நூல் விமர்சனம்புனைவு

தீயாகவும் பனியாகவும் உருமாறும் பெண்கள்


சிறுகதைகள், புதினங்களில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறைந்து வரும் காலகட்டத்தில், எங்களூர் திருச்சியைச் சேர்ந்த ஐ.கிருத்திகா மிகுந்த நம்பிக்கையளிக்கும் சிறுகதை எழுத்தாளராகக் கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பது மகிழ்வளிக்கிறது.

நமது அனுபவ எல்லைக்குள் நிலை கொண்டுள்ள கதைக்களங்கள், நமக்கு அன்னியமற்ற கதை மாந்தர்கள், வாசிப்பவர்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்காத இலகுவான மொழிநடை- இவற்றின் உதவியால் கதைகளுக்குள் நுழைவது எளிதாகிறது.

தாய்த்தெய்வ வழிபாட்டையும் தாய்வழிச் சமூகத்தையும் விழுமியங்களாகக் கொண்டிருந்த தொன்மைத் தமிழினம்தான் இப்போது பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் அகப் / புறத்தாக்குதல்களைக் கரம் கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஒரு முரண் நகை. இந்தத் தாக்குதல்களை லாகவமாக எதிர்கொண்டு, பல்லி தன் வாலைத்துண்டித்துக் கொண்டு உயிர் பிழைப்பதைப் போல, தங்களின் இழப்பை அர்த்தமுள்ள இருப்பால் ஈடு செய்பவர்களே கிருத்திகாவின் கதைநாயகிகள். இவர்கள் தேவைக்கேற்ப தங்களைத் தீயாகவும் பனியாகவும் உருமாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்டவர்கள். எதார்த்த வார்ப்புகள்.

தங்களது சுயமதிப்பை இந்தச்சூழ்நிலையிலும் கைவிடாத இவர்களை, வேலை செய்யும் வீட்டில் ஒரு கோப்பை காஃபி குடிப்பதைக்கூடத் தவிர்க்கும் சமையல் மாமி உருவத்தில் ‘வேதம்’ கதையிலும், தன் கணவர் செய்து போட்ட திண்டுக்கல் அட்டிகையை உடலில் உயிர் இருக்கும் வரைத் தன் கழுத்திலிருந்து எடுக்கச் சம்மதிக்காது அப்பத்தா வடிவில் ‘செவப்புக்கல்லு அட்டியலு’ கதையிலும் நாம் தரிசிக்கலாம்.

‘நினைவோ ஒரு பறவை’ கதை சொல்லும் முறையால் தனித்து நிற்கிறது. ‘ நினைவுகளை மறுபடி நிகழ்த்திப் பார்க்க முடியாவிட்டாலும் நினைத்துப் பார்க்கச் சுகமானவை. மூளையின் ஒரு மூலையில் நிரந்தரமாகத் தங்கி விட்ட நினைவுகளை அவ்வப்போது தூசி தட்டி எண்ணிப் பார்ப்பது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு நியாயம் செய்வது போன்றது. வாழ்க்கையைப் புணருத்தாணம் செய்வது அவசியமன்றோ? ‘ என்ற வரிகளில் பொதிந்துள்ள வாழ்வியல் செய்தி மதிப்பு மிக்கது.

‘வானைத்தொடும் விருட்சங்கள்’ கதையின் தலைவி காயத்ரி நீண்ட காலம் நம் மனங்களை விட்டு நீங்காத அபூர்வ பாத்திரச்சித்தரிப்பு. கோடைகாலச் சூரியனாய் கணவனைத் தன் வார்த்தைகளால் சுடும் இப்பெண்ணிற்கு காயத்ரி என்ற பெயர் பொருத்தமானதுதான் !

கற்பு உடல் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது என்ற மெய்யை அக்னிப் பிரவேசத்தில் ஜெயகாந்தன் ஆணியடித்தது போலச் சொல்லியிருந்தார். இதையே கிருத்திகா மென்மையாகச் சொல்லியிருக்கிறார் தனது ‘அம்மா என்றொரு புண்ணிய நதி’ சிறுகதையில்.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்து முடித்ததும், சக எளிய மனிதர்கள் மீது நாம் காட்டும் கரிசனமும் அக்கறையும் போதுமானதா என்ற கேள்வி இயல்பாகக் கிளம்புகிறது. இதுவே இந்தச் சிறுகதைகளின் வெற்றிக்கான நிரூபணம் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

– பா.சேது மாதவன், திருச்சி

நூல் தகவல்:
நூல் :  உப்புச்சுமை
பிரிவு : சிறுகதைகள்
ஆசிரியர்: ஐ.கிருத்திகா
வெளியீடு: தேநீர் பதிப்பகம்
வெளியான ஆண்டு : ஜூலை 2020
பக்கங்கள் :
விலை : 160
தொடர்புக்கு : +91 9080909600

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *