிடும் சிறு பிள்ளையின் தோற்றம்……எனக்குத் தெரிந்து தமிழ் வாக்கியம் இதுவரை கண்டிறாதது. அதில் ஒரு பால்ய வனம் கண்கள் விரிய தன்னை தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு படைப்பாளி ஒவ்வொரு முறையும் முத்தெடுக்கத்தான் எழுத்துக்குள் மூழ்குகிறார். ஆனால் முத்துக்கள் எப்போதாவதுதான் இப்படி கிடைக்கும். அப்படி “நிழலி ” என்றொரு படைப்பாளியின் சமுத்திரம்… மிக மிக ஆழமான…….  குடும்ப…..  சமூக…..  தனிமனித அகம் புறத்தை அதனதன் வடிவோடு வெளிப்படுத்துகிறது. அசையாமல் அமிழ்ந்திருக்கும் ஆழ்கடல் அவருக்கு லாவகமாக வாய்த்திருக்கிறது. அதில் அவர் நீந்துவது கூட அவருக்கே தெரியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பழக்கப்படாத விடியலில்…. பல விதமான ஜன்னல்கள் திறப்பதும்… மூடுவதுமாக அந்த அதிகாலையில்…… இந்த உலகம் மிக கடுமையாக தன் போக்குக்கு கட்டமைத்து வைத்திருக்கும் பெண்களின் உலகத்தை நாமும் நடுக்கத்தோடே  திறக்கிறோம்…  இன்னொரு கதையில். சொற்களற்று தேநீர் தயாரிக்க அடுப்பறை செல்லும் நிழலை பின் தொடர்வதைத் தவிர வேறு வழி தெரிவதில்லை… நிழலிக்கும்.

நிழலியின் பெரும்பாலைய கதாபாத்திரங்கள் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

நாய்க்கு இட்லி ஊட்டுக்கும் இரக்கத்தின் ஊற்று அவர்களிடம் சுரக்கிறது. ஒரு வீதியின் முகப்பை மட்டுமே நிழலி பேசுவதில்லை. வீதியின் புழக்கடைக்கும் சென்று அலசி ஆராய்கிறது அவரது எழுது கோல். சிறுவயது முதல்….. தான் கண்டுணர்ந்து கொண்டே வந்த தன் கிராமத்திற்கும் அதன் வாழ்க்கை முறைக்குமான கால சாட்சியாக நிற்கிறார் நிழலி. ஓர் இயல்பின் திருப்பங்களை ஒளி பாய்ச்சி நமக்கு காட்டிக் கொண்டே நகர்வதை கழுகு பார்வையில் காணும் போது காட்சி சில்லிடுகிறது. காண்பதெல்லாம் சொல்லிடுகிறது.

பேண்ட் சட்டைதான் பெண்ணியத்துக்கான ஆயுதம் என்று கருதும் குறைகுடங்களின் முன் மிக தெளிவாய்….. பாந்தமாய்……. சாந்தமாய்…… பேரமைதியாய் தன் கருத்துக்களை முன் வைத்து விட்டு……. கதைகளை பேச விட்டு….ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் நிழலியின் கதை உலகம்.. மிக மிக எளிதானது. ஆனால் மிக எளிதில் வசப்படாதது. அதனுள் ஒளிந்திருக்கும் அதை சூழ்ந்திருக்கும் அரூபத்தின் வழியே ஒரு வனாந்தரத்தின் வெளிச்சத்தை தேடி அலைவதை உணர்கிறேன். பெரும்பாலும் பேச முடியாத தருணங்களை….. குறிப்புகளை… தாத்தா பாட்டி அம்மா அப்பா அண்ணன் தம்பி நட்பு என்று ரத்தமும் சதையுமாகவே அவரின் உலகம் நாஸ்டால்ஜியா துருவங்களைக் கொண்டு சுழல்கிறது. அதன் பொருட்டே மிக நெருக்கமான  எல்லாருக்குமான கதைகளை வடித்தெடுக்க முடிகிறது. ஒரு விளிம்பு நிலை வாழ்வின் வறுமையை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். மரங்கள் பற்றிய வரிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க.. இந்த மானுடத்தின் நிரம்பலை தேடி அலையும் ஒரு சாதாரண மனுஷியின் குரல் தான் நிழலிக்கு.

நிழலி….. பெருங்கதைகளை எடுத்துக் கொண்டு அல்லாடுவதில்லை. மாறாக சிறு சிறு சந்துகளின் வழியே அவர் சென்றடையும் இடம் அன்பும் அரவணைப்பும் நிறைந்த மானுட உறவுகளின் முச்சந்தி தான். நிழலியின் கதைகள் ஒவ்வொன்றும் சக வாழ்வில் இருந்து எடுக்கப்பட்டவை. நாய்களின் உலகை உற்று நோக்க முடிகிறதென்றால்.. தாய்மை நிறைந்த இதயம் கொண்டிருக்க வேண்டும்தானே…. அது தான் அவரின் எழுத்துக்களில் கசிகிறது. பசி என்ற இரண்டெழுத்தின் பின்னால் விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்… படு வேகமாக தறிகெட்டு ஓடுவதை வாழ்வினோரம் நின்று வேடிக்கை காட்டுகிறார். நின்று நிதானிக்க இயலாத பசிக்குள் தன்னை பொருத்திக் கொள்ளும் படைப்புகள் காலத்துக்கும் உண்மை சுமந்தே அலையும். அலைகிறது. பல இடங்களில் நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையே நின்று நுட்பமாக கதை சொல்ல தெரிந்திருக்கிறது நிழலிக்கு. வெகு சில இடங்களில் மட்டும் தன்னை முந்திக் கொண்டு வந்து நிற்கும் சிந்தனையை சீர் படுத்தாமலே.. அல்லது  படுத்த வேண்டிய யோசனை இல்லாமலே நகர்ந்திருக்கிறது கதையின் உள்ளபடியேயான போக்கு. மிக நுட்பமாக அதே கதையில் கதையை நம்மிடம் விட்டு விட்டு அவர் வெளியேறி விடவும் செய்கிறார்.

காதலியாய்…….  மனைவியாய்…… மகளாய்…… தாயாய்….. குழந்தையாய் என்று பெண்களின் ஒவ்வொரு கோணத்திலும் இருக்கும் மன சிக்கலை….வளைவு நெளிவுகளில் சிக்குண்ட மனப் பிறழ்வை என்று நிழலியின் பாத்திரங்கள் எல்லாமே பெண்களை மையப்படுத்தி தான். ஒரு கதையில்….பிரிந்து போன தன் கணவரிடம் போக துடிக்கும் மகளை பிரியும் ஏக்கம் மட்டுமன்றி அவளை இந்த ஆண்கள் உலகம் என்ன செய்யுமோ என்று அந்த தாய் பதறுவது வரி வரியாய் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஏற்கனவே இந்த குரூர ஆண்களின் உலகை எதிர் கொண்ட அனுபவத்தால் எதற்கெடுத்தாலும் யாரையும் சந்தேகிக்கும் ஒரு வித முக்கோணத்துக்குள் சென்று விட்ட ஒரு அம்மாவின் பாடு…… பத்தி பத்தியாய் நடுங்க வைக்கின்றன. வாடிய பூக்களை வைத்திருந்த டைரியில் வேறு எதுவுமே எழுதாத அந்த அம்மா…… மகளின் பெயரை மட்டுமே எழுதி இருந்தாள் என்ற வரியில் தனியாக இவ்வுலகை எதிர்கொள்ளும் ஒரு தாயின் தவத்தை உணர முடிகிறது.

சிறுமிகளின் வன்புணர்வு பற்றி வரும் ஒரு வரியில்…. வாயடைத்து உடல் நடுங்க நின்றேன். அது தானே நிதர்சனம். அது நடந்து கொண்டு தானே இருக்கிறது. அதை பேசித்தானே ஆக வேண்டும். மிக தெளிவான ஆழமான ஒரு வாக்கியத்தால் இந்த சமூகத்தின் உள்ளுணர்வை அசைத்துப் பார்க்கிறார். பரிதவித்து தான் கடக்க வேண்டி இருக்கிறது.

கிராமத்து வழக்கு நடை அனாயசமாக வருகிறது. போகிற போக்கில் காதில் விழும் கிராமத்து சொற்களின் குறுக்கு வெட்டு தோற்றத்தை மிக இயல்பாக உள் வாங்கி வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனக்கு கிடைத்திருக்கும் மிக குறுகிய வட்டத்துக்குள் தன் எல்லையை விரித்துப் பார்க்கும் சாமர்த்தியம் நிழலியின் எழுத்துக்களில் உண்டு. அதே நேரம் வெகு தூரம் சென்று விட தவிக்கும் சுருக்கப்பட்ட சிறகுகளையும் காண்கிறேன். கண்ணீருக்கு பழக வேண்டிய கண்களை மிக லாவகமாக துடைத்துக் கொண்டு சிரிக்கும் யதார்த்தத்தை மிக நேர்த்தியாக கையாளவும் செய்கிறார். பின்பக்க திரை மறைவிலிருந்தும் மிக சாதுர்யமாக நடத்தப்படும் பொம்மலாட்டங்கள் இங்கே கதைகளாக நிகழ்ந்திருக்கின்றன.

திருமணமான பெண்களின் மிக பிரிய ஆசுவாசம் அம்மா வீடு. அதன் பெரு நினைப்புகளை சமையலறை மளிகை டப்பாக்களில்… ஒளித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்து வாய்க்குள் போட்டு மனதை அசை போடுவதை……. எழுத்துக்களில் தூவி இருக்கும் பெண்மையின் தன்மையில்… பெண்களின் இரு உலகம் பக்கத்தில் பக்கங்களாய் நம்மை வந்தடைகின்றன. நிழலிக்கு தன் கிராமம் குறித்த பெருமிதமும் நம்பிக்கையும்… காடுகள் குறித்த ஆசுவாசமும் தேவையும்… இயற்கை குறித்த பேரன்பும் பரிதவிப்பும் என்று எப்போதும் தலைக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது. அவைகளை கிடைக்கும் இடங்களில் எல்லாம் இட்டு நிரப்பிக் கொண்டே செல்கிறார்.

ஒரு காடு விரும்பியின் உலகில் நகர கட்டடங்கள் பாரங்கள் சுமக்கும் தானே.

“பக்கத்து வீட்டுல பனியாரம் சுட்டா வீதி முழுக்க பனியாரம் சாப்பிடலாம் வாண்டுகள் வாசம்” என்ற வரியில்.. ஒரு கிராமத்து தெருவை.. கூடுதல் வாசத்தோடு நமக்கு காட்டுகிறார். மிக லாவகமாக வந்தமரும் சொற்றொடர்கள்.. பனியார வாசத்தையும் தாண்டி.. பால்ய வாசத்துக்கு அழைத்து செல்வதில்… நிழலியின்

எழுத்துக்கு தனித்த வாசம் உண்டு என்று நம்ப முடிகிறது.

காட்டை அழிப்பவன் மீது…. ஊரை அழிப்பவன் மீது……. நீரை அழிப்பவன் மீது……..நிலத்தை அழிப்பவன் மீது……… எப்போதும் கோபம் கொள்ளும் நிழலிக்கு அது அப்படியாகாமல் இருக்கத்தான் பேராசை. சமூக வெளியில் தன் சிறகுகளை விட்டு மோதி மோதி பார்க்கும் இயலாமையும் நிறைந்தே இருக்கிறது. மக்களின் வாழ்வில் இருந்தே அம்மக்களுக்கான கதைகளை செய்யும் நிழலிக்கு ஆழ்ந்த உற்றுநோக்கல் சாத்தியப்பட்டிருக்கிறது.

ஒரு கதையில்….. இன்னமும் உடல் உபாதைக்கு கொல்லைப்புறம் தான் செல்ல நேர்கிறது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறார். கிராமத்தின் தேவை குறித்தான பார்வை காலத்துக்கும் தேவையான பார்வை.

சில கதைகளில்… நிஜத்தில் இருந்து நிழலுக்குள்ளும் சென்றிருக்கிறார். கால சூழலின் வன்மம் உடைத்து.. வானம் சமைக்கும் வசீகரம் “யுத்தனின் வாசகி” கதையில் உணர்ந்தேன். யுத்தனாகவே ஆகி விட்ட வாசகி… இறுதியில் வதம் நிகழ்த்தி விட்டு….. செய்து கொண்டிருப்பது இன்னதென தெரிந்தும்… அதன் தேவை குறித்து… எல்லைகள் சூழ காட்டுக்குள் அமர்ந்திருக்கும் ஆங்காரத்தில்… காலத்துக்கும் பொதுபுத்திக்குள் அடைபட்ட இயலாமை தன்னை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. தத்துவார்த்தத்தோடு கூடிய கட்டுடைப்பு அந்த வாசகியையும் மீறி நிகழ்கிறது. பூட்டிக் கொள்ளும் காட்டுக்குள் அதன் பிறகு அவளொரு விடுதலையை உருவாக்குகிறாள்.

இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய தத்துவங்கள் எழுத வாய்த்திருக்கிறது. எந்தவொரு படைப்பும் வாழ்வின் அனுபவத்திலிருந்து வரும் போது அது இன்னும் உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கிறது. அது தான் இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது.

ஒவ்வொரு கதையையும் முடிக்கும் விதத்தில் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரை நிழலியிடம் காண்கிறேன். எழுத வந்து இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு மொழி நடை வாய்த்தமைக்கு தமிழுக்கு அவர் நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு நாம் பாராட்டு சொல்வோம். நிழலியின் தலைப்புகளே தகிப்புகளாகத்தான் காண்கிறேன். ஒரு மென்சோகம் கொண்ட அடுக்குகளை கொண்டிருக்கும் தலைப்புகளின் வழியே…… முன்பே கதையின் மூடாக்கு மெல்ல எட்டி பார்ப்பதில்… ரசனையின் ஆற்றல் போதுமான அளவுக்கு வாய்த்திருக்கிறது.

“சவுக்காரம்” இறந்து போகாமல் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் அந்த ஏதோவொன்று தான் இந்த புத்தகம் முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது. அது காலத்துக்கும் ஒளி வீசும். ஒவ்வொரு கதையிலும் ஒரு வாழ்வைக் காண்கிறேன். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெப்பம் உண்கிறேன். நின்று நிதானித்து படித்து அசைபோட்டு திரும்ப அது பற்றி பேசி…  விவாதித்து…… மீண்டும் அது குறித்து எழுதி… இந்த சிறுகதை தொகுப்பு இன்னும் இன்னும் இச்சமூகத்துக்கான எல்லா கைகளுக்கும் சென்று சேர வேண்டும்.

மனதார வாழ்த்துகிறேன். ஏனென்றால்.. இவைகள் வெறும் கதைகள் அல்ல….  வாழ்வின் வேர்கள்.

ப்ரியமுடன்

கவிஜி

நூல் தகவல்:

நூல் : சவுக்காரம்

பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : நிழலி

வெளியீடு : பார்வைப் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2021

விலை: ₹ 100

நூலை வாங்க : 📱 80561 92645

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *